13 Jun 2019

வாடகையில சம்பாதிச்சுப் போடுங்க!



செய்யு - 114
            "எவ்ளோ நாள்தான் வீட்டக் கட்டிட்டு இருப்பீங்க! சட்டுபுட்டுன்னு கட்டிட்டு குடி வார வழியப் பாருங்க!" என்று வந்ததும் வராதுமாக லாலு மாமா பேசியதும் சுப்பு வாத்தியாருக்கு துக்கப்படுவதா? சந்தோசப்படுவதா? என்று குழப்பமாக இருந்தது. லாலு மாமா சுப்பு வாத்தியார் வாடகைக்குக் குடியிருந்த முல்லேம்பாள் வீட்டுகே நேரடியாக வந்திருந்தது. ரெட்டை நாக்கில்லாத மனுஷன் நாட்டில் எவன் இருக்கிறான் என்று சுப்பு வாத்தியார் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஒன்றும் பேசாமல் அப்படியே நின்றிருந்தது.
            "நாம்ம தஞ்சாரூ போனதுக்கப்புறம் ஒங்களயெல்லாம் பாக்கவேயில்ல. அதாங் பாக்கணும் போலருந்துச்சுன்னு வந்தேம்!" என்றது லாலு மாமா. இந்தப் பதில் சுப்பு வாத்தியாரைக் கொஞ்சம் இளக்கியிருக்க வேண்டும்.
            "ஒரு வார்த்த கூட நம்மகிட்ட சொல்லலேயே!" என்றது சுப்பு வாத்தியார்.
            லாலு மாமா வந்ததில் சுப்பு வாத்தியாரின் மனைவி வெங்குவுக்கும் சந்தோஷம். எங்கே உறவு விட்டுப் போய் விடுமோ என்ற கவலை அதுக்கு அதிகம் இருந்தது. "வாங்க மாமா!" என்று சொல்லிக் கொண்டு அடுப்படிப் பக்கம் போனது.
            "டீயெல்லாம் வாணாம்! இப்பதாம் அண்ணேம் வூட்டுல குடிச்சிட்டு வாரேம்." என்றது லாலு மாமா.
            "அப்ப கொஞ்சம் பாலாவது குடிங்க!" என்றது வெங்கு.
            "கொஞ்சமா போடு! ஒரு வாய்க்கு மேல வாணாம். பசங்கலாம் எங்கே?" என்றது லாலு மாமா.
            "எது வூடு தங்குது? அவேம் படிக்கிறேம்னு எந்நேரமும் திருவாரூலயே கெடக்கிறாம். வூட்டுல இருக்கிறப்பயும் தலக்கி வெச்சி தூங்குற அளவுக்கு பொத்தகத்த வெச்சி படிச்சிட்டு இருக்காம். இந்தக் குட்டிக்கு வூடு வூடா அலயறதுக்கே நேரம் செரியா இருக்கு!" என்றது வெங்கு.
            "வூடு கட்டுற யோகம் பாருங்க! ஒங்களுக்கு மனெ வாங்குற நேரம் வந்திருக்கு! ந்நல்ல எடமா வாரும் போதும் வாங்கிப் போட்டுப்புடணும்!" என்று லாலு மாமா சொன்னதும் சுப்பு வாத்தியாருக்கு அவரின் வருகையின் நோக்கம் புரிந்தது போலிருந்தது.
            "நம்ம கடத்தெரு மனெக்கட்டு இருக்குல்ல அது வித்துப்புடலாம்னு நெனக்கிறேம். தஞ்சாரூலேந்து வந்து பாத்துட்டு கெடக்க முடியல. வயலுகள அண்ணங்கிட்ட கொடுத்திட்டேம். இது மனெ. வெளில யாருகிட்டயும் விக்குறத விட நம்ம ஆட்கள்கிட்ட விக்குலாம்னு நெனக்கிறேம். அதாங் ஒங்களுக்குத் தேவப்பட்டா வாங்கிக்குங்க. கடத்தெருவுல இருக்குறதல கடெ கண்ணிய கட்டிப் போட்டா ந்நல்ல வருமானம் பாருங்க. இப்போலாம் கட்டடத்த கட்டிப் போட்டு வாடகையிலதாம் சம்பாதிக்கிறாங்க. நாளிக்கு முன்ன பின்ன இந்த மாரி எடம் அமையாது பாருங்க!" என்றது லாலு மாமா.
            "வூடு கட்டிட்டு ரொம்ப சிரமத் தசையில இருக்கேம். இப்போ வாங்குறதுக்கு நம்மகிட்ட தெம்பு இல்ல!" என்ற பதில் சுப்பு வாத்தியாரிடம் வந்தது.
            இப்படி ஒரு பதில் வரும் என்பதை எதிர்பார்த்திருந்ததைப் போல, "எடத்த வாங்கிக்குங்க! பணத்த தோதுபட்டப்ப மொல்லமா கொடுங்க!" என்றது லாலு மாமா.
            "ஏ! யப்பா! நம்மால அவ்வளோ காசிக்கி தெம்பில்ல! மனைய வாங்குனா கையோட பணத்த கொடுத்துடணும். நாம இருக்குற நெலமைக்கு அஞ்சாறு வருஷம் ஆனாலும் பெருங்காசிக்குத் தோதுபடாது!" என்று சுப்பு வாத்தியார் சொன்னதும் லாலு மாமாவுக்கு ஏமாற்றமாகப் போய் விட்டது.
            "வீயெம்மு பய இஞ்ஞதான வேலப் பாக்குறானாமே! அவனெ வாங்கிக்கச் சொல்லுங்களேம்! எழப்பு பட்டற போட எடம் தோதா இருக்கும். அப்படியே வாளுபட்டற போட்டாலும் கூட மரம் கிரம் வாங்கிப் போட எடம் ரொம்ப தோதா இருக்கும்! என்னா சொல்றீங்க?" என்றது லாலு மாமா.
            லாலு மாமா வீயெம் மாமாவைப் பற்றிச் சொல்ல சொல்ல சுப்பு வாத்தியாருக்கு வீட்டு வேலையோடு வீயெம் மாமா செய்து கொண்டிருந்த ஒவ்வொரு விசயமும் நினைவில் அல்லாடியது.
            குமரு மாமா வீட்டு வேலையை ஆரம்பித்து வைத்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் போன பிறகு, சுப்பு வாத்தியார் ஆசாரிக்காக அலையாய் அலைந்து நொந்து போயிருந்தது. அந்த நேரத்தில்தான் வீயெம் மாமா வீட்டு வேலையைக் கையில் எடுத்தது. அதுவரை மற்ற ஆசாரிகளிடம் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த வீயெம் மாமாவுக்கு தான் கையில் எடுத்து செய்த முதல் வேலை அதுதான். இப்படி முதல் வேலையை வீட்டு வேலையை கையில் எடுத்து செய்து அனுபவம் இல்லாதவர்களுக்குக் கொடுப்பதற்கு வீடு கட்டுபவர்கள் ரொம்பவே யோசிப்பார்கள். ஆனால் சுப்பு வாத்தியாருக்கு வேறு வழி தோதில்லாமல் போனதால் வீயெம் மாமாவை வைத்தே வேலையைச் செய்ய வேண்டியதாகி விட்டது.
            வீயெம் மாமாவுக்கு எப்போதும் ஒரு வேகமும், நிதானமில்லாத தன்மையும் உண்டு. படபடவென்று பேசி நடந்து கொண்டு சூழ்நிலையைப் பரபரபாக்கி விடும். அதே தன்மையோடுதான் அது வேலையைப் பார்த்தது. கம்பிப் போட வேண்டிய சன்னல்களையெல்லாம் துளைகளைப் போட்டு இறுக்கித் தள்ளியது. அப்படி இறுக்கித் தள்ளியதில் சட்டங்கள் தெறிப்பு கண்டன. சில சட்டங்களில் செதில்கள் பெயர்த்துக் கொண்டு வந்தன. பொதுவாக சன்னல்களில் கம்பிப் போடும் போது துளையின் வழியே கம்பியை விட்டால் இலகுவாய்ப் போகும் வகையில் ஓட்டை ஒரு நூல் கூடுதலாக இருக்குமாறு போட்டுதான் விடுவார்கள். கம்பியைத் தொள தொளவென்று உள்ளே விட்டு வெளியே எடுக்க வேண்டும் என்பது அந்த வேலையில் இருக்கும் கணக்கு. அப்படித் துளை போட்டு கம்பியைப் போட்டால்தான் கம்பியின் வெப்ப விரிவுகளைச் சமாளித்து சட்டம் தெறிக்காமல் இருக்கும். இதில் எந்தக் கணக்கையும் கருத்தில் கொள்ளாமல் கம்பியைத் துளைகளில் விட ஒரு ஸ்டூலைப் போட்டுக் கொண்டு அதன் மேலேறி கோடரியால் அடிக்கும் அளவிற்கு வீயெம் மாமா வேலை பார்த்தது. அது சென்ட்ரிங் அடித்த இடங்களில் முட்டுகள் விலகி தொங்கல்கள் விழுந்தன. அப்படி மேடும் பள்ளமாய் விழுந்த தொங்கல்களை பெரும்பூச்சாய் சிமெண்டை வைத்துப் பூசி கொத்தனார்கள் சரி செய்தார்கள்.
            வீட்டுக்கு லிண்டல் காங்கிரிட் போடுவதற்குள் சுப்பு வாத்தியாருக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. வீயெம் மாமா திரட்டிக் கொண்டு வந்திருந்த ஆட்கள் அந்த அளவில் இருந்தார்கள். காலையில் ஆரம்பித்த வேலை முடிவதற்கு இரவு எட்டு மணியாகி விட்டது. பொதுவாக இது போன்ற காங்கிரீட் வேலைகளை காலையில் ஆரம்பித்தால் அதிகபட்சம் மதியம் மூன்று மணிக்குள் முடித்து விடுவார்கள். பனிரெண்டு மணிக்குள் முடிந்த காங்கிரீட் வேலைகளும் உண்டு. முடித்து விட்டு ஒரு மணிக்கெல்லாம் கறிசோறு சாப்பிட்டு விட்டுக் கிளம்பி விடுவார்கள். கையால் காங்கிரீட்டைக் கலந்தாலும், மிஷின் வைத்து கலந்தாலும் ஆட்கள் அந்த அளவுக்குச் சுறுசுறுப்பாக நின்று கொண்டு காங்கிரீட் போடுவார்கள். அதற்கேற்றாற் போல் காங்கிரீட் போடும் ஆட்களின் செட்டைப் பிடிக்க வேண்டும். இல்லையென்றால் தலைவலி வீட்டைக் கட்டுபவருக்குதான். வேலை பார்ப்பதில் நொட்டாரம் சொல்லி நேரத்தை வளர்த்தி கலவைப் போடுவதில் அரை வேலையும், குறை வேலையுமாகப் பார்த்து விடுவார்கள் ஆட்கள்.
            சிங்காரவேல் கொத்தனாரின் மகன் மேஸ்திரியாக இருந்தாலும், காங்கிரீட் போடுவதற்கு ஆட்களின் செட்டைத் தனியாகத்தான் பிடித்து வேண்டும். மேஸ்திரியே இதில் ஆட்களின் செட்டைப் பிடித்து அவர்களோடு வந்து விடுவார்கள் என்றாலும், வீயெம் மாமாவின் குறுக்கீட்டால் அந்தப் பொறுப்பு அதனிடம் ஒப்படைக்கப்பட்டது. அது சொன்னது, "காங்கிரீட் வேல ரொம்ப முக்கியம்த்தாம். கட்டடமே அத நம்பித்தாம் நிக்குது. நல்ல செட்டு ஆளுகளாப் பாத்துக் கொண்டாரணும். நம்ம மேஸ்திரி இதுக்குச் சரிபட்டு வார மாட்டாம். நாம்ம செரியான செட்டா கொண்டு வாரேம்!" என்றது வீயெம் மாமா. இதில் சுப்பு வாத்தியாருக்கு ரொம்ப சந்தோஷம். குமரு மாமா வேலையை விட்டு விலகிக் கொண்டது இப்படிப் பொறுப்பான ஒருத்தர் கிடைப்பதற்காகத்தான் போலும் என்று சுப்பு வாத்தியார் அப்போது நினைத்துக் கொண்டது.
            நடந்தது வேறு. லிண்டல் காங்கிரீட் போட்ட போது கை கலவையாகத்தான் காங்கிரீட்டைப் போட்டார்கள். காங்கிரீட் கலவையைக் கலப்பதில் ஆட்களுக்குள் சண்டை வந்து விட்டது. அவர்கள் ஒவ்வொருவரும் தான் அதிக நேரம் நின்று கலவைக் கலப்பதாகவும், மற்றவர்கள் அப்படி நின்று கலவை கலப்பதில்லை என்று குறை சொல்லி வாக்குவாதம் செய்து அவ்வபோது வேலையை நிறுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களை சமாதானம் செய்து வேலையை முடிப்பதற்குள் அன்று போதும் போதும் என்றாகி விட்டது. வீயெம் மாமாவின் ஆட்களின் தெரிவு அந்த அளவுக்கு இருந்தது. வந்த ஆட்கள் எல்லாரும் வீயெம் மாமாவோடு சேர்ந்து சரக்கு அடிப்பவர்கள் என்பதும், கட்சிக் கூட்டங்களுக்கு உடம்பு வளையாமல் சென்று வந்தவர்கள் என்பதும் பின்புதான் தெரிய வந்தது. இதில் வேலை செய்து பழக்கப்பட்டவர்களுக்கே கலவையைப் போட்டு கலவைச் சட்டியைத் தூக்குவதில் ஒரு வேகமும், விரைவும் இருக்கும். அப்படிப் போடும் காங்கிரீட்தான் தரமாக இருக்கும். வீயெம் மாமா கொண்டு வந்த ஆட்கள் கலவை போட்ட வேகத்தையும், கலவைச் சட்டியைத் தூக்கிய அழகையும் நின்று பார்த்தால் வீட்டுக்கு காங்கிரீட் போடும் எண்ணமே இல்லாமல் போய் விடும். சிங்காரவேல் கொத்தனாரின் மகன் ஆறுமுகவேலுக்கு இதில் ரொம்பவே வருத்தமாகப் போய் விட்டது. அது சுப்பு வாத்தியாரிடம் நேராக சொல்லி விட்டது, "வாத்தியாரே! இப்படி ஆட்கள வெச்சிட்டு பின்னாடி வேல நல்லாயில்லன்னா நம்மள கொறபட்டுக்கக் கூடாது!" என்று.
            "ன்னா இப்படி அந்தப் பயல பத்தி கேட்டதுக்கு தெகச்சிப் போயி நிக்குறீங்களே?" என்று சுப்பு வாத்தியாரின் நினைவுகளின் அல்லாட்டத்தைக் கலைத்தது லாலு மாமா.
            "ஒண்ணுமில்லே! எதுக்கும் தம்பிய ஒரு வார்த்த கேட்டுக்கணும்!" என்றது சுப்பு வாத்தியார்.
            "தஞ்சாரூ நாளிக்குதாம் கிளம்புவேம். நாளிக்கு நாமளே வர்றேம். நீங்க வெவரம் ன்னான்னு கேட்டுச் சொல்லுங்க. நாமளே கேக்கலான்னாலும்... பொண்ணோட வெச்சிருந்த நிச்சயம் நின்னுப்போச்சுல்ல... அதாங் யோசிக்கிறேம். நீங்க எசவுபடுறாங்களா ன்னான்னு கேட்டுச் சொன்னீங்கன்னா அப்பொறம் நாமளே போயி பேசுறேம்!" என்றது லாலு மாமா.
            "வெலயப் பத்தி ஏதாச்சும் கேட்டாங்கன்னா... ன்னா சொல்லவே?" என்றார் சுப்பு வாத்தியார்.
            "எடம் மொத்தத்துக்கு நூத்தி இருபது குழி பாத்துக்குங்க. குழி அஞ்சாயிரம் கண்ண மூடிட்டுக் கொடுக்கலாம். எடம் அப்படிப்பட்ட எடம். கடத்தெருவுல வேற இருக்குதுல்ல. குழி அஞ்சாயிரம் மேனி பாத்தீங்கன்னா ஆறு லட்சம் வருது. அஞ்சு லட்சம் கொடுத்துட்டு எடுத்துக்குங்கன்னு சொல்லுங்க. நாலரைன்னாலும் பரவால்ல. ஒங்களுக்குத் தெரியாதா? பேசி முடிச்சிடுங்க. நம்ம அக்கா பயலுங்க. ந்நல்லா இருக்கட்டும். இல்லே அவேம் இருக்கான்னே குமரு. அவனுக்கே வேணாலும் எடுத்துக்கச் சொல்லுங்க."
            நல்லதோ, கெட்டதோ தன் மச்சான்களுக்கு நல்லது செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்ததாக சுப்பு வாத்தியாருக்கு மகிழ்ச்சி. அவருக்கு அந்நேரத்தில் குமரு மாமாவின் மேலிருந்த மனத்தாங்கல்கள் எல்லாம் இல்லாமல் போனது. லாலு மாமாவின் மேலிருந்த மனத்தாங்கல்களும் இல்லாமல் போனது. நல்லது கெட்டது எல்லாம் கலந்தவன்தானே மனுஷன் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் இப்படி வீடு தேடி வந்து இடத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஏன் லாலு மாமா கேட்க வேண்டும்? அதுவும் கடைத்தெருவில் முக்கியமான இடத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கேட்க வேண்டும்? என்று நினைத்து சுப்பு வாத்தியாரின் மனம் போன போக்குகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அது லாலு மாமாவிடம், "நீங்க அலய வாணாம் பாவம். ராத்திரிக்குள்ள நாமளே அஞ்ஞ கேட்டுட்டு முருகு அண்ணம் வூட்டுக்கு வந்திடறேம்!" என்றது.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...