23 Jun 2019

ஒரு நிமிடத்தில் நீங்களும் கோடீஸ்வரர்!



கோடீஸ்வரராக உங்களிடம் வழிகள் இருக்கிறதா? என்ற கேள்வி அண்மை காலமாக என்னிடம் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதைத் தவறான கேள்வியாகவோ, அபத்தமான கேள்வியாகவோ புரிந்து கொள்வதோ, கேள்விக் கேட்பவர்களை பேராசைக்காரர்களாகவோ புரிந்து கொள்வதில் எந்தப் புண்ணியமும் இல்லை.
சமூகத்தில் அந்த அளவுக்குப் பணத்தின் தேவை மனித மனங்களை மாற்றி விட்டிருக்கிறது. வறுமையும், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத இயலாமையும் அதைப் போக்க வேண்டும் என்பதைத் தாண்டி கோடி கோடியாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு மேஜிக்கல் ரியலிஸமான மனநிலையை உருவாக்கி விட்டன.
கையில் பத்து ரூபாய்க்கு வழியில்லாவிட்டாலும் மனதில் ஒரு கோடீஸ்வரனுக்கான டாம்பீகத்தோடு வாழும் மனநிலை பல பேருக்கு வந்து விட்டது. அதன் விளைவாக கோடீஸ்வரராக உங்களிடம் வழிகள் இருக்கிறதா? என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
இத்தனைக்கும் பிள்ளைகளுக்கு கோடி என்ற இடமதிப்பை அறிமுகப்படுத்தியது தவிர எனக்கும் கோடிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கணக்குகள் கொடுப்பதை எடுத்துக் கொண்டாலும் பத்தாயிரத்தைத் தாண்டி கூட்டலோ, கழித்தலோ, வகுத்தலோ பெருக்கல் உட்பட கணக்குகள் கொடுப்பது கிடையாது. பிள்ளைகள் போடச் சிரமப்பட்டு அதன் காரணமாக மறுநாள் படிக்க வராமல் போய் விடக் கூடாது என்ற பயம் மனதுக்குள் உண்டு!
கோடிகளைச் சம்பாதிப்பதற்கான வழிமுறைகளை வைத்துக் கொண்டு நான் கோடிகளைச் சம்பாதிக்காமல் இருப்பதாக ஒரு கருத்துச் சித்திரத்தைப் பலரும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். "நீங்க சம்பாதிக்காட்டியும் பரவாயில்ல! நமக்காகவது சொல்லுங்க! சம்பாதிச்சி தொலச்சிட்டுப் போறேம்!" என்கிறார்கள்.
கோடியைச் சம்பாதித்து நான்தான் என்ன செய்யப் போகிறேன்? இவர்கள்தான் என்ன செய்யப் போகிறார்கள்? இதைக் கேட்டால், "கோடியைச் சம்பாதித்தால் நிறைய நல்லது பண்ணலாம்ப்பா!" என்கிறார்கள். அது சரியென்றால், கோடியைச் சம்பாதித்தவர்களின் எத்தனை பேர் நல்லது செய்கிறார்கள்? எனக்குத் தெரிந்த வரையில் அவர்கள் கோடியை இன்னும் கோடி கோடியாக எப்படிப் பெருக்குவது என்பதில்தான் கவலையோடு இருக்கிறார்கள்!
உண்மையைச் சொல்லப் போனால்... ஒரு சொகுசான வாழ்க்கை குறித்த கனவு எல்லாருக்கும் இருக்கிறது. அந்தக் கனவுக்கு கோடிதான் சரிபட்டு வரும் என்ற நினைப்பும் எல்லாருக்கும் இருக்கிறது. முன்பு இந்த கோடியின் இடத்தில் லட்சம் இருந்தது. அது நான் சின்ன பிள்ளையாக இருந்த போது. இப்போது லட்சத்தை துச்சம் பண்ணி விட்டு அந்த இடத்தை கோடி பிடித்து விட்டது. முன்பு லட்சாதிபதிகள் என்றால் பெரிய ஆட்கள். இப்போது கோடீஸ்வரர்கள்தான் பெரிய ஆட்கள். கூடிய விரைவில் இந்தக் கோடியையும் இன்னொரு எண் பிடிக்கக் கூடும். அது மாறிக் கொண்டிருக்கும் எண் அல்ல, மாறிக் கொண்டிருக்கும் பொருளாதார மனோநிலை.
வாழ்வதற்கு ஏற்ற அளவுக்கு, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்குச் சம்பாதித்தால் போதாதா என்ன? அப்படி நினைப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. கோடி கோடியாகச் சம்பாதிப்பதற்கு எந்த நியாயமான வழிமுறைகளும் இல்லை. பல பேரின் வயிற்றில் அடித்துதான் அதைச் சம்பாதிக்க வேண்டும்.
 இப்படி எடுத்துச் சொன்னாலும் கேட்பாரில்லை. உனக்கு நிச்சயம் ஏதோ தெரியும் என்ற நம்பிக்கை என்னைச் சுற்றியுள்ள நண்பர்களுக்கு இருப்பதால்... அவர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்க விரும்பவில்லை. இது குறித்து ஆழ்ந்து யோசித்ததில் பிடிபட்ட சில வழிமுறைகளைச் சொல்ல விழைகிறேன்.
            முதல் வழி நிஜத்தில் நன்றாக நடிக்கும் நீங்கள் ஏன் சினிமாவில் நடிக்கக் கூடாது? நடித்தால் நாட்டில் கோடிகள் கொட்டும்.
            இரண்டாவது வழி சாதாரண விசயத்திலும் அசாதாரண அரசியல் செய்யும் நீங்கள் ஏன் நேரடியாகவே அரசியலில் இறங்கக் கூடாது. இறங்கினால் கோடி கோடியாகக் எரவானத்தில் கொட்டும்.
            மூன்றாவது வழி எந்த ஒப்பந்தத்தையும் அதாவது பொது கான்ட்ராக்டையும் விடாது பிடித்துக் கொள்ளுங்கள். பொது என்றால் எவனும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டான். அப்படியே கேட்டாலும் நான்கு நோட்டுகளை உருவிப் போட்டால் அமுங்கிப் போய் விடுவான். ஆக ஒப்பந்தங்களை அமுக்கிப் போடுங்கள். கோடிக்கு மேல் கோடியாக ஸ்விஸ் பேங்கில் அமுக்கும் அளவுக்குக் கொட்டும்.
            நான்காவது வழி அப்படியே திரும்பிய பக்கமெல்லாம் கல்விக் கூடங்களைக் கட்டிப் போட்டுக் கொண்டேயிருங்கள். கோவணத்தை விற்றாவது பிள்ளைகளைப் படிக்க வைக்க கோடி கோடியாகக் கொண்டு வந்து கால்களில் கொட்டிக் கொண்டே இருப்பார்கள்.
            ஐந்தாவது வழி அறக்கட்டளை ஆரம்பித்து தலைவனாகி விடுங்கள். அறக்கட்டளை மூலம் ஒரு வியாபாரத்தை ஆரம்பித்து இயற்கை இடுபொருளால் செய்யப்பட்டது என்ற விளம்பரத்தோடு விற்க ஆரம்பியுங்கள். நீங்கள்தான் நோட்டுகளை அச்சடிக்கிறீர்களோ என்ற நிலைமைக்கு உங்கள் நிலைமை ஆகி விடும்.
            இந்த ஐந்து திறமைகளில் ஏதேனும் ஒன்றாவது உன்னிடம் இருக்கும். அப்புறம் என்ன? கட்டாயம் உங்கள் கையில் கோடி இருக்கும். உங்கள் சமுகம்தான் பாவம்! கடைக்கோடியில் இருக்கும்!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...