25 Jun 2019

தஞ்சாரூ ஜில்லாக்காரங்க!



செய்யு - 126
            ரூம் வீட்டிலிருந்து ஓட்டலுக்கு வந்த எல்லாரும் கிளம்பிப் போறத பார்த்துகிட்டே, எதுத்தாப்புல ஒல்லியா உடம்புல ஒட்டுச் சதை கூட இல்லாம தொளா தொளான்னு சட்டை போட்டு மண்டை பெருத்த இருந்த அவர முழிக்க முழிக்கப் பாக்குறான் விகடு. இவரும் கிளம்பிப் போயிடுவாரோங்ற பயம் அவன தொத்திக்குது.
            "சொல்லுங்க! எம் பேருதாம் லெனின். யாரு நீங்க? எங்கேந்து வாரீங்க?" என்கிறார் லெனின். அதெப்படி தான் இவரத்தான் பார்க்க வந்திருப்பேங்றது அவ்ளோ துல்லியமா இவரு கண்டுபிடிச்சாருன்னு அவனுக்கு ஆச்சரியமா இருக்கு. அதுக்கும் சேர்த்து முழிக்கிறான் விகடு.
            "நீங்க நம்மளத்தாம் பாக்க வந்திருக்கேங்றது எப்படிக் கண்டுபிடிச்சேம்னு பாக்குறீங்களா? ஆள பாத்தாலே போதும் தஞ்சாரூ ஜில்லாகாரனா? மதுர ஜில்லாகாரனா? திருநெவேலி ஜில்லாகாரனா?ன்னு கண்டுபிடிச்சிடுவேம். ரூமுல இருக்குற நாம்ம ஒருத்தம்தான் தஞ்சாவூருகாரேம். மத்ததெல்லாம் காஞ்சிரம், செங்கல்பட்டு, இஞ்ஞ சென்னை இப்பிடி. தஞ்சாரூகாரனப் பாக்க தஞ்சாரூகாரம்தானே வாரணும்!" என்று சொல்லி விட்டு இவனை ஆழப் பார்த்து விட்டு, "பேச வாய எடுத்தவுடனே ரூமுக்குள்ள வாயப் பொத்தி தடுத்துட்டதால பேச்சு வார மாட்டேங்குது போலருக்கு! அப்போ பேசியிருந்தீங்க வூட்டு ஓனர்காரேம் உள்ள புகுந்து உண்டு இல்லன்னு ஆக்கியிருப்பாம்! ஒண்ணு வூட்டு ஓனர் கண்ணு முழிக்கிறதுக்குள்ள எடத்த காலி பண்ணிட்டு வந்துடணும். இல்லே ஓனர் போன பிற்பாடுதான் கதவ தொறந்துட்டு வெளில வரணும். அதே மாரிதாம் ஓனர் வேலைக்கிப் போய்ட்டு வர அஞ்சரைக்குள்ள உள்ள பூந்து கதவப் பூட்டிக்கணும். இல்லேன்னா பத்தரைக்கு மேல ஓனர் தூங்குன பிற்பாடுதான் காம்பெளண்டு ஏறிக் குதிச்சி பூன நடக்குறாப்புல நட நடந்து ரூமுக்குள்ள வாரணும். தப்பித் தவறி கூட ஓனர் கண்ணுல பட்டுடக்கூடாது. நாண்ட்டு சாவுற அளவுக்கு நாரசமாப் பேசுவானுங்க. தப்பித் தவறி கண்ணுல பட்டுட்டா கையிலயோ, பையிலயோ இருக்குற ஐம்பது, நூற எடுத்துக் கொடுத்துட்டு ஒண்ணுஞ் சொல்லாம வந்துட்டே இருக்கணும். வூட்டு கட்டிட்டு ஓனர்காரனும் எத்தன மாசம்தான் ரெண்ட் வாங்க இருப்பாம்? எப்போ ரெண்ட்ட கொடுத்தோம்ங்றது எங்களுக்கும் மறந்துப் போச்சு. நமக்குதாம் மறந்துப் போச்சின்னா வூட்டக்காரனுக்குமா மறக்கும்? வூட்டுக்கார்ரேம் ஞாபகம் வெச்சிக் கேட்டுட்டு இருக்காம்!" என்றபடியே "ன்னா நாம்ம பாட்டுக்கு பேசிட்டே இருக்கேம். ஒங்களுக்கு மூச்சு வுடக் கூட நேரம் கொடுக்கலன்னு நெனக்கிறீங்களா?" என்று கேட்கிறார்.
            "அப்படியெல்லாம் இல்லை. நமக்கு திருவாரூர் பக்கம்.  ஏனங்குடி குணசேகரன்தான் உங்களைப் பற்றி..." என்கிறான் விகடு.
            "அந்தப் பயலா? எங்க சித்தப்பா பையம் அவேம். அவன எங்க கண்டு பிடிச்சீங்க?"
            "நாங்கள் இருவரும் தியாகராசர் சுவாமி கல்லூரியில் ஒன்றாகப் படிப்பவர்கள்! அவர் என்னுடைய நண்பன். நான் அவருடைய நண்பன்!" என்றதும் லெனின் சிரி சிரி என்று சிரிக்கிறார்.
            "மொதல்ல இப்படித் தமிழு பேசுறத விட்ருக்குங்க. இது மெட்ராஸ். இதுக்குன்னு ஒரு பாஷை இருக்கு. அதைக் கத்துக்கலனாலும் பரவாயில்ல. கொஞ்சம் கலோக்கியலா பேசுங்க. இது இவுனுங்களுக்குப் புரியாது!" என்கிறார் மண்டையில் குட்டாத குறையாக.
            "நமக்கு இப்படிப் பேசினால்தான் பேச்சு வருகிறது. இல்லாவிட்டால் மெளனம்தான் வருகிறது!" என்று சொல்லிவிட்டு, சரி என்பது போல தலையாட்டினான் விகடு.
            "இஞ்ஞ பேசுனாத்தாம் பொழக்கலாம். ச்சும்மா ரண்டு நிமிஷம் மெளனமா உக்காந்தீங்கன்னா சமாதிய கட்டிட்டு போயிட்டே இருப்பானுங்க. சொல்லுங்க! இஞ்ஞ எதுக்கு நம்மள பாக்க வந்திருக்கீங்க?" என்கிறார் லெனின்.
            "திரைத்துறையில் பாடல் எழுத வேண்டும் என்று ஓர் ஆசை! அதான் கிளம்பி வந்து விட்டேன்!" என்று சொல்லி விட்டு லெனின் முகத்தைப் பார்க்கிறான் விகடு.
            "படமே எப்பயாச்சும்தான் பூஜ போடுறானுங்க. போட்டாலும் போடுறதுக்கு முன்னாடியே யாரு பாட்டு எழுதணும்னு முன்கூட்டியே பிக்ஸ் பண்ணிடுவானுங்களே. பாட்டு எழுதணும்னா நீங்க இசயமைப்பாளருங்கலதாம் பாக்கணும். நம்ம தோஸ்துங்க எல்லாம் இப்போ டி.வி. பக்கம் வந்தாச்சி. யாரும் அந்த பீல்டு பக்கத்துல இல்ல. அடிக்கடி போராட்டம் அது இதுன்னு படங்களே ரொம்ப கொறைஞ்சிப் போச்சி. அதுவும் இப்ப நமக்கு எந்த சீரியலும் இல்ல. ஆரம்பிக்க எப்படியும் ஒரு மாசத்துக்கு மேல ஆகுமே! நீங்க ஒண்ணு பண்ணுங்க! சாப்புட்டுட்டுக் ஊரப் பாக்க கிளம்புங்க. நாம்ம எதாச்சிம் சான்ஸ் கெடச்சா ஒங்களுக்கு போன் அடிச்சிச் சொல்றேம்!" என்கிறார் லெனின்.
            "உங்கள் கூடவே தங்கி வாய்ப்பு தேடலாம் என்று இருக்கிறேன்!" என்று விகடு சொன்னதும், லெனின் லேசாகச் சிரித்து விட்டு, "நான் கெஸ் பண்றது கரெக்ட்னா நீங்க படிச்சிட்டு இருக்கணும்! அத விட்டுட்டுதான ஓடி வந்திருக்கீங்க?" என்று பொட்டில் அடித்தது போல நடந்ததையெல்லாம் நேராகப் பார்த்தது போல சொல்கிறார்.
            "ம்!" என்று மென்று முழுங்குகிறான் விகடு.
            "படிப்ப முடிங்க! அத விட்டுடாதீங்க! முடிச்சிட்டுக் கூட நீங்க வரலாம்! தட் இஸ் கரெக்ட்."
            "அது இனிமேல் என்னால் முடியாது!" என்கிறான் விகடு. கேட்டுவிட்டு மறுபடியும் லெனின் சிரிக்கிறார். "இஞ்ஞ பாருங்க! ஒரு அசிஸ்டெண்ட் டேரக்டர்னாவது பொழச்சிக்கலாம். எங்களுக்கே வருஷத்துக்கு ஆறு மாசத்துக்கு மேல வேல இருக்காது. பாட்டு எழுதுறதுன்னா... நீங்க ஏதோ ஒரு ஆர்வகோளாறுல கெளம்பி வந்த மாரி தெரியுது. நாம்ம மெட்ராஸூ வந்து ஆறு வருஷமாச்சி. வூட்டுக்குப் பைசா காசி அனுப்புனதில்ல. அதுக்காக வூட்டுலயும் பிடுங்கித் திங்கிறதில்ல. வந்ததிலேந்து அசிஸ்டென்ட் டேரக்டரா ஒரு படம்தான் பண்ணிருக்கேம். அசிஸ்டெண்ட் டேரக்டரா அடுத்தப் படத்துக்கே சான்ஸ் கெடைக்காம... அப்டியே சீரியல் பக்கம் ஒதுங்கியாச்சி. பட்... என்னிக்கோ ஒரு நாளு சான்ஸ் கெடைக்கும். அது எப்போன்னுதாம் தெரியல! நாம்ம ஒங்கள டிஸ்கரேஜ் பண்றதா நெனச்சுக்காதீங்க. சொல்றேன்னும் தப்பா நெனச்சுக்காதீங்க. எங்கிட்ட இப்போ பைசா காசில்ல. நம்மள பாக்க வந்திருக்கிற ஒங்களுக்கு ஒரு டீ வாங்கித் தாரக் கூட வக்கில்ல. ஒரு மாசம் ஆகும் எங்க சூட்டிங் ஆரம்பிக்க. அப்படி இப்படின்னு ஓட்டிட்டு இருக்கேம். ரூம்ல ஒரு வேள சமைப்பானுங்க. அதுவும் தெனமும் சமைப்பானுங்கன்னு சொல்ல முடியாது. மத்தபடி அங்கயிங்க போறப்ப எவனாவது இப்படி வாங்கிக் கொடுக்குற டீதாம். ஒரு தபா ஒரு மாசம் வரிக்கும் இப்படி கெடைக்குற டீய மட்டும் குடிச்சிட்டு இருந்திருக்கேன்னா பாத்துக்குங்க. ஒடம்ப பாத்தீங்கல்ல. மண்டயும், எலும்பும்தாம் இருக்கு. அதுல கொஞ்சம் தோலு ஒட்டிட்டு இருக்கு!" என்று விரக்தியாகச் சிரிக்கிறார் லெனின்.
            "எனக்கு டீ கூட வாணாம். ஒரு டம்ப்ளர் தண்ணீர் போதும்!"
            "ஓ! அம்மாம் பெரிய அப்பாடக்கரா நீங்க! ஒங்கள திருத்த முடியாதுன்னு நெனக்கிறேம். ஒரு வாரம் தங்கிப் பாருங்க. பிடிச்சதுன்னா இருங்க. இல்லேன்னா எங்கிட்ட கூட சொல்லிக்க வாணாம். கெளம்பி ஊரப் பாக்க போயிட்டு இருங்க! ஒங்க பேரு ன்னா சொன்னீங்க?"
            "விகடு... விகடபாரதி!"
            "இந்த பழனிபாரதி, யுகபாரதி மாதிரியா? அத சினிமாவுக்காக வெச்சிக்கலாம். ஒங்க உண்மையானப் பேரச் சொல்லுங்க!" என்று சிரித்தார் லெனின்.
            "விகடு!"
            லெனின் உற்றுப் பார்த்தார். "ஆளு ந்நல்லா வாட்ட சாட்டமா ச்சும்மா கொழுகொழுன்னு இருக்கீங்க! எண்பது கிலோ இருப்பீங்களா?"
            "எண்பது ஆறு!" என்றான் விகடு.
            "வெயிட்டு அறுவதுக்கு கொறையாமலாவது வெச்சிக்கணும். பாக்கலாம்! இப்பயே சாப்பிடுறீங்களா? குளிச்சிட்டுச் சாப்பிடுறீங்களா?"
            "நீங்க?"
            "பதினோரு மணி வாக்குல ஒரு டி அடிச்சிக்கிறேம்!"
            "நீங்க சாப்பிடவில்லை என்றால் நாமும் சாப்பிடவில்லை!"
            "ஓ! அப்புடியா! நாம்ம இன்னிக்கு நாளு பூரால்ல சாப்புடாம இருப்பேம்! நீங்க தாங்குவீங்களா?" என்று சொல்லி விட்டு லெனின் எழுந்து சென்று சாப்பாடு பரிமாறுபவரிடம் ரகசியமாக ரெண்டு வார்த்தைகள் சொல்லி விட்டு வருகிறார்.
            "ஆளுக்கு ரண்டு கல்லு தோச! ஓ.‍கே.வா?" என்கிறார் லெனின்.
            தோசைக்கல்லில் சுட்டுத் தருவதால் காரணப் பெயராக கல்லு தோசையா என்பது போல மறுபடியும் மறுபடியும் முழக்கிறான் விகடு. அதைப் புரிந்து கொண்டவரைப் போல லெனின் சொல்கிறார், "தோசைன்னா ரோஸ்ட் மாரி சுட்டுக் கொடுப்பானுங்க. கல்லு தோசன்னா வூட்டுல அம்மா சுட்டுக் கொடுக்குற மாரி சுட்டுக் கொடுப்பானுங்க. சொல்றப்பவே தோசயா, கல்லு தோசயான்னு தெளிவா சொல்லிப்புடணும். தோச ஒண்ணு அஞ்சு ரூவா. இஞ்ஞ இந்தக் கடயில மட்டுந்தாம். வேற கடயில சாப்புட்டா அப்படியே டபுள். ஏரியா பசங்க புல்லா தீவார் ஹோட்டலுதாம். அக்கெளண்ட்டு வெச்சிகலாம். பணம் கட்ட முடியலன்னா ரண்டு நாளிக்கு வந்து வேலயும் பாத்துக்கலாம். ஒண்ணுஞ் சொல்ல மாட்டானுங்க." என்று லெனின் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சாப்பாடு கொண்டு வருபவர் ரெண்டு கைகளிலும் சதுரமான பாலிதீன் போடப்பட்ட தட்டில் சுடச்சுட ரண்டு கல்லு தோசைகளைப் போட்டுக் கொண்டு வருகிறார். "அப்புறம் பாஸூ! சீரியலு ஆரம்பிக்கிறப்ப ஒரு தம்மா துண்டு ரோலு... நம்மள மறந்துடாதீங்க. அப்படியே வூட்டுக்காரிக்கு ஒருவாட்டி டி.வி.யில வந்துட்டுப் போறாப்புள ஒரு தம்மா துண்டு தக்கனோன்ண்டு ரோலு. மறந்துடாதீங்க!" என்று கண்ணடித்து விட்டு தட்டில் சாம்பாரை ஊற்றி, காரத் துவையலை வைத்து விட்டு சாப்பாடு பரிமாறுபவர் செல்கிறார்.
            "ன்னா அப்படிப் பாக்குறீங்க? ஏத்தோ கசமுசா பண்றேன்னா! வேற வழியில்ல. இப்படி சில கேஸூங்க இருக்கு. அடிக்கடிலாம் யூஸ் பண்ண மாட்டேம். சம்டைம்ஸ் இது மாரி சில சமயத்துல பயன்படுத்திக்கிறது. வேற ன்னா பண்றது சொல்லுங்க!" என்றபடி சாம்பாரில் நனைந்த கல்லுதோசையைப் பிய்த்து வாயில் போடுகிறார் லெனின். அதையே பார்த்துக் கொண்டிருக்கிறான் விகடு.
            "சாப்புடுங்க பாடலாசிரியரே! பாட்டு எழுத தெம்பு ல்லாம போயிடப் போவுது. ரொம்ப நாளிக்கு பட்டினி கெடக்க வேண்டிருக்கும். சாப்பாடு கெடைக்கிறப்பவே சாப்பிட்டுக்குங்க!" என்று சிரிக்கிறார் லெனின்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...