17 Jun 2019

சாப விமோசனம் கேட்க வேண்டுதல் சார்பு



            கொளஞ்சியப்பன் தாத்தா போன வாரம் சென்னைக்குப் போய் வந்தது. வந்ததும் வாரததுமாக புலம்பித் தள்ள ஆரம்பித்து விட்டது.
            "என்னாடாம்பி இப்படிப் பண்ணுறானுவோ! ஏரியாக இருந்து நாம்ம பாத்த எடத்த ஏரியாவாக மாத்தி வெச்சிருக்கானுங்க. ஓட்டல்ல சாப்புட போவணுமே! நம்ம ஊரு ஓட்டல்லு மாரி தண்ணிக் கொழாயி பக்கத்துல பிளாஸ்டிக் வாளியில தண்ணிய வெச்சி, ப்ளாஸ்டிக் தம்பளர போட்டு வெச்சிருக்கானுவோ. தண்ணிப் பெரச்சினங்றானுவோ!"
            "டவுனு ஓட்டல்னா கிராமத்து ஓட்டல்லு மாரி இருக்கக் கூடாதா?" என்று கேட்டால்...
            "அடப் போடா வெவஸ்த கெட்டவனே! அந்தக் கொழாயில கைய காட்டுனா போதும்டா! தண்ணி கொட்டும். அப்பொறம் கைய எடுத்தா போதும். தண்ணிக் கொட்டுற நின்று போயிடும் தெரிஞ்சிக்க. கொழாய திருவுற வேலயெல்லாம் கெடயாது. நாம்ம முன்னாடி போயி அஞ்ஞ சாப்பிட்டு இருக்கிறேம். இப்போ என்னான்னா அந்தக் கொழாயி பக்கத்துல இப்படி தண்ணி வாளில தண்ணி இருக்குடா கைய அலம்ப!" அப்படிங்றார்.
            "அட கொடுமையே!" என்றால்...
            "அத வேற கேக்குறீயாடா! எம் மவனும், மருமவளும் இப்போ வூட்டுலதாம்டா வேல பாக்குதுங்க!" என்றது கொளஞ்சியப்பன் தாத்தா.
            "என்னா பெரிசு! வேலய வுட்டு தூக்கிப்புட்டாங்களா?" என்றால்...
            "வாயக் கழுவுடா! வெளங்காமூஞ்சிப் பயலே! அவுங்க ஆபீஸ்ல தண்ணி பெரச்சினையாம். அதால வூட்டுலயே வேலய முடிச்சி கம்ப்யூட்டருலயே அனுப்ப சொல்லிட்டாங்களாம்டா! பாவங்கடா அதுங்க! காச தண்ணி மாரி செலவழிச்ச நெல போயி, தண்ணிக்காக காச கண்டமேனிக்கு செலவழிச்சி நிக்குதுங்க! தண்ணிக்காவே தனியா சம்பாதிக்கணும் போலருக்குடா!" என்று கலங்கியது கொளஞ்சியப்பன் தாத்தா.
            "இதுக்கு ஏம் தாத்தா கலங்குறே! அதாங் காசு கொடுத்தா தண்ணி கெடைக்கதுல்ல?" என்றால்...
            "அடேய்! இந்த மனுஷப் பயலுவோ மொதல காட்டுல இருந்த விலங்குகள எல்லாத்தியும் அழிச்சானுவோ! அப்பொறம் ஒர மரம் உடாம அத்தினியையும் அழிச்சானுவோ! கொளம், குட்ட, ஏரி ஒண்ணத்தியும் வுடல. எல்லாத்தியும் அழிச்சிட்டானுங்க. இந்தாப் பாருடா! இவுனுவோ கடசீயா அவனுங்கள அவனுங்களே அழிச்சிக்காம வுட மாட்டானுங்கடா! நீ வேணா பாருடா! நாம்ம போயிச் சேந்துடுவேம்! நீயி நின்னு பாக்குறீயான்னு இல்லியான்னு!"
            "ஏய் தாத்தா! அதுக்கு ஏம் நமக்கு இப்பிடி சாபம் வுட்டுட்டுப் போறே? நீ செத்துப் போயிடுவே! அந்த எழவ நாங்க நின்னுப் பாக்கணுமா?" என்று கேட்பது கூட காதில் விழாதது மாதிரி விழுந்தடித்து வேகமாகப் போகிறது கொளஞ்சியப்பன்  தாத்தா.
            யாராவது வேகமாகப் போகும் தாத்தாவை நிறுத்துங்களேன்! அது விட்ட சாபத்துக்கு ஏதாவது விமோசனம் கேட்க வேண்டியிருக்கிறது!
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...