20 May 2019

தஞ்சாவூர்க் கவிராயரின் தெருவென்று எதனைச் சொல்வீர்? - நூலறிமுகம்



நினைவுகள் சுமக்கும் புத்தகம்
            தஞ்சாவூர்க் கவிராயரின் 'தெருவென்று எதனைச் சொல்வீர்?' கட்டுரைத் தொகுப்பு தனக்குள் ஒரு சிறுகதைத் தொகுப்பாக, ஒரு நான்லீனியர் குறுநாவலாக, கேள்விகளின் தொகுப்பாக, ஒரு அனுபவத் தொடராக, ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்புத் தொகுப்பாக என்று பன்முகமாகக் காட்சியளிக்கிறது.
            தஞ்சாவூர்க் கவிராயர் சொல்வது போல இத்தொகுப்பின் ஒரு சில கட்டுரைகளில் பத்திரிகைகளின் வெளியீட்டுக்குத் தகுந்தாற் போல சில மேஜிக்குகளைச் செய்திருந்தாலும் கட்டுரைகளின் நடையில் இயல்பான உண்மைத் தன்மைக்கு எந்தப் பாதகமும் இல்லை.
            நாடிழந்த ஒரு அகதியின் வேதனையைப் போல, தெருவிழந்த ஒரு எழுத்தாளரின் ஏக்கப் பெருமூச்சு இக்கட்டுரைத் தொகுப்பு எங்கும் நிறைந்து கிடக்கிறது. தெருவை இழந்து விட்ட நகர்ப்புறங்கள், திண்ணையை இழந்து விட்ட வீடுகள், நீராவி எஞ்சினை இழந்து விட்ட தண்டவாளங்கள், எண்ணெயை இழந்து விட்ட மின்விளக்குகள் என்று இழப்புகளின் பின்னிருக்கும் ஏக்கப் பெருமூச்சுகளாக கட்டுரைத் தொகுப்பின் ஆரம்ப கட்டுரைகள் நீள்கின்றன.
            ஒரு வழக்கமான கட்டுரைத் தொகுப்பு என்கிற தோற்றத்தைத் தஞ்சை பிரகாஷ் குறித்தும், வ.அய்.சுப்பிரமணியம் குறித்தும் தகவல்களைத் தரும் கட்டுரைகள் தகர்க்கின்றன. அக்கட்டுரைகளில் வெளியுலகம் அறியாத எவ்வளவோ விசயங்களை நாட்குறிப்பின் நடையில் பகிர்கிறார் தஞ்சாவூர்க் கவிராயர்.
            இன்றைய காலக்கட்டத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னே ஒரு முக்கிய அரசியல் புள்ளியைத் துணைவேந்தர்கள் சந்திக்கத் தவமாய்த் தவமிருந்ததையும், அன்றைய காலக்கட்டத்தில் மிக வலிமைமிக்க முதல்வராய்க் கருதப்பட்ட எம்.ஜி.ஆருக்காகக் காத்திருந்து தன் பணி நேரத்தை வீணாக்க விரும்பாமல் வெளியேறிய வ.அய்.சுப்பிரமணியத்தையும் நினைக்கையில் ஆச்சரியம் மேலிடுகிறது. அதனாலேயே தன் துணைவேந்தர் பதவியை ராஜிநாமா செய்யும் நிலைக்கு வ.அய்.சு. ஆளாவது வெளியுலகம் அறியாதது.
            தஞ்சைப் பிரகாஷின் யுவர் மெஸ் பற்றி கவிராயர் எழுதுவதைப் படிக்கும் நமக்கும் அந்த மெஸ்ஸில் அமர்ந்து சுவைப்பது போலவும், இலக்கிய விவாதங்களை கண்ணாரக் கண்டு, காதாரக் கேட்டு ரசிப்பது போலவும் ஒரு பிரேமை தட்டுகிறது. இன்னும் சற்று நேரம் அங்கேயே நிற்கும் போது இருளாண்டியும், சக்கரவர்த்தியும் நேரில் வந்து நம்முடைய வாசிப்பு அனுபவத்தையும், எழுத்து அனுபவத்தையும் நேரடியாக வந்து கறாராக விமர்சிப்பது போல ஒரு மாயத்தோற்றம் உண்டாகிறது.
            காந்தி பற்றிய முதல் டாக்குமெண்ட்ரிப் படம் எடுத்த ஏ.கே. செட்டியார் நடத்திய 'குமரி மலர்'  பத்திரிகைக்கு எண்ணிச் சரியாக ஐநூறு சந்தாரர்கள்தான். அதைக் கூட்ட முயற்சிக்கவில்லை ஏ.கே. செட்டியார். ஒருவர் தன்னைப் புதிய சந்தாதாரராகச் சேர்க்கச் சொல்லி ஏ.கே. செட்டியாருக்குக் கடிதம் எழுதுகிறார். பதிலுக்கு செட்டியார் அவர் இருக்கும் ஊரின் பக்கத்தில் 'குமரி மலர்' வாங்குபவரைக் குறிப்பிட்டு அவரிடம் இரவல் பெற்று வாசித்துக் கொள்ளுமாறு எழுதுகிறார். பத்திரிகை நடத்தும் யாருக்கு இப்படி ஓர் அசாத்திய அபூர்வ துணிச்சல் வரும்? அந்த அசாத்தியமும், அபூர்வமும் ஏ.கே. செட்டியாரிடம் இருந்தது. அத்துடன் தமிழின் முதல் பயணக்கதை எழுத்தாளர் ஏ.கே.செட்டியார்தான். இப்படி அபூர்வத் தகவல்களும் கட்டுரைத் தொகுப்பு முழுவதும் நிறைந்து கிடக்கின்றன.
            நடிகை பானுமதியின் சுயசரிதையை எழுதிய அனுபவத்தைப் பற்றியும், ஓர் எழுத்தாளராக இருந்து ஓர் எழுத்தாளராகவே சின்னத்திரை நாடகத்தில் நடிப்பதில் நேர்ந்த அனுபவத்தைப் பற்றியும் கவிராயர் எழுதுகிறார். நடிகை பானுமதி நகைச்சுவையாக தெலுங்கில் எழுதக் கூடிய பிரசித்திப் பெற்ற எழுத்தாளர் என்ற தகவலும், அவர் ஒரு தேர்ந்த கைரேகை மற்றும் ஜாதகம் பார்க்கக் கூடிய நிபுணர் என்ற தகவலும் அந்தக் கட்டுரைகளில் ஒரு சிறுகதையின் மாயஜாலத்தோடு பொதிந்து கிடக்கின்றன.
            கவிராயர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வ.அய்.சு.வின் தனிச்செயலாளராக இருந்த போது பல்கலைக்கழகத்தில் படிக்க வந்த வெளிநாட்டவர்கள் பற்றி இத்தொகுப்பில் பதிவு செய்துள்ளார். பதிவுகள் ஒவ்வொன்றும் காலப் பொக்கிஷம். செக் நாட்டிலிருந்து வந்த பொர்மானெக் ஜென் தன்மையோடு தமிழ்நாட்டைக் கொண்டாடுகிறார். எங்கு சென்றாலும் சைக்கிளிலேயே செல்கிறார். சைக்கிளிலேயே செல்கிறார் என்றால் திபெத்தின் சீன எல்லை வரை சென்று இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி விசாரிக்கும் வரை போய் விடுகிறார். வ.அய்.சு. தலையிட்டு அது ஆய்வின் நிமித்தம் மேற்கொள்ளப்பட்ட பயணம் என்று திசை திருப்பி பெர்மானெக்கைக் காப்பாற்றுகிறார். இது ஒன்றா! மற்றொன்று...
            சிலப்பதிகாரக் கண்ணகி பூம்புகாரிலிருந்து மதுரை வரைச் சென்று அங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலை வரை சென்றப் பாதையை நடந்தே கடக்கிறார் எரிக்மில்லர் என்ற அமெரிக்கர். அவர் நடக்கும் வழியில் எல்லாம் சிலப்பதிகாரம் குறித்து வழங்கப்படும் அத்தனை வாய்மொழி மரபுகளையும் சேகரிக்கிறார். 'கண்ணகி நடந்தப் பாதையில்...' என்ற தலைப்பில் அவர் தன் ஆய்வை முன் வைக்கும் போது தஞ்சைப் பல்கலைக்கழகம் ஆழமில்லாத விவரத் தொகுப்பு என்று நிராகரிக்கிறது. அந்த நிராகரிப்பின் வலி வாசகர்களுக்குத் தெரியாத வண்ணம் எரிக்மில்லர் ஓர் அற்புதமான கதை சொல்லி என்பதைச் சொல்லி தஞ்சைப் பிரகாஷின் யுவர் மெஸ்ஸில் அவருக்குக் கிடைத்த அங்கீகாரத்தைக் கவிராயர் பதிவு செய்கிறார். இது மற்றொன்றா! இன்னொன்று...
            யார் என்று தெரியாமலே தஞ்சைப் பல்கலைக்கழகத்துக்கு வந்த தாய்லாந்து இளவரசரின் கவிதைத் தொகுப்பினை தமிழில் மொழிபெயர்த்த அனுபவத்தைக் கவிராயர் பதிவு செய்கிறார். அதில் மகிழ்ந்து போன தாய்லாந்து இளவரசர் கவிராயரை ராஜமரியாதையோடு தாய்லாந்துக்கு வரப் பணிக்கிறார். முடிவு வேறு விதமாகப் போய் விடுகிறது. கவிராயர் போக முடியாத சூழ்நிலையில் வெறொருவர் தாய்லாந்து செல்கிறார். இது இன்னொன்றா! வெறொன்று...
            தன் தாய் தந்ததன் ஞாபகார்த்தமாக வைத்திருக்கும் குடையை திருவனந்தபுர அருங்காட்சியத்தில் மறந்து வைத்து விட்டு தஞ்சாவூர் வந்து விடுகிறார் ஜப்பானிய பெண் ஒருவர். தன் தாயின் ஞாபகத்தை இழந்து விட சம்மதிக்காமல் தஞ்சாவூரிலிருந்து மீண்டும் திருவனந்தபுரம் சென்று எடுத்து வருகிறார் அந்தப் பெண்மணி என்ற சம்பவத்தைக் கவிராயர் பதிவு செய்யும் போது கண்களின் ஓரத்தில் கண்ணீர்த் துளி எட்டிப் பார்த்து அந்த ஜப்பானியப் பெண் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்ய ஆரம்பித்து விடுகிறது.
            கிராமத்தில் வாழ்ந்த எளிமையான கிராமச் சேவகர், கல்யாணமே செய்து கொள்ளாத மீசை வாத்தியார் என்று எவ்வளவோ மனிதர்கள் கட்டுரைத் தொகுப்பு  முழுவதும் ஆங்காங்கே நடமாடுகிறார்கள். அவர்களின் நடமாட்டத்தின் ஊடே ஒவ்வொரு கட்டுரையும் கடந்த காலத்தில் தொடங்கி நிகழ்காலத்தில் முடிவதான ஒரு தோற்றத்தைத் தந்து சொக்க வைக்கின்றன.
            ஒவ்வொரு கட்டுரையிலும் சிறுகதையின் சாயலும், கவிதைத் தன்மையின் தோயலும் மிகுந்த இத்தொகுப்பு ஒரு காலப் பொக்கிஷம் என்று மீண்டும் சொல்வதில் கூறியது கூறல் என்ற குற்றம் ஏற்படாது என்றே கருதுகிறேன்.
            பாரதியின் கட்டுரைத் தொகுப்புகளிலிருந்து தனது கட்டுரைக்கான மொழிநடையைக் கண்டடைந்ததாக ஆதர்சமாகக் குறிப்பிடும் தஞ்சாவூர்க் கவிராயர் இக்கட்டுரைத் தொகுப்பின் ஓரிடத்தில் ரூமியின்,
                        "மழைக்குள் ஓடு
                        அப்போதுதான்
                        வானத்தில் நனைய முடியும்."
            என்ற மேற்கோளைக் காட்டுகிறார். இத்தொகுப்புக்கும் இந்த மேற்கோளே சாலப் பொருந்தும். இக்கட்டுரைத் தொகுப்பை வாசித்தால்தான் இந்த எழுத்தில் கரைய முடியும்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...