18 Jun 2019

விலையில்லாத் தண்ணீர்!



            நதிநீர் இணைப்பைப் பற்றிப் பேசிக் கொண்டே எட்டுவழிச் சாலை, மெட்ரோ, நியூட்ரினோ, ரபேல் விமானம், நிலாவுக்கு மனிதன், செவ்வாய் கிரக ஆராய்ச்சி என்று எவ்வளவோ செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் நதிநீர் இணைப்பு... பேச்சு பேச்சாகத்தான் இருக்க வேண்டும். அந்தக் கோட்டைத் தாண்டி அவர்களும் இந்தப் பக்கம் வரக் கூடாது. நாமும் இந்தக் கோட்டைத் தாண்டி அந்தப் பக்கம் போகக் கூடாது.
            நாட்டில் வறுமை தீர்ந்து விட்டால் அதைப் பற்றி எப்படிப் பேச முடியும்? அதற்கான திட்டங்களை வகுக்க முடியும்? அதைப் போலத்தான் தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விட்டால் அதைப் பற்றி எப்படிப் பேச முடியும்? அதற்கான திட்டங்களை வகுக்க முடியும்?
            தேர்தலுக்கு என்னமாய் முன்கூட்டியே திட்டம் வகுக்கிறார்கள். வார்டு வார்டாய், வீடு வீடாய் எப்படிப் பணத்தைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும்? ஓட்டை எப்படி வேட்டையாட வேண்டும்? என்றெல்லாம் வியூகம் வகுக்கிறார்கள். அதில் ஆயிரத்தில் ஒரு பங்கையாவது தண்ணீர் பஞ்சத்துக்கு எப்படி முன்கூட்டியே திட்டம் வகுக்க வேண்டும்? அதை வீடு வீடாய் எப்படிக் கொண்டு போய் சேர்க்கலாம் என்று யார் திட்டமிடுகிறார்கள்? அரசியல்வாதிகளுக்கு எழுதப்பட்டுள்ள சித்திரகுப்தன் ஏட்டில் அதற்கு மட்டும்தான் திட்டம் வகுக்க வேண்டும், வியூகம் வகுக்க வேண்டும் என்று எழுதியிருக்கும் போலிருக்கிறது. தேர்தலுக்குத் திட்டம் போட்டு காய் நகர்த்துவதைப் போல, இப்போது இருக்கும் நிலைக்கு ஒரு குடத்தை நகர்த்தினால் எவ்வளவோ நன்றாக இருக்கும். நாமும் அதைக் கனவு காண்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
            காலப்போக்கில் உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படை வசதிகளை ஒரு நல்ல அரசு செய்து கொடுக்க வேண்டும் என்ற நிலை மாறி நான்கு சொம்பு நல்ல தண்ணீருக்கு ஒரு நல்ல அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று புதிய இலக்கண விதிகள் எழுதப்பட்டுவிடும் என்று யோசிக்க வேண்டியதாக இருக்கிறது.
            நம் மனிதர்களுக்கும்தான் என்ன பொறுப்பிருக்கிறது சொல்லுங்கள்! அந்தக் காலத்தில் குடத்தில் நெடுந்தூரத்திலிருந்து தண்ணீரை இடுப்பில் தூக்கி வந்ததால் அதன் அருமை மக்களுக்குத் தெரிந்திருந்தது. இப்போது குழாயில் வந்து தண்ணீர் கொட்ட ஆரம்பித்ததிலிருந்து அதன் அருமை தெரியாமல்தான் போய் விட்டது. குழாயில் கொட்டும் காலத்தில் இஷ்டத்துக்கு அனுபவிக்கிறார்கள். குழாய்கள் சொட்டு நீர்ப் பாசனத்துக்கு மாறியதும் குடத்தைத் தூக்கிக் கொண்டு கஷ்டத்துக்கு அலைகிறார்கள்.
            வருங்காலத்தில், ஒரு ரூபாய்க்கு நான்கு லிட்டர் தண்ணீர் லட்சியம்! ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் தண்ணீர் நிச்சயம்! என்ற தேர்தல் வாக்குறுதிகள் வராமல் போகும் என்றா நினைக்கிறீர்களா? அல்லது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்துக்கு மாதந்தோறும் பத்து லிட்டர் விலையில்லா தண்ணீர் வழங்கப்படும் தேர்தல் அறிக்கைகள் எழுதப்படாமல் போகும்தான் என்று நினைக்கிறீர்களா?
            அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஏனென்றால் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...