23 Jun 2019

நீ யாருடா கஷ்மாலம்!



செய்யு - 124
            எதிர்வீட்டு தாடி தாத்தா விகடுவைக் கூப்பிட்டு வைத்து எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும். "இந்தாரு வெகடு காலேஜி போயி படிக்கிறே. நம்மள மாரி மழிக்காம போயிடக் கூடாது. தெனமும் காலைல ஒரு இழுப்பு இழுத்துடணும். ஒடம்பு முக்கியம் பாத்துக்கோ. காலேஜி முடிச்சி வாரப்ப ஒரு பொட்டணத்த சாப்பிட்டு டீ, காபி குடிக்காம வாரக் கூடாது. கையில நூறு ரூவா காசி வெச்சிருக்கணும்!" என்று சொல்லி விட்டு சுப்பு வாத்தியார் பக்கம், "ன்னா வாத்தியாரே பையம் கையில ஒரு நூறு ரூவா காசு கொடுத்து வைக்கணும்! வெளில போறவேம். நாலு புள்ளைங்க செலவு பண்ணிட்டு நிக்கிறப்ப நம்ம புள்ள ஒதுங்கி நின்னு தெகச்சிப் போயிடக் கூடாது." என்று குரல் கொடுக்கும்.
            "நூறுல்ல, எரநூறாவே கொடுத்தாச்சி!" என்று பதில் குரல் கொடுக்கும் சுப்பு வாத்தியார்.
            விகடுவின் கையில் எப்போதும் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளாக இருநூறு ரூபாய் எப்போதும் இருந்தது. இது போக தினமும் காலேஜ் போய் வர இருபது ரூபாயைத் தனியாக எடுத்து வைத்து விடும் சுப்பு வாத்தியார். எட்டாம் நம்பர் பஸ்ஸில் டிக்கெட் வர, போக மூணரையும் மூணரையும் ஏழு ரூபாய். திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து காலேஜூக்கு ஒண்ணரையும் ஒண்ணரையும் மூன்று ரூபாய். பத்து ரூபாய்தான் அதிகபட்ச செலவு.  
            அப்போது சுப்பு வாத்தியாரின் வீட்டைக் கட்டிக் கொண்டிருந்த கொத்தனார், ஆசாரிகளுக்குச் சம்பளம் நூறு ரூபாய். மேஸ்திரிக்கு மட்டும் ஐந்து ரூபாய் சேர்த்து நூற்று ஐந்து. வேலை நடக்கும் போதெல்லாம் அவரவர்க்குக் கொடுக்க வேண்டிய காசை பொட்டலம் கட்டி எடுத்து வைத்து விடும் சுப்பு வாத்தியார். விகடுவுக்கு அப்படித்தான் ஒரு பத்து ரூபாய் நோட்டும், பத்து ரூபாய் சில்லரையுமாக ஒரு பொட்டலம் தலைசீவும் கண்ணாடிக்கு அருகே இருக்கும்.
            காலேஜ் கேண்டினிலோ, பஸ் ஸ்டாண்டிலிருந்து விகடுவைச் செலவு செய்ய விடாது கூட்டாளிகளின் கூட்டம். "ன்னப்பா கவிதலாம் எழுதுறே! ஒன்னப் போயி எப்படிச் செலவு பண்ண வுடுறது!" என்று ரவுண்டு கட்டி வாங்கிக் கொடுத்து அனுப்பும். தங்கள் கூட்டத்தில் ஒருவன் எழுதுவது அவர்களுக்கு அவ்வளவு பெருமிதமாக இருந்தது.
            இவ்வளவு வேகத்தில் கவிதைகள் எழுதுகிற ஒருவனை எவ்வளவு நாள்தான் இங்கேயே வைத்துக் கொள்வது என்று கூட்டாளிகள் கூட்டம் நினைக்க ஆரம்பித்து விட்டது. "ஏய் எழுத்தாணி ஒரு தபா நீ மெட்ராஸூ போயிட்டு வந்ததாம் செரிபட்டு வரும்!" என்று உசுப்பேற்றாமல் அந்தக் கூட்டத்தால் இருக்க முடியவில்லை.  விகடுவுக்கும் அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்கவில்லை.
            கல்லூரியிலிருந்து வீடு திரும்ப வேண்டிய ஒரு தினத்தில் ஏனோ வீடு திரும்ப மனமில்லாமல் சென்னைக்குச் செல்லும் ரயிலை விசாரித்துக் கொண்டு ஸ்டேஷனில் உட்கார்ந்து விட்டான். அப்படி ஏறுவதற்கான எந்த முன்முடிவும் அன்று காலை கல்லூரி கிளம்பும் போது கூட அவனிடம் இல்லை. சீனி தூக்கலாக கூட்டாளிகளோடு ரெண்டு டீ அடித்த போது திடீரென தோன்றிய எண்ணம் அது. போய் விடலாம் என்று அரைகுறையுமாகத்தான் அந்த எண்ணம் முதலில் தோன்றியது. தான் போவோமா மாட்டோமா என்பதில் அவனுக்கு அரைகுறையாகத்தான் நம்பிக்கை இருந்தது. கூட்டாளிகள் கிளம்பிய பிறகு கடைத்தெரு பக்கம் ஒரு நடை நடந்தான். பழைய ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் பேக்கரியும் டீஸ்டாலுமாக இருந்த கடையில் சீனி தூக்கலோடு இன்னும் ரெண்டு டீ அடித்தால் இந்த எண்ணம் இருக்கிற இடம் தெரியாமல் ஓடி விடும் என்று நினைத்தான் விகடு. பேக்கரி டீஸ்டாலில் ரெண்டு டீ அடித்ததும் அவனை அறியாமலே ரயில்வே ஸ்டேசனுக்கு சென்னை போகும் ரயில் குறித்து விசாரிப்பதுதான் நடந்தது.
            காலேஜில் அவனோடு படித்த கூட்டாளிகளில் ஒருவனான ஏனங்குடி குணசேகரனின் பெரியப்பா மகன் அதாவது குணசேகரனுக்கு அண்ணன் முறையில் இருந்த லெனின் அப்போது சூளைமேட்டில் அஸிஸ்டெண்ட் டைரக்டராக இருந்தது. குணசேகரன் லெனினின் அட்ரஸ், போன் நம்பர் எல்லாவற்றையும் விகடுவுக்குக் கொடுத்திருந்தான். சென்னை போய் இறங்கி லெனின் நம்பருக்குப் போன் அடிப்பது, லெனின் வந்து அழைத்துச் சென்றதும் மறுநாளே சினிமாவில் பாட்டெழுதி அங்கேயே அப்படியே செட்டிலாகி விடுவது என்று மனதுக்குள் ஒரு திட்டத்தை உருவாக்கிக் கொண்டான் விகடு. பக்காவாக திட்டமிட்டாயிற்று. அதுவும் எவ்வளவு சீக்கிரத்தில்! உடனே டிரெய்ன் வந்து கிளம்பினால் தேவலாம் என்பது போலத் தோன்றியது. அது ஆடி அசைந்து வந்து ஒன்பது மணிக்கு மேல் வந்து பத்தே காலுக்கு மேல் கிளம்பியது. டிரெய்ன் மாயவரம் போகும் வரையில் வித விதமான கற்பனைகள். பத்தே நாட்களில் நூறு படங்களுக்கு பாடல் எழுதி விடுவது, கண்ணதாசன் ஐயாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியதை எல்லாம் அதிகபட்சம் ஓராண்டிற்குள் எழுதி முடித்து விடுவது என்று என்னென்னமோ எண்ணங்கள். எந்த எண்ணத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் அவை டிரெய்னை விட வேகமாக ஓடிக் கொண்டிருந்தன.
            மாயவரத்தில் இறங்கி விசாரித்துக் கொண்டு டிரெய்ன் மாறிய போதுதான் விகடுவுக்கு முதன் முதலில் பயம் கவ்வியது.வீட்டுக்குத் திரும்பி விடலாமா என்று மனம் யோசித்தது. வீட்டில் ஏன் லேட் என்று கேட்டால் கூட்டாளி யாருக்காவது உடம்பு சரியில்லை என்று சமாளித்து விடலாம் என்று அதற்கும் ஒரு திட்டம் தயாரானது. யாரிடமும் இது குறித்து சொல்லாமல் டிரெய்ன் ஏறியது எவ்வளவு நல்லதாகப் போய் விட்டது என்று சந்தோஷமாக இருந்தது. ஒருவேளை யாரிடமாவது சொல்லி டிரெய்ன் ஏறி, மறுநாளே திரும்பிப் போய் நின்றால் நன்றாகவா இருக்கும்? ஆக திட்டம் என்பது இப்படித்தான் ரெண்டு பக்கமும் போகும் வகையில் இருக்க வேண்டும் என்று மனசுக்குள் சபாஷ் போட்டுக் கொண்டான் விகடு.
            வந்தது வந்தாயிற்று. சீனி தூக்கலாக மாயவரத்து டீ ரெண்டு அடித்து விட்டு கிளம்புவது என முடிவு எடுத்த ஒரு டீ அடித்த போது டிரெய்ன் கிளம்புவதற்கான சத்தம் கேட்டதுதான் தாமதம். மறுபடியும் மனம் மாறிப் போனது. இன்னொரு டீ அடிப்பதைப் பொருட்படுத்தாமல் ஏறி உட்கார்ந்து விட்டான்.
            டிரெய்ன் சென்னையை நோக்கிப் போக ஆரம்பித்தது. கூட்டம் அதிகமாக இருக்கவில்லை. சுமாராக இருந்தது. அவரவர்களும் நடந்து செல்லும் வழியெங்கும் துண்டை விரித்தும், நியூஸ் பேப்பரை விரித்தும் ஆண், பெண் என்ற பேதமில்லாமல் பலவிதமாக படுத்துக் கிடந்தனர். டிரெய்ன் பெர்த்தின் பக்கத்துக்கு ஒன்றாக புடவையைக் கட்டி ஒரு குழந்தையைத் தூங்கப் போட்டிருந்தார்கள். டிரெய்ன் போக அந்தத் தொட்டில் இப்படியும் அப்படியுமாக இதமாக ஆடிக் கொண்டிருந்தது. அது அந்தக் குழந்தைக்கு சுகமாக இருந்திருக்க வேண்டும். லயித்துத் தூங்கிக் கொண்டிருந்தது. விகடுவின் மனமும் இப்படியும் அப்படியுமாக, திட்டைக்கும் சென்னைக்குமாக ஆடிக் கொண்டிருந்தது. அந்த ஆட்டத்தில் சுகம் மட்டும் இல்லாமலிருந்தது. அவனால் தூங்க முடியவில்லை.
            இருளைக் கிழித்துக் கொண்டு டிரெய்ன் அப்படியொன்றும் பெரிய வேகமாகத் தெரியாத ஏதோ ஒரு வேகத்தில் போய்க் கொண்டிருந்தது. திடீரென ஏதோ ஒரு ஸ்டேஷன் வரும் போது வெளிச்சம் பெருக்கெடுத்தது. இவனுக்கும் ஏதோ இருட்டுக்குள் போவது போல இருக்கும். கொஞ்ச நேரம்தான். அப்புறம் கற்பனைகள் சிறகு கட்டிக் கொள்ளும். சினிமாவில் பாட்டெழுதுகிறேன் என்று மட்டும் இருந்த விடக் கூடாது. கவிதையும் எழுத வேண்டும். போன ஒரே மாதத்தில் ஒரு கவிதைத் தொகுப்பாவது கொண்டு வந்து விட வேண்டும் என்று கற்பனை விரியும் போது ஜாலியாக இருக்கும். அதுவும் கொஞ்சம் நேரம்தான். பழையபடி மனம் திட்டைக்கே திரும்பி விடலாமா என்று தோன்றும். இப்படியும் அப்படியுமாக மாறி மாறி அவன் சென்னையின் எக்மோர் ஸ்டேஷனை அடைந்த போது மணி காலை ஆறோ ஆறோ காலோ இருக்கும்.
            அப்போது ஒரு ரூபாய் டெலிபோன் ரொம்ப பேமஷாக இருந்தது. ஒரு பெட்டிக்கடை இருந்தால் கட்டாயம் ஒரு ரூபாய் டெலிபோன் இருக்கும். ரயில்வே ஸ்டேஷனுக்குள் இருந்த எல்லா ஒரு ரூபாய் டெலிபோனிலும் ஏகப்பட்ட ஆட்கள் பேசிக் கொண்டிருந்தனர். விகடு ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தான். வெளியே இருந்த ஒரு கடையில் யாருமில்லாமல் ஒரு டெலிபோன் அநாதையாக நின்றிருந்தது. இவனுக்கும் அநாதையாக நிற்பதைப் போல்தான் தோன்றியது. ஓர் அநாதைக்கு இன்னொரு அநாதைதான் துணை என்பதைப் போல ரிசீவரை எடுத்து ஒரு ரூபாயை போட்டு விட்டு நம்பரை அழுத்தினான். 'ட்ர்ர் ட்ர்ர்' என்ற சத்தத்தோடு அழைப்புப் போனது.
            எதிர்முனையில் யாரும் எடுக்கவில்லை. ரிசீவரை வைத்ததும் ஒரு ரூபாய் நாணயம் வெளியே வந்து விழுந்தது. மறுபடியும் ரூபாயைப் போட்டு விட்டு ரீடயலை அழுத்தினான். யாரும் எடுப்பதாகத் தெரியவில்லை. நான்கைந்து முறை இவன் போடுவதற்குள் நான்கைந்து பேர் அங்கே கூடியிருந்தனர். "யாருப்பா நீ! அப்பால தள்ளு. நிக்குறவங்க பேசட்டும்." என்றார் அந்த ரூபாய் டெலிபோனுக்குச் சொந்தமான பெட்டிக்கடைக்காரர். இவன் தள்ளி நின்று கொண்டான். ஒவ்வொருவரும் பேசப் பேச அடுத்தவர்கள் வந்து கொண்டேயிருந்தனர். வேறொரு ஒரு ரூபாய் டெலிபோனை நோக்கி நகரலாமா என்று கூட தோன்றியது. நகருவதா வேண்டாமா என்ற யோசனையிலேயே ஒரு முடிவுக்கு வர முடியாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான். அரை மணி நேரத்துக்கு மேல் ஆகியிருந்தது. பெட்டிக்கடைக்காரரே, "இந்தாருப்பா! நீ கொஞ்சம் போட்டுப் பாரு!" என்றதும் இவன் மறுபடியும் நம்பரைப் போட்டுப் பார்த்தான். இந்த முறை போன் எடுக்கப்பட்டது.
            "வணக்கம் ஐயா! நான் விகடு பேசுகிறேன்!" என்று ஆரம்பித்தான் விகடு.
            "சொல்லு! நீந்தான் காலயிலயே தூங்க வுடாம போட்டு அடிச்சிட்டு இருந்தியா! ன்னா வேணும்?" என்றது எதிர்முனையில் ஓர் ஆண் குரல்.
            "ஐயா! தாங்கள் லெனினா? நான் லெனின் ஐயா அவர்களிடம் பேச வேண்டும்!"
            "யாருடா நீ? காலங் காத்தாலய பேசியே கொல்லுற? ன்னாடா வேணும் ஒனக்கு?"
            "ஐயா! தவறாக நினைக்கக் கூடாது. நான் லெனின் ஐயாவுக்கு மிகவும் வேண்டியப்பட்டவன்! விகடு என்று சொன்னால் அவர் அறிந்து கொள்வார்!"
            "யாருடா அந்த கஷ்மாலம்?" என்று எதிர்குரல் கேட்டதும் விகடுவுக்குத் தூக்கி வாரிப் போடுவது போல இருந்தது.
            "ஐயா! இது சூளைமேடு,‍ பெரியார் பாதை, எண் 112  முகவரியில் உள்ள தொலைபேசிதானே?" என்றான் விகடு.
            "அட்ரஸ்லாம் கரெக்ட்தான். நீ எந்த கஷ்மாலத்த சொல்றேன்னுதான்டா தெரியல!"
            "ஐயா! லெனின், உதவி இயக்குநர். மன்னிக்கவும் அஸிஸ்டெண்ட் டேரக்டர்! செவத்த மனசுக்காரின்னு ஒரு படத்துல கூட..."
            "ஓ! அந்த கஷ்மாலமா? அந்த கஷ்மாலத்த நீ ஏண்டா கேக்குறே கஷ்மாலம்?"
            "அவரது அறையில் தங்கி பாடலாசிரியனாக வேண்டும் என்று சென்னை எழும்பூர் வந்திருக்கிறேன் ஐயா!"
            "தம்மா துண்டு ரூமுக்கு எத்தினி பேருதான்டா வருவீங்க கஷ்மாலம்! அந்த பத்துக்குப்பத்து ரூமுல ஏற்கனவே எட்டு பேரு இருக்கானுங்கடா! ஆறு மாசமா ரெண்டு கொடுக்காம டிமிக்கிக் கொடுத்துட்டு இருக்கானுங்க எடுபட்ட பயலுங்க. இதுல நீ வேறயடா கஷ்மாலம். இந்தாண்ட வந்தேன்னு வெச்சுக்கோ நாஷ்டாவுக்குக் கூட தேற மாட்டே! அப்படியே பஸ்ஸூ பிடிச்சி ஊருக்குப் போயிடு. ஏரியா பக்கம் வந்தே சோட்டாலயே அடி வாங்குவே! ஒரு ரூமுக்கு ஒம்போது பன்னிங்க இருந்தா குளிக்குற தண்ணி கணக்கு ன்னா? பேளுற செப்டிக் டேங்க கிளினிங் கணக்கு ன்னா? மொதல்ல எல்லா பன்னிகளயும் ரூம விட்டு அடிச்சித் தொரத்தணும்!" என்றபடியே ரிசீவரை பட்டென்று வைத்தார். அவர் பேசிய தோரணையிலிருந்து அவர்தான் வீட்டு ஓனராக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் விகடு. அவரது நம்பரைத்தான் லெனினின் நம்பராக குணசேகரன் கொடுத்திருப்பதைப் புரிந்து கொண்டான்.
            "ச்சே! ன்னா கேவலமாம பேசுறாங்க! இப்படிப் பேசுற ஊருல கங்கையாடா ஓடும்? கூவம்தான்டா ஓடும்!" என்று நினைத்தபடி திரும்ப ஊருக்கே போய் விடலாமா என்று நினைத்தான் விகடு. அதே நேரத்தில் வந்தது வந்தாயிற்று லெனினைப் பார்த்து விடுவோம் என்றும் நினைத்தான் விகடு.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...