24 Jun 2019

சூளைமேட்டு சுட்ட வார்த்தைகள்



செய்யு - 125
            திக்கு தெரியாத காங்கிரீட் காட்டில் நிற்பது போல இருந்து விகடுவுக்கு. சற்று நேரத்துக்கு எல்லாம் கூட்ட நெரிசல் அதிகமாகத் தொடங்கியது. லெனின் முகவரி இருக்கும் போது நேராகவே போய் விட்டால் என்ன என்று தோன்றியது.
            எந்த வழியில் போக வேண்டும்? எந்த பஸ்ஸில் போக வேண்டும்? என்ற குழப்பம். அங்கிருந்த ஒரு ஆட்டோ டிரைவரை விசாரித்து, "ஏறி உட்காரு! இட்டாந்து போறேன். முந்நூறு ரூவா ஆவும்!" என்றதும் தான் வைத்திருந்த பணத்தை மனக்கண்ணுக்குள் கொண்டு பார்த்தான் விகடு. இருநூறு சொச்சம்தான் இருந்தது. அதையும் கொடுத்து விட்டு என்ன செய்வது? என்ற அச்சத்துடன் இவன் விலகி நடந்தால் "இந்தாரு! அம்பது ரூவா கொறச்சிட்டு ஏறி உட்காருப்பா! இட்டாந்து போறேன்!" என்கிறது ஆட்டோக்காரக் குரல். ஏதோ தப்பு செய்து மாட்டிக் கொண்டவன் போல இவன் வேக வேகமாக பேருந்துகள் நிற்கும் இடத்தை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டான்.
            சுற்றிலும் நிற்பவர்களாகப் பார்த்து அங்கே இங்கே முகவரியை வைத்து விசாரித்தால் வடபழனி வழியாக போகும் பஸ்ஸில் ஏறி, ராம் தியேட்டர் ஸ்டாப்பிங்கில் இறங்கி எதிரே இருக்கும் பாதையில் நடந்து போய், பெரியார் பாதையைப் பிடிச்சுக்கோ, பெரியார் பாதைக்குப் போய் அங்கிருந்து அட்ரஸைப் பிடிச்சுக்கோ என்றார்கள். அப்படியே இவன் பஸ்ஸைப் பிடித்து ராம் தியேட்டர் ஸ்டாப்பிங்கில் இறங்கினால் எதிரே ஒரு தூங்குமூஞ்சி மரம் பப்பரக்கா என்று பரப்பிக் கொண்டு நிற்கிறது. கையில் ஒரு கிங் சைஸ் நோட்டு, பையில் ஒரு பேனா கொஞ்சம் பணத்தோடு போகும் இவனைப் பார்த்த அது கொட்டாவி விடுவதைப் போல இருக்கிறது.
            அட்ரஸையும், லெனின் பெயரையும் வைத்து விசாரிக்கிறான். கங்கையம்மன் கோயில் தெரு வழியாக நுழைந்து நடையோ நடை என்று நடந்தால் ஒரு ரண்டு கிலோ மீட்டர் ஆயிருக்கும். பிறகு ஒரு திருப்பம் திரும்பினால் ஒரு காம்பெளண்ட்டும் கேட்டு, உள்ளே ஏகப்பட்ட வீடுகள் பொட்டிக் கணக்காய். ஏகப்பட்ட சின்ன சின்ன வீடுகள். வீடுகள் என்றால் ரூம் வீடுகள். அப்படித்தான் சொல்லலாம். எல்லாம் ரூம் அளவுக்குத்தான். ஒரு சில திறந்து கிடக்கும் வீடுகளைப் பார்த்தால் அப்படித்தான் அதற்குள் வீட்டுக்கு உண்டான எல்லா தோற்றங்களும் தெரியுது. அத்துடன் எல்லாம் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு போட்ட வீடுகள்.
            பெண்கள் அங்கும் இங்கும் போவதுமாக, வேலை பார்த்துக் கொண்டிருப்பதுமாக இருக்கின்றனர். இவன் லெனின் பெயரைச் சொல்லி விசாரித்தால், ஒரு பெண் இவனை கையைப் பிடித்துக் கொண்டு அழைத்துக் கொண்டு போய் ஒரு சந்துக்குள் நுழைகிறது. இவனுக்கு கூச்சம்னா கூச்சம் தாங்க முடியாத கூச்சம். கையை உதறிக் கொள்ளலாமா என்ற தோன்றுகிறது. அந்தப் பெண்ணோ உடும்பு பிடியாக இவன் கையைப் பிடித்திருக்கிறது. அந்தப் பெண் மேலுக்கு ஆம்பிளைப் பிள்ளைகள் போடுகிற மாதிரி ஒரு சட்டையும், பாவாடையும் கட்டியிருக்கிறது.
            பொழுது விடிந்து நெடுநேரம் ஆகியும் அந்தச் சந்துக்குள் ஒரு இருள் பரவியிருந்தது. ஒரு வீட்டின் முன் நிறுத்தி, "இதாம்பா லெனின் இருக்குற எடம் என்று சொல்லி விட்டு அந்தப் பெண் சென்று விட்டது.
            இவன் கதவைத் தட்டினால் அது என்னவோ செவுட்டுக் கதவு மாதிரி அப்படியே மூடிக் கெடக்குது. மறுபடியும் தட்டினாலும் மசிய மாட்டேங்குது. ம்ஹூம்! கதவு திறக்குற பாடா தெரியல. ரொம்ப நேரமா தட்டிப் பார்த்து அலுத்தப் பிறகு "லெனின் ஐயா! நான் ஒங்க தம்பியோட நண்பன். திருவாரூர்லேந்து வந்திருக்கிறேன்!" என்று தட்டினால் ஏதோ பாஷை புரியாத மனுஷன் மாதிரியே அந்தக் கதவு மூடன மாதிரியே இருக்குது. எந்த அதிர்வுக்கும், சத்தத்துக்கும், பாஷைக்கும் அந்தக் கதவு திறக்கப்படுவதாகத் தெரியவில்லை. இதுக்கு மேல மந்திரம் போட்டத்தான் உண்டுன்னு அலுத்துப் போய் எதிரே இருந்த வீட்டின் சுவரில் சாய்ந்தபடி அப்படியே ஒரு நாயைப் போலக் குந்தி விட்டான்.
            ஒரு பத்து நிமிடம் ஆயிருக்கும். இவனை அழைத்துக் கொண்டு வந்து விட்டப் பெண் அந்தப் பக்கமாய் வந்தது. இவனைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சுபுட்டு, "ன்னா! இன்னும் உள்ளாற போவலியா? கதவத் தட்டுனியா இல்லியா? நீ தட்டுனாலும் திறக்காதுங்க பேமாலிங்க. இப்படியாக்க வா!" என்று சொல்லிக் கொண்டே, "அடச்சீ! கதவ தொறக்குறீங்களா இல்லியா! ஒங்க ஊர்லேர்ந்து ஒரு தடியன் ஒங்கள தேடிட்டு வந்திருக்கு. எவ்வளவு நேரம் அப்பாலயே நிக்க வெச்சிருப்பீங்க! கதவத் தொறந்து உள்ள இட்டுக்குங்க!" என்று சத்தமிட்டதும் கதவு லேசாகத் திறந்தது. அந்தப் பெண் இவன் கையை மறுபடியும் பிடித்து உள்ளே தள்ளியது. இவனுக்கு மறுபடியும் கூச்சமாகப் போய் விட்டது. இவன் உள்ளே தள்ளப்பட்டதும் இவனை அப்படியே விழுங்கிக்கிற மாதிரி ரூம் உடனடியாக சாத்தப்பட்டது.
            உள்ளே நுழைந்தால் மேலே பேன் ஒன்று கர்ணகொடூரமான சத்தத்துடன் சுத்திக் கொண்டிருந்தது. இவ்ளோ சத்ததுக்கு வெளியிலேந்து எவன் சத்தம் போட்டாலும் காதுல விழாதுதான் என்று நினைத்துக் கொண்டான் விகடு. புழுக்கம் தாங்கவில்லை. அடேங்கப்பா இந்தப் புழுக்கதிலயும் எப்படிதாம் நாலஞ்சு பேரு போர்வையைப் போத்திட்டு படுத்திருக்கானுங்களோ! அப்படி அங்கே ஐந்தாறு பேருக்கு மேல் கண்களை விழித்துக் கொண்டு ஒருத்தர் மேல் ஒருத்தர் படுத்துக் கொண்டிருக்கிறாங்க. இவன் பேச வாயெடுத்தான். ஒன்றும் பேசாதே என்பது போல, "ஸ்ஸ்..." என்கிறார்கள். இவன் பேசாமல் உட்கார்ந்தால், "உட்காரதீங்க பாஸூ! படுங்க!" என்று மெல்லிய குரலில் ஒரு ஆளு பேச, எங்கே படுப்பது என்று இவன் யோசித்துக் கொண்டிருக்க, அப்படியே அவன் மார்பைப் பிடித்து படுக்கும் வாக்கில் கீழே தள்ளுராறு அவர். எல்லாரும் அமைதியாகப் படுத்திருக்காங்க. அதென்னப்பா இது! ஊரு பேரு தெரியாத ஒருத்தன யாரு என்னான்னு தெரியாமலே இப்படிக் கூப்பிட்டு படுக்கப் போட்டுக்கானுங்களேன்ன இந்த விகடு பயலுக்கு அதிசயமா இருக்கு. கொஞ்சம் அதிர்ச்சியுமாகவும் இருக்கும். ஒரு அரைமணி நேரம் ஆயிருக்கும். கதவை நாயடி, பேயடி அடிக்கும் சத்தம் கேட்குது.
            "டேய் கதவத் தொறங்குடா? ரெண்டு பாக்கி ரொம்ப ஆயிப் போச்சி. ஒண்ணு ரெண்ட கொடு. இல்லீயா காலிப் பண்ணு. இருந்துட்டு ரப்சர் பண்ணிட்டு இருக்காத. நான் வேற மாரி மூவ் பண்ற மாரி ஆயிடும். இன்னும் ரண்டு நாளு பாப்பேன் பாத்துக்க. ஒக்கால எடம் போனாலும் பரவால்லன்னு ரூமோட பயர் பண்ணி எரிச்சிப்புடுவேன் பாத்துக்கோ." என்ற சத்தம் கேட்டது. சத்தம் அத்தோட நின்னு போயிடல. கெட்ட கெட்ட சென்னை பாஷையெல்லாம் சென்னை மாநகரத்து மழைக்காலத்து வெள்ளம் மாதிரி அடிச்சிட்டு வருது. என்னமோ கோயில்ல பூசாரி மந்திரம் ஓதுறத கேக்குறத போல அதைக் கேட்டுட்டு எல்லாரும் சொகமா படுத்திருக்காங்களே தவிர எவரும் எழுந்து போய் கதவைத் திறக்கல. வெளியிலிருந்த வரும் சத்தத்தை என்னமோ பாட்டைக் கேட்டு ரசிக்குற மாதிரி ரசித்தபடி எல்லாரும் படுத்திருக்காங்க.
            கடைசியா, "ஏய் பொறம்போக்கு நாய்களா... எவள உள்ள இழுத்துப் போட்டுட்டுடா படுத்துக் கெடக்கீங்க! போலீஸ்ல போயி பிராத்தலு கேஸூ கொடுக்குறேன்னா இல்லியா பாரு" என்று ஆரம்பித்து சசிக்க முடியாத அளவுக்கு சென்னை பாஷையின் பார்ட்டு டூ படம் எடுக்குற மாதிரி அடுத்த கட்ட சகல கெட்ட வார்த்தைகளிலும் திட்டி முடித்து விட்டுப் பேசுனவர் கிளம்பியிருக்க வேண்டும். இந்த ஏரியாவுக்குப் பேரு சரியாத்தாம் வெச்சிருக்காங்க சூளைமேடுன்னு. அப்படியே சூளையில போட்டு சுடுற கணக்கால்ல வார்த்தையால சுட்டுத்  தள்ளுறாங்க.
            அதுக்கு அப்புறம் அடுத்த அரை மணி நேரத்துக்குப் பின் ரூமைத் திறந்து கொண்டு தொப்பு தொப்பு என்று வெளியே போனவங்கதான் அடுத்த பத்து நிமிடத்திற்குள் பல்ல துலக்கி, குளிச்சு முடிச்சு விட்டு வெளியே கிளம்ப தயாராகிறாங்க. இவனையும் எதுவும் சொல்லாம் கிளப்பிக் கொண்டு போறாங்க. அந்த இடத்திலிருந்து ஒரு திருப்பம் திரும்பி இருந்த தீவார் ஹோட்டலில் உட்கார்ந்து ஆளுக்கு ஒரு டீ சொல்லி குடிச்சிட்டு அவங்கவங்களம் கிளம்புறாங்க. இந்த சென்னையில யாரும் யாரையும் கண்டுக்க மாட்டாங்றது சரிதாம். அதுக்காக புதுசா வந்த ஒருத்தன யாரு என்னான்னு கூடவா விசாரிக்கக் கூடாதுன்னு நெனச்சிகிட்டு உட்காந்திருக்கிறான் விகடு. இவனுக்கு எதிரா ஒல்லியாக நெட்டையாக இருந்த ஒருத்தர் மட்டும் கிளம்பாம உக்கார்ந்திருக்காரு!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...