செய்யு - 115
ஒரு நல்ல விஷயத்தை முடிக்கப் போய் அது
கெட்ட விஷமாக முடிந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் ஆனது சுப்பு வாத்தியாரின்
நிலைமை. வைத்தி தாத்தா வீட்டுக்குப் போய் நீண்ட நாட்கள் ஆகியிருந்தது. வீயெம் மாமாவின்
நிச்சயம் நின்ற பிறகு வைத்தி தாத்தா வீட்டிற்குப் போவதற்கும் கூச்சமாகவும் இருந்தது.
ஒரு நல்ல காரியத்தை நிகழ்த்த வேண்டுமானால் அதையெல்லாம் பார்க்க முடியுமா? சுப்பு வாத்தியாரின்
டிவியெஸ் பிப்டி கிளம்பி விட்டது. அந்த வண்டிக்கு இன்னும் ஏராளமான சோதனைகள் காத்திருந்தன.
சுப்பு வாத்தியார் வைத்தி தாத்தா வீட்டுக்குப்
போனது போது வைத்தி தாத்தா, குமரு மாமா, வீயெம் மாமா, சாமியாத்தா, மேகலா மாமி என்று
எல்லாரும் அபூர்வமாக வீட்டில் இருந்தார்கள். சுப்பு வாத்தியார் அங்கு வந்ததை வைத்தி
தாத்தாவும், குமரு மாமாவும் வேண்டா வெறுப்பாகத்தான் பார்த்தார்கள். பேருக்கு
"வாங்க!" என்பதோடு நிறுத்திக் கொண்டார்கள். சுப்பு வாத்தியாருக்கு விசயத்தை
எப்படித் தொடங்குவது என்று குழப்பமாகி விட்டது. நான்கைந்து முறை குரலைக் கரகரத்து,
கனைத்து என்னென்மோ செய்து பார்த்தார். "அது வந்து..." என்று தொடங்கியும்
பார்த்தார். அது மனசுக்குள்ளே முடிந்து போனது. படரென்று தன்னையும் அறியாமல்,
"எடம் ஒண்ணு வெலைக்கு வந்திருக்கு..." என்று ஆரம்பித்தது சுப்பு வாத்தியாரின்
வாய்.
"ம்! ஏற்கனவே ஒரு எடம் பாத்துக் கொடுத்தாச்சு!
இப்போ அடுத்த எடம்?" என்றது ஜீவனற்றுப் போயிருந்த வைத்தி தாத்தா குரல் தாட்டிகம்
குறையாமல்.
"விசாரிச்சுட்டு வாரலாம்னு வந்தேம்!"
என்றது சுப்பு வாத்தியார்.
"யாரு எடம்? எடம் எங்கேருக்கு?"
என்றது குமரு மாமா.
"கடத்தெருல இருக்குல்ல... லாலு வாத்தியார்
எடம்!" என்றது சுப்பு வாத்தியார்.
"எழுந்திரீங்க! மொதல்ல கெளம்புங்கத்தாம்!"
என்றது குமரு மாமா.
சுப்பு வாத்தியார் டக்கென்று எழுந்து வாசலுக்கு
வந்து விட்டது.
"நில்லுங்க! போவலாம்! வெல ன்னான்னு
விசாரிச்சீங்களா?" என்றது வைத்தி தாத்தா.
"ஆறு சொல்றாரு! அஞ்சுக்கு முடிச்சிக்கலாம்!"
என்றது சுப்பு வாத்தியார்.
"அடேங்கப்பா! கோயிலு எடத்துக்கு
அஞ்சா? காதுல பூவுவெச்சிட்டு அலயுற கிறுக்குப் பிடிச்சவம்தான் வாங்குவாம்!" என்றது
வைத்தி தாத்தா.
"கோயிலு நெலமா? அது தெரியாதே நமக்கு!
லாலு வாத்தியார் சொல்லவேயில்ல!" என்ற சுப்பு வாத்தியாருக்குத் தூக்கி வாரிப்
போட்டது. இது மாதிரியான விசயங்கள்தான் தன்னைத் தேடிக் கொண்டு வருமோ என்று எரிச்சலாக
வந்தது.
"எப்பிடிச் சொல்லுவாம்? எப்படிச்
சொல்லுவாம்ங்றேம்? பொண்ணப் பத்தி எதுவுஞ் சொல்லாம நம்ம தலயில கட்டி வெக்கப் பாத்தவனாச்சே!
நம்ம நல்ல நேரம் அதுவாவே ஓடிப் போயிடுச்சு. கட்டிட்டு வந்து ஓடிப் போச்சுன்னா...
நானா சாவப் போற நானு தொங்க வேண்டியதுதாங்!"
"தப்பா எடுத்துக்காதீங்க யாரும்.
வூடு தேடிட்டு வந்துட்டாரு லாலு வாத்தியாரு. நமக்குக் கோயிலு எடம்னு தெரியாமப் போச்சி.
ஒத்து வாராதுன்னு சொல்லிடறேம்!" என்ற கிளம்பத் தயாரானது சுப்பு வாத்தியார்.
"நில்லுங்க! போவலாம்! ரண்டுன்னு
கேட்டுப் பாருங்க. முடிச்சிக்கலாம். அவ்வளவுதாங் கொடுக்கலாம்!" என்றது வைத்தி
தாத்தா.
"ரண்டுல்லாம் முடியாது. ஒன்றரைன்னா
முடிச்சிக்கலாம்!" என்றது குமரு மாமா.
"கோயிலு எடம்னு வேற சொல்றீங்க!
அதெ ஏம் போயி இம்மாம் வெல கொடுத்து வாங்கிட்டு? நாம்ம போயிட்டு வாண்டாம்னு சொல்லிடறேம்!"
என்றது சுப்பு வாத்தியார்.
"அப்படிலாம் சொல்லப்புடாது. வெலயச்
சொல்லிக் கேளுங்க. தோதுபட்டா பாத்துக்கலாம். நாம்ம வுட்டதா இருக்கப்படாது. அங்க வுட்டதா
இருக்கட்டும்!" என்றது வைத்தி தாத்தா.
"எல்லாருக்கும் கெளம்புறேம்!"
என்றபடி சுப்பு வாத்தியார் கிளம்பி வெளியே வந்து டிவியெஸ் பிப்டியை எடுத்தது. வீயெம்
மாமா ஓடி வந்து பின்னால் ஏறிக் கொண்டது. இது ஒரு மாதிரியான சங்கடத்தைத் தந்தது சுப்பு
வாத்தியாருக்கு. ஒன்றும் சொல்ல முடியாமல் வண்டியை எடுக்க வேண்டியதாகி விட்டது. பொன்னியம்மன்
கோயில் வந்ததும் வண்டியை நிறுத்தச் சொன்னது வீயெம் மாமா.
"அத்தாம்! அதுக கெடக்குது வுடுங்க.
நமக்கு அந்த எடத்த முடிச்சி விடுங்க." என்றது வீயெம் மாமா.
"சரிம்பி! நாம்ம போயி விசயத்தச்
சொல்லிடறேம்! லாலு வாத்தியாரே அதுக்கப்புறம் வாரன்னாரு!" என்றது சுப்பு வாத்தியார்.
"அது செரிப்பட்டு வருமா? செரி! இப்ப
எங்கப் போறீங்க?" என்றது வீயெம் மாமா.
"முருகு அண்ணம் வீட்டுக்குப் போறேம்!
அங்கதாம் வாத்தியாரு இருக்காரு!" என்றது சுப்பு வாத்தியார்.
"நாமளும் வர்றேம்! கெளம்புங்கத்தாம்!"
என்றது வீயெம் மாமா.
வீயெம் மாமாவையும் அழைத்துக் கொண்டு முருகு
மாமா வீட்டில் நுழைந்த போது லாலு மாமாவுக்குக் காரியம் முடிந்து விட்டது போன்ற சந்தோஷம்
முகத்தில் தெரிந்தது.
"ஏதோ நடந்தது நடந்துப் போச்சிடா!
எதயும் மனசுல வெச்சிக்காதடா!" என்றது லாலு மாமா வீயெம் மாமாவைக் கட்டிப் பிடித்துக்
கொண்டு. அதன் கண்களில் கண்ணீர் முளை விட்டு வெளியே வந்தது.
"அதல்லாம் மனசுல ஒண்ணும் நெனப்பில்ல
மாமா! அதுதாம் அமயல. எடமாவது அமையுமான்னு பாக்கத்தாம் வந்தேம்!" என்றது வீயெம்
மாமா.
"எடுத்துக்கடா! ஒனக்கு இல்லாத எடமா?
வாங்கிப் போட்டன்னு வெச்சிக்கியேம்... எழப்பு பட்டற, வாளு பட்டறன்னு எத வேணாலும் போட்டுக்கலாம்.
பாத்துக்க! ல்லே பேசாமா நாலு கடைய கட்டிப் போட்டேன்னு வெச்சுக்க பாடில்லாம காசி மாசா
மாசம்." என்றது லாலு மாமா.
"வெலையெல்லாம் சொல்லியாச்சுல!"
என்றது முருகு மாமா.
"ம்! நீங்களும் கலந்துக்குங்க!"
என்றதோடு நிறுத்திக் கொண்டது சுப்பு வாத்தியார்.
"ஒரே பணமா கொடுத்து வாங்கிகிட்ட
உபயோகமா இருக்கும். இல்லாட்டியும் மொத பணமா மூணு எடுத்து வெச்சா நல்லா இருக்கும்!"
என்றது முருகு மாமா.
"ன்னா மாமா பேசுறீங்க? கோயிலு எடத்துக்கு
எவேம் மொத பணம் மூணு எடுத்து வைப்பாம்? அதை ஒன்றரையத் தாண்டி எவேம் வாங்குவாம்?"
என்று வீயெம் மாமா சொன்னதும் முருகு மாமாவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து
விட்டது.
"நெனச்சேம்டா! இந்தக் கடத்தெருவுல
எங்கடா எடம் இருக்கு? இருக்குற ஒரே எடம் அதுதாம். எடம் வெலக்கி வாரதுன்னு தெரிஞ்சா
போதும் அவேம் இவேம்னு போட்டிப் போட்டுட்டு வாருவாங்கனுங்க. தெக்குப் பாத்த எடம்டா!
லக்குப் பாத்த எடம்டா! வூடா கட்டிகிட்டும் முன்னால கடய கட்டி வாடகிக்கு வுடலாம் தெரிஞ்சுக்க!"
என்றது முருகு மாமா.
"செரி வெல என்னதாம் சொல்றீங்க?"
என்றது வீயெம் மாமா.
"ஏம் ஒங்க அத்தாம் வெல சொல்லலியா?"
என்றது முருகு மாமா.
"அந்த வெலைக்கெல்லாம் எவனும் வாங்க
மாட்டாம்! அதாம் நாமளே பேசலாம்னு வந்தேம்!" என்றது வீயெம் மாமா.
"இந்தாரு! அதுக்கு ஆறு கண்ண மூடிட்டுக்
கொடுக்கலாம். நாமல்லாம் சொந்த பந்தமா ஆயாச்சு. அஞ்சுக்குக் கீழ பைசா காசி கொறைக்காதே.
பின்னாடி காலம் ஆச்சுன்னா இந்த வெலைக்கு சொந்தகாரனுக்கு விக்க நமக்கே மனசு வாராது
பாத்துக்க. டவுன்லயெல்லாம் போயிப் பாரு! சதுர அடி நெலம் எவ்ளோ வெலையின்னு! மொத்தத்துக்கு
அது நுத்தி யிருவது குழி தெரியும்ல!" என்றது முருகு மாமா.
"ரண்டுக்கு மேல நாமளும் பைசா காசி
கொடுக்க முடியாது!" என்றது வீயெம் மாமா. நிலைமை தீவிரமாவதை உணர்ந்த லாலு மாமா,
"இந்தாரு ஒனக்கும் வாண்டாம்! நமக்கும் வாண்டாம். நாலுன்னு போட்டு எடுத்துக்க.
கதய முடி பாத்துப்போம்!" என்றது இடையில் புகுந்து.
"செரி தொலஞ்சிப் போங்க! நாலுன்னு
முடிச்சுக்க!" என்றது முருகு மாமாவும்.
வீயெம் மாமா ஒன்றும் சொல்லாமல் வெளியே
கிளம்பிப் போனது. வெளியில் நின்று கொண்டு, "ஆகாத பண்டத்துக்கு வெல ஆயிரம் காசாம்!
அதெ வாங்கிட்டுப் போறவேம் ஆயிரம் கிறுக்குப் பிடிச்ச லூசாம்! ஒன்றரைக்கு மேல அதெ வித்துப்புடுங்க
பாக்குறேம்! ஒன்றரைக்கு மேல பைசா காசி மேல வெச்சு வித்தாலும் இந்தக் கடத்தெருவுல ஒட்டுத்
துணியில்லாம மீசயையும், மண்ட முடியையும் பாதி செரச்சிகிட்டு ஓடுறேம்!" என்று சத்தம்
போட்டது.
"வெல நாலுன்னு தெரிஞ்சால அவனவனும்
நாயி மாரி ஓடிட்டு வாருவானுங்கடா கிருஷ கெட்டப் பயலே! போ போயி இருக்குற துணிய எல்லாம்
தூர எறிஞ்சிட்டு செரச்சிகிட்டு தயாரா இரு. நாளிக்கே நீ ஓடுற மாரி இருக்கும்!"
என்றது முருகு மாமா.
போகும் இடமெல்லாம் இப்படிப்பட்ட பேச்சாகிறதே
என்று சுப்பு வாத்தியாருக்கு மனம் நொந்து போனது. கடைசியில் நிலைமை இப்படி ஆகி விட்டதே
என்ற எண்ணத்தோடு தொங்கிய முகத்தோடு கிளம்ப சுப்பு வாத்தியார் எழும்பத் தயாரானது.
"நமக்குத் தெரியும்ணே! இந்த ஆளு முடிச்சு
வுட மாட்டாரு, சிண்டு முடிஞ்சி வுடுவாருன்னு. அது மாரியே ஆயிட்டு பாரும்ணே! நெனச்சேம்!
வூடு போயி கேக்குறோமே... அசிங்கப்படுத்தி விடத்தாம் போறாருன்னு. அது மாரியே ஆயிடுச்சு!"
என்றது லாலு மாமா.
"அதாம்டா! இஞ்ஞ வெலய கொறைக்க வெச்சு
அதுக்கு தகுந்தாப் போல அஞ்ஞ பணத்த வாங்கிக்கிறது! கருமத்த! இதல்லாம் ஒரு பொழப்பு!"
என்றது முருகு மாமா.
"இந்தாருங்க! வந்து கேட்டீங்க! ரண்டு
பக்கமும் பேசிப் பாத்தேம். ரண்டு பக்கமும் தோதுபடல. அவ்வளவுதாங் இதுல விசயம். வெலயப்
பொருத்த வரிக்கும் விக்குறவங்க, வாங்கிக்கிறவங்க பேசிக்கிறதுதாம். அதுக்கும் நமக்கும்
சம்பந்தமில்ல. காரியம் முடிஞ்சா ஒரு பேச்சு பேசறது, இல்லாட்டி ஒரு பேச்சு பேசறது!"
என்று சுப்பு வாத்தியார் பேச ஆரம்பித்ததும் அதற்கு மேல் முருகு மாமாவும், லாலு மாமாவும்
எதுவும் பேசில்லை. சுப்பு வாத்தியாருக்கும் போயிட்டு வர்ரேம் என்று சொல்லத் தோன்றாமலே
வெளியே வந்தது. வீயெம் மாமா சுப்பு வாத்தியார் டிவியெஸ் பிப்டியைக் கிளப்பியதும் ஏறிக்
கொண்டது.
"அவனுங்களே எப்ப வாயக் கொடுப்போம்னு
நின்னுட்டு இருக்காங்க! அதுக்கு தகுந்த மாரி நீங்க வாயக் கொடுக்கிறீங்களே! வெலைக்காக
தேடிப் போயி பேச வேண்டியதுதாங். ஒத்து வாரலன்னா ஓசப் படாம வந்துடோணும்! அநாவசியா
பேசிட்டு நிக்கக் கூடாது!" என்றது சுப்பு வாத்தியார்.
"ஒங்களுக்குத் தெரியாது அத்தாம்!
அதுக்கு மேல அந்த எடத்த எவனும் வாங்க மாட்டாம். அதுக்குக் கொறச்சிதாம் வாங்குவாங்க
பாத்துக்குங்க!"
"இருக்கலாம்பி! அது வேற! நமக்கு ஒத்து
வாரலன்னா நாம வந்துட வேண்டியதுதாம். அதுக்கு மேல அஞ்ஞயிருந்துதாம் வாரணும். பண்டம்
அவங்களோடது. அவங்க சொல்றதுதாம் வெலைம்பாங்க. நமக்கு வெலை தோதுபடலன்னா நமக்குத் தோதுபடற
பண்டமா நாம்ம தேடிப் போயிக்க வேண்டியதுதாம். அது விட்டுட்டு நாம்ம சொல்ற வெலையிலதாம்
பண்டத்தைக் கொடுக்கணும்னு பண்டங்காரங்கிட்ட சண்டெ வளத்துட்டு நிக்க முடியாது!"
"அவனுங்கல்லாம் நாறப் பயலுங்கத்தாம்!
அவனுங்ககிட்டல்லாம் அப்படித்தாம் பேசணும்! ரண்டு போடு போட்டோம்னு வெச்சிக்கங்களாம்!
ஒண்ணுக்கே ஒண்ணுக்கு அடிச்சிட்டுக் கொடுப்பானுங்க."
அதற்கு மேல் ஒன்றும் பேச விரும்பாதவராய்
சுப்பு வாத்தியார் டிவியெஸ் பிப்டியைச் செலுத்திக் கொண்டிருந்தது.
வீயெம் மாமா சொன்னது பிற்காலத்தில் உண்மையானது.
அந்த இடத்தை ஒன்றரை லட்சத்துக்கும் விற்க முடியாமல், ஒன்றே கால் லட்சத்துக்குதான் லாலு
மாமாவால் விற்க முடிந்தது. அந்த இடத்தை வடவாதியின் பெரும்புள்ளியும், அரசியல்வாதியுமான
மத்தாப்பு கணேசன் தன் அக்கா மகன் சுதந்திரமுத்துக்கு வாங்கிக் கொடுத்தது. சுதந்திரமுத்து
அந்த இடத்தில் எங்கிருந்தோ எல்லாம் லாரியில் மணல், ஜல்லியை கொண்டு வந்து கொட்டி
வைத்துக் கொண்டு கனஅடி கனஅடியாக விற்று காசு பார்த்துக் கொண்டிருந்தது.
*****
No comments:
Post a Comment