ஒரு திரைப்படத்தில் பிரதானம் கதாநாயகனின்
துணிச்சல்தான். அதை மையமாகக் கொண்டே பல தமிழ்த் திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன.
அந்தத் துணிச்சல்தான் சினிமா கதைகளையே உருவாக்குகிறது. நீங்கள் உங்களைப் பற்றி துணிச்சலாக
ஒரு கதையை நண்பர்களிடம் சொல்லிப் பாருங்களேன். சும்மா ரீல் விடாதே என்று முகத்தில்
மொத்துவது போல் சொல்லி விட்டுப் போய் விடுவார்கள். அப்படி ரீல் சுத்துவதுதான் சினிமா.
முன்பு ரீலில் சுற்றிக் கொண்டிருந்த சினிமா தற்போது டிஜிட்டலுக்கு மாறி விட்டாலும்
ரீல் விடுவது இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.
இந்தக் கதாநாயகர்கள்தான் துணிச்சலாக எவ்வளவு
காரியங்கள் செய்கிறார்கள். ஒரு பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப்பை வைத்து ஒரு
செல்போன் டவருக்குக் கீழே உட்கார்ந்து கொண்டு ஒட்டுக் கேட்கிறார்கள், அழைப்புகளை
மாற்றி விடுகிறார்கள்.
திருவிழாக் கடையில் ஒரு துப்பாக்கியை வாங்கிக்
கொண்டு இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குப் போய் தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்துகிறார்கள்.
நாட்டின் பாதுகாப்பு ரகசியம் அறிந்த விஞ்ஞானியைத்
தேசத் துரோகிகள் கடத்திக் கொண்டு போனால், அந்தத் தேசத் துரோகிகளின் செவுளில் நான்கு
அரை வைத்து கூட்டிக் கொண்டு வருகிறார்கள்.
அடியென்றால் ஒவ்வொன்றும் இடியாக விழுகிறது.
விழும் அடியில் சுவர் தெறிக்கிறது. காங்கிரீட் கலவை வெடித்துச் சிதறுகிறது. அடியாட்களைத்
தூக்கி அடித்தால் எஃகு இரும்புகள் வளைந்து நெளிந்து உருக்குலைந்து போய் விடுகிறது.
வெடிகுண்டுகளை பொரி உருண்டைச் சாப்பிடுவதைப்
போல கடித்து மென்று தின்று செரித்து விடுகிறார்கள். ஒரு சிவப்பு ஒயரை கட் செய்தோ
அல்லது சிவப்பு ஒயரை பச்சை ஒயரோடு மாற்றி முடிந்து விட்டோ அணுகுண்டுகளையே செயலிழக்கச்
செய்து விடுகிறார்கள்.
அதை விட அதிகமாக நாயகியர்களின் தொப்புளில்
பம்பரம் விடுவது, ஆம்லெட் போடுவது என்று கதாநாயகர்களின் துணிச்சல் காரியங்களைப் பட்டியல்
போட்டால் டெராபைட் மெமரி கார்டு பத்தாது.
ஹே, ஹோ என்று ஒரு பாட்டைப் போட்டு விட்டு
அம்பானியாகி விடுகிறார்கள், வாரன் பப்பெட் ஆகி விடுகிறார்கள். அடுத்தப் பாட்டைப் போட்டு
விட்டால் முதலமைச்சரும், பிரதமரும் நம்முடைய கதாநாயகரை ஆட்சி அமைக்க கெஞ்சிக் கூப்பிட
வேண்டியதாகி விடுகிறது.
ஊழல் என்றால் நம் கதாநாயகர்களுக்குப் பிடிக்க
மாட்டேன்கிறது. கடத்திக் கொண்டு போய் கொன்றே விடுகிறார்கள். நீதிமன்ற விசாரணை என்றால்
கதாநாயகர் நாற்பது பக்கத்துக்கு வசனம் பேசுவார் என்று பயந்து டவாலியே விடுதலை செய்து
விடுகிறார். அதை விட முக்கியமாக கோர்ட்டுக்குப் போன அடுத்த நொடியே தீர்ப்போடு வந்து
விடுகிறார்கள். வெச்சான் பாரு ஆப்பு என்று அதற்கு கருத்து சொல்வது போல நான்கு பேர்
வசனம் பேசுகிறார்கள்.
வில்லனைத் துரத்திப் பிடிப்பதற்குள் நாற்பது
கார்களை அப்பளமாய் நொறுக்கி, அதில் பயணித்தவர்களை சாகடித்து அல்லது காயமடையச் செய்து,
போகும் வழியில் இருக்கும் தெருவோரக் கடைகளையெல்லாம் புழுதி பறக்க விட்டு, அப்படியே
பறந்து வரும் நாலைந்து ஹெலிஹாப்டர்களைக் கையில் பிடித்து நறநறவென்று நாலு சுற்று சுற்றி
தரையில் அடித்து... ஹைய்யோ பார்ப்பவர்கள் பற்றிக் கொண்டு எறிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கதாநாயகர்கள் துணிச்சல்காரர்கள், சாகசக்காரர்கள்
என்று சொன்னால் இப்போதெல்லாம் உங்களால் ஒத்துக் கொள்ள முடியுமா? அந்தக் கதாநாயகர்களை
இவ்வளவு காலமாக அலுக்காமல் கொள்ளாமல் பார்க்கும் நாம் அன்றோ உண்மையான துணிச்சல்காரர்கள்
மற்றும் சாகசக்காரர்கள். நிச்சயமாக இது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.
*****
No comments:
Post a Comment