22 Jun 2019

தரமானக் கல்வியின் தாக்கம்



            குழந்தைகள் படிக்க வேண்டும் என்று பள்ளியில் சேர்க்கப் போய், "ஏன் ஒங்க புள்ள படிக்கல?" என்று நம்மையே பெற்றோருக்கான கூட்டம் போட்டு கேட்டால் என்ன சொல்வது? "அதாங் படிக்கலேன்னுதாம் பள்ளிக்கூடத்துல சேர்த்திருக்கோம். படிச்சான்னா நாம்ம ஏன் சேர்க்கப் போறோம்"னு கேட்பதா?
            "வீட்டுல பாதரா இருக்குறவங்க ஒரு அரை மணி நேரம் பாடம் எடுங்க! மதரா இருக்குறவங்க ஒரு அரை மணி நேரம் பாடம் எடுங்க!" அப்படின்னா, "பள்ளிக்கூடத்துல நீங்க என்னத்தான் எடுப்பீங்க?"ன்னு கேட்கத் தோன்றுகிறது. அப்படி எல்லாம் கேட்கப் போய், "நீங்க ஒங்க புள்ளய ஒங்க வீட்டுலேயே வெச்சுக்குங்க!" னு சொல்லி விடுவார்களோ என்று கேட்பதற்குப் பயமாகவும் போய் விடுகிறது.
            "இந்தாருங்க! ஒங்க புள்ள கிரேடையெல்லாம் பாருங்க! ரொம்ப கம்மியா இருக்கு! ஆல் சப்ஜெக்ட்டுக்கு டியூசன் வையுங்க!" என்கிறார்கள். "அதுக்கு எதுக்கு பள்ளியோடத்துல சேக்கணும்? பேசாம டியூசன்லேயே சேத்திருக்கலாமே! பள்ளியோடத்துக்கும் பீஸ் கட்டி, டியூசனுக்கும் பீஸ் கட்டி, இது என்னாடா பீஸ் கட்டி வெளயாடுற விளையாட்டா?" என்று மைண்ட் வாய்ஸ் ஏகத்துக்கும் எகிறுகிறது.
            படிக்க பள்ளிக்கூடம் என்றால் டியூசன் எதற்கு? அல்லது படிக்க டியூசன்தான் என்றால் பள்ளிக்கூடம் எதற்கு? முதலில் படிப்பதற்கு பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டுமா? அல்லது டியூசனில் சேர்க்க வேண்டுமா? என்பதைத் தெளிவு பண்ணியாக வேண்டும். கடைசியாக, பள்ளிக்கூடத்திலும் படித்து, டியூசனிலும் படித்து, அப்புறம் வீட்டிலும் படித்து இதென்ன வாழ்நாள் முழுவதும் கல்வி என்பது போல நாள் முழுவதும் கல்வியா? என்பதையும் முடிவு பண்ணியாக வேண்டும்.
            எதற்கு இவ்வளவு காசைக் கொட்டி... இப்படித்தான் படிக்க வைக்க வேண்டுமா? இதற்குப் பெயர்தான் காசிருக்கிறது என்ற லட்சியமா? அல்லது இஷ்டத்துக்குக் கடன் கொடுக்கிறார்கள் என்ற அலட்சியமா? எல்லாவற்றிலும் நைச்சியமாக காசு குறைவையும், இலவசத்தையும் தேர்ந்தெடுக்கும் மக்கள், காசே இல்லாமல் இலவசமாகக் கல்வியைத் தரும் அரசுப் பள்ளியை ஏன் தேர்ந்தெடுக்க மாட்டேன்கிறார்கள்? என்றால்... குவாலிட்டின்னு ஒண்ணு இருக்குல்ல என்று சட்டென்று போட்டுத் தாக்குகிறார்கள்.
            அட குவாலிட்டிப் பித்துப் பிடித்த குல்பிகளா! கல்வியை அவ்வளவு தரமா கொடுக்கணும்னு நினைக்கின்ற நீங்க ஏன்தாம் தரம் கெட்டத் தனமா ஓட்டுக்கு நோட்டை வாங்கிட்டு ஓட்டுப் போடுறீங்கன்னு கேட்கத் தோணுது! இதையெல்லாம் கேட்கத் தோன்ற வேண்டுமே தவிர கேட்டு விடக் கூடாது. கேட்டு விட்டால் செவுளைப் பெயர்த்து விடுகிறார்கள். செவுளுக்குப் பயந்து செமனேன்னு கெடக்க வேண்டியிருக்கிறது பாருங்கள்!
            அதுவும் இல்லாமல் காசைக் கொடுத்து கல்வியை வாங்குவது போல, காசைப் பெற்றுக் கொண்டு ஓட்டைப் போடுவது என்பதும் குவாலிட்டி எஜூகேஷனின் தாக்கமாக இருக்கலாம்!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...