21 Jun 2019

கவர்மெண்டா? பிரைவேட்டா?



            யாரைக் கேட்டாலும் கவர்மெண்ட்டு பஸ்ஸையெல்லாம் பிரைவேட்டு ஆக்கிப்புடணும்னு பேசிக்கிறாங்க. அவங்க அப்படி பேசிக்குறதிலயும் குத்தம் காண முடியாது. கவர்மெண்டு பஸ்ஸூங்க அப்படித்தாம் தகரம் பிய்ஞ்சி, சீட்டுக உடைஞ்சு, தர் புர்ருன்னு இழுத்துகிட்டு ஓடிகிட்டு இருக்கிறதா விசனப்படுறாங்க.
            அதுவும் மழைக்காலத்துல மழை வெளியில பெய்யுதா? பஸ்ஸூக்குள்ள பெய்யுதா?ன்னு சந்தேகமே வந்துடுது பாருங்க. சமயத்துல பஞ்சர்னு நிப்பாட்டிப்புடுறாங்க. மாத்தறதுக்கு இன்னொரு ஸ்டெப்புனி இல்லன்னு போன் பண்ணிச் சொல்றாங்க. இப்போ அவங்கவங்க கையில கைபேசி இருக்குறதால இது ஒரு செளகரியம். இதே முன்னாடின்னா பஸ் பஞ்சர் ஆயி நின்ன எடத்திலேந்து எங்க லேண்ட்லைனு டெலிபோனு இருக்குன்னு தேடி ஓடுவாங்க பாருங்க. அதுக்குப் பிற்பாடு ஆளுங்க அங்கேந்து வந்து சரி பண்ணிதாம் பஸ்ஸூ ஓட வேண்டியதாகி விடுது. கவர்மெண்டு பஸ்ல ஒரு ஸ்டெப்னி டயர போட்டுகிட்ட சனங்கள ஏத்திக்க முடியாம செரமமா போயிடுமோ என்னான்னு அவங்க அதெ வெச்சிக்கிறதேயில்ல போலருக்கு.
            கவர்மெண்ட்டு பஸ்ஸ பிரைவேட்டு ஆக்கணும்ங்றதுக்கு நட்டத்தில ஓடுறதையும் ஒரு காரணமா சொல்றாங்க. அதெப்படி பிரைவேட்டுக்காரன் லாபத்துல ஓட்டும் போது கவர்மெண்டுகாரங்க மட்டும் நட்டத்துல ஓட்டுறாங்கன்னு கேட்க மாட்டேங்றாங்க. அடேங்கப்பா! பிரைவேட்டு ஆக்கிப்புட்டா எல்லாம் சரியாயிடுமா மக்கா? ஆம்னிபஸ்காரங்க பிரைவேட்டுக்காரங்கதானே. அவங்க அடிக்கிற கட்டணக் கொள்ளைய பாத்ததுக்கு அப்புறமும் பிரைவேட்டு ஆக்கிப்புட்டா எல்லாம் சரியாயிடும் என்பதை ஒத்துக்கிறீங்களா நீங்க?
            "கவர்மெண்ட்டு பஸ்லாம் கடனுல ஓடுதாம் தெரியும்ல!" என்று நம்ம மீசைக்கார அண்ணாச்சி கண்களை உருட்டி மிரட்டி கேட்கும் போது கொஞ்சம் பயமாக இருந்தாலும், "கவர்மெண்ட்டே கடனுலதாம் ஓடுதடா வெங்காயம்! அதுக்காக கவர்மெண்டையே வேணாம்னு சொல்லிப்புடுவீயோ!" என்று பக்கத்தில் இருக்கும் நம்ம சொட்டத்தல அண்ணாச்சி கேள்வி கேட்காம விடாது.
            "அட ஏம்டா! நட்டத்துல ஓடுதுன்னு கவர்மெண்ட்டே  பிரைவேட்டாக்கி அதைத்தாம்டா செய்யுது! இதுல நீ வேற கூப்பாடு போட்டு மாநாடு நடத்தி பிரைவேட்டு ஆக்குன்னு சொல்லுவியாக்கும்! இருக்கறதயெல்லாம் இப்படி தனியாருகிட்ட ஒப்படைச்சா தனியாருதாம்படா லாபம் பார்ப்பான்! இதல்லாம் ஒரு சிந்தனையாடா?" என்று நம்ம காடாமூஞ்சி மாமா சத்தம் போட்டாத்தான் பஸ்ல கொஞ்சம் பேச்சு அடங்குது.
            இவ்வளவு பேச்சும் நடப்பது எங்கே என்கிறீர்கள்? அதே கவர்மெண்ட் பஸ்ஸில் உட்கார்ந்துதான். எல்லாம் அந்த நேரத்துப் பேச்சுதான். பஸ்ஸை விட்டு இறங்கி விட்டால் யாருக்கும் பஸ் ஞாபகம் வராது. திரும்ப பஸ் ஏறும் போதுதான் பஸ் ஞாபகம் வரும். அப்படி ஆளாளுக்கு அத்தனை வேலைக இருக்கு. கிராமத்துல இறங்குனதிலேந்து கருவ வெறவு கொண்டாந்து, ஆடு மாடுகள கட்டி அதுக்கு இரை போட்டு, தண்ணிப் பிடிக்க நாயா பேயா அலைஞ்சி, கொஞ்சம் அரிசியப் போட்டு பொங்கிச் சாப்பிட்டா அலுத்து களைத்துப் போயிடும். இது என்ன டவுனா? ஒரு ஆத்திர அவசரத்துக்கு ஓட்டல் கடையில போயி ரண்டு சாப்பிட்டுக்கலாம்னு நெனைக்கிறதுக்கு.
            இப்படி இருக்குற இத்தனைக்கும் எங்க கிராமத்துக்கு எந்த பிரைவேட்டுக்காரன் பஸ் விட்டான்? இந்த ஒடைஞ்சிப் போன பள்ளமும் மேடாவும் போன சிதலமடைஞ்சிப் போன ரோட்டுல கவர்மெண்டுகாரங்கதாம் பஸ்ஸ வுடுவாங்க. கிராமத்திலேந்து பத்து பதினைஞ்சி பேரு மட்டும் பஸ்ல போனாலும், கிராமத்துல இருக்குறவங்களுக்கு அப்படி ஒரு வசதிய நட்டம் பார்க்காம செஞ்சு கொடுக்க கவர்மெண்டாலதாம்ணே செஞ்சு கொடுக்க முடியும்! எந்த பிரைவேட்டுக்காரன் அப்படி நட்டம் பார்க்காம செஞ்சு கொடுப்பான் சொல்லுங்க?!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...