21 Jun 2019

ஓடிப் போனவன்!



செய்யு - 122
            விகடு உடல் மிக இளைத்திருந்தான். அவன் உடலே அவனுக்கு ஒரு சோதனைச் சாலைப் போல மிக குண்டான உடலையும், ஒடிந்து விழும் அளவுக்கு ஒல்லியான உடலையும் ஒரு சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே தனக்குள் பார்த்திருந்தான். திருவாரூர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவன் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடியதில் உடல் மெலிந்து போயிருந்தான்.
            வைத்தி தாத்தாவின் உடலைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தனர். பேரப் பிள்ளைகளையெல்லாம் பந்தம் பிடிக்க வரச் சொல்லியாயிற்று. இவன் மட்டும் எந்தப் பேச்சுக்கும் அசங்காமல் கோனார் வீட்டு திண்ணைப் படியிலேயே உட்கார்ந்திருந்தான். அரசல் புரசலாக செய்தித் தெரிந்தவர்கள் அவனிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர். "எங்கடா போயித் தொலஞ்சே? இப்படி ஓணாங் குஞ்சாட்டம் வந்து நிக்குறே? பய டயனோசர் குஞ்சாட்டம் எப்படி இருப்பாங்றேம்!" என்றது வாழ்க்கப்பட்டு பெரியம்மா அவனது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு. அவன் பதில் எதுவும் சொல்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான். "இவ்வேம் ஒருத்தம் பொறந்ததிலேந்து அப்படியே கல்லுளிமங்கம் கணக்கா! ஏம்டா பெரியவங்க கேட்டா பதிலு சொல்லணும்னுங்ற மரியாதி கூடயா தெரியாது?" என்று கேட்டுப் பார்த்து பெரியம்மாவும் அலுத்துப் போனது.
            வீட்டை விட்டு ஓடுவதற்கு வலுவான காரணங்கள் என்று அவனால் எதையும் சொல்ல முடியவில்லை. அநேகமாக அவன் வீட்டை விட்டு ஓடியிருந்தான் என்பதைக் கண்டுபிடிப்பதற்கே வீட்டில் இருந்தவர்களுக்கு இரண்டு நாட்கள் ஆனது. திருவாரூர் கல்லூரி போனவன் வீடு திரும்பாமல் இருந்ததுமே வீட்டில் இருந்தவர்களுக்குப் பீதியாகத்தான் இருந்தது. அடுத்த நாளும் அவன் வராமல் போன போது வீட்டில் இருந்தவர்கள் ஒரு மாதிரியாக தங்களின் சந்தேகத்தை வலுபடுத்திக் கொண்டார்கள்.
            அவன் ஏதோ ஒரு பெண்ணோடு ஓடியிருக்க வேண்டும் என்றுதான் நினைத்தார்கள். தெரிந்த இடங்களில் எல்லாம் விசாரித்துப் பார்த்தார்கள். விசாரித்த இடங்களில் ஒரு பெண்ணின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் அந்த பெண்ணைத்தான் விகடு இழுத்துக் கொண்டு ஓடியிருப்பான் என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருப்பார்கள். இதில் விநாயகம் வாத்தியார்தான் முன்னின்று தேடியது. அவருக்கு திருவாரூர், சென்னையைச் சுற்றியெல்லாம் தெரிந்த ஆட்கள் இருந்தார்கள். விசாரித்த வகையில் அவன் எந்த பெண்ணின் அருகே நின்று கூட பேசியதில்லை என்பது சுப்பு வாத்தியாருக்கு ஒரு வகையில் ஆறுதலாக இருந்தது.
            அப்போது சுப்பு வாத்தியார் விநாயகம் வாத்தியாரிடம் சொன்னது, "ஓடிப் போன பயல பத்திலாம் நமக்கு கவலயில்ல. வூட்டுல சோறு தண்ணிக்கு எந்த கொறயயும் நாம்ம வைக்கல. அவேன் பொண்ண இழுத்துட்டு ஓடுறதுலயும் நமக்குக் கவலயில்ல. அப்படி ஒரு வேலய அவேம் செய்றதா இருந்தா அதெ எம் பொண்ண கல்யாணம் பண்ணிக் கொடுத்ததுக்கு அப்பொறமா செஞ்சிக்கணும். முன்னாடியே பண்ணிருந்தான்னா நாம்ம எப்படி எம் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது? அதெ ஒண்ணத் தவுர அவேம் ஓடிப் போன பத்திலாம் நமக்குக் கவலயில்ல. மத்தபடி அவேம் எந்த சாதியில வேணுன்னா எந்த மதத்துல வேணுன்னா எந்த பொண்ணயாவது இழுத்துட்டு ஓடட்டும்!"
            "அடச் சீ! என்ன வாத்யாரே பேசுறீங்க? நம்ம புள்ளியோல்லாம் அது மாரி செய்யாது. ஏதோ அவ்வேம் மனசுல இருந்துருக்கு. ஒங்ககிட்ட சொன்னா நீங்க அதெ ஏத்துப்பீங்களா? மாட்டீங்களான்னு?ன்னு அவனுக்குக் கிலேசமாப் போயிருந்திருக்கும். அதாங் சொல்லாம கொள்ளாம போயிருக்கான். ஊருல யாரும் கேட்டா ஓடிப் போயிட்டான்னு சொல்லிட்டு இருக்காதீங்க! மெட்ராஸ்ல இருக்குற ஒங்க அத்தான் புள்ளீங்க வூட்டுல இருக்குறதா சொல்லி வையுங்க. அவனெ எப்படியும்  கண்டுபிடிச்சிடலாம். நம்ம தம்பிகோ எல்லாம் மெட்ராஸ்லதானே இருக்காங்க. தகவல் சொல்லிப்புட்டேம். அவனுங்க தமிழ்நாடு முழுக்க அவனுங்களுக்குத் தெரிஞ்ச ஆளுங்கள வெச்சி சல்லடை போட்டு சலிச்சிபுடுவானுங்க." என்றார் விநாயகம் வாத்தியார்.
            "எதுக்கும் போலீஸ்லயும் ஒரு பிராது பண்ணி வெச்சிடுவோமா?" என்றார் சுப்பு வாத்தியார்.
            "ம்ஹூம்! போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன ஒங்க சைக்கிள கண்டுபிடிச்சிக் கொண்டாந்தாச்சி! அடுத்ததா அவனெ கண்டுபிடிச்சிக் கொண்டாந்துட வேண்டியதுதாம்!" என்று விநாயகம் வாத்தியார் சிரித்தார்.
            "வேண்டாங்றீங்களா?"
            "பேசாம இருங்க வாத்தியாரே! காணவில்லைன்னு அவனெ போட்டோ போட்டு ஒட்டிட்டாங்கன்னா செரமமா போயிடும்! ஓடுனப் பய எப்படி ஓடணும்னு கூட தெரியாம கையில பைசா காசில்லாம ஓடியிருக்காம். எத்தினி நாளிக்கி அவென் எங்க தங்குவாம்? என்னத்தா சாப்பிடுவாம்? நீங்க வேணுன்னா பாருங்களேம். ஒரு பத்து பாய்ஞ்சி நாளுல்ல எலும்பும் தோலுமா முன்னாடி வந்து நிப்பாம் பாருங்க!"
            "எல்லாத்தியும் கஷ்டம் தெரியாம வளத்திட்டேம். ஒலகம் புரியாம ஒண்ணுகெடக்க ஒண்ணு பண்ணிட்டு கெடக்குதுங்க. வூட்டுலதாம் வாத்தியாரே அது சாப்புடாமா அப்டியே மயங்கி வுழுந்து கெடக்கு. இந்தப் பய ஓடுன நாளுலேந்து வூட்டுல ஒரு வேலயும் ஆகல. பொண்ணுதாம் ஏதோ பாத்துகிட்டு சரி பண்ணிட்டு கெடக்குது. அப்பா வூடு கட்டிட்டு இருக்குதே. கூட மாட ஒத்தாசயா இல்லாட்டியும் இது மாரி பண்ணக் கூடாதுன்னு கூடவா தோணாது? இது மாரில்லாம் ஆனாலும் ஆகும்ன்னு தெரிஞ்சிதாம், அவ்வேம் இஷ்டத்துக்கு பாட்டனி படிக்கணும்னு நின்னப்பயும் ஒண்ணும் தடுக்கல. ப்ளஸ்டூல அவ்ளோ மார்க்கு எடுத்துட்டு எந்தக் கிறுக்குப் பயலாவது பாட்டனி படிப்பானான்னு ஆளாளுக்குக் கேட்டாங்க. அப்போ பதிலு சொல்லி மாளல. நோக்கத்துக்கு எதயாவது படிச்சித் தொலயட்டும்னு விட்டேம். அதிலயும் மண்ண அள்ளிப் போட்டுட்டு அவ்வேம் பாட்டுக்குப் போயிட்டாம். சொல்றதயும் கேட்க மாட்டேங்குதுங்க. இப்போ  விசயம் வெளில தெரிஞ்சிதுன்னு வெச்சிக்கங்க நாம்ம வூடு கட்டுற நேரந்தாம்னு அவனவனும் தமுக்குக் கட்டி அடிச்சிடுவாங்க. ஓடுறன்னு முடிவு பண்ண பயெ சொல்லிட்டு எங்கயாவது போயி தொலைக்க வேண்டியதுதான. நாம்ம ன்னா தடுத்தா நிறுத்திட்டு இருக்கப் போறேம்? இப்டியா ஆளு இருக்கான்னா இல்லியான்னு தெரியாம பண்ணுவாம்? அது கூட பரவாயில்ல வுடுங்க. யாராவது கடத்திட்டுப் போயிருப்பாங்களா ன்னான்னு அது வேற யோசனயா இருக்கு. படுத்தா தூக்கம் வர மாட்டேங்குது இந்தப் பய பண்ண காரியத்தால!"
            சுப்பு வாத்தியாரும் சரி, வீட்டில் இருந்தவர்களும் சரி விகடு ஓடிப் போன விசயத்தை ஊரிலோ, அக்கம் பக்கத்திலோ, சொந்த பந்தத்திலோ யாருக்கும் தெரியாமல் ரொம்ப கவனமாக வைத்து பார்த்துக் கொண்டார்கள். யாராவது கேட்டாலும் செமினார் போயிருப்பதாகவும், மெட்ராஸில் இருக்கும் சொந்தக்காரர்கள் வீட்டிற்குப் போயிருப்பதாகவும் சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தார்கள்.
            திட்டையில், வீட்டில் விகடுவின் அம்மா வெங்குவின் நிலைதான் மோசமாக இருந்தது. சரியாகச் சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை. வெளியோ சொல்ல முடியாமலும், உள்ளுக்குள்‍ மெல்ல முடியாமலும் ஒரு வித கஷ்டமான நிலையில், "அவ்வேம் எந்த சாதியில எந்தப் பொண்ண இழுத்துட்டு ஓடிருந்தாலும் பரவாயில்ல. ஒடனே வாரச் சொல்லுங்க. அந்தப் பொண்ண நாம்ம வெச்சிப் பாத்துக்கிறேம்!" என்று வெங்கு சொன்னதும், சுப்பு வாத்தியாருக்குக் கோபம் வந்து விட்டது. "ஓடிப் போனப் பயலுக்கே அட்ரஸ் தெரியலங்றேம்! இதுல அவ்வேம் இழுத்துட்டுப் போனான்னு ஒரு பொண்ணச் சொல்லி அத்தோடு அட்ரஸக் கண்டுபிடிச்சிக் கொண்டுட்டு வான்னா... ன்னா நெனச்சிட்டுச் சொல்றேன்னு தெரியல நமக்கு! பேசாம கெடக்க மாட்டே நீ?" என்று சத்தம் போட்டது.
            சுப்பு வாத்தியார் எவ்வளவு சத்தம் போட்டாலும் வெங்குவின் கற்பனைகளோ, கனவுகளோ நின்ற பாடில்லை. அவ்வளவு உடல்நிலை மோசமான நிலையிலும் அது பாட்டுக்கே பேசிக் கொண்டே இருந்தது, "என்னங்க! பய ந்நல்ல மூக்கும் முழியுமா உள்ள பொண்ணாத்தான கட்டிட்டு போயி இருப்பாம்! போன எடத்துல அவ்வே நல்ல விதமா சோறாக்கிப் போடுறாளோ, கொழம்பு வெச்சிப் போடுறாளோ! சமைக்கத் தெரியுதோ ன்னம்மோ! இந்தக் காலத்துல இருக்குற பொண்டுகளுக்கு எஞ்ஞ சமைக்கத் தெரியுது! இஞ்ஞ கொண்டாந்து வந்துட்டான்னா அந்தப் பயலோட அதயும் சமைச்சிப் போட்டு நல்ல வெதமா பாத்துப்பேம்."
            அப்படி வெங்கு பேசிய ஒரு நாளில்தான் சுப்பு வாத்தியார் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை சுவரில் வீசி அடித்தது. சோற்றுப் பருக்கைகள் நாலா திசைக்கும் சிதறிக் கிடந்தன.
            "எம் மருமவளப் பத்திப் பேசுனா ஒனக்கு எதுக்குக் கோவம் வருது? நீ எதாவது சொல்லிப் புடுவன்னுதான அவேன் சொல்லாம கொள்ளாம பொண்ண இழுத்துட்டு ஓடிருக்காம். நீ நல்லவிதமா பேசுவேன்னு நம்பிருந்தான்னா பொண்ண கூட்டுட்டு வூட்டுக்கதான வருவாம். எல்லாம் ஒம் தப்பு. நீதாம் காரணம் அவ்வேம் ஓடிப் போனதுக்கு. எதுக்கு எம் புள்ளிய ஓட விட்டே? ஊருல எந்தப் புள்ளியோ தப்பு பண்ணல, பொண்ண இழுத்துட்டு ஓடல? எம் புள்ள மட்டும் இழுத்துட்டு ஓடுனா ன்னா?  நீ செரியில்ல. எம் புள்ள போயிட்டான். அவனெ கண்டுபிடிச்சி கொண்டுட்டு வார வக்கில்ல. இப்படிச் சோத்துத் தட்ட வீசியடிக்கத் தெரியுது? நாம்ம இனிமே ஒனக்கு சமச்சிப் போட மாட்டேம். எம் புள்ளியோடயும், மருமவளோடயும் வந்தாத்தாம் இனுமே ஒனக்குச் சோறு! ஏட்டி செய்யு அந்த ஆள வெளில தள்ளி கதவச் சாத்து. எம் புள்ளியோடயும், மருமவளோடயும் வந்தா வூட்டுக்குள்ள வுடு!" என்று சத்தமாகப் பேச முடியாத அளவுக்கு ஆனால் சன்னமாகப் பேசியபடி படுத்தப் படுக்கையாகக் கிடந்தது வெங்கு. கல்யாணம் ஆன நாளிலிருந்து சுப்பு வாத்தியாரை இப்படி ஒருமையில் வெங்கு பேசியது அன்றுதான்.
            வெங்குப் பேசப் பேச அழுவதா? சிரிப்பதா? என்ற நிலையில் இருந்தார் சுப்பு வாத்தியார். "ன்னா நடந்திச்சி? ன்னா நடக்குது?ன்னு எதுவும் தெரியாமா இதுங்க பாட்டுக்கு இப்படிப் பேசுதுங்களே! ஒனக்கு ஒம் மருமவளக் கொண்டாந்து வெச்சிகிட்டு தலயில தூக்கிட்டு ஆடுனாத்தாம் வெயாதியிலேந்து கெளம்புவ போலருக்கு. அது வேற ஒண்ணு வந்து ஒம் தலயில மொளகா அரச்சத்தாம் நீயெல்லாம் சரிபெட்டு வருவே! அட எங் கருமத்தே! அட எங் கெரவத்தே!" என்றார் சுப்பு வாத்தியார். தினம் தினம் இவர்கள் இப்படிப் பேசிக் கொள்வதும், சண்டையிட்டுக் கொள்வதும் செய்யுக்குக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போயிருந்தது. அவள் எதுவும் இது குறித்துச் சொல்வதில்லை. பேச்சு அதிகமாகும் போது சுப்பு வாத்தியாரின் கையைப் பிடித்து வாடகை்குக் குடியிருந்த முல்லேம்பா வீட்டு நிலைக்கு வெளியே கொண்டு போய் விட்டு விட்டு வீட்டுக்குள் வந்து வெங்குவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, "சாப்புடும்மா!" என்பாள்.
            "அந்தப் பெய சாப்பிட்டுருப்பானா? அந்தப் பொண்ணு அவனுக்கு சமச்சிப் போட்டுருக்குமா?" என்று கேட்கும் வெங்கு.
            "ம்! எல்லாம் நல்லா சமைச்சிச் சாப்புட்டுட்டு தின்னுபுட்டுதாம் உக்காந்திருக்கும்."
            "ன்னா சாப்பிட்டுருப்பாங்க?"
            "எங்கிட்ட சொல்லிட்டுதான சமைச்சாங்க! பேயாம சாப்பிடும்மா!" என்பாள் செய்யு.
            "ல்லே! ரெண்டு பேரும் அஞ்ஞ சாப்புடல. நமக்கு வாணாம்!"
            "யம்மா! சாப்பிட்டுட்டாங்கம்மா! சோறாக்கி, சாம்பாரு வெச்சி, அவரக்காயி பொறியலும்மா!"
            "அதெப்பிடி ஒனக்குத் தெரியும்?"
            "எனக்குத் தெரியும்மா!"
            "ந்நல்லா தெரியுமா?"
            "தெரியும்மா! ரெண்டு சோத்த சாப்புடும்மா!"
            சோற்றைக் குழம்போடு பிசைந்து ரெண்டு வாய் சாப்பிடும் வெங்கு. அதற்குள் ஒமட்டல் வந்து விடும். அப்படியே தட்டில் கையைக் கழுவியபடி, "இல்லேடி! அவ்வேம் முகத்தயும், அவ்வேம் கட்டிக்கிட்டவ முகத்தயும் பாத்தாதாம்டி சோறு எறங்கும். ஒங்க அப்பங்கிட்டச் சொல்லி சீக்கிரம் இட்டாரச் சொல்லுடி. நம்மால முடியாதுடி. அவ்வே எந்தப் பொண்ணா இருந்தாலும் பரவால்லடி. இட்டாரச் சொல்லுடி. அவ்வேம், அவ்வே மொகத்தப் பாக்காம உள்ள எதுவும் இறங்காதுடி!"
            "நீ இவ்ளோ பாசமா இருக்கே! அவனுக்கு அந்தப் புத்தி இருக்கா? ஏம் யம்மா நீ இந்த மாரி பண்றே?" என்று செய்யு வெங்குவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுவாள்.
            ஒவ்வொரு நாளும் விநாயகம் வாத்தியார் அவருக்கு தெரிந்தவர்கள் மூலம் தேடிக் கொண்டே இருந்தார். சுப்பு வாத்தியாரும் மெட்ராஸில் இருந்த தன் அக்கா பையன்கள் மூலம் தேடிக் கொண்டிருந்தார். அவர்கள் நினைத்தது போல அவனை பத்து, பதினைந்து நாட்களுக்குள் அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. மூன்று மாதங்கள் ஓடிய பின் விநாயகம் வாத்தியாரின் தம்பிகள் மூன்று பேரும் விகடுவை சூளைமேட்டில் வைத்துக் கோழிக்குஞ்சை அமுக்குவது போல அமுக்கினர். அவன் அவர்களோடு வர முடியாது என்று சொல்லி ரகளைப் பண்ணினான். வாத்தியாரின் தம்பிகள் ஏழெட்டு ஆட்களோடு போயிருந்ததால் அவனைக் குண்டு கட்டாகத் தூக்கிக் கொண்டு வடபழனியிலிருந்து அவர்களது வீட்டுக்குக் கொண்டு வந்தனர். எலும்பும் தோலுமாய் அவனிருந்த நிலையில் அவர்களின் பிடிக்கு உடம்பை அசைக்கக் கூட முடியவில்லை விகடுவால்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...