25 Jun 2019

'கொமறு காரியம்' - ஓர் அறிமுகம்


கீரனூர் ஜாகிர்ராஜாவின் 'கொமறு காரியம்' சிறுகதைத் தொகுப்பு - ஓர் அறிமுகம்
            கீரனூர் ஜாகிர்ராஜாவின் பதினொரு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'கொமறு காரியம்'
            இஸ்லாமிய சமூகத்தின் பரந்துப்பட்ட வாழ்வியலை வாசிக்கும் அனுபவத்தைத் தருகிறது இத்தொகுப்பு. அதில் பெண்களின் வாழ்வியல் குறித்த சிறுகதைகள் அதிகம். பெண்களின் மனப்புழுக்கமும், அதன் விளைவாக அவர்கள் அடைகின்ற மனவெக்கையும் பெரும்பான்மையான சிறுகதைகளில் இழையோடிக் கிடக்கின்றன. அதிகமாக நாம் பார்வையில் படாத விளம்புநிலை இஸ்லாமிய மக்களை 'கொமறு காரியம்' சிறுகதைத் தொகுப்பில் சந்திக்க முடிகிறது.
            1. மகளின் திருமணத்துக்காக பணம் கேட்பதாகச் சொல்லிக் கிடைத்த பணத்தில் குடிக்கும் தந்தையைப் பற்றிச் சொல்லும் 'கொமறு காரியம்',
             2. முத்தலாக்கால் தாயும் மகளுமாக வாழ்வை இழந்து நிற்கும் அவலத்தைப் பேசும் 'பாவம் அவள் பெயர் பரக்கத் நிஸா'
            3. வெளிநாட்டுக்கு கணவன் சென்ற பின் சன்னலில் வாழ்வைத் தேடும் இஸ்லாமியப் பெண்ணின் தனிமையைச் சொல்லும் 'நாச்சியா',
            4. சூதாடும் கையாலாகாதக் கணவனைக் கட்டிக் கொண்டு, கையைப் பிடித்த கொழுந்தனையும் பொறுத்துக் கொண்டு, கொழுந்தனின் காலில் பிடித்த சீழ் குணமாக வேண்டும் என்ற மனுஷத் தன்மையோடு ஈரம் கசியும் இஸ்லாமியப் பெண்ணின் மன ஈரத்தைச் சொல்லும் 'மனுஷி'
            5. கல்யாண வயதில் பிள்ளை இருந்தாலும் எங்கே தன்னுடைய கணவன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விடுவானோ என்ற இஸ்லாமிய பெண்களுக்கே உரிய அச்சத்தைச் சொல்லும் 'கலைத்து எழுதிய சித்திரம்'
            ஆகிய சிறுகதைகளில் பதிவாகியுள்ள இஸ்லாமிய பெண்களின் ஆழ்ந்த மனவோட்டம் அவர்களின் மன உலகத்தை விரிவாகப் பேசுகிறது. இஸ்லாமிய பெண்களின் தனிமையில் கழியும் வாழ்வையும், திருமணத்திற்குப் பின் தீவிரமாகும் அந்தத் தனிமைப் பெருவெளியையும் காட்சிப்படுத்திய வகையில் இத்தொகுப்பு தனித்த கவனத்தைப் பெறுகிறது.
            தனிமையோடு போராடும் நாச்சியா, வறுமையோடு போராடும் காத்தூன், வெறுமையோடு போராடும் ஆதிலா, இயலாமையோடு போராடும் பரக்கத்நிஸா, சந்தேகத்தின் ஆற்றாமையோடு போராடும் பேரப்பிள்ளையைப் பெறப் போகும் வயதிலுள்ள பெண்மணி என்று தொகுப்பு முழுவதும் ஒவ்வொரு பெண்ணின் மனஉலகும் மனப்புழுக்கத்தில் வெந்து வெந்து தணிகிறது.
            ஆண்களுக்கு மதமும், மதக் கோட்பாடுகளும் தரும் அதிகாரத்தையும், சுதந்திரத்தையும், கட்டற்றத் தன்மையையும், அவை ஒரு போதும் பெண்களுக்குத் தருவதில்லை என்பதை இச்சிறுகதைகள் ஒவ்வொன்றும் அப்பெண்கள் சந்திக்கும் வெவ்வேறு பிரச்சனைகள் வழி நின்று பேசுகின்றன. ஆண் பிள்ளையும், பெண் பிள்ளையுமாக சோறாக்கி குழம்பாக்கி விளையாடும் விளையாட்டில், சோறாக்கியது சரியில்லை என்று மன்சூர் என்ற சிறுவன் பானு என்ற சிறுமியை நோக்கி தலாக் சொல்கிறான் என்பதை 'பாவம் அவள் பெயர் பரக்கத்நிஸா'  என்ற சிறுகதை ஒருபால் அதிகாரத் தன்மையை வெகு எதார்த்தமாகக் காட்சிப்படுத்தும் இடத்தில் இதயம் ஒரு நிமிடம் நின்றுதான் துடிக்கிறது.
            காப்காவின் நண்பன், கேரக்டர், புத்தகச் சந்தையில் மாடு மேய்ப்பவன் ஆகிய 3 சிறுகதைகளும் எழுத்தாளனின் மன உலகத்தைப் பேசுகின்ற சிறுகதைகள். படைப்பாளியை முன்னிருத்தி படைப்பை அணுகும் தமிழ்ச் சூழ்நிலையயும், படைப்பை முன்னிருத்தி படைப்பாளியை அணுகும் மலையாளச் சூழ்நிலையையும் 'புத்தகச் சந்தையில் மாடு மேய்ப்பவன்' சிறுகதை மூலமாகப் பேசுகிறார் ஜாகிர்ராஜா. மற்ற சிறுகதைகளில் எழுத்தாளனின் அகஇடுக்கு சிக்கல்களை வெளிநாட்டு எழுத்தாளர்களின் து‍ணையோடு ஆய்வு செய்யப் பார்க்கிறார்.
            தவறான சித்தரிப்புகளைச் செய்யும் எழுத்தாளனை அவன் உருவாக்கிய கதாபாத்திரமே மனசாட்சியின் வடிவத்தில் தண்டிப்பது போன்ற 'கேரக்டர்' என்ற சிறுகதை, தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும் என்ற திருக்குறளைக் காட்டுவதைப் போல இருக்கிறது. அதில் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது போல, எழுத்தின் மெய்மை பிழைத்தோர்க்கு படைத்த கதாபாத்திரமே கூற்றாகிறது.
            கசாப்பின் இதிகாசம், இப்படியாக சினிமா என் சமூகத்தில், நரகத்திலிருந்து ஒரு குரல் ஆகிய சிறுகதைகள் இஸ்லாமிய சமூகத்தின் பலவித பழக்கவழக்கங்களான குர்பானி, ஜமாத்தின் நடைமுறைகள், ரமலான் நோன்பு போன்றவற்றைக் கண்முன் காட்சிப்படுத்திப் பேசிச் செல்கிறது. இக்கதைகள் மதத்தின் இறுக்கமான தன்மையைத் தளர்த்த முயற்சிக்கின்ற அதே வேளையில், மதம் ஓர் அதிகாரக் குறியீடாக இருப்பதையும், அதிகாரக் குறியீடாக இருக்கும் மதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மனிதர்கள் எப்படி ஓர் அதிகாரக் குறியீடாக மாற்றமடைகிறார்கள் என்பதையும் காட்சிப்படுத்துகின்றன.
            இப்பதினோரு சிறுகதைகளில்,
            5 இஸ்லாமியப் பெண்களின் மன உலகத்தையும்,
            3 சிறுகதைகள் இஸ்லாமியச் சமூகத்தின் பழக்க வழக்கங்களையும்,
            3 சிறுகதைகள் எழுத்தாளனின் மன உலகத்தையும் பேசுகின்றன.
            இப்பதினொரு சிறுகதைகளிலும் உள்ளார்ந்து ஒடுங்கியிருக்கும் ஒரு விசயம் - மனிதர்களிடம் எப்படி ஒற்றைத் தன்மையைத் திணிக்க முடியும் என்ற வினாதான். மனிதர்கள் பன்முகமானவர்கள். இறுக்கத்தில் வைத்திருப்பதை மதம் விரும்பினாலும் அந்த இறுக்கத்தைத் தளர்த்திக் கொள்ளவே மனிதர்கள் விரும்புகிறார்கள். இலக்கியமும் அதைத்தான் விரும்புகிறது என்பதற்கான சாட்சியமே இச்சிறுகதைத் தொகுப்பு.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...