செய்யு - 89
கொஞ்ச நாள் சங்கரசாமியின் ஆவி ஈஸ்வரியைப்
பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. அந்த நாட்களில் ஈஸ்வரி தலைவிரிக் கோலமாக அவ்வபோது
ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது. குளிப்பதையோ, பல் துலக்குவதையோ முற்றிலுமாக
புறக்கணித்திருந்தது. லாலு மாமாவின் வீட்டில் ஓயாத சத்தமாய் இருந்தது.
சாமியாத்தா சில முறைகள் போய் வேப்பிலையும்,
விபூதியும் அடித்து விட்டு வந்தது. நிலைமை கொஞ்சம் விபரீதமாகத்தான் இருந்தது. சில
நாட்கள் உடம்பிலிருந்த ஆடைகளையெல்லாம் கழற்றிப் போட்டு விட்டு ஈஸ்வரி அட்டகாசம் செய்து
கொண்டிருந்தது.
அப்பா தன்னுடைய தாழ்மையான அபிப்ராயமாக
லாலு மாமாவிடம் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம் என்றது. லாலு மாமாவுக்குக்
கோபம் வந்தது விட்டது. "எம்மட மவளுக்கென்ன பயித்தியம் பிடிச்சிட்டு நினச்சியளா
பயித்தியக்கார டாக்டருகிட்ட அழச்சிட்டுப் போறதுக்கு? அவேம் ஒடம்புக்கு ஆவிப் பிடிச்சிருக்கு.
அத்தே எப்படி விரட்டணும்னு நமக்குத் தெரியும். எத்தோ வந்தோமோ, பாத்தோமான்னு போயிட்டு
இருக்கணும். யாரும் அநாவசியமா வார்த்தைய வுட்டுட வாணாம். மரியாதக் கெட்டுப்புடும் ஆமா!"
என்று சத்தம் போட்டது. அப்பாவுக்கு ஏன்டா சொன்னோம் என்று நிலைமை ஆகி விட்டது.
வேணி அத்தைக்கும் அப்பாவின் யோசனைதான்
சரியாகப் பட்டது. "செய்யுவோட அப்பா சொல்றதுதாம் நமக்கும் சரியாப் படுது! தஞ்சாரூ
அழச்சிட்டுப் போலாம்!" என்றது வேணி அத்தை. "அட ச்சும்மா கெடடி முண்டச்சி.
என்னா பண்றது, எப்படிப் பண்றதுங்றதல்லாம் நமக்குத் தெரியும். வாயையும் சூத்தையும் பொத்திட்டு
பேசாம இருங்க. மனுஷன கொலகாரன மாத்திடாதீய!" லாலு மாமா இப்படி வேணி அத்தையையும்
சத்தம் போட்டது.
லாலு மாமா இந்தப் பிரச்சனை குறித்து தீவிரமாக
யோசித்து ஒரு வார காலம் பிரேமானந்தா என்ற பெயரில் அப்போது பிரசித்திப் பெற்றிருந்த
சாமியார் ஒருவரின் ஆசிரமத்தில் ஈஸ்வரியை அழைத்துக் கொண்டு போய் வைத்துத் தங்கி விட்டு
வந்தது. லாலு மாமா தங்கி விட்ட வந்த சில மாதங்களில் பிரேமானந்தா அரெஸ்ட் ஆனதாகப் பத்திரிகைகளில்
செய்தி வந்த வண்ணம் இருந்தன. லாலு மாமா பத்திரிகைகளைக் குறை சொல்லி, பத்திரிகைகளைத்
திட்டித் தீர்த்தது. "இவனுங்க வெளம்பரத்துக்காக எழுதுறானுவோ. இப்படி எழுதிட்டு
வார பத்திரிகைகளை சாமி சபிச்சிடும். அப்பதாம் அவிய்ங்க அடங்குவாங்க. நாங்க போயி ஒரு
வாரம் தங்கில்லியா. ன்னம்மா வேல காட்டுனாரு. நாம்ம அவர்ர பாக்கப் போயிருக்கிறேம்ங்றதை
யாருஞ் சொல்லாமலயே அவரால்ல கண்டுபிடிச்சு கூப்புடுறாரு. நம்ம பெரச்சனைய புட்டு புட்டு
வெக்கிறாரு. வாயால என்னென்னமோ எடுக்குறாரு. போலீஸூ அரஸ்ட் பண்ணாலும் அவருகிட்ட கேட்டுட்டுதாம்
பண்ணிருக்கணும். கோர்ட்டுல தீர்ப்பு பண்ணலாம் அவருகிட்ட கேட்டுட்டுதாம் பண்ணணும்.
அவரு அவ்ளோ பவர்புல்லு!" என்று வியாக்கியானம் பண்ணியது லாலு மாமா.
பெருஆவுடையார் கோயில், நாகூர் தர்கா,
வேளாங்கண்ணி மாதா கோயில் என்று அலைந்து கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஈஸ்வரி ஒரு நிலைக்கு
வந்தது. புலம்பல்கள் கொஞ்சம் குறைந்திருந்தது. தான் பிரைவேட்டாகப் படித்து ப்ளஸ்டூ
பரீட்சை எழுதி பாஸ் பண்ணிக் காலேஜிக்குப் போய் படிக்கப் போக வேண்டும் என்றது. லாலு
மாமாவுக்கு சந்தோஷம் கரைபுரண்டு ஓடியது. "எம் மவ்வோ வுட்ட எடத்துலேந்து புடிப்பா
பாருங்க! எல்லாஞ் சாமியோட கடாட்சம்!" என்றது.
ஈஸ்வரி பிரைவேட்டாக ப்ளஸ்டூ பரீட்சை எழுதிய
ஒவ்வொரு முறையும் அட்டெம்ப்ட் மேல் அட்டெம்ப்டாக அடித்தது. தான் படித்துக் கொண்டு
போகும் கேள்விகளை பரீட்சையில் ஒரு போதும் கேட்பதில்லை என்று குறைபட்டுக் கொண்டது.
ஒருமுறை அப்பா லாலு மாமா வீட்டுக்குச் சென்ற போது ரகசியமாக அப்பாவிடம், "செய்யுப்பா!
ப்ளஸ்டூ கொஸ்சின் பேப்பர பரீட்சிக்கு முன்னாடி ஒங்களால வாங்கியார முடியுமா? காசி எவ்ளோ
செலவானலும் பரவாயில்ல. பரீட்ச வர வர கஷ்டமா போயிட்டிருக்குது. பாஸ் பண்ணிட்டேன்னா
காலேஜி போயிடுவேம்!" என்றது.
"அப்பாட்ட கேட்டுப் பாத்தியா?"
என்றது அப்பா சிரிப்பை அடக்க முடியாமல்.
"கேட்டேம். ந்நல்ல மைபோட்டு பாக்குறா
சாமியாரா புடிச்சி வாங்கணுமாம்! ஒங்கிட்டயும் சொன்னா ஏத்தோ ஒரு வழியுல கெடச்சா நமக்குதான
லாபம்! அத்தாங் எதுக்குங் இருக்கட்டுன்னு ஒண்ணுக்கு ரண்டு பேரா சொல்லியிருக்கேம்!"
என்றது ஈஸ்வரி அப்பாவியாக.
ஈஸ்வரி இப்படியும் அப்படியுமாக தன் முயற்சியைக்
கைவிடாமல் நான்கைந்து வருடங்களில் ப்ளஸ்டூவை ஒருவழியாக பாஸ் பண்ணி முடித்தது. ஈஸ்வரி
பாஸானது சாமியார் போட்ட மையாலா அல்லது படித்து எழுதிய அதன் கையாலா என்பது அது மட்டுமே
அறிந்த ரகசியமாக இருந்தது.
ஈஸ்வரி பாஸானதும் லாலு மாமா ஈஸ்வரியைக்
கல்லூரியில் சேர்க்க தயாராக இருந்தது. நிறைய அட்டெம்பட்டுகள் அடித்து பாஸானதால் அவ்வளவு
அட்டைகளுடன் காலேஜில் போய் சேர ஈஸ்வரிக்கு வெட்கமாகப் போய் விட்டது. அதனால் ஈஸ்வரி,
"காலேஜூலாம் வாணாம்ப்பா. படிக்கத் தெரிஞ்சவ்ங்க காலேஜூலாம் போயி படிக்க வாணாம்ப்பா.
வூட்லர்ந்தே போஸ்டல்ல படிக்கலாம்பா! நாம்ம பிளஸ்டூவயே தனியா படிச்சுப் பாஸாயிருக்கம்பா!
படிக்குறதுல அதாம்ப்பா கஷ்டம். டிகிரிலாம் ரொம்ப ஈஸியா அடிச்சிடலாம். காசியும் மிச்சம்!"
என்றது லாலு மாமாவிடம்.
இப்படியாக அஞ்சல் வழியில் ஆரம்பமானது ஈஸ்வரியின்
டிகிரி படிப்பு. ஈஸ்வரி தனது டிகிரி படிப்பை முடித்ததா? முடிக்கவில்லையா? என்பது தெரியவில்லை.
தன்னைக் குறித்த ஒவ்வொரு தகவலையும் உடனுக்குடன் வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பும்
ஈஸ்வரி ஏனோ அதன் விவரம் குறித்து எதுவும் பேசவில்லை. எதையும் பெரிதாகப் பீற்றிக் கொள்ளும்
லாலு மாமா கூட அந்த விசயம் குறித்து எதுவும் பேசாமலே இருந்து விட்டது.
இப்படியாக நான்கைந்து ஆண்டுகள் கடந்த நிலையில்
ஈஸ்வரிக்காக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தது லாலு மாமா. ஊரு உலகத்தில் ஒரு தரகர் பாக்கியில்லாமல்
எல்லாரின் கையிலும் ஈஸ்வரியின் ஜாதகத்தைத் திணித்தது. மாப்பிள்ளை கட்டாயம் கவர்ன்மென்ட்
வேலையில் இருக்க வேண்டும் என்ற கண்டிஷனையும் கறாராக சொல்லியிருந்தது லாலு மாமா.
லாலு மாமாவால் தரகர்களை மட்டும் நம்பிக்
கொண்டு இருக்க முடியவில்லை. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லாரிடமும் பிட் நோட்டீஸை
விநியோகிப்பது போல ஈஸ்வரியின் ஜாதகத்தை விநியோகித்துக் கொண்டிருந்தது. அத்தோடும்
விட்டு விட முடியாமல் லாலு மாமா பத்திரிகைகளிலும் மணமகன் தேவைப் பகுதிக்கு போஸ்ட்
கார்டுகளை வாங்கி வைத்துக் கொண்டு எழுதிப் போட்டுக் கொண்டிருந்தது. அவ்வபோது பல
போஸ்ட்கார்டுகள் லாலு மாமாவுக்கும் வந்து கொண்டிருந்தன. "பாத்தீங்களய்யா! பாஞ்சு
காசி கார்டு பண்ற வேலய்ய!" என்று லாலு மாமா பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தது.
அப்பாவுக்கு அந்த நேரத்தில் குமரு மாமாவுக்கு
ஈஸ்வரியைக் கேட்டுப் பார்க்கலாமா என்று தோன்றியது. லாலு மாமாவிடம் கேட்பதற்கு முன்
வேணி அத்தையிடம் கலந்து கொண்டுதான் அப்பா கேட்டது. வேணி அத்தைக்கு அதில் பரம சந்தோஷம்.
ஆனால் லாலு மாமாவிடம் கலந்து கொண்ட போதுதான், "கட்ட அடிக்குறவனுக்லாம் எம்ம
பொண்ண கொடுக்க முடியாது. கட்ட அடிக்கிறவேம்க்கு கட்ட அடிக்குற குடும்பத்துல பாத்து
பொண்ணு எடுத்துக்குங்க. வேணுன்னா நாமளும் பாத்துச் சொல்றேம்!" என்றது லாலு மாமா.
அப்பாவுக்கு என்னவோ போலாகி விட்டது. இப்படிக் கேட்டு அதனால், "ரொம்ப அசிங்கப்பட்டு
போய்ட்டேம்!" என்று அப்பா ரொம்ப நாளைக்கு இது குறித்துப் பேசிக் கொண்டிருந்தது.
*****
No comments:
Post a Comment