15 Jun 2019

சொட்டை விழுந்த பின் கிடைத்த சீப்பு



            குழாயைத் திறந்து விட்டு குளிப்பதன் மோசமான தன்மை என்னவென்றால் எவ்வளவு தண்ணீரில் நாம் குளிக்கிறோம் என்பதை அறிய முடியாததுதான். நாம் பாட்டுக்கு எவ்வளவு தண்ணீரில் வேண்டுமானாலும் குளித்துக் கொண்டிருப்போம். அதே அடிபம்பில் குளிக்கும் போது தண்ணீர் அடித்துக் குளிக்க வேண்டுமே என்ற அலுப்பிற்காகவது அளவாக குளிப்பது உண்டு. அதே கிணற்றுத் தண்ணீரில் வாளியைப் போட்டு இழுத்துக் குளிப்பது என்றாலும் அதே அளவுக்கு உத்திரவாதம் உண்டு.
            எல்லாவற்றிலும் ஓர் அளவு தேவைப்படுகிறது. அளவை மிஞ்சி எதையும் செய்ய முடியாது. எந்த அளவுக்கு நாம் அளவை மிஞ்சுகிறோமோ அந்த அளவுக்கு வருங்காலத் தலைமுறைக்கு கஷ்டத்தைக் கொடுப்பவர்களாக இருப்போம். "ஆத்துல போட்டாலும் அளந்துதாம்டா போடணும்!" என்று சாமியாத்தா சொல்லும் போதெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். மகாபாரதத்தையும், மாரியம்மன் தாலாட்டையும் எழுத்துக் கூட்டிப் படித்து மனப்பாடமாக வைத்திருந்த கிழவி அது. அது அவைகளையெல்லாம் மனப்பாடமாக வைத்திருந்தாலும் புத்தகத்தைப் பேரப் பிள்ளைகளின் கையில் கொடுத்து படிக்கச் சொல்லிக் கேட்பதில் அதற்கு அலாதிப் பிரியமும் இருந்தது. வேப்ப மரத்தைப் பார்த்து விட்டால் போதும், கிழவி கையெடுத்துக் கும்பிட்டு காலில் விழுந்து விடும். எந்த வேப்ப மரத்தையும் வெட்ட விடாது.
            இருக்கின்ற அத்தனை குளம், குட்டைகளையும் ப்ளாட்டைப் போட்டு மூடியாயிற்று. அப்படி அதைப் போட்டு மூடி விட்டு நீச்சல் குளங்களைக் கட்டியாயிற்று. நீச்சல் குளங்களில் காசு இருப்பவர்கள்தான் அதைக் கொடுத்து நீந்த முடியும். இல்லாதவர்கள் அப்படியெல்லாம் குளங்கள் இருக்கின்றன என்று கேள்விபட்டு திருப்திபட்டுக் கொள்வதோடு நின்று கொள்ள வேண்டும். இதற்கு எந்த கோலிவுட் டைரக்டராவது வரிந்து கட்டிக் கொண்டு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு, நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக் கொண்டு உலக சாதனையாளராவதாக படம் எடுப்பார்கள். நாமும் அதைக் காசு கொடுத்து பார்த்து விட்டு வீட்டிற்கு வந்து குமைந்து போயி அப்படியே நொட்டிக் கொள்ள வேண்டியதுதான்.
            குளம், குட்டைகள் இருந்த போது எந்தப் பிள்ளைக்கும் நீச்சல் கற்றுத் தர வேண்டிய அவசியமே இல்லாமல் அது அதுவாக நீச்சல் கற்றுக் கொள்ளும். குளம், குட்டைகளுக்குப் பிள்ளைகளைப் போக விடாமல் தடுப்பது பெத்தவங்களுக்குப் பெரும்பாடாக இருக்கும். இந்தப் பிள்ளைகளும் எந்நேரமும் குளம், குட்டைகளிலே ஊறிக் கொண்டிருக்கும். குளம், குட்டைகளில் விழுந்து விட்டால் எழுந்து வர மனசு வராது. அதில் ஒவ்வொன்றும் நீச்சல் அடிக்கும் வித்தையைப் பார்க்க வேண்டுமே! தலைகீழாக ஒண்ணு நீச்சல் அடிக்கும், வண்ணத்துப் பூச்சிப் போல ஒண்ணு நீச்சல் அடிக்கும், குளத்தையே குழப்பி விடுவது போல ஒண்ணு தம்பட்டம் அடிக்கும், மெலிருந்து கீழே விழுந்து சொருவு குத்துப் போட்டு ஒண்ணு வெளியே வரும். எல்லாம் வேடிக்கையாக இருக்கும். இதில் ஆம்பிளைப் பிள்ளைகள், பொம்பிளைப் பிள்ளைகள் என்ற வேறுபாடு இருக்காது. அதிலும் பொம்பிளைப் பிள்ளைகள் பண்ணுகின்ற அலும்பு தாங்காது. அது அளவுக்கு உடம்பை வளைத்துக் கொண்டு வேகமாக நீச்சல் பண்ண முடியாது பசங்களால். அதுகள் அடிக்கிற லூட்டியைப் பார்த்தால் குளம், குட்டைகள் என்ன பாவம் செய்தது என்று கேட்காமல் இருக்க முடியாது. அப்படி அமளிதுமளி பண்ணி விடும் ஒவ்வொண்ணும்.
            காணாமல் போன குளம், குட்டைகளுக்குப் பதில் இப்போது வீட்டு வாசலில் நான்கைந்து கலர் கலரான ப்ளாஸ்டிக் குடங்கள்தான் இருக்கின்றன. வழி மேல் விழி வைத்துக் காத்திருந்த காலம் போய், எப்போது தண்ணீர் வரும் என்று வீட்டுக்கு வீடு சனங்கள் தெரு பைப்பின் மேல் விழி வைத்துக் காத்திருக்கின்றன.
            தண்ணீர் என்பது வசதியான மக்களின் பண்டம் போல மாறிக் கொண்டு இருக்கிறது. வசதியானவர்கள் நல்ல ஹோட்டலில் வைக்கும் சுத்தகரிக்கப்பட்ட நீரையே குடிக்க மாட்டேன்கிறார்கள். காசு கொடுத்து தண்ணீர் பாட்டிலை வாங்கி வந்து அதைத்தான் குடிக்கிறார்கள். வசதியில்லாத மக்கள் எதையும் யோசிப்பதில்லை. அவர்கள் பாட்டுக்கு டீக்கடைக்குப் போகிறார்கள். அங்கே சுத்தமில்லாமல் இருந்தாலும் சரி பேரலில் பிடித்து வைத்திருக்கும் தண்ணீரை ப்ளாஸ்டிக் குவளையில் பிடித்து வாயில் ஊற்றிக் கொண்டு போய்க் கொண்டே இருக்கிறார்கள்.
            தண்ணீரை அளவுக்கு அதிகமாக வசதியானவர்கள் மட்டும் பயன்படுத்துவது என்பது வசதியற்றவர்களுக்குச் செய்யும் ஒருவகை தண்ணீர் துரோகம்தான். எப்படிப் பார்த்தாலும் காசு இருப்பவர்கள் தண்ணீரை அளவுக்கு அதிகமாகத்தான் பயன்படுத்துகிறார்கள். சுத்தம் என்ற பெயரில் அலம்பி இருக்கும் தம்ப்ளரையும் அவர்கள் நாலைந்து முறை அலம்பித்தான் பயன்படுத்துகிறார்கள். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் போது, குறிப்பின்ற அளவோடு இருக்கின்ற நல்ல நீரை அளவுக்கு மிஞ்சிப் பயன்படுத்தும் போது அதுவும் பயன்படுத்த முடியாத சாக்கடையாகி நஞ்சாகி விடுகிறது.
            நாம் பயன்படுத்திய நீரெல்லாம் மரத்தின் வேர்களுக்கு தாகம் தணிக்கும் நீராக ஓடலாம். எங்கே அவையெல்லாம் பூமியே உறிஞ்ச முடியாத காங்கிரீட் பாதைகளுக்கு இடையே அல்லவா ஓடுகிறது.
            நாம் நீரைப் பயன்படுத்தி, நாம் பயன்படுத்திய நீரை மரங்களும் பயன்படுத்தும் வகையில் செய்தால் சாக்கடையையும் ஓரளவுக்குக் குறைக்கலாம், மரங்கள் வளர்ப்பதையும் அதிகப்படுத்தலாம். நாம் வாய்க் கொப்புளித்துத் துப்பும் நீரை கூட மரங்கள் எந்த கூச்ச நாச்சமும் இல்லாமல் உறிஞ்சிக் கொள்ளவே தயாராக இருக்கின்றன. நாம்தான் அதையும் வாஸ் பேஷனில் கொப்புளித்துத் துப்பி சாக்கடைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். அந்தச் சாக்காடை காங்கிரீட் பாதாள லோகம் வழியாக ஓடிக் கொண்டிருக்கிறது. எதையும் சாக்கடைக்கு அனுப்புவதில் நமக்குதான் எவ்வளவு அலாதியான ஆர்வம்!  மனிதன் குடிக்கவே தண்ணீர் இல்லாத போது மரம் வளர்க்க தண்ணீர் இல்லை என்பவர்கள்தானே நாம்! நாம் குடிக்கும் அந்த நீரையே மரங்கள்தாமே மழை வடிவில் நமக்குக் கொண்டு வந்து சேர்க்கிறது என்பதை நாம் எப்போதாவது உணரத்தான் செய்வோம்! அதற்குள் காலம் கடந்து விடாமல் இருக்க வேண்டும். சொட்டை விழுந்த பின் கிடைத்த சீப்பைப் போல பயனில்லாமல் போய் விடக் கூடாது.
*****


No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...