14 Jun 2019

காலந்தோறும் குளியல்



            குளிக்கிறதுன்னா அது ஒரு இஷ்டம்தான். அதுவும் இந்த கோடைக்கு ரெண்டு குளியல் போடலன்னா உடம்புக்கு குஷியே இல்லாமல் போயிடும்.
            நம்ம சொலையப்பன் தாத்தா இருந்தப்ப தினமும் மதியானம் சாப்பிடுறதுக்கு முன்னாடி ஒரு குளியல் போடுவார். கையில் சுதேசி வாளியைத் தூக்கிக் கொண்டு கிளம்பினார் என்றால் அடிபம்பில் சரியாக ரெண்டு வாளி அடித்துக் குளிப்பார். அதற்கு மேல் ஒரு சொட்டு தண்ணீரைப் பயன்படுத்த மாட்டார். ரெண்டு வாளி என்பதும் எப்படியென்றால் ஒன்றரை வாளிதான் குளியலுக்கு. மீதி அரை வாளி வேட்டியையும், துண்டையும், கோவணத்தையும் கசக்குவதற்கு. அதைக் கசக்கி முடித்து விட்டு பக்கத்தில் இருக்கும் தென்னை மரத்தில் ஊற்றி விட்டு வந்து விடுவார்.
            குளிக்கும் போது வேட்டியை அவிழ்க்க மாட்டார். வேட்டியைக் கட்டிய நிலையில் அப்படியே குளிப்பார். வேட்டி இடுப்பிலிருந்து கணுக்கால் வரை தொங்கும். ரெண்டு குண்டான் தண்ணீரை மேலே ஊற்றினார் என்றால் உடம்பு முழுவதும் கையால் தேய் தேய் என்று தேய்த்து விடுவார். சோப்பு போடுவதெல்லாம் அவர் வழக்கத்தில் இருந்தது இல்லை. மறுபடியும் ரண்டு குண்டான் தண்ணீரை மேலே ஊற்றுவார். அவ்வளவுதான் குளியல். துண்டால் துவைத்து முடித்ததும் துண்டைக் கட்டிக் கொண்டு வேட்டி, கோவணத்தை அவிழ்த்து ஒரு கசக்கு கசக்கினார் என்றால் குளியல் முடிந்தது.
            "இது என்னா குளியல் தாத்தா?" என்று கேட்டால், அவர் குளியலைப் பற்றி எதுவும் சொல்லாமல், "அட போடா போக்கத்தவங்காளா! எங்க அப்பாரு இருந்தாருல்ல! கடசீ வரிக்கும் அடிபம்புலயே குளிக்கலடா. அப்போ கேணிக்கரை ஸ்டாப்பிங்குல இருந்த கேணிலதாம் குளிப்பாரு. அப்போ இருப்பு வாளி. எடுத்துட்டுப் போனாருன்னா இதே ரண்டு வாளி கணக்குதாம். குளிச்சி முடிச்சிட்டு துணியைப் பிழிஞ்சி தோளுல போட்டுட்டு ஒரு வாளி தண்ணி வூட்டுக்கும் கொண்டாந்துடுவாரு. அவர அடிபம்புல குளிக்க வைக்கணும்னு ஆசை. அதுல குளிச்சா மனுஷனுக்கு வியாதிதாம் வரும்னு கடசீ வரிக்கும் குளிக்காமலே இருந்துட்டாரு. இப்போ என்ன பாரு வூட்டுல குழாய்லாம் போட்டு பாத்ரூம்ல குளிக்கச் சொல்லுதுங்க வூட்டுல இருக்குற சனங்க. நமக்கு என்னமோ அதுல குளிச்சா வியாதிதாம் வரும்னு தோணுது. அடிபம்புல குளிக்குறத விட முடியல. அடிக்க முடியாட்டியும் கஷ்டப்பட்டாவது அடிச்சுக் குளிச்சதாம் திருப்தியா இருக்கு!" என்பார்.
            குளிப்பதில் ஒவ்வொரு தலைமுறைக்கும் இவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. எனக்கும் என்னவோ டேங்கிலிருந்து வரும் குழாய் தண்ணியை விட்டு அடிபம்பில் குளித்தால் சளி பிடித்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. குழாய் தண்ணீரில் குளிப்பதை விட முடியவில்லை. ஆனால் ரெண்டு அன்னகூடை தண்ணிதான். அதைத் தாண்டிக் குளிப்பதில்லை. வீட்டில் மகள் இருக்கிறாளே! அவள் ஷவர் பாத்தைப் போட்டு விட்டுதான் குளிக்கிறாள். எத்தனை அன்னக்கூடை குளிப்பாள் என்ற கணக்குத் தெரியவில்லை. ஷவர் பாத் அவர் கணக்கில் கொட்டிக் கொண்டிருக்கிறது. அவளை ஏன் குழாய் தண்ணீரை அன்னக்கூடையில் பிடித்துக் குளித்தால் என்ன என்று கேட்க ஆசைதான். ஆனால் அதைக் கேட்கப் போய், அப்படியெல்லாம் குளித்தால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது என்று சொல்லி விடுவாளோ என்று யோசனையாக இருக்கிறது.
            குளியலுக்கான முறையும், தண்ணீரும் ரொம்பத்தான் மாறியிருக்கிறது.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...