26 Jun 2019

ஆறும் ஒண்ணும் ஏழு



செய்யு - 127
            "இப்படியா உடுத்திக் கூட மாத்து டிரெஸ் இல்லாம ஊர விட்டு கிளம்பி வருவாங்க? வூட்டுல யாரோடயாவது மனவருத்தமா?" என்கிறார் லெனின்.
            "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! சொன்னால் விட மாட்டார்கள்!" என்கிறான் விகடு. அப்படிச் சொன்னதுதான் தாமதம் வாந்தியாய் எடுக்கிறான். வாந்தி என்றால் வாந்தி மேல் வாந்தியாய்த் தொடர் வாந்தியாய் எடுக்கிறான். குடலே வெளியே வந்து விழுந்து விடும் போல ஒரு கட்டத்துக்கு மேல் மஞ்சள் மஞ்சளாய் தண்ணீராய் வெளியே வந்து கொட்டுகிறது. கொஞ்ச நேரத்தில் உடம்பு ஜூரம் கண்டு விட்டது.
            "நீங்க ஏதோ போய் சொல்றீங்க? அதாம் இப்படி வாந்தி வாந்தியா எடுக்குறீங்க?" என்று லெனின் சொல்வது மங்கலாய்க் கேட்கிறது. ஆம் மங்கலாய்க் கேட்கிறது. அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. கண்கள் அப்படியே மங்குகிறது. அப்படியே விழுந்து படுத்தவன்தான் விகடு. எழுந்து பார்த்த போது இரவு எட்டு மணிக்கு மேலாகி விட்டது. அறையிலிருந்தவர்கள் எல்லாரும் வந்திருந்தார்கள். லெனின் அவனுக்கு அருகில் கொஞ்சம் பயத்தோடு உட்கார்ந்திருக்கிறார்.
            அறைக்கு வந்தவர்கள் சமைத்திருக்கிறார்கள். தக்காளி வாசம் வீசுகிறது. அதென்ன வாசம் என்று மூக்கை இழுத்துப் பார்த்தால், சோறு வடித்து தக்காளித் தொக்கின் வாசம். அவனைச் சாப்பிடச் சொல்கிறார்கள். மறுபடியும் வாந்தி வந்து விடுமோ என்ற பயத்தில் அவன் சாப்பிட யோசிக்கிறான். வந்த முதல் நாளிலேயே உடம்பு பாதி உடம்பாய்ச் சுண்டிப் போய்க் கிடக்கிறது. மல்லுகட்டி கொஞ்சம் சாப்பிட வைக்கிறார்கள். சாப்பிட்டு முடித்ததும், வாந்தி எடுப்பவன் போல் ஒரு குமுக்கு குமுக்கியவன் அதை அப்படியே அடக்கிக் கொண்டு மறுபடியும் மயக்கம் வந்தவன் போல் படுத்தவன்தான். காலையில் பத்து மணி வாக்கில் எழுந்திருத்துப் பார்த்தால் அறையில் யாருமில்லை. லெனின் மட்டுமே உட்கார்ந்திருக்கிறார்.
            "குளிச்சிட்டு வாங்க! சாப்பிட்டு வரலாம்!" என்கிறார். உடம்பில் காய்ச்சல் மட்டும் குறைந்தபாடில்லை. இவன் யோசித்தபடியே உட்கார்ந்திருக்கிறான். உடம்பை வேறு முறித்துப் போடுவது போல வலிக்கிறது.
            "உடம்பு ஜூரமா இருக்கு. குளிச்சீங்கினாத்தாம் கொஞ்சம் கொறையும்!" என்கிறார் லெனின். எழுந்து நடக்கக் கூட உடம்பில் திராணி இருப்பதாகத் தெரியவில்லை. உடம்பிலிருந்த சத்தையெல்லாம் யாரோ உறிஞ்சி எடுத்து விட்டது போலத் தோன்றுகிறது. குளிக்க வருவதென்றால் சந்தைக் கடந்து வெளிகேட்டுக்கு அருகில் வர வேண்டும். அங்கே மூன்று குளிக்கும் இடங்களும், மூன்று டாய்லெட்டுகளும் இருந்தன. அதில்தான் அங்கே குடியிருந்த ஒட்டுமொத்த குடிமக்களும் புழங்கியாக‍ வேண்டும். வழக்கமாக கா‍லையில் இருக்கும் கூட்ட நெருக்கடி ஒன்பது மணிக்கு மேல் இருக்காது. ஆனால் யாராவது டாய்லெட் போய்க் கொண்டும், குளித்துக் கொண்டும் எந்நேரமும் அது பிசியாகத்தான் இருக்கும். டாய்லெட்டில் போய் உட்கார்ந்தால் லேசாக வயிற்றுப் போக்கு மாதிரி போகிறது. பல்லைத் துலக்கி விட்டு பார்த்தால் வாயெல்லாம் கசப்பாக இருப்பது போலிருக்கிறது. ஒரு வாய் தண்ணீரைக் குடித்துப் பார்க்கிறான். குடித்த மறுநொடியே தண்ணீர் அப்படியே வாந்தியாய் வெளியே வந்து ஊற்றுகிறது. வயிற்றை யாரோ உள்ளிருந்து இழுப்பது போல இருக்கிறது. குடலைப் பிடித்து பிசைந்து விடுவது போல இருக்கிறது. வயிற்றையும் வலிப்பது போல இருக்கிறது. வயிற்றைப் பிடித்துக் கொண்டு அப்படியே மறுபடியும் டாய்லெட்டில் போய் உட்கார்ந்து பார்க்கிறான். அப்படி உட்கார்ந்திருந்தால் உடம்பு கொஞ்சம் மட்டுபட்டது போலத்தான் இருக்கிறது. எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பது? எழுந்து நடந்தால் எட்டு வைக்கும் தூரத்தில் பாத்ரூம். முடங்கிக் கிடந்தால் டாய்லெட்தான். பாத்ரூமுக்குள் புகுந்து தண்ணீரை அள்ளி ஊற்றினால் கொஞ்சம் இதமாய் இருப்பது போல இருக்கிறது. குளித்து விட்டு வெளியே வந்தால் காய்ச்சல் இன்னும் அதிகப்பட்டது போல இருக்கிறது. உடம்பில் பால் பாத்திரத்தை வைத்தால் அது கொதித்து டீயோ காப்பியோ போட்டு விடலாம் போலிருக்கிறது. காய்ச்சலின் உக்கிரத்தில் சுட்டெரிக்கும் சூரியன் போல வந்து கொண்டிருந்தான் விகடு.
            இவன் வரும் போது ஒரு பழுப்பேறிய ரெண்டு குயர் லாங் சைஸ் நோட்டை வைத்து எழுதிக் கொண்டு இருக்கிறார் லெனின். இவன் வந்து நின்றதைப் பார்த்ததும் சிரிக்கிறார். "மொத படத்துக்கு நாம்ம எழுதி வெச்சிருக்கிற ஸ்கிரிப்ட். அப்பப்ப எடுத்து திருத்துறது. இப்போ ஒடம்பு பரவாயில்லயா?" என்கிறார்.
            இவன், "ம்" என்கிறான்.
            "சாப்பிட்டு வந்திடுவோமா?" என்கிறார் லெனின்.
            இவனுக்கு என்னப் பதில் சொல்வது என்ற சுயபிரக்ஞையே இல்லாமல் மறுபடியும், "ம்! என்கிறான்.
            இவனை அழைத்துக் கொண்டு லெனின் தீவார் ஹோட்டலை நோக்கிச் செல்கிறார். இவனால் அவ்வளவு தூரம் நடக்க முடியுமா என்பது போல கண்ணுக்குள் பார்ப்பவைகள் எல்லாம் சுழல்கிறது. கண்ணில் படும் மனிதர்களும், வாகனங்களும் அப்படியே சுருங்கிப் போய் புள்ளியாக மாறுகிறார்கள். கண்களால் எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு போவதைப் போல போய்க் கொண்டிருக்கிறான். ஓட்டலில் இவனை உட்கார வைத்து லெனினே நான்கு இட்டிலிகளை வாங்கி வந்து அவன் முன்னே வைக்கிறார். இட்டிலிகளை இவன் வெறித்துப் பார்க்கிறான்.
            "வாந்தி நெனைப்பாவே இருக்கு போலருக்கு. அத நெனைக்க வேண்டாம். சாப்பிடுங்க பாத்துக்கலாம்!" என்கிறான் லெனின்.
            "நீங்கள்?" என்கிறான்.
            "மத்தியானம் பாத்துகலாம்!" என்கிறார்.
            இவனுக்கு வற்புறுத்திப் பேசக் கூட நாக்கில் தெம்பு இல்லாதது போல இருக்கிறது. அநேகமாக நாக்கு செத்து விட்டது. இட்டிலிகளை பிய்த்து உள்ளே போடுகிறான். ஒமட்டலாய் இருக்கிறது. "மல்லுகட்டிச் சாப்பிடுங்க!" என்கிறார் லெனின். ரெண்டு இட்டிலிகளுக்கு மேல் சாப்பிட முடியவில்லை அவனால். ஒமட்டோ ஒமட்டு என்று ஒமட்டல். "சரி! போதும் வாங்க!" அவனை எழுப்பிக் கொண்டு வருகிறார் லெனின். ஹோட்டலின் வெளியே வந்ததும் ஓரத்தில் போய் மறுபடியும் வாந்தி. சாப்பிட்ட இட்டிலிகள் எல்லாம் வெளியே வந்து பல்லிழுத்துக் கொண்டிருக்கின்றன. அவனை அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் மெடிக்கல் ஷாப்பில் மாத்திரைகளை வாங்கிக் கொடுத்துப் போட்டுக் கொள்ளச் சொல்கிறார் லெனின்.
            இப்படி அவனை வேளா வேளைக்குச் சாப்பிட அழைத்துச் செல்வதும், அவன் வாந்தியெடுப்பதும், காய்ச்சல் கண்டு கிடப்பதும் நான்கு நாட்கள் நீடித்த போது லெனினுக்கு இருந்த பயம் அதிகமாகி விட்டது. மெடிக்கல் ஷாப்பில் வாங்கிப் போடும் மாத்திரைகள் எதுவும் கேட்பதாகத் தெரியவில்லை. "ஒங்கள உடம்ப சரிபண்ணி விட்டு ஊருக்குக் கெளப்பி விட்டுட்டா தேவலாம். மெட்ராஸ் ஒங்க உடம்புக்கு ஒத்துக்காது போலருக்கு. இஞ்ஞ சாப்பாடு கெடைக்காமா எளைச்சுப் போயிருக்கானுங்க. சாப்பாடு கெடைச்சும் அது ஒடம்புல ஒட்டாம வாந்தியா எடுத்து எளைச்சுப் போன மொத ஆளு நீங்கதாம்! நல்லவேளை ரூமுல நாம்ம ஒருத்தம் சூட்டிங் இல்லாம இருக்கேம். இல்லேன்னா ஒங்கள பாத்துக்கக் கூட நாதிருக்காது. நாளிக்கும் வாந்தியெடுத்தீங்கன்னா கன்பார்மா ஒங்கள பேக் பண்ணிட வேண்டியதுதாம்!" என்கிறார் லெனின்.
            லெனின் அப்படிச் சொன்னதால் வாந்தியும், காய்ச்சலும் நின்றதோ? இயல்பாகவே உடம்பு சரியாகி நின்றதோ? என்பது மாதிரி அதற்குப் பின் அவன் உடம்புக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தேற ஆரம்பித்தான். அந்த ரூமில் இருந்தவர்களை அதற்குப் பிற்பாடுதான் அவன் அறிமுகம் செய்து கொண்டான். லெனினின் நண்பர் இதயச்சந்திரன். சென்னைக்காரர். ஆள் நல்ல சிவப்பாய்க் குட்டையாய் இருந்தார். அப்போது பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த திகில் டி.வி. சீரியல் ஒன்றில் அசிஸ்டெண்ட் டேரக்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நிமிஷ நேரம் ஓய்வு கொடுக்காமல் சிகரெட் சிகரெட்டாய் ஊதித் தள்ளிக் கொண்டிருந்தார். மற்றொருவர் பூரணலிங்கம். ஸ்டேஜ் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் அவரும் அசிஸ்டென்ட் டேரக்டராக இருந்தார். ரொம்ப கலகலப்பாகப் பேசுவார். பான்பராக்கைப் போட்டு மென்று தள்ளி விடுவார்.
            ரூம் விட்டில் தங்கியிருந்த மற்ற மூன்று பேருக்கும் கலைத்துறைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. லெனின், இதயச்சந்திரன், பூரணலிங்கம் மூலமாக அவர்கள் கலைத்துறையில் எப்படியாவது நுழைந்து நடித்து சூப்பர் ஸ்டாரைப் பின்னுக்குத் தள்ளி டாப் டக்கராக வந்து கோடி கோடியாக சம்பாதிக்க வேண்டும் என்ற கனவு மட்டும் அவர்களுக்கு இருந்தது. அவர்களில் ஒருவர் எலெக்ட்ரீஷியன். நடிகர் பிரசாந்தின் வீட்டில் ஒயரிங்க் செய்ததையும், ஒயரிங்க் முடித்ததும் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் ஐநூறு ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்ததையும் அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த ஐநூறு ரூபாய் நோட்டையும் செலவழிக்காமல் பத்திரமாக பர்ஸில் வைத்திருந்து எல்லாரிடமும் காட்டிக் கொண்டிருந்தார். மற்றொருவர் ஏதோ ஒரு ஹோட்டலில் விருகம்பாக்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வேலை பார்த்த ஹோட்டலில் ஒருமுறை நடிகர் வையாபுரி வந்து சாப்பிட்டதை ரொம்ப பெருமையாச் சொல்லிக் கொண்டிருந்தார். மூன்றாமவர் மல்டி லெவல் மார்கெட்டிங் பண்ணிக் கொண்டிருந்தார். பிரபலமான நடிகைகளின் பெயர்களையெல்லாம் சொல்லி அவர்களுக்கு எல்லாம் காந்தப்படுக்கை டீலிங் பண்ணியிருப்பதாகச் சொன்னார். இது தவிர அவர்களின் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் வரை அந்த இடத்தில் தங்கிப் போகிறவர்களும் இருந்தார்கள். அவர்கள் வருவார்கள் போவார்கள் ரகம். அவர்கள் அப்படி வந்து தங்கும் போது அந்த ரூம் வீட்டின் இடநெருக்கடி அதிகரித்து விடும்.
            லெனின் அந்த மூன்று பேர்களிடமும் எச்சரிக்கையாக இருக்குமாறு சொன்னார். முன்பு அந்த ரூம் வீட்டில் தங்கியிருந்த ஆறு பேரும் அசிஸ்டெண்ட் டேரக்டராக இருந்ததையும், அதில் மூன்று பேர் வாடகைக்கு அட்வான்ஸ் கூட கொடுக்க முடியாமல் இடத்தைக் காலி செய்து விட்டதையும், வேறு வழியில்லாமல்தான் இந்த மூன்று பேரையும் ரூமில் சேர்த்திருப்பதையும் சொன்னார். அவர்கள் பேசுவதில் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் பொய்யாகவும், ஒரு சதவீதம்தான் உண்மையாகவும் இருக்கும் என்றார்.
            அந்த ரூம் வீட்டில் இருந்த ஆறு பேரில் யார் எப்போது ரூமில் இருப்பார்கள்? யார் ரூமை விட்டு வெளியே இருப்பார்கள்? என்று சொல்ல முடியாத வகையில் இருந்தார்கள். திடீரென்று பார்த்தால் ஒருத்தர் நாள் முழுவதும் சமயத்தில் வாரம் முழுதும் ரூமிலே படுத்திருப்பார். அப்புறம் காணாமல் போய் விடுவார். நான்கைந்து நாட்கள் கழித்துதான் கண்ணில் படுவார். ஒருவர் இரவில் வேலைக்குப் போவார். ஒருவர் மதியானத்துக்கு மேல் வேலைக்குப் போவார். அவர்களிடம் இருந்த ஒரே ஒற்றுமை ரூம் வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் அத்தனை பேரும் பத்து மணி வாக்கில் கிளம்பி எல்லாரும் ஒன்றாய் தீவார் ஓட்டலுக்கு டீ அடிக்கச் செல்வதுதான். எல்லாருக்குமான அந்த டீயை லெனினோ, இதயச்சந்திரனோ, பூரணலிங்கமோ ஒரு நாள் கூட வாங்கிக் கொடுத்ததில்லை. அந்த மற்ற மூன்று பேரில் ஒருத்தர்தான் வாங்கிக் கொடுத்தார்கள். என்றோ ஒரு நாள் சினிமாவிலே, டி.வி.யிலோ நடிக்க ஒரு சான்ஸ் வாங்கிக் கொடுத்து விடுவார்கள் என்பதற்காக வாங்கிக் கொடுக்கப்பட்ட டீயாகக் கூட அது இருந்திருக்கலாம்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...