22 Jun 2019

காலியான கிங் சைஸ் நோட்டுகள்!



செய்யு - 123
            சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமலைப் பார்த்து விட்டு அவர்களை நேரில் பார்க்க மெட்ராஸூக்கு ரயிலேறியவர்களின் கதையை யாரேனும் சொல்ல கேட்கும் போதெல்லாம் விகடுவுக்குச் சிரிப்புதான். சிரியோ சிரியென்று சிரிப்பான். இதென்ன வகை கண்மூடித்தனம் என்று நையாண்டிச் செய்வான். சினிமாவின் மீது இந்த மக்களுக்கு அப்படியென்ன ஒரு விநோத கவர்ச்சி என்று ஓட்டி எடுத்து விடுவான். ஏதோ ஒரு பித்து அவர்களை அப்படிச் செய்து விடுகிறது என்பதை அவனது பகுத்தறிவு வெகுநாளைக்கு ஒப்புக் கொள்ள விடாமலே செய்திருந்தது.
            திருவாரூர் தியாகராசர் சுவாமி கல்லூரியில் சேர்வதற்கு முன்பே விகடு தாளைப் பார்த்தால் கிறுக்கித் தள்ளி, எதை எதையோ எழுத ஆரம்பித்திருந்தான். அதிலும் அரைப்பக்கம், முக்கால் பக்கம், ஒரு பக்கம் அதிகபட்சம் ஒன்றரைப் பக்கம் வரும் வரை கவிதைகள் எழுதுவது அவனுக்கு ரொம்பவே வசதியாகப் போய் விட்டது. அது ஒரு முக்கியமான காலக்கட்டம். ஒரு பத்தியை எழுதி அதை துண்டு துண்டாக்கி, காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி,மேற்கோள் குறி, ஆச்சரியக்குறி, கேள்விக்குறியை எடுத்து விட்டு அது ஒரு கவிதை என்று சொன்னால் நம்ப எல்லாரும் தயாராக இருந்தார்கள். உதாரணத்துக்கு மேலே சொன்ன சங்கதியையே எடுத்துக் கொண்டால்,
ஒரு பத்தியை எழுதி
துண்டு துண்டாக்கி
காற்புள்ளி
அரைப்புள்ளி
முக்காற்புள்ளி
மேற்கோள் குறியை
எடுத்து விட்டால்
அது ஒரு கவிதையாகாதோ
            என்று எழுதினால் அதை ஒரு கவிதை என்று கொண்டாட உலகமே தயாராக இருந்தது. இதை வாசித்துக் காட்டும் போது மட்டும் ஒவ்வொரு வரியையும் இரண்டு இரண்டு முறை வாசித்துக் காட்ட வேண்டும். இரண்டாம் முறை வாசிக்கும் போது கொஞ்சம் அழுத்தம் கொடுத்து வாசித்தால் நல்லது. இல்லாவிட்டாலும் அது ஒரு பெரிய இலக்கணப்பிழையாகி விடாது. இது போதாதா? ஒரு நாளைக்கு இது மாதிரி நான்கைந்து பத்திகள் எழுதினால் போதும்! நான்கைந்து கவிதைகள் சுடச்சுட தயார். இப்படி தினம் தினம் கவிதைகள் தயார் செய்வதில் விகடு கைதேர்ந்தவனாகி விட்டான். எதை எழுதினாலும் கவிதைதான்.
            கல்லூரிக்கு ஒரு விடுப்பு விண்ணப்பம் எழுதுவது என்றாலும் கவிதைதான். அதுவும் ஒரு உதாரணத்துக்கு என்றால்...
இன்று காய்ச்சல் இருப்பதால்
நாளை வர இயலாது
என்று நினைக்கிறேன்
நாளை வர இயலாததை
இன்றே சொல்வது
ஓர் ஆச்சரியம்தான்
            இப்படி டீ குடிப்பதற்கு ஒரு கவிதை, போண்டா சாப்பிடுவதற்கு ஒரு கவிதை, சிறுநீர்க் கழிப்பதற்குக் கவிதை என்று ஏகப்பட்ட கவிதைகள்.
டீயைக் குடிப்பது
தீயைக் குடிப்பது
போலிருக்கிறது
அடடா
‍இரண்டும் என்ன சூடு
தீயைப் போன்ற
டீயைக் குடித்து விட்டு
தீயைப் போல இரு
            என்பது டீ குடிப்பதற்கான கவிதை.
உலகம் உருண்டை
போண்டா உருண்டை
உருண்டை போண்டாவைச் சாப்பிடுகையில்
உலக உருண்டையை விழுங்கு
உலக உருண்டையைப் பார்க்கையில்
உருண்டைப் போண்டாவை
உள்ளே தள்ளுவது போல
அதன் ஞானத்தை விழுங்கு
            என்பது போண்டாவிற்கான கவிதை.
சிறுநீர் அசுத்தம்
கல்லூரிக் கழிவறை அசுத்தம்
அசுத்தத்தோடு அசுத்தம் சேர்வதே முறை
கல்லூரிக் கழிவறையிலே
மூக்கைப் பொத்தியாவது
சிறுநீர்க் கழி
மரத்தடியில் கழிப்பது வேண்டாம்
மரம் சுத்தம்
அது தரும் காற்று சுத்தம்
சுத்தத்தை ஏன் அசுத்தமாக்குகிறாய்
            என்பது சிறுநீர் கழிப்பதற்கான கவிதை.
            இந்தக் கவிதைகளின் அபத்தங்களைத் தாங்க முடியாவிட்டால் இத்தோடு விட்டு விடுங்கள். இதுவே கொஞ்சம் அதிகம்தான். நான் கொஞ்சம் கூடுதலாகத்தான் எடுத்துச் சொல்லி விட்டேன். இதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை. ஒருவேளை அபத்தங்களின் சுவை பிடித்த ஒரு வாசகராக நீங்கள் இருந்தால் இந்த ப்ளாக்ஸ்பாட் முழுக்க அப்படிப்பட்ட கவிதைகளைப் படிக்கலாம். நீங்களே இந்த ப்ளாக்கின் முன்னால் பின்னால் போய் படித்துக் கொள்ளுங்கள். எல்லாம் அப்படி எழுதியவைகள்தான்.
            நினைத்த மாத்திரத்தில் நினைத்தப் பொருளில் இப்படி எழுதித் தள்ளுவது அந்த வயதில் அவனுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. நீங்கள் எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் அதற்கு இந்த மாதிரி எதையாவது விகடு எழுதித் தள்ளினான். அதுவும் கல்லூரியில் நண்பர்களிடம் தலைப்புக்கா பஞ்சம் இருக்கும்? தாவரவியலில் இருக்கும் ஒட்டுண்ணித் தாவரமான கஸ்கூட்டாவில் ஆரம்பித்து துப்பட்டா வரை ஏகப்பட்ட தலைப்புகள். அத்தனைத் தலைப்புக்கும் அநாயசமாக எழுதித் தள்ளினான் விகடு. தலைப்பே இல்லையென்று சொன்னாலும் அதற்கும் ஒன்றை இது மாதிரி எழுதித் தள்ள அவனால் முடிந்தது.
            இப்படி கவிதைகளைப் பிரசவிப்பவனைக் கல்லூரி சும்மா விடுமா? தாவரவியல் துறையிலிருந்து ஒரு கவிஞன் பிறந்து விட்டான் என்று கல்லூரியே கொண்டாட ஆரம்பித்து விட்டது. கல்லூரியே இப்படிக் கொண்டாடினால் தமிழ்நாடே எப்படிக் கொண்டாடும்? என்று நினைக்க ஆரம்பித்ததில் தாவரவியல் என்ற பெயரே மறந்து போகும் அளவுக்கு கவிதைகள் எழுத ஆரம்பித்து விட்டான் விகடு. ப்ளஸ்டூ படித்தவரை அவனைப் போல தாவரவியல் பெயர்களைச் சொல்ல ஆளில்லை. எவ்வளவு கஷ்டமான பெயராக இருந்தாலும் அப்படியே ஞாபகத்தில் இருக்கும். ஒரு பேராசியரைப் போல தாவரவியல் பெயரைச் சொல்லி அதன் சிற்றினம், பேரினம் குறித்த விரிவான தகவல்களோடு இலை அமைப்பு, பூ அமைப்பு, கருவுறுதல் என்று எடுத்து விட்டுக் கொண்டே இருப்பான். கவிதைகள் எழுத ஆரம்பித்ததிலிருந்து தாவரவியல் பாடங்கள் எல்லாம் வறட்சியாக இருப்பதாக நண்பர்களிடம் அவன் கூறிக் கொண்டிருந்தான். தாவரவியல் பாடங்களை எல்லாம் கவிதை நடையில் எழுதி ஒரு புரட்சியை, மலர்ச்சியை உருவாக்க வேண்டும் என்று வேறு அளந்து விட்டுக்  கொண்டிருந்தான்.
            "இந்தாருப்பா வெகடு! ஒன்ன மாரி கவித எழுதுற மனுஷன நாம்ம பாத்ததில்லே. டி.ராஜேந்தரு யாருன்னு நெனக்கிறே? நம்ம மாயரம் ஏ.வி.சி.ல ஒன்ன மாரி எழுதிட்டு இருந்தாப்ல. இப்போ யாரு? நம்மூருகாரரப்பா. தமிழ்நாட்டுக்கே தெரியுதுல்ல. நீயெல்லாம் மெட்ராஸ் போனா அவர தூக்கி அடிச்சிடுவ பாத்துக்க!" என்று சீனியர்கள் ஒவ்வொருவராகக் கூப்பிட்டு பற்ற வைக்க, பற்றி எரியாத குறையாக கல்லூரியில் திரிந்து கொண்டிருந்தான் விகடு.
            மெட்ராஸ் போகும் முடிவுக்கு விகடு வந்திருந்தான். எந்தத் தாவரவியல் பாடத்தில் அவ்வளவு ஆர்வமாகச் சேர்ந்திருந்தானோ அதே தாவரவியல் பாடம் இப்போது பிடிக்காமல் வேறு போயிருந்தது. கல்லூரிக்குப் போனதும் முதல் வேலையாக வகுப்பறைக்குப் போகாமல் மரத்தடியிலும், கேண்டினிலும் உட்கார்ந்து கொண்டு எதையாவது எழுதிக் கொண்டிருந்தான். அப்படி அவன் எழுதித் தள்ளியதில் ஏழெட்டு கிங் சைஸ் நோட்டுகள் காலியாகி இன்னும் பத்து பதினைந்து கிங் சைஸ் நோட்டுகளைக் காவு கேட்டுக் கொண்டிருந்தது.
            விகடு வகுப்பறைக்கேப் போகாமல் இருந்ததில் அப்போது துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் அப்துல் மாலிக் அவனைத் தனியே கூப்பிட்டு அக்கறையோடு கண்டிக்கும் நிலைக்கு ஆளாயிருந்தான். மாலிக் நல்ல உயரம். சிவப்பு என்றால் அப்படி ஒரு சிவப்பு. பார்த்தால் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் வைக்க வேண்டும் என்பது போல முகம் அவ்வளவு குழந்தைத்தனமாக அமுல்பேபி கணக்கில் இருக்கும். அவர் நடந்து வரும் போது பார்க்க அப்படி ஒரு கம்பீரமாக இருக்கும். கோர்ட்டை எப்போதாவதுதான் மாட்டுவார். டையைக் கட்டிக் கொண்டு டக் இன்னில் ஷீ போட்டுக் கொண்டு அவர் நடக்கும் நடை அவ்வளவு வசீகரமாக இருக்கும். ஆங்கிலத்தில் ஸ்டைலாகப் பேசும் அவர் வகுப்பு எடுக்க ஆரம்பித்தார் என்றால் பிள்ளைகளுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக வட்டார வழக்கில் தரை லோக்கலுக்கு இறங்கி அடிப்பார். பாடங்கள் பச்சக் என்று மனதில் ஒட்டிக் கொள்ளும் வகையில் சின்ன சின்ன உதாரணங்களை அள்ளித் தெளிப்பார் மனுஷன். ஒரு செல்லுக்குள்ள உட்கருவ ஒரு நெல்லிக்காய் மூட்டை மாரி கட்டிப் போட்டிருந்தா அது யூகேரியாடிக், அதே செல்லுக்குள்ள நெல்லிக்காயி மூட்ட கட்டாம சிதறிக் கெடந்துச்சுன்னா அது புரோகேரியாடிக் என்று அவர் சொல்லும் உதாரணங்கள் கல்லூரியை விட்டு வெளியே வந்து தாவரவியலுக்கு சம்பந்தமில்லாத வேறு வேலை பார்த்தாலும் அப்படியே நினைவில் நிற்கத்தான் செய்யும்.
            ரிசர்ச் டிபார்ட்மெண்ட் வரை இருந்த காலேஜில் துறைத் தலைவராக இருந்தாலும் அவருக்கு பி.எஸ்ஸி. பாட்டனி முதலாமாண்டுக்கு பாடம் எடுப்பதில் அவருக்கு அவ்வளவு பிரியம் இருந்தது. கட்டாயம் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஒரு பேப்பர் அவரே பாடம் எடுப்பதைப் பிடிவாதமாக விட்டு விடாமல் வைத்திருந்தார். காலேஜில் மிகப் பெரிய ஸ்காலர் என்று சொல்லப்பட்டார் மாலிக். அப்படிப்பட்டவர், விகடு எழுதியதோ கவிதைகளோ என்னவோ, அவர் ஆரம்பத்தில் அவன் எழுதியவைகளை அவ்வளவு ரசித்தார், பாராட்டினார். இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருந்தது.
            "ஒன்ன எம்மட மகன் மாரி நெனைக்கிறேம்டா! நமக்கு ரண்டும் பொம்பள புள்ளிக. நமக்கு ஒரு புள்ள இருந்தா ஒன்ன மாரிதாம்டா இருப்பாம்! நல்லா படிச்சி கல்கத்தாவுல போயி ஒரு எக்ஸாம் எழுதினே அங்கிருக்கு பொட்டானிகல் கார்டன். அதுலயே வேலக்கிப் போயிடலாம்டா! அப்போ அங்க போயி எந்த மரத்தடிக்கு கீழே உக்காந்து ன்னா வேணாலும் எழுதிக்கோ! இங்க வாணாம். வூட்டுல நீயி காலேஜி போயி படிச்சிட்டு இருக்குறதா நெனச்சிட்டு இருக்காங்க. இங்க நீயி காலேஜூக்குள்ளயே வாரதில்ல. இதயல்லாம் மரத்தடிக்கிக் கீழே உக்கார்ந்து எப்போ வாணாலும் எழுதிக்கலாம். படிக்கிறத இப்போதாம் படிச்சாகணும்! நெறய மார்க்கு வாங்கி நீயி பாட்டனிக்கு வந்ததுல ரொம்ப சந்தோஷம்டா! ஒன்ன மாரி ஒருத்தம் வர மாட்டானா ரொம்ப நாளா ஏங்கியிருப்பேம் பாத்துக்கோ. எல்லாம் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி கெடக்கலேன்னு இங்க வாரவம்தான். நீ ஒருத்தம்தான் அதெல்லாம் கெடக்கிற நெலயில இருந்தும் இங்க வந்திருக்கோ. ஒன்ன மாரி நாலு பேரயாவது நல்லா கெளப்பி விட்டு ஒரு பெரிய ரிசர்ச்சரா ஆக்கிடணும்னு கனவுடா நமக்கு! அந்தக் கனவ கலச்சி விட்டுடாத!" என்றார் மாலிக்.
            விகடு கல்லூளிமங்கன் கணக்காய் நின்றிருந்தான். அவனுக்கு எழுத வரும் அளவுக்குப் பேச வராது. ஒரு பேப்பரை எடுத்து ஒரு தாவரவியல் மாணவன் ஒரு தாவரத்துக்குக் கீழே அமர்ந்து கவிதை எழுதுவது தவறா? என எழுதிக் கொடுத்து விடலாமா என நினைத்தான். அவனுக்கு அவ்வளவு நேரம் கொடுக்காமல், மாலிக்கே தொடர்ந்து பேசினார், "போனது போகட்டும்! எல்லாத்திலயும் அரியர்ஸ் வெச்சிருக்கே! செரிபட்டு வராது! நம்ம வூடு அடியக்கமங்கலம் தெரியும்ல. செமஸ்டருக்கு ரண்டு நாளுக்கு முன்னாடி வூட்டுல வந்து தங்கிடு. கெளப்பி விட்டுர்றேம்! இப்பயும் ஒண்ணும் கெட்டுப் போகல. புத்தியா இருந்தா பொழச்சிகலாம். சாமர்த்தியம் பண்ணிக்கோ! பண்ணிப்பேன்னு நம்புறேன். ஐ ஹோப்... நம்புறேம் போடா!"
            இப்போது மாலிக் சாரைப் பார்க்கும் போதெல்லாம் எவ்வளவு அக்கறையாகப் பேசியிருக்கிறார் என்பது புரிகின்ற விகடுவுக்கு அது அப்போது புரியவில்லை. அவர் அப்படிக் கண்டித்ததும் அவனுக்குப் பிடிக்கவில்லை. எப்படியும் அவன் கல்லூரிக்கு என்று கிளம்பி கல்லூரிக்குள் போகாமல் இருப்பது, கவிதைகளாய்க் கிறுக்கித் தள்ளுவது என்று இந்தத் தகவல்கள் எல்லாம் ஒருநாள் வீட்டுக்குப் போகும் என்ற அச்சம் அவனக்குள் வளர ஆரம்பித்தது. அவனுக்குக் கல்லூரி பிடிக்காமல் போய் விடும் என்பது போலிருந்தது.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...