செய்யு - 119
தேன்காடு சித்தி மறு கோடைக்குள் வீட்டைக்
கட்டி முடித்து விட்டது. ஆயிரம் சதுர அடிக்கு மேல் இருந்தது வீடு. எல்லாருக்கும் பத்திரிகை
வைத்து குடி போனது. வைத்தி தாத்தாவின் பெண் மக்களில் அதுதான் முதன் முதலாக வீடு கட்டிக்
குடி போயிருந்தது. வைத்தி தாத்தாவுக்கு ஏக சந்தோஷம். தாத்தாவை கார் வைத்துதான் அழைத்துப்
போக வேண்டியிருந்தது. அவரது உடல்நிலை அந்த அளவுக்கு மோசமாக இருந்தது. சித்தி எல்லா
உறவு முறைகளுக்கும் சட்டை, துணி மணிகள் எடுத்துக் கொடுத்தது. வீட்டுக்கு முன்னே வண்ண
வண்ண விளக்குச் சரங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. மாடியில் கீற்றுப் பந்தல் போட்டு
சாப்பாடு பரிமாறப்பட்டது. அடுத்தடுத்த தெருக்களில் ஒரு சில மாடி வீடுகள் இருந்தாலும்,
சித்தி குடியிருந்த ஒண்ணாம் தெருவில் ஓட்டு வீடுகள்தான் அதிகம் இருந்தன. சித்தியின்
வீடுதான் முதல் மாடி வீடு. அதுவும் சித்திக்குப் பெருமிதமாகத்தான் இருந்தது.
"இவ்வே கட்டி முடிச்ச மாரி அவ்வே
வெங்கு வூட்டுலயும் வூட்ட கட்டி முடிச்சிட்டா தேவலாம். என்னமோ சவ்வு மாரில்ல வூடு
கட்டுற வேலய இழுத்துட்டு கெடக்கிறாக!" என்றது சாமியாத்தா அப்போது.
குடி போன விழாவில் பார்த்த போது தேன்காடு
சித்தப்பா ரொம்ப இளைப்பாக இருந்தார். வீட்டு வேலைகளை விழுந்து விழுந்து பார்த்ததில்
அப்படி இளைத்திருப்பார் என்று சொந்த பந்தங்கள் பேசிக் கொண்டிருந்தன. சொகுசாகப் படுத்தே
கிடப்பதில் அவரை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது. அவரே வீடு கட்ட வேண்டும் என்று வந்த
போது இப்படி மாய்ந்து மாய்ந்து உழைத்தது எல்லாருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.
தேன்காடு சித்தப்பா வீடு கட்டும் வேலை
நடந்து கொண்டிருந்த போதே, வயிற்று வலி என்று அடிக்கடி படுக்க ஆரம்பித்தது. மினுக்காக
இருந்த விட்டு திடீரென வேலைகளை இழுத்துப் போட்டு செய்ததால் ஏற்பட்ட வலி என்று ஆளாளுக்குச்
சொன்னார்கள். இவ்வளவு சீக்கிரமாக வீடு கட்டியதால் ஏற்பட்ட கண்ணடிதான் சித்தப்பாவுக்கு
வயிற்று வலியாக இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். முன்பெல்லாம் சொகுசுக்காகப் படுத்துக்
கொண்டிருந்த சித்தப்பா இப்போது வயிற்று வலி தாங்க முடியாமல் வயிற்றைச் சுருட்டிப்
பிடித்துக் கொண்டு படுக்க ஆரம்பித்தது. உள்ளூர் வைத்தியத்தில் ஆரம்பித்து திருத்துறைப்பூண்டி
வரை வைத்தியம் பார்த்தது சித்தி.
வயிற்றில் கட்டி இருப்பதாகச் சொல்லி அவர்கள்
ஏகப்பட்ட மருந்துகளை எழுதிக் கொடுத்தார்கள். வைத்தியம் பார்க்க பார்க்க சித்தப்பாவின்
வயிற்றுவலி கூடிக் கொண்டே போனதே தவிர குறைந்தபாடில்லை. கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில்
குணமில்லை என்றதும் தனியார் ஆஸ்பத்திரிக்கு செலவு செய்து அழைத்துச் செல்லும் சித்தி.
அங்கும் குணமில்லை என்றதும் மறுபடியும் கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும்.
இப்படி மாற்றி மாற்றி அலைந்து அலைந்து அது வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தது. சில
சமயங்களில் சித்தப்பாவை பஸ்ஸில் அழைத்துப் போக முடியாத அளவுக்கு வயிற்றுவலி வந்து
விடும். அந்த நேரங்களில் காசு செலவழித்துக் காரைப் பிடித்து செலவு செய்து அழைத்துச்
செல்லும்.
வயிறு சார்ந்த வியாதிகளுக்கு நாகப்பட்டிணத்தில்
நல்ல வைத்தியம் பார்ப்பார்கள் என்பதைக் கேள்விப்பட்டு சித்தப்பாவை நாகப்பட்டிணத்திற்கு
அழைத்துச் சென்றது சித்தி. அங்கு செல்வதற்கும் நிலைமைக்குத் தகுந்தாற் போல பஸ், கார்
என்று செலவு செய்து அழைத்துச் சென்றது. அங்கு வைத்தியம் பார்த்ததும் சித்தப்பாவின்
வயிற்றுவலி சற்று மட்டுப்பட்டது போலிருந்தது. எல்லாம் கொஞ்ச நாள்தான். மாத்திரை போடும்
போது குறைந்தது போலிருக்கும் வலி அப்புறம் கூடிக் கொண்டே போனது. சித்தப்பா தாங்க
முடியாத வலியால் அவதிப்பட ஆரம்பித்தது. சாமியாத்தாதான் சித்தி போகும் இடமெல்லாம் துணைக்குப்
போய்க் கொண்டு இருந்தது. அது விபூதி அடித்தும் பார்த்தது. வேண்டிக் கொண்டு காசு
முடிந்தும் வைத்தது.
"என்னாடி இது! வீட்டைக் கட்டிப் போட்டு
அதுல ஒரு ரண்டு நாளு கூட சந்தோஷமா தங்க முடியல. இப்படி இந்த மனுஷத்தை ஆஸ்பத்திரி
ஆஸ்பத்திரியா அழச்சிட்டு அலய வேண்டியாதிருக்கே!" என்று சாமியாத்தா அலுத்துக் கொண்டது.
"குடி போறப்ப வந்தவங்க எல்லாரும்
சொன்னாங்க யம்மா! கண்ணடி ரொம்ப இருக்குன்னு. சண்டே போட்ட பங்காளிகளுக்கு பத்திரிகை
கொடுக்க வாணாம்னு நாம்ம எவ்வளவோ சொன்னேம். இவுரு கேக்க மாட்டேங்றாரு. அண்ணம் பெரிய
அண்ணம்னுகிட்டு போயி வெச்சாரு. வந்தவனுங்க முழி ஒண்ணு கூட சரியில்ல யம்மா! நமக்கு
அப்பவே புரிஞ்சிச்சி. என்னமோ ஆகப் போகுதுன்னு. இப்படி ஆகிப் போச்சி. இவுங்க குடும்பத்தோட
குலதெய்வம் அய்யனாரப்பம் கோயிலுக்குப் போயி பூசை வெச்சத்தாம் சரிபட்டு வரும் போலிருக்கு!"
என்றது சித்தி.
"எல்லா கோயிலுக்கும் சொன்னபடியே
செஞ்சி வுட்டுருக்கே. இருந்தாலும் வூடு கட்டுனா இது ஒரு பெரச்சின. யாருக்காவது ஒருத்தருக்கு
இப்படித்தாம் ஆகும். அப்படி ஆட்டி வெச்சித்தாம் பெறவு சரியாகும். அதுக்குன்னு இப்புடியா?
நாமளும் போகாத ஊரில்ல, பாக்காத வைத்தியமில்லன்னுல்ல ஆயிப் போச்சி!"
"யம்மா! பாண்டிச்சேரி போயி பாத்தா
நெலம சரியா போயிடும்னு சொல்றாங்க! செரியான எடத்துல வைத்தியம் பாத்தாத்தான செரியாவும்
ஆவும்!" என்றது சித்தி.
"நம்மால முடியாதுடி யங்கச்சி! நீ
வேணுன்னா அழச்சிட்டுப் போ! நாம்ம வூட்டோட தங்கி புள்ளையோல பாத்துக்கிறேம். நமக்கு
ஆஸ்பத்திரியே ஒத்துக்க மாட்டேங்குதுடி. அந்த மருந்து நாத்தமும், வியாதி பிடிச்சவனுங்களயும்
பாத்தா சோறே உள்ள எறங்க மாட்டேங்குதுடி யங்கச்சி! அஞ்ஞ ஒங்க அப்பம் வேற என்னா நெலயில
கெடக்குறாரோ ஒண்ணும் புரியல. வூட்ட வுட்டு வந்து ஆறு மாசத்துக்கு மேல ஆச்சி. ஒரு எட்டுப்
போயிட்டு வந்தா தேவல. முடியலடி நம்மாள." என்றது சாமியாத்தா.
"நாமளும் அவருமே போயிட்டு வார்ரேம்.
நீயி வூட்டுல தங்கி புள்ளையோல பாத்துக்கோ. பாண்டிச்சேரி போவணும்னா எம்.எல்.ஏ.ட்ட
கடுதாசி வாங்கிட்டுப் போனாத்தாம் சீக்கிரமே பாக்கலாமாம். இல்லன்னா தங்க வெச்சி டோக்கனப்
போட்டு பாக்கிறதுக்கே நாளு ஆவும்னு பேசிக்கிறாங்க யம்மா!"
"அது வேறயா? எம்.எல்.ஏ. ன்னா நம்ம
பக்கத்து வூட்டுக்காரரா? கேட்ட ஒடனே கடுதாசி கொடுக்குறதுக்கு! ஏம்டி நீ வேற? தஞ்சாரூன்னா
கொண்டு போயி பாப்போம்டி!"
"தஞ்சாரூ வேண்டாம் யம்மா! பேருலயே
சாவூருன்னு இருக்கிறதால்ல நம்மூருல யாரும் அஞ்ஞ கொண்டு போயி வெச்சி வைத்தியம் பாக்க
மாட்டாங்க யம்மா! இஞ்ஞ வைத்தியம்னா திருத்துறபூண்டி. இல்லன்னா நாகப்பட்டிணம். அதுவும்
சரிப்பெடலன்னா பாண்டிச்சேரிதாம் யம்மா! அஞ்ஞ போயி சரியாகாம இருக்காது. மொதல்லயே பாண்டிச்சேரி
போயிருக்கணும் யம்மா! எப்படியோ சரியாப் பூயிடும்ன்னு இருந்தாச்சி. இனுமே காலத்த கடத்த
வாணாம் யம்மா! எம்.எல்.ஏ.வூட்டு தச்சுவேலயெல்லாம் இவுகதாம் பாத்தாக. எந்த வூட்டு வேலக்கிப்
போகலன்னாலும் அவுக வூட்டுக்கு மட்டும் போயி வேல பாத்துக் கொடுத்துட்டு வந்துடுவாக.
அவுகளுக்கும் இவரு இல்லன்னா வேலயே வாண்டாம்னு சொல்லிப்புடுவாக. வேதாரண்யம் போனம்னா
கடுதாசி கொடுக்காம இருக்க மாட்டாக. அவுக வூட்டுல இருக்கணும். அதாங்!" என்ற சித்தி
எம்.எல்.ஏ.விடம் கடுதாசி வாங்குவதற்காக ஏழெட்டு முறை அலைந்தது. இது போகும் ஒவ்வொரு
முறையும் எம்.எல்.ஏ. வெளியே போயிருந்தார். கடைசியாக எம்.எல்.ஏ. வீட்டில் இருந்தவர்களே
சித்தி அலைவதைப் பார்த்து விட்டு கடுதாசியை வாங்கி வைத்துக் கொடுத்தனர். அந்தக் கடுதாசியைப்
பார்த்ததும் சித்தப்பாவை எப்படியும் குணப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை சித்திக்கு
வந்தது.
சித்தி சித்தப்பாவை அழைத்துக் கொண்டு
பாண்டிச்சேரிக்குக் கிளம்வது என்று முடிவானது. "அங்கிட்டு வெச்சு குணப்படுத்தாம
திரும்ப மாட்டேம்!" என்று சபதம் எடுப்பது போல சாமியாத்தாவிடம் சொல்லி விட்டுதான்
சித்திக் கிளம்பியது.
"நல்ல படியா போயிட்டு வா எங்கச்சி!
நீ வார வரிக்கும் புள்ளைகள பாத்துக்கிறேம். ஏம் ஆத்தா சமயபுரத்தாளே! புன்னநல்லூருகாரியே!
ஏம் புத்தடி மாரியம்மா! எம் புள்ளிய தவிக்க வுட்டுடாத. கொணப்படுத்தி அனுப்பிப்புடுங்கடி!
ஒங்களுக்கு ன்னா செய்யணுமோ செஞ்சிடறேம். தங்கத்தாலயே வயிறு பண்ணிப் போடச் சொல்றேம்!"
என்றது சாமியாத்தா.
சித்தப்பா பஸ்ஸில் பாண்டிச்சேரி போகும்
தோதில் இல்லை. அவர் ஒடிந்து விழுந்து விடும் அளவுக்கு இளைத்துப் போய் விட்டார். எந்நேரமும்
வயிற்றைப் பிடித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தார். சமயத்தில் வயிற்றுப்போக்காகப்
போய்க் கொண்டே இருந்தது. சில நாட்கள் வெளிக்கிப் போக முடியாமல் அவதிப்பட்டார். அரிதாக
எப்போதாவது தூங்கினார். அப்படித் தூங்கும் போதும் அவரது கைகள் இரண்டும் வயிற்றைச்
சுற்றிலும் ஈக்களை விரட்டுவது போல வயிற்றுக்கு மேலே அசைந்து கொண்டிருந்தது. சித்தப்பாவால்
சரியாகப் பேச முடியவில்லை. காற்றை இழுத்து விடுவது போல தஸ் புஸ் என்று உளறுவது போலிருந்தது
அவரது பேச்சு. இதையெல்லாம் பார்க்க பார்க்க சித்திக்கு அழுகைப் பொத்துக் கொண்டு வந்தது.
"எப்பிடி ராசா மாரி இருந்தாரு யம்மா! நடந்தா நாலு ஊரு வெடிக்க பாக்குமே. இப்படி
ஒடஞ்சிப் போயி கெடக்குறாகளே. எல்லாம் இவுக கூடப் பொறந்தவுகளோட கண்ணுதாம். அவிய்ங்க
கண்ணவிஞ்சுப் போகோ! இம்மாஞ் செவப்பு! இம்மா முகக்கள நம்ம வகையில ஏது? சிங்கம் மாரில்லா
நடப்பாக, சிரிப்பாக. ரவ சிரிப்பு முகத்துல வார மாட்டேங்குதே யம்மா!" என்று சொல்லிச்
சொல்லி அழுதது சித்தி.
சித்திக்கு பாண்டிச்சேரிக்கு அழைத்துச்
செல்ல கார் ஏற்பாடு செய்வதுதான் பெரும்பாடாக இருந்தது. கார்க்காரர்கள் வர யோசித்தார்கள்.
உள்ளூரில் என்றால் பாண்டிச்சேரி போய் வருவதற்குள் ஏகப்பட்ட சவாரிகள் பார்த்து விடலாம்
என்று அவர்கள் யோசித்தார்கள். சித்தியும் கேட்கும் வாடகையைத் தருவதாகச் சொன்னது.
தவிரவும் அவர்கள் காருக்கு இன்ஷ்யூரன்ஸ், ஆர்.சி., லைசென்ஸ் என்று ஏதோ ஒன்று இல்லாமல்
எப்படியோ சமாளித்து கார் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். "நம்ம ஸ்டேட்டுன்னா சமாளிச்சிடலாம்.
இன்னொரு ஸ்டேட்டு. மாட்டுனம்னா கார புடுங்கிப் புடுவாம்ல." என்று வர இயலாமைக்கு
காரணம் சொல்லினர். அதுவும் இல்லாமல் தேன்காட்டிலிருந்து அப்போது யாரும் பாண்டிச்சேரிக்கு
வைத்தியம் பார்க்க கார் வைத்துக் கொண்டு போனதுமில்லை. பஸ்ஸிலேயே எப்படியோ சமாளித்துப்
போய், எப்படியோ குணமாகி திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அதையும் காரோட்டிகள்
குறிப்பிட்டுச் சொன்னார்கள். சித்தி திகைத்துப் போய் நின்று விட்டது.
கடைசியாக தேன்காட்டில் சித்தப்பாவுக்கு
தெரிந்த ஆள் ஒருத்தர் ஆம்னி வேன் வாங்கி ஓட்டிக் கொண்டிருந்தார். அவர்தான் பாண்டிச்சேரிக்குத்
துணையாக காரில் அழைத்து வருவதாகச் சொன்னார். சித்திக்குப் பாரம் குறைந்தது போலிருந்தது.
சித்தப்பா அவரது வீட்டுக்கே சம்பளமே வாங்காமல் வேலை பார்த்ததை அவர் அப்போது சொல்லிச்
சொல்லி அவரும் மாய்ந்து போனார். அவர் ஆம்னி வேனின் சீட்டுகளைக் கழற்றிப் போட்டார்.
சித்தப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனதிலிருந்த மெத்தையில் படுத்தால் வயிற்று வலி
தேவலாம் என்பது மாதிரி இருப்பதாக அது சொன்னது. அதற்காகவே சித்தி ஒரு கட்டிலை வாங்கிப்
போட்டு அதில் மெத்தையை வாங்கிப் போட்டு சித்தப்பாவைப் படுக்கப் போட்டிருந்தது. அந்த
மெத்தையைத் தூக்கி சீட்டுகள் கழட்டப்பட்டிருந்த ஆம்னி வேனில் போட்டு அதில் சித்தப்பாவைப்
படுக்கப் போட்டார். பக்கத்திலே சித்தி உட்கார்ந்து கொண்டது. ஆம்னிவேன்காரரும் தன்
பங்குக்கு அவர் வீட்டிலிருந்து ஒரு மெத்தையை அடியில் போட்டிருந்தார். ஆம்னி வேன் பாண்டிச்சேரி
நோக்கிக் கிளம்பியது.
எம்.எல்.ஏ.வின் கடுதாசியுடன் போன பிற்பாடும்,
அங்கு வைத்து சித்தப்பாவைப் பரிசோதிப்பதற்குள் பதினேழு நாட்கள் ஆனது சித்திக்கு. டோக்கன்
போட்டு ஜிப்மரில் தங்க வைத்து விட்டார்கள். சித்தப்பாவைப் போல ஏகப்பட்ட ஆட்கள் காத்து
நிற்பதாக சித்திச் சொன்னது. எல்லாம் பரிசோதித்து முடித்து அங்கு சொன்ன பதிலில் நிலைகுலைந்து
போனது சித்தி.
*****
No comments:
Post a Comment