26 Jun 2019

ஏன் அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்?



            எஸ்.கே. எழுதித்தான் எவ்வளவு நாளாகி விட்டது. எழுத வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. எழுதுகிறார். நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.
            'இப்போது அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்பதற்கான மாற்றம் உண்டாகிக் கொண்டிருக்கிறது. காலப் போக்கில் அரசுப் பள்ளியில் மட்டும்தான் பிள்ளைகளைச் சேர்க்கும் நிலை உண்டாகும் என்பது எனது கணிப்பு. அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கு அப்போது எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. சிபாரிசு தேவைபட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
            தனியார்ப் பள்ளிகள் தங்களுக்கான முடிவை தாங்களே எழுதிக் கொள்ளும். ஒவ்வொரு தனியார்ப் பள்ளிகளும் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் மனஅழுத்தமே அந்தப் பள்ளிகள் தங்களது தலையெழுத்தைத் தீர்மானித்து ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் போதுமானதாகும்.
            ஹோம் ஒர்க், புராஜெக்ட், எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டிஸ் என்று தனியார் பள்ளிகள் தரும் மனஅழுத்தம் தற்போது பிள்ளைகளைத் தாண்டி பெற்றோர்களையும் பாதிக்க ஆரம்பித்திருக்கிறது. மனநல மருத்துவர்களைச் சந்திக்க வரும் மனநோயாளிகளில் இன்று முப்பதைந்து விழுக்காட்டுக்கு மேல் பள்ளி செல்லும் பிள்ளைகளும், நாற்பது விழுக்காட்டுக்கு மேல் பிள்ளைகளின் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.
            ஒரு தனியார் பள்ளி என்பது ஒரு குழந்தைக்கு மூன்று வயதில் ஆரம்பிக்கும் டார்ச்சரை இருபத்து இரண்டிலிருந்து, இருபத்து ஐந்து வயது வரை நீட்டிக்கும் அளவுக்கு ஒரு காம்பஸில் காலேஜ், யுனிவர்சிட்டி வரை ஒரு லிங் வைத்துக் கொண்டு ஹைபர் லிங் செ்யது விடுகிறது.
            வருஷா வருஷம் லட்சக் கணக்கில் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு, கடைசியில் அங்குப் படித்த பிள்ளை ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஐயாயிரம் சம்பளத்துக்கு கம்ப்யூட்டர் பில் போடும் செக்சனுக்கு வேலைக்குப் போனால் எந்தப் பெற்றோர்க்கு பைபாஸ் சர்ஜரி பண்ணாமல் இருக்க முடியும் சொல்லுங்கள். அதனால் இப்போது பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் போதே வருங்காலத்தில் ஹார்ட் அட்டாக், பக்கவாதத்துக்கான மெடிகிளைமையும் பண்ணி அதுக்கும் டேர்ம் பை டெர்ம் கட்டி அழுவ வேண்டியிருக்கிறது.
            நல்லா இங்கிலீஷ் பேசணும்ங்றதுக்குதான் பிரைவேட் ஸ்கூலில் சேர்க்கிறேன் என்று நீங்கள் சொன்னால் அது மிகப் பெரிய பம்மாத்து. மூவாயிரத்துக்கு ஒரு ஸ்மார்ட் போனை வாங்கி அதில் ஆப்பையும், யூடியூப்பையும் திறந்தால் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது அமெரிக்கன் இங்கிலீஷா? பிரிட்டிஷ் இங்கிலீஷா? என்பதை நீங்கள்தான் முடிவு செய்து கொண்டு, உங்கள் பள்ளிக்காலத்தில் உங்களால் பேச முடியாத இங்கிலீஷை உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து கொண்டு நீங்களும் கற்றுக் கொண்டு பேசலாம்.
            உங்கள் பிள்ளைகளுக்கு எந்த கஷ்டமான பாடக்கருத்தையும் இன்று ஆப்புகளும், யூடியூப்புகளும் மிக எளிமையாகப் புரிய வைக்கின்றன. நீங்கள் பள்ளிக்காலத்தில் புரியாமல் படித்ததாகச் சொல்லும் அனைத்துக் கருத்துகளையும் உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து படித்து நீங்களும் புரிந்து கொள்ளலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து உட்கார்ந்து கொண்டு அவர்களை முறையாக செல்பேசியைப் பயன்படுத்துவதை உறுதி செய்து அதை முறையாகப் பயன்படுத்தப் பழக்கப்படுத்த வேண்டியதுதான். அரசு பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதான். ஒரு டியூசன் கூட வைக்க வேண்டியதில்லை. நான் படிக்கிறேனே மம்மி! நான் ஹோம் ஒர்க் பண்ணுகிறேனே டாடி! என்று அதது பாட்டுக்கு அதது வேலையைச் செய்து கொண்டிருக்கும்.
            எப்படிப் பார்த்தாலும் உங்கள் பிள்ளையைப் பைத்தியமாக்கவோ, படிப்பின் மூலம் மனதை முடமாக்கவோ நீங்கள் பள்ளியில் சேர்க்க மாட்டீர்கள் என்றால் உங்கள் விருப்பம் நிச்சயம் அரசுப் பள்ளிகள்தான். இங்கு இருக்கும் சுதந்திரத்தையும், மகிழ்ச்சியையும் நீங்கள் எந்தப் பள்ளியிலும் எவ்வளவு காசு கொடுத்தாலும் உங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்துவிட முடியாது.
            நீரை ஒரு காலத்தில் விலை கொடுத்து வாங்குவோம் என்று முன்னொரு காலத்தில் சொல்லியிருந்தால் நீங்கள் நம்பியிருந்திருக்க மாட்டீர்கள். காற்றை ஒரு காலத்தில் விலை கொடுத்து வாங்குவோம் என்று சொன்னால் இப்போது நீங்கள் நம்ப மாட்டீர்கள். அது போல சுதந்திரத்தையும், மகிழ்ச்சியையும் எந்த விலை கொடுத்தாலும் வாங்க முடியாது என்று சொன்னால் இப்போது நம்ப மாட்டீர்கள். ஆனால் காலப்போக்கில் நம்புவீர்கள். அப்போது அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியிருக்காது.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...