17 Jun 2019

புதையல் குடும்பத்துக்கு ஆகாது!



செய்யு - 118
            தேன்காடு சித்தப்பா பிள்ளைகளை விளையாட அனுப்பி விடும். தெருக்கதவையும், கொல்லைக் கதவையும் சாத்தச் சொல்லி விட்டு அடுப்பில் போட்டு செப்புச் சொம்பில் இருந்த துவரம் பருப்பு வடிவிலான காசுகளை உருக்க ஆரம்பிக்கும். இரவில் எல்லாரும் தூங்கிய பிறகும் உருக்கும். சித்தி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு விறகுகளை எடுத்துக் கொடுக்கும் வேலையைச் செய்யும். இப்படியே பதின்மூன்று நாட்களாக மெனக்கெட்டு அது அனைத்து காசுகளையும் உருக்கி முடித்தது. இப்படியாக உருக்கி முடித்ததும் திருத்துறைப்பூண்டியில் கொஞ்சமுமாக, வேதாரண்யத்தில் கொஞ்சமுமாக விற்று காசாக்கியது. சித்திக்கு ஒரு செயினும், சாமியாத்தாவுக்கு ஒரு செயினும், செய்யுவுக்கு ஒரு செயினும் செய்தது. சித்திக்குச் செய்த செயினை சித்திப் போட்டுக் கொண்டது. சாமியாத்தாவுக்கு செய்த செயினை அதை அழைத்து வந்து சித்திப் போட்டு விட்டது. செய்யுவுக்காகச் செய்த செயினை ஒரு முறை போட்டு பார்த்து விட்டு, கல்யாணத்தின் போதுதான் போட வேண்டும் என்று அதை எடுத்து பீரோவுக்குள் பத்திரப்படுத்தியது. சித்தப்பாவின் கையில் பெரும் பணம் புரண்டு திரண்டது.
            "ஏதுடி நமக்குச் செயினு செய்யுற அளவுக்குப் பணம் பொரளுது? என்ன வெசயம்?" என்றது சாமியாத்தா.
            "திட்டையில இருக்கே யக்கா மவ செய்யுவால அடிச்ச யோகந்தாம். குளிக்குற குட்டைக்கிப் போயி மணல தோண்டிருக்கு. நம்ம நேரத்தப் பாரு. செப்புச் சொம்புல தங்கம்!" என்றது தேன்காடு சித்தி.
            "பொதயலா? பொதயலு எல்லாத்து கைக்கும் கெடைக்காதுடி. பொதயலு கைக்குக் கெடைக்கக் கூடாதுடி!" என்றது சாமியாத்தா.
            "இப்போ புதயலு கெடச்சதாலதாம் அவுக ஒனக்கு செயினு செஞ்சு போட்டுருக்காக. புதயலு கைக்குக் கெடைக்கலன்னா இதுலாம் எப்படிப் பண்றது?"
            "அதில்லடி! பொதயலு கெடைக்குற நேரம் குடும்பத்துக்கு ஆகாதுடி!"
            "ஆமாம்! இனிமேதாம் இந்தக் குடும்பத்துக்கு ஆகாம போவணும் போ! வூட்டைப் பாரு. எப்படி இடிஞ்சிக் கெடக்கு. அத எடுத்துக் கட்ட நாதியிருக்கா நமக்கு? பேருதாம் பெருங்கொல்லை. அத ஆண்டு அனுபவிக்க துப்பு இருக்கா? குத்தகைக்கு வுட்டு பொழைக்குற மாரி இருக்கு நம்ம பொழைப்பு! இந்தப் பயலுக ரண்டு பேரும் சண்டை போட்டுட்டு தட்டை ரண்டாய் உடைச்சிட்டானுங்கம்மா! ஒடஞ்ச தட்டுக்கு ரண்டு தட்டு வாங்கிப் போடறதுக்கு நாலு மாசமாச்சி! அதுவரிக்கும் தேக்க எலயப் பறிச்சாந்துதாம் சோறு போட்டேம்! ஊர சுத்தி, கடத்தெரு சுத்தி கடன். வெளியில தல காட்ட முடியல போ! இதுக்கு மேலதான் இந்தக் குடும்பத்துக்கு ஆகாத நேரம் வரணும் போலருக்கு!"
            "பொதயலு கெடச்சா கோயிலு குளத்துக்கு செய்ய வேண்டியத செஞ்சிடணும்டி! கைக்குக் கெடைக்காம இருந்ததாதாம்படி பொதயலு. கைக்குக் கெடச்சிபுட்டா அதுக்கு பரிகாரம் பண்ணிப்புடணும். அது ஒரு துஷ்ட சக்தி மாரிதாம். அதாங் கைக்கு கெடைக்காமலே கெடக்கும். கெடச்சிட்டா அது வேலயக் காட்டிப்புடும்!"
            "இப்பா ன்னாதாங் பண்ணணுங்றே?"
            "நம்மூரு பொன்னியம்மனுக்கு வேண்டிக்க. வூடு கட்டி கஞ்சி காய்ச்சி ஊத்தறண்ணு வேண்டிக்க. இஞ்ஞ ஊருல இருக்குற கோயிலுக்கு ஏதாச்சிம் செய்யுறதா வேண்டிக்க."
            "அதல்லாம் வேண்டி பணத்த எடுத்து வெச்சாச்சி. பொன்னியம்மனுக்கு பத்தாயிரம். நம்ம ஊரு வீரனாரு கோயிலுக்கு பத்தாயிரம். போதும்ல. வூடு கட்டுறதப் பத்திதாம் இன்னும் யோசிக்கல. காசி இருக்குறப்பவே இந்த வூட்டைத் தட்டி விட்டுட்டு நல்ல வூடா கட்டிக்கணும்மா! செயினு ஒனக்குப் பிடிச்சிருக்காம்மா!"
            "நல்லாதாம்படி பண்ணிப் போட்டுருக்காரு ஒங் வூட்டுக்காரரு! இப்பயாவது ஒனக்கு நல்ல நேரம் வந்திச்சே! அது போதும்டி நாம்ம கையெடுத்துக் கும்புடற எம் பொன்னியம்மா!" என்றது சாமியாத்தா.
            சாமியாத்தாவும், சித்தியும் செய்யுவைப் பக்கத்தில் அழைத்து வைத்துக் கொண்டு, "இந்தாரு பொண்ணுத்தங்கம்! இந்த வெசயத்த யாருகிட்டயும் சொல்லிடக் கூடாது. நீ சொன்னின்னா கவர்மண்டுல வந்து சித்தப்பாவ பிடிச்சிட்டு ஜெயிலுக்குப் போயிடுவாங்க பாத்துக்க. கமுக்கமா வெச்சிக்கணும். புரிஞ்சுதா தங்கம்?" என்று காதோடு காதாகச் சொல்லி வைத்தன. செய்யுவும் தலையை ஆட்டியபடி, "யாருட்டயும் சொல்ல மாட்டேம் சித்தி! யாருட்டயும் சொல்ல மாட்டேம் யாத்தா!" என்றது. செய்யு சொன்னபடி அந்த விசயத்தை நெடுநாள் யாரிடமும் சொல்லாமல் வைத்திருந்தாள். அதற்குப் பின் நிகழ்ந்த நிகழ்வுகளால் சாமியாத்தாவும், சித்தியும் அதை அழுது கொண்டு சொல்லும் சூழ்நிலையை உண்டானது.
            சித்தி மனை போட்டது. இப்போது இருக்கும் வீட்டைப் போல தெருவுக்கு இருநூறு அடி, முந்நூறு அடி உள்ளே இல்லாமல் தெருவை ஒட்டியே வீட்டுக்கான மனையைப் போட்டது. அநேகமாக தெருவை ஒட்டித் தேன்காட்டில் போடப்பட்ட முதல் மனை சித்தியினுடைய மனைதான். பெரும்பாலும் அங்கிருந்த அனைத்து மனைகளும் தெருவிலிருந்து பல அடிகள் உள்ளே தள்ளித்தான் கட்டப்பட்டிருந்தன. அந்தப் பகுதி மக்களுக்கு கொல்லைப் புழக்கத்தை விட வீட்டுக்கு முன்னே இருக்கும் புழக்கம் முக்கியமாகப் பட்டது. அதனால்தான் வீட்டை இழுத்து உள்ளே தள்ளியே கட்டியிருந்தார்கள். பாத்திரம், பண்டம் கண்ணுக்கு எதிரே காய வைப்பதற்கு, நல்லது கெட்டது காரியங்கள் செய்வதற்கு அப்படி இடப்புழக்கமாக இருப்பதே வசதியானது என்று அந்தப் பகுதி சனங்கள் கருதினார்கள்.
            சித்தியோடு சித்தப்பாவின் கல்யாணம் நடந்த போது வீட்டுக்கு முன்னே அவ்வளவு பெரிய பந்தல் போட்டு அந்த இடத்தைப் பார்ப்பதற்கு நான்கு கல்யாணத்தை ஒரே இடத்தில் முடிக்கலாம் என்பது போல இருந்தது. வந்த சனங்கள் உட்கார கொள்ள, பந்திப் போட்டுச் சாப்பிட, படுக்கப் புழங்க எல்லாவற்றிக்கும் அந்த இடம் அவ்வளவு வசதியாக இருந்தது. சித்திக்கு அந்த ஊரின் நடைமுறை பிடிக்காமல் இருந்திருக்க வேண்டும். அது வடவாதி, திட்டையில் இருப்பது போல தெருவை ஒட்டியே வீடு இருக்க வேண்டும் என்று நினைத்தது.
            பெரிதாக சொந்தபந்தங்களுக்கு யாருக்கும் சொல்லாமல் தெருவுக்கு மட்டும் சொல்லி மனை போடும் ஏற்பாட்டைச் செய்தது சித்தி. அந்த முதலாம் தெருவில் இருந்தவர்கள் மனையை ரோட்டை விட்டு தள்ளிப் போடுமாறு எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். சித்தி கேட்பதாய் இல்லை. அது வேலைகளை விறுவிறுவென்று ஆரம்பித்தது. சித்தப்பா பணத்தைக் கொண்டு வந்து சித்தியிடம் கொடுத்ததோடு சரி. சாமியாத்தாவும், சித்தியும்தான் அத்தனைச் செலவுகளையும் பார்த்துக் கொண்டனர். சித்தப்பா மர வேலைக‍ளுக்கான காசை மட்டும் வாங்கிக் கொண்டு தேக்கு மரத்தில் சட்டங்களையும், பலகைகளையும் வாங்கிப் போட்டு மனை போடுவதற்கு முன்னே வேலையை ஆரம்பித்திருந்தது.
            மனைபோட்ட மூன்றாம் நாளில் சித்தப்பாவின் பங்காளி வகையறாக்கள் தேன்காட்டுக்கு வந்து பெரிய சண்டையாகிப் போனது. தெருவில் இருக்கும் சனங்களில் யாரோ சித்தப்பா மனை போட்ட சமாச்சாரத்தை அவர்களுக்குப் போன் போட்டு சொல்லியிருக்க வேண்டும்.
            "எந்த நெலத்த வித்துடா இப்ப மனெ போடுறே?" என்றது மூத்தப் பங்காளி.
            "யாரோட இடம்னு நெனச்சிட்டு இதுல இப்போ மனெ போடுறே?" என்றது ரெண்டாவது பங்காளி.
            "இந்தார்ரா இருக்குற மரியாதியா இருந்துக்க. ஏத்தோ கடக்குட்டிப் பயலா இருக்குறேன்னு செல்லங் கொடுத்து வுட்டா... ஒடஞ்சி வுழுந்த வூட்டு தூக்கிக் கட்ட துப்பில்லமா... புது வீடா போடறே? மரியாதி கெட்டுடும் பாத்துக்க!" என்றது மூன்றாவது பங்காளி.
            சித்தப்பா எதுவும் பேசாமல் மெளனமாக நின்றது. சித்திதான் ஆத்திரமாகப் பதிலுக்குப் பதில் பேசிச் சண்டை போட்டது. "யாரூட்டு நெலத்தியும் விக்கல. மனெ போட்ட சேதிய விசாரிச்சு வந்தவங்களுக்கு நெலத்த வித்திருந்தா அந்தச் சேதி தெரியமலா போயிருக்கும்? கூடப் பொறந்த தம்பின்னு இது வரிக்கும் யாரு ன்னா செஞ்சிருக்கீங்க? இப்படி இடிஞ்ச வூட்டுல கெடக்குறானேன்னு யாராச்சிம் வந்து பாத்திருப்பீங்களா? வீடு இடிஞ்சி விழுந்து செத்துப் போவான்னா மாட்டானான்னு நெனச்சிதான ந்நல்லா வூடா நீங்க கட்டிட்டு அங்கிட்டு குந்திக் கெடந்தீங்க. கையில, பையில பத்து பீசா காசில்லாம குடும்பத்தோடு பட்டினியா கெடக்குறானேன்னுதாம் வந்து பாத்திருப்பீங்களா? இப்போ ஏதோ கையில காசி வந்திருக்கு. அத வெச்சி மனெ போடுறாம்னு கேள்விபட்டு சண்டெ போடுறதுக்கு மட்டும் வந்திருக்கீங்க! ஊருல எத்தினியோ அண்ணம் தம்பிகள பாத்திருக்கோம். ஒண்ணுக்கு ஒண்ணு உபகாரமாத்தாம் இருந்திருக்கு. இப்படி உபத்திரவமாக ஊரு ஒலகத்துல கெடயாது. இப்பிடிப் பொறாம பிடிச்சி அலஞ்சா நாங்க ன்னா பண்றது?" என்றது சித்தி ஆத்திரமாக.
            "ஏம்டா பொண்டாட்டிய பேச வுட்டுட்டு வேடிக்கப் பாக்குறீயா? ஏதுடா இம்முட்டு காசி ஒனக்கு?" என்றன மூனுறு பங்காளிகளும் சேர்ந்து கொண்டு.
            "ஏம் ஒங்களால மட்டுந்தாம் சம்பாதிக்க முடியுமா? நாங்கலாம் கையி காலு வெளங்காம கெடக்கிறமா? நாங்கல்லாம் ஒழச்சி சம்பாதிக்க மாட்டாமா? ஒங்ககிட்ட கையேந்தி நின்னத்தாம் காசி வருமா? ஒங்களுக்கு வர்ற காசி எங்களுக்கு வாரதா? யாரூட்டு காசியையும் கொள்ளயடிச்சிட்டு வாரல. ஒங்க வூட்டு காசிய ஒண்ணும் அநியாயமா பிடுங்கிட்டு வந்து வூடு கட்டப் பாக்கல. நாங்களே நாதியத்துப் போயி கெடக்குறேம். ஒரு தடவ வந்து பாத்ததுண்டா? இப்படி வந்தாலும் சண்டே. பொச்சரிப்பு, பொறாம!" என்று சித்தி தலையில் அடித்துக் கொண்டு உட்கார்ந்தது.
            சித்தி இப்படித் தலையில் அடித்துக் கொண்டு உட்கார்ந்ததும், சித்தியின் மூத்த மகன் வேலுமணிக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. அவன் பக்கத்தில் கிடந்த பெரிய மரச் சட்டத்தை எடுத்துக் கொண்டு பெரியப்பன்களை அடிக்கப் போய் விட்டான். அவனுக்கு வயசு எட்டோ ஒன்பதோதான் இருக்கும். அவனைப் பார்த்து சித்தியின் சின்ன மகன் தனிகொடி வீட்டுக்குள் போய் அரிவாளைத் தூக்கிக் கொண்டு வந்து நின்றான். அவனுக்கு வயது ஆறோ, ஏழோ இருக்கும். செய்யு ஓடிப் போய் ரெண்டு பிள்ளைகளின் கையில் இருந்ததைப் பிடுங்கிக் கீழே போட்டு விட்டு அவன்களை இழுத்து வீட்டுக்குள் வந்தாள். ரெண்டு பயல்களும், "எங்கள வுடுக்கா! அவனுங்கள கொன்னு போடுறேம்!" என்று திமிறிக் கொண்டு நின்றனர்.
            "ஏட்டித் தங்கம்! அவனுங்கள விடுடி. புள்ளீங்க கையால அடி வாங்குனாத்தாம் சரிபட்டு வருவாங்க!" என்றது சித்தி.
            "இந்தா! ன்னா பேச்சுப் பேசுறே நீ? போங்கடா உள்ளார! புள்ளீங்களப் பாரு! பெரியவங்கன்னு ஒரு மட்டு மரியாதி யில்லாம." என்று சித்தப்பா சொன்னது. அதைப் பார்த்து பெரியப்பன்களுக்கு அசிங்கமாகப் போய் விட்டதோ என்னவோ அன்றே ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டி நிலபுலன்களை நான்காகப் பிரித்துப் பாகம் போட்டார்கள். "அதெப்படி அவ்வேம் பாட்டுக்கு எந்தப் பாகம் அவனுக்கு வரும்னே தெரியாம மனெ போட்டாம்?" என்பதை மட்டும் மூச்சு முந்நூறு தடவை முணுமுணுத்தார்கள். ஊர் பெரிசுகள் தலையிட்டு, "ஆனது ஆயிப் போச்சு! அந்த எடம் அவனுக்கு வர்ற மாரி பாகத்தைப் பிரிச்சுவுட்டு ஆக வேண்டியதப் பாருங்கப்பா!" என்றார்கள். அந்தக் கணக்கின்படியே சதுரித்து பாகம் பிரித்த போது சித்தப்பாவுக்கு நல்ல தண்ணி குட்டையோ, குளியல் குட்டையோ அதன் பாகத்தில் வரவில்லை. அதை ஒரு குறையாக சித்தப்பா சொன்ன போது, ஊர்ப் பெரிசுகள் அதையும் பேசினார்கள். "இந்தாருங்கப்பா! நீங்க யாருமே இங்கிட்டு இல்ல. எடத்த ஆண்டு அனுபவிக்க வேண்டியவேம் தண்ணி இல்லாம ன்னா பண்ணுவாம்? மனெயில கூட கொறச்சல வுட்டுக் கொடுத்துட்டு நிலபுலன்ல கூட கொறச்ச எடுத்துக்குங்க!" என்றதற்கு மூன்றாவது பங்காளி மட்டும் அடம் பிடித்து நின்றார். பிறகு அவரையும் பேசிச் சரிசெய்தனர். சித்தப்பாவின் பாகத்தோடு, குட்டை வரும்படி இன்னொரு பாகமும் சித்தப்பாவுக்கு ஒதுக்கப்பட்டு வேறு நிலபுலன்கள் எதுவும் அதற்குக் கிடையாது பஞ்சாயத்தில் முடிவானது. சித்தப்பா அதை ஒத்துக் கொண்டது.
            அதற்குப் பின் சித்தப்பாவின் பங்காளிகள் யாரும் பிரச்சனைக்கோ, சண்டைக்கோ வரவில்லை. அவர்கள் அந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்கவும் இல்லை. எங்கே அவர்கள் மறுபடியும் சண்டைக்கு வந்து விடுவார்களோ என்று சித்திக்கு மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. அது சாமியாத்தாவை தன்னுடனே இருக்கும்படி கேட்டுக் கொண்டது. "ஏம்டி ஒங்கப்பம் அஞ்ஞ இருக்குற இருப்புல நாம்ம எப்புடிடி இஞ்ஞ இருக்குறது?" என்றது சாமியாத்தா.
            "அத்தாம் ஒம் மருமவ அங்கிட்டு இருக்கிறப்ப அவ்வே எல்லாத்தியும் பாத்துப்பா! அவளோட போயி சண்ட போட்டுட்டு கெடக்கிறதுக்கு பேசாம இஞ்ஞ கெட!" என்றது சித்தி.
            சித்திக்கு வீட்டை வேக வேகமாகக் கட்டி முடித்து விட்டால் தேவலாம் போலிருந்தது. அது செய்யுவை விடுமுறை முடிந்ததும் அழைத்துக் கொண்டு வந்து விட்டாலும் சனி, ஞாயிறு வந்து விட்டால் செய்யுவை அழைத்துக் கொண்டு போவதை ஒரு வழக்கமாக வைத்திருந்தது. அப்படி வரும் போது சாமியாத்தாவை அழைத்துக் கொண்டு வந்து வைத்தித் தாத்தாவைக் காட்டி விட்டு அழைத்துக் கொண்டு தேன்காட்டுக்குப் போகும்.
            "ஏம்டி! இவ்வே ஒருத்தி! அஞ்ஞ வூட்டு வேலய போட்டுகிட்டு இஞ்ஞ ஏண்டி இப்படி அலச்சல வெச்சிகிட்டு இவளே வேற கூட்டிட்டுப் போயிக் கூட்டிட்டு கொண்டாந்து விட்டுகிட்டு ரோதனப்படுறே?" என்று செய்யுவின் அம்மா வெங்கு கேட்டே விட்டது.
            "வூட்டு வேல ஆகுது. யம்மா கூட இருந்தா தேவலாம் போலருக்கு. இங்கிட்டு அப்பா இப்படிக் கெடக்குறாரு. அதாங் அழச்சாந்து காட்ட வேண்டிருக்கு. அப்படி வாரப்ப போறப்பதான செய்யுத் தங்கத்த கூட்டிட்டுப் போறேம். இதுக்காவவா வாரேம்?" என்றது தேன்காட்டு சித்தி.
            "பணத்துக்கு ன்னாடி பண்றே? இஞ்ஞ நாங்க வூட்ட கட்ட ஆரம்பிச்சிட்டு மேக்கொண்டு ன்னா பண்றதுன்னு தெகச்சிப் போயி நிக்கிறேம். நீ ன்னான்னா படபடன்னு கட்டிட்டு இருக்கீயே?"
            "பாகம் பிரிச்சாச்சி யக்கா! அதுல இருந்தத கொஞ்சம் வித்துட்டு வூட்ட கட்டிப் போடுவேம்னு செய்யுறேம். இருக்குற வூடும் சரியில்ல யக்கா!"
            "அது செரிதாம்! ஏத்தோ ந்நல்ல புத்தியா இருந்து பொழச்சிகிட்டா சரிதாம்! ஒரு ரண்டு வாரம் வாராம இருந்தீக்கன்னா பஸ்ஸூக்கு செலவு பண்றதுல நாலு காசி மிச்சமாவும்ல. வூட்டு வேலக்கி ஆகும். இப்படி அலஞ்சி வேற காசிய கரியாக்குறீயேடி?"
            "இதெல்லாம் ஒண்ணுஞ் செலவில்லக்கா! நாம்ம பாத்துக்கிறேம்!"
            "ஊருக்கு வந்துபுட்டு திரும்பப் போறதுக்கு பஸ்ஸூகாருக்கு காசில்லன்னவ்வே பேசுற பேச்சப் பாரேம்!" என்றது வெங்கு.
            தேன்காட்டுச் சித்திக்கு வீடு கட்டி குடி போய் விட முடியுமா? எனறு உள்ளூர ஏதோ ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. அந்தப் பயத்துக்கு சாமியாத்தாவும், செய்யுவும் அதன் அருகிலேயே இருக்க வேண்டும் போலத் தோன்றியது.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...