11 Jun 2019

கொன்னுடாதேய்யா மனுஷா!



செய்யு - 112
            "வாழ்க்கையில நாமளாம் எதுக்கு நம்பிக்கையோட இருக்கணும்? கல்யாணமாயி ந்நல்லா வாழப் போறதா நெனச்சி இஞ்ஞ வந்தேம். இந்த மனுஷனக் கட்டிட்டு என்னத்தக் கண்டேம்? வூடு வூடா நாக்கத் தொங்கப் போட்டுட்டு ஓடுனாரு இந்த மனுஷம். நம்மள தூக்கி வியாதிக்காரியா வூட்டுக்கு வெளியே கட்டில்ல தூக்கிப் போட்டாரு. பொண்ணுதாம் உருப்படியா கல்யாணம் பண்ணிக் கொடுத்தாரா? அவளெப் பிடிச்சி ஒரு வியாதிக்காரனுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து அவ கொழந்த ல்லாம கெடக்குறா. பெத்தப் புள்ளிய கண்ணுல காட்டுறாரா? டாக்டராக்கப் போறேம்னு அவனெ கொண்டு போயி எங்கேயே சேத்து என்ன கதிக்கோ படிக்க வெக்கிறார். ரண்டாவது பொண்ணுக்காவது நெனச்சி மாதிரி கல்யாணம் ஆவும்னு பாத்தா அது அப்பன மாரி தெரு பொறுக்கப் போயிக் கெடக்கு. நாமளாம் எதுவும் நெனக்கக் கூடாது. எதயும் ஆசப்படக் கூடாது. எதயும் நம்பக் கூடாது. இன்னிக்கே செத்து இன்னிக்கு மண்ணோட போவணும். ன்னத்த வாழ்க்க யிது? கெரகங் கெட்ட வாழ்க்கை!" என்று புலம்ப ஆரம்பித்தது வேணி அத்தை.
            குயிலியின் கல்யாணம் நின்றதிலிருந்து அதன் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு ஏகத்துக்கும் எகிறியது. அடிக்கடி மயக்கம் அடித்துக் கிடந்தது. பல மணி நேரம் சுயநினைவு இல்லாமல் கிடந்தது. லாலு மாமா வடவாதியிலிருந்த சோணாச்சலம் டாக்டரை வீட்டுக்கு வரவழைத்துப் பார்த்தது. சமயங்களில் டாக்டர் வராத போது அது தன் எம்யெய்டியில் சாக்கு மூட்டையை வைத்துக் கொண்டு போவது போல வேணி அத்தையைக் கொண்டு போனது. வேணி அத்தை இருந்த நிலைமையில் அது அவ்வளவு அலட்சியமாக, அஜாக்கிரதையாகக் கொண்டு போயிருக்கக் கூடாது. அதுதான் அது செய்த மிகப் பெரிய தவறு. அது வேணி அத்தையை ஆட்டோவிலோ, காரிலோ அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அடிக்கடி மயக்கம் வரும் வேணி அத்தையை எம்யெய்ட்டியில் வைத்து அப்படி அழைத்துப் போகலாமா என்ன?
            அன்று அப்படித்தான் வேணி அத்தைச் சாப்பிட்டதையெல்லாம் வாந்தி வாந்தியாய் எடுத்துக் கொண்டிருந்தது. ஒரு டம்ப்ளர் தண்ணீரைக் கொடுத்தாலும் அதுவும் அப்படியே வாந்தியாய் வந்து கொட்டியது. உடம்பெல்லாம் வெடவெடத்துப் போய் விட்டதாகச் சொன்னது வேணி அத்தை. அதன் உடம்பே பார்ப்பதற்கு இளைத்திருந்தது போல இருந்தது. "எலே! இப்படி வாந்தி எடுத்தா கொடலு வந்து வெளிய விழுந்துடும் போலருக்கே. நம்மள பாக்க நட்டுல நாதியிருக்கா? நாம்ம எக்கேடு கெட்டா ன்னா? செத்து ஒழிஞ்சா ன்னா?" என்று ஒப்பாரி வைக்காத குறையாக சன்னமான குரலில் புலம்பிக் கொண்டு கிடந்தது. லாலு மாமாவுக்குப் பொறுக்க முடியவில்லை. அது வாசல் படியோராமாக எம்யெய்டியை நிறுத்தி அதன் புட்ஸ்டெப் பக்கத்தில் சிறு ஸ்டூலைப் போட்டு வேணி அத்தையை ஏறி வந்து உட்காரச் சொன்னது.
            "எம்பட மனுஷா! நம்மாள முடியல. உக்காரத் தோதுபடாது. முடிஞ்சா டாக்டர வாரச் சொல்லுங்க. இல்ல இஞ்ஞயே கெடந்து சாகுறேம். வூட்டுலயே செத்தா ஒரு மரியாதியாவது இருக்கும். போற வழியில போட்டு ஒடச்சி நம்மள சாகடிச்சிடாதே. நடுரோட்டுல பொணமாக ஆக்கி புடாதீக நம்மள." என்றது வேணி அத்தை.
            "இத்தினி வருஷமா சாவாத நீதாங் இப்போ சாகப் போறீயாக்கும்! அடச் சீ! ஏறி வந்து குந்து. நானும் ரண்டு வாட்டி ஆளு வுட்டு அனுப்பிட்டேம். சோணாச்சலம் டாக்டரு வர மாட்டேங்றாங். நாம் ன்னா பண்றது? வண்டில ஒன்னய வெச்சு ஒரு அழுத்து அழுத்துனன்னா வெச்சுக்க ரண்டு நிமிஷத்துல வடவாதியில நிக்கலாம் பாரு. ரண்டு ஊசிய வெச்சுச் செருகுனாத்தாம் நீ செரிபட்டு வருவே." என்றது லாலு மாமா.
            "நமக்கு ஒண்ணும் இல்ல. காலயில செரியாயிடும். டாக்டரு வந்து பாக்குறப்ப பாக்கட்டும். இப்போ ன்னா வாந்திதானே. வந்தா வந்துட்டுப் போவுது!"
            "ஒனக்கென்ன? நீ பாட்டுக்கு எடுத்துட்டுக் கெடப்பே. கூட்டி அள்ளுறது நாமதானே. ஊருல வாரவங்க, போறவங்ககிட்ட நம்மள பாக்க ஆளில்லன்னு நம்ம பேர நாறடிப்பே. இப்போ வந்து குந்துறீயா இல்லியா!" என்றது லாலு மாமா கோபமாக.
            இதற்கு மேல் தப்பிக்க முடியாது என்பது வேணி அத்தைக்குப் புரிந்து போனது. அது நொண்டி நொண்டி நடந்து வந்து ஸ்டூலில் காலை ஊன்றி எம்யெய்ட்டியில் ஏறி உட்கார்ந்து கைகளில் பட்ட கம்பிகளில் எல்லாம் இறுக்கப் பிடித்துக் கொண்டது.
            "ஒடம்பு கிறுகிறுதுன்னு வாருதுய்யா மனுஷா! வழியில சோடா கொஞ்சம் வாங்கிக் கொடுத்தா தோதுபடும். ல்லேன்னா மயக்கம் போட்டு வண்டிலேந்து வுழுந்து செத்துப் பூடுவேம் போலருக்கு!" என்றது வேணி அத்தை.
            "அட கருமங் பிடிச்சவளே! வாய மூடு. கெளம்புறப்ப ன்னாத்த பேசுறா பாரு. சோடா வேணுமாம் சோடா. அத வாங்கிக் குடிச்சுபுட்டு வாந்தி எடுத்து வண்டிய நாறடிக்கிறதுக்கா. டாக்டர்ர பாத்து முடிக்கிற வரிக்கும் ஒண்ணும் கெடயாது. பேசாம கம்முன்னு வாரணும். அங்க நோவுது, இங்க நோவுதுன்னு வண்டில வாரப்பா சவுண்ட்டு வுட்டே வந்தீன்னா வெச்சுக்க... அப்படியே வண்டியோட போட்டு ஒடச்சி கொன்னு புடுவேம் பாத்துக்க!" என்றது லாலு மாமா.
            என்ன நேரத்தில் அவர்கள் ரெண்டு பேரும் இப்படிப் பேசிக் கொண்டார்களோ! அவர்கள் பேசிக் கொண்டபடியே ஆனதுதான் சோகம்.
            வேற்குடி பாலத்தைத் தாண்டியதும் லாலு மாமா செமத்தியான வேகத்தில் வடவாதியை நோக்கி வந்து கொண்டிருந்தது. திட்டைக் கடைத்தெருவைத் தாண்டி மூர்த்தியப்பர் கோயிலுக்கு எதிரே வந்த போது அங்கிருந்த பள்ளத்தில் விட்டு கிளப்பியதில் வண்டி ஒரு துள்ளு துள்ளியது. அவ்வளவுதான். வேணி அத்தைக்கு கிர்ரென்று வருவது போலாகி விட்டது. பின்பக்கம் வேணி அத்தை இல்லாத வண்டியை முப்பது அடி தூரத்துக்கு ஓட்டிச் சென்றுதான் நிறுத்த முடிந்தது லாலு மாமாவால். வழக்கமாக இப்படிப் போட்டு உடைப்பதுதான் என்ற எண்ணத்தோடு ஒரு யூ டர்ன் போட்டு திருப்பிக் கொண்டு வந்த லாலு மாமாவுக்கு அதற்கு அப்புறம் வேணி அத்தையை உயிரோடு பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. நிலைதவறி மல்லாக்க கீழே விழுந்து கிடந்தது வேணி அத்தை. உடம்பிலோ, மண்டையிலோ பெரிய காயங்கள் ஏதுமில்லை. எங்கே எப்படி அடிப்பட்டது என்பதும் புரியவில்லை. ரோட்டில் வந்தவர்கள், போனவர்கள் எல்லாரும் கூடி வந்து தூக்கினார்கள். உடம்பில் எந்த அசைவும் இல்லை. மூச்சு ஓடுகிறதா என்று கையை வைத்துப் பார்த்தனர். கையைப் பிடித்து நாடி பார்த்தனர். லாலு மாமா வேணி அத்தையை இப்படியும் அப்படியுமா அசைத்துப் பார்த்தது.
            "ச்சும்மா நொய் நொய்ன்னு பேசித் தொலையுவீயேடி பேசித் தொலயேண்டி!" என்ற அழாத குறையாக முணகினார் லாலு மாமா.
            "வாத்தியாரே! உசுருப் போச்சுது மாரி தெரியுதுங்க! இப்படியா ஒடம்புக்கு முடியாதவங்கள வெச்சிட்டு வண்டில இம்மாம் வேகமாப் போறது?" என்றன திரண்டிருந்த சனங்கள். சனங்கள் எல்லாரும் சேர்ந்து தூக்கிக் கொண்டு வந்து பக்கத்தில் இருந்த வாதா மரத்தின் அடியில் போட்டனர். அதற்குள் லாலு மாமாவின் எம்யெய்டியை எடுத்துக் கொண்டு போய் சோணாச்சலம் டாக்டரைக் கொண்டு வந்தார் ஒருத்தர். டாக்டர் நாடி பிடித்துப் பார்த்தார். நெஞ்சில் கையை வைத்து அமுக்கிப் பார்த்து விட்டு கையைப் பிடித்துப் பார்த்தார். கையை விட்டதும் கை அப்படியே துவண்டு விழுந்தது. "கத முடிஞ்சிடுச்சி!" என்றார் சோணாச்சலம் டாக்டர்.
            "தஞ்சாரூ கொண்டு போனா காப்பாத்திடலாமா?" என்றது லாலு மாமா.
            "வாத்தியாரே! அதாஞ் சொல்றேனே முடிஞ்சிடுச்சி! வூட்டுக்குக் கொண்டு போயிடுங்க!" என்றார் சோணாச்சலம் டாக்டர்.
            "ஒன்னய கட்டிட்டு நடுரொட்டுலதாங் நிக்கப் போறேம்னு சொல்லுவாளே! இப்போ இப்படி அநியாயமா நடுரோட்டுல கெடக்குறாளே!" லாலு மாமா பேரொலி எழுப்பியபடி அழ ஆரம்பித்தது.
            சனங்கள் லாலு மாமாவை ஆற்றுப்படுத்தி, மணல் அடித்து விட்டு வந்த டயர் வண்டியை நிறுத்தி அதில் வேணி அத்தையைத் தூக்கிப் போட்டு, லாலு மாமாவை உட்கார வைத்து நான்கைந்து பேர் ஏறிக் கொண்டனர். டயர் வண்டி வேற்குடி லாலு மாமா வீட்டை நோக்கி நகர ஆரம்பித்தது.
            வாழ்க்கையில் நேரும் மரணம் வாத்தை வழியாகவும் வரும் போல. வேணி அத்தையின் சாவுக்கு வந்த சனங்கள் அதைத்தான் சொல்லிச் சொல்லி ஒப்பாரி வைத்து அழுதன.
            வேணி அத்தையின் சாவு காரியத்துக்கு சுப்பு வாத்தியார் குடும்பத்தோடு போன போது, லாலு மாமா ரகளைப் பண்ணினார். "இந்தாரு நீ வாரக் கூடாது. எட்டப் போயிடு. ஒம்மாலதாம் அவச் செத்தா. நிச்சயத்த நடத்த முடியாம பண்ணிட்டியேடா பாவி. அவளெ கொன்னுட்டுப் பாக்கதாம் வாரீயா? மரியாதி கெட்டுடும். போயிடு. போயிடு. ஏலே! போவச் சொல்லுங்கடா அவனெ. இல்லே ன்னா பண்ணுவேம்னு நமக்கே தெரியாது!" என்று அடிக்கப் பாய்ந்தது லாலு மாமா. சுப்பு வாத்தியாருக்குத் தர்ம சங்கடமாகப் போனது. எல்லாரும் அடிக்கப் பாய்ந்த லாலு மாமாவைப் பிடித்துக் கொண்டார்களே தவிர சுப்பு வாத்தியாருக்கு ஆதரவாகப் பேசவில்லை.
            விநாயகம் வாத்தியார் மட்டும் சுப்பு வாத்தியாரின் தோளைப் பிடித்தபடி, "வந்திடுங்க வாத்தியாரே! இஞ்ஞ இப்போ யாரு எது பேசுனாலும் எடுபடாது. அவரு மனசு ஆறுறதைத்தாம் இப்போ பாப்பாங்க. யெப்பாடி வெகடு, யெம்மாடி செய்யு நீங்க ரண்டியேரும் அம்மாவ அழச்சிட்டுப் போங்க உள்ளார" என்றபடி தள்ளிக் கொண்டு போனார். சுப்பு வாத்தியார் எதுவும் பேசாமல் விநாயகம் வாத்தியார் இழுத்த இழுப்புக்கு அடுத்தத் தெருவுக்குப் போய் நின்றார்.
            "மவராசி! ஒம் புருஷனக்கு முன்னாடி போயிச் சேந்துட்டீயே! நமக்கு அந்தக் கொடுப்பின வருமா?" என்று வேணி அத்தையின் மேலே விழுந்து அழுதது சாமியாத்தா. அது என்ன நேரத்தில் அப்படிச் சொன்னதோ, அந்த வார்த்தைபடியே ஆனது சாமியாத்தாவுக்கும்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...