7 May 2019

சுற்றிச் சுழலும் கேள்விகள்



செய்யு - 77
            காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது. மனதின் காற்று வேறு விதமாக விகடுவின் மனதில் சுழன்றடித்துக் கொண்டிருந்தது. அந்த சாயுங்கால நேரத்தில் செய்யுவும், விகடுவும் களக்காட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். நடக்கும் போது எதையாவது பேசிக் கொண்டே வருவாள் செய்யு. விகடுவுக்கு வார்த்தை வராது. அவன் வாய் வழியே வர வேண்டிய வார்த்தைகளைக் கொன்று போட்டு அவன் மனம் கண்டிபடிச் சிந்தித்துக் கொண்டிருந்தது. விகடு செய்யு பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டே வருவான். "ஏம்ணே எதுவுமே பேசாம எதையாவது எந்நேரமும் யோசிச்சுகிட்டே இருக்கே?" என்றாள் செய்யு. அந்தக் கேள்வியும் சேர்ந்து கொண்டு விகடுவை யோசிக்க வைத்தது.
            செய்யு சொன்னது உண்மைதான். விகடு சதா சர்வகாலமும் எதையாவது யோசித்துக் கொண்டே இருந்தான். நின்றால் யோசனை. உட்கார்ந்தால் யோசனை. நடந்தால் யோசனை. படித்தால் யோசனை. படுத்தால் யோசனை. யோசனை அவனை விட்டபாடில்லை. ஒன்று மாற்றி ஒன்று, இன்னொன்று மாற்றி இன்னொன்று அவனால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. எப்படி தன்னால் கண நேர ஓய்வில்லாமல் எதையாவது போட்டு உழப்பிக் கொண்டே யோசித்துக் கொண்டே இருக்க முடிகிறது என்று கூட அவன் யோசித்துப் பார்த்தான். அதுவும் கூட ஒரு யோசனைதான். யோசனை எப்போதாவது விடுதலை கொடுக்கும் சில நேரங்களில் எதுவும் யோசிக்க முடியாமல் நடந்து முடிந்த நிகழ்வுகள் கோர்வையாக ஒரு திரைப்படத்தைப் போல அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தன.
            அப்பா ஹாஸ்டலை விட்டு பிடிவாதமாக அழைத்து வந்து விட்டார். அதன் பின் அவர் ஒவ்வொரு நாளும் விகடுவை நரிவலம் பள்ளிக்கூடத்தில் கொண்டு வந்து விட எடுத்துக் கொண்ட பாடு இருக்கிறதே! தினமும் இரண்டு முறை அந்த நாட்களில் அவர் திட்டைக்கும், நரிவலத்துக்கும் அலுப்பு பார்க்காமல் டிவியெஸ் பிப்டியில் அலைந்து கொண்டிருந்தார். அநேகமாக நரிவலம் குடி வந்து விட்டப் பிறகும் அவன் தூக்கத்தில் அப்பாவோடு டிவியெஸ் பிப்டியில் வந்து கொண்டிருப்பதான பிரமையை அவனது கனவுகள் கக்கிக் கொண்டிருந்தன. காதுகளில் எந்நேரமும் அதன் சத்தம் ஒலித்துக் கொண்டே இருந்தன.
            மனதின் கோர முகத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அது யோசிக்க வேண்டிய விசயங்களைத் தாண்டியும் அது சிந்தித்துக் கொண்டே போகும் போதுதான் புரியும். தன்னிலை மறந்து போகும் வரையில் அது சிந்தித்துக் கொண்டே போகும் இருள் வெளியை எதிர்கொள்வது அவ்வளவு எளிதா?
            அப்பாவால் நரிவலம் கொண்டு வந்து விட முடியாத அந்த நாட்களில் வீயெம் மாமா கொண்டு வந்து விட்டு அழைத்துக் கொண்டு போனது. "ஏன்டா இப்படி குடும்பத்தைப் போட்டு பாடாய்ப் படுத்துறே? ஊரு உலகத்துல புள்ளைங்க படிக்கல. நீ என்னடான்னா பதினொன்னாவது படிக்குறத்துக்குள்ள எல்லாரையும் பீஸ் பீஸா அடிச்சிடுவே போலருக்கே!" என்று வீயெம் மாமா நேரடியாக அழைத்துக் கேட்டே விட்டது. அந்த வாசகம் வேறு விகடுவின் மனதில் தங்கி மண்டையில் இறங்கிய கடப்பாரையைப் போல உறுத்திக் கொண்டிருந்தது. கடப்பாரையைக் குத்துவதை விட அதைப் பிடுங்குவது சில நேரங்களில் கடினமாகப் போய் விடும். அப்படித்தான் இருந்தது வீயெம் மாமாவின் வாசகம். அந்த வாசகம் உள்ளே புகுந்து விட்டது. அதை வெளியே உருவி எறிவது அசாதாரணமாகப் பட்டது. வெளியே உருவி எறிய முயற்சிக்க அது ஆழமாக உள்ளேறிக் கொண்டே போனது.
            திட்டையிலிருந்து நரிவலம் வல்லாளத் தேவர் வீட்டுக்குக் குடிபெயர்ந்த போது வேன் ஏற்பாடு செய்து அதில் பொருட்களையெல்லாம் அள்ளிப் போட்டு எடுத்துக் கொண்டு வந்தது வீயெம் மாமாதான். அவ்வளவு சுறுசுறுப்பாக வேகமாக எல்லா பொருட்களையும் அது அள்ளிக் கொண்டு வந்து போட்டது. அந்தப் பொருட்களோடு தூக்கி எறிய முடியாத அளவுக்கு ஒரு வாசகத்தையும் அது விகடுவின் மனதில் தூக்கிப் போட்டு விட்டுப் போய் விட்டது. விகடு அந்த வாசகத்தை வார்த்தை மாற்றி வார்த்தை, மாற்றிப் போட்டு பலவிதங்களில் பல நாட்கள் யோசித்துக் கொண்டு கிடந்தான். அந்த வாசகத்தை அவனால் கைவிட முடியவில்லை. அந்த வாசகமும் அவனைக் கைவிட்ட பாடில்லை. அந்த வாசகத்தில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் அந்த வாசகம் அவன் மனதைப் பீஸ் பீஸாகக் கிழித்துக் கொண்டு போனது. வைத்தி தாத்தாவின் வீட்டோடு பேச்சு வார்த்தைக் குறைந்திருந்ததால் சாமியாத்தா விசயம் கேள்விப்பட்டு ஓடி வந்து விகடுவுக்கு விபூதி அடித்து விட்டுப் போனது. அவன் கை நிறைய காப்புக் கயிறுகளாய் சிவப்பும், கருப்புமாய் ஏகப்பட்டது கட்டப்பட்டிருந்தன.
            தன் மனதை மொழிபெயர்த்து சொல்ல முடியாத அசெளகரியத்தில் விகடு நன்றாகவே சிக்கியிருந்தான். மனதுக்குள் நிறைய கேள்விகள் எழுந்து கொண்டிருந்தன. எந்தக் கேள்விக்கும் அவனால் சரியான விடையைச் சொல்ல முடியவில்லை. முகிலன் தூக்கில் தொங்கிய கொட்டகையின் பக்கம் ஹாஸ்டல் பிள்ளைகள் எல்லாரும் செல்ல பயந்தனர். அந்தக் கொட்டகைக்குப் பின்னால் குடியிருந்தவர்கள் முகிலன் ஆவியாக வந்து மிரட்டுவதாகச் சொல்லி ஏதேதோ பூசைகள் செய்து கொண்டு இருந்தனர். ஆனால் பிரேம்குமாரும், பவித்ரனும் மட்டும் பயப்படாமல் அங்கு சென்று வந்து கொண்டிருந்தது அவன் மனதில் ஹாஸ்டலை விட்டு வெளியே வந்த பிற்பாடும் ஒரு குழப்பத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.  அந்த இருவர் மட்டும் எந்த வித பயமோ, நடுக்கமோ இல்லாமல் அங்கே அப்படிச் செல்ல முடியும்? ஹாஸ்டலில் எல்லா பிள்ளைகளும் அந்த துர்மரணத்துக்குப் பின் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டப் பிறகு பக்கிரிசாமி மட்டும் ஏன் திடீரென்று மனநிலைப் பிசகியவன் போல நடந்து கொள்ள வேண்டும்?
            ஒரு துர்மரணம் நடந்த பின்னும் ஹாஸ்டலை இடம் மாற்றாமல் ஏன் அதே இடத்தில் நடத்த வேண்டும்?
            எதற்காக முகிலன் தூக்கில் தொங்க வேண்டும்? உயிரைக் கொடுத்து தப்பிக்கும் அளவுக்கு அவனுக்கு சூழ்நிலையிலோ, மனநிலையிலோ என்ன பிரச்சனைகள் இருந்திருக்க முடியும்? படிக்க முடியவில்லை என்பதை ஒரு கருத்துக்காக வைத்துக் கொண்டாலும் அந்த இயலாமை உயிரைப் போக்கிக் கொள்ளும் அளவுக்கு தூண்டுமா என்ன?
            நம் ஆசைகள், எதிர்பார்ப்புகளில் எப்போதும் ஒரு பிடிவாதம் இருக்கிறதா என்ன? அந்தப் பிடிவாதம் ஒரு போதும் நிறைவேறாமையை ஏற்றுக் கொள்வதில்லையா என்ன? நிறைவேறாத எதிர்பார்ப்போடும் ஆசையோடும் வாழ்வதும் ஒன்றுதான் மரணமும் ஒன்றுதான் என்பதான கோட்பாடு நம்மைச் சுற்றிச் சுற்றிச் சுழல் காற்றைப் போல நம்மைச் சுழன்றடிக்கிறதா என்ன?  நீர்ச்சுழலில் சிக்கியவர் வெளியே வர நினைத்தாலும் வெளியே வர முடியாமல் அந்தச் சுழல் உள்ளே அழுத்துவதைப் போல அது அழுத்துகிறதோ என்ன? அழுத்தம் கொல்லுமா என்றால் கொல்லாமல் விட்டு விடுமா என்ன? உடலே இரத்த அழுத்தத்தில்தானே ஓடிக் கொண்டிருக்கிறது!
            நிலாவுக்கும் கடல் நீருக்கும் ஒரு தொடர்பைப் போல மனதுக்கும் உடலுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. மனதின் அழுத்தம் உடலின் இரத்த அழுத்தத்தைப் பாதிக்கிறது. மனதின் அழுத்தம் உடலின் ரத்த அழுத்தத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி கோபம் ஒரு வெளிப்பாடாக இருக்கலாம். விரக்தி ஒரு வகை வெளிப்படாக இருக்கலாம். உள்ளுக்குள்ளே அதை எதிர்கொள்ள முடியாமல் மருண்டு அழுவது கூட வேறொரு வகை வெளிப்பாடாக இருக்கலாம். எந்த மனிதருக்கும் கை ரேகைகள் ஒன்று படாததைப் போல இந்த வெளிப்பாடுகளும் ஒன்றுபடுவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி.
            ஒரு சொல் உண்டாக்கும் கோபம் எந்த இரு மனிதருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒரு சொல்லுக்காக, ஓர் இயலாமைக்காக, ஓர் ஏமாற்றத்திற்காக எல்லாரும் தூக்கில் தொங்கி விடுவதில்லைதான். ஆனால் தூக்கைத் தேடுபவர்கள் இருக்கிறார்கள். ஏதோ ஓர் அழுத்தம் தோன்றி அவர்களின் இதயம் வெடித்து விடுவதற்கு முன் அவர்கள் உயிர் சிதறி விடுவதைத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள். உயிர் சிதறிப் போகும் ஒவ்வொருவரும் சுற்றியிருக்கின்ற மனிதர்களின் மனதில் வெவ்வேறு விதமாக நினைவுகளாய்ப் பிறந்து கொண்டே இருக்கிறார்கள். அந்த நினைவுகள் சிலரை அழச் செய்கிறது. சிலரைப் பேயாய்ப் பிசாசாய் மிரட்டச் செய்கிறது. சிலரைப் பயம் கொண்டு பிதற்றச் செய்கிறது. சிலரைக் கேள்விகளாய்ப் போட்டு புரட்டியெடுக்கிறது. 
            அபூர்வமாக சில நாட்களில் கேள்விகளுக்கு எதோ பதில் கிடைப்பது போலவும் அவன் சிந்தித்துக் கொண்டிருந்தான். கேள்விகளின் அபத்தம் உடையும் நாள் வரை அவன் அப்படித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தான். கேள்விகளை எழுப்பும் மனமே ஒரு கட்டத்தில் பதிலைத் தேடிக் கொள்கிறது. இது கூட அபத்தம்தான். பதிலை வைத்துக் கொண்டே அது கேள்வியைக் கேட்டு குடைந்து கொள்கிறது. குழப்பமான எல்லா கேள்விகளுக்கும் பின் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு பதிலை வைத்துக் கொண்டிருக்கிறது மனம். தனக்குத் தானே தான் ஏற்றுக் கொள்ளும் ஒரு பதிலுக்காக கேள்விகளைக் கிளை பரப்பிக் கொண்டே போகிறது. உண்மையில் பதிலை அடைவது எந்தக் கேள்வியின் நோக்கமுமில்லை. தான் உருவாக்கியக் கேள்வியை தானே உடைத்துப் போட வேண்டும் என்ற வேட்கையில் அது பயணித்துக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அதைப் பார்க்கும் போது அந்தக் கேள்வியைப் பார்க்கும் போது அது சிரிக்கிறது.
            குழந்தைகளைக் குழந்தைகளாய்ப் பார்க்காத அபத்தத்தின் கேள்வி அது என்பதை விகடு புரிந்து கொண்ட நாளில் அவன் வெடித்துச் சிதறினான். அவனது கோபத்தின் அளவு உக்கிரமானது. எல்லார் மேலும் ஒரு இனம் புரியாத வெறுப்பு உண்டானது.
            மேதைமையை உருவாக்கி விட முடியும். ஆனால் குழந்தைமையை? அது இயற்கையாக உள்ளது. அதை உருவாக்க வேண்டியதில்லை. அது அங்கேயே இருக்கிறது. அதை அப்படியே விட்டு விட வேண்டும். குழந்தைமை மேதைமையை மிக எளிதாக உருவாக்கி விடும்.
            நாம் குழந்தைகளை மேதைகளாய் உருவாக்க நினைக்கிறோம். ஆனால் அவர்களோ குழந்தைகளாக இருக்கவே பிரியப்படுகிறார்கள். அவர்களைக் குழந்தைகளாகவே இருக்க விட்டால் அவர்கள் தானாகவே மேதைகளாகி விடுகிறார்கள்.
            இந்த உலகத்தில் மேற்கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளும் வெற்றிதான் என்றாலும் குழந்தைகளை மேதைகளாக்கும் முயற்சியில் அது மாபெரும் தோல்வியைச் சந்தித்து இருக்கிறது. தோல்வி மட்டுமில்லாமல் ஒரு போர்க்களம் கொன்ற உயிர்களை விட அதிக எண்ணிக்கையில் உயிர்களைக் கொன்று போட்டும் இருக்கிறது.
            எந்தக் கட்டுபாடு உங்களை உயர்த்தும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களோ அதே கட்டுபாடு அதீதமாகும் போது அது உங்களை அழித்துக் கொண்டும் முன்னேறும். குழந்தைகளை மேதைகளாக்கும் முயற்சியில் புகுத்தப்படும் கட்டுபாடுகள் இந்த விசயத்தில் படு வேகமாகவே முன்னேறுகிறது.
            குழந்தையாக இருக்கும் எந்தக் குழந்தை தன்னை அழித்துக் கொள்ளும்? பூனையாய் இருக்கும் ஒன்றை யானையாய் மாற்றி நினைக்கும் போது தன்னை அழித்துக் கொள்வதை பூனை ஒரு விளையாட்டாய் ஆக்கி விடும். பூனை யானையாய் மாறா விட்டால் பூனைக்கென்ன நஷ்டம்? ஆனால் பாருங்கள்! மாற முடியாத விரக்தியில் பூனை நஷ்டமாகி விடும்.
            நாம் இது குறித்து நிறையவே யோசிக்க வேண்டியிருக்கிறது. அங்கே யோசித்துக் களைத்துக் கிடக்கும் விகடுவையும் நாம் கொஞ்சம் பார்க்க வேண்டியிருக்கிறதே!
            அவன் கைவசம் ப்ளஸ்டூ புத்தகங்களை விட பிற புத்தகங்கள் நிறைய இருந்தன. அரையாண்டுத் தேர்வு வரை ப்ளஸ்டூ புத்தகங்களைப் புரட்டாமல் தான் விரும்பிய புத்தகங்களாகப் புரட்டிக் கொண்டிருந்தான். அந்தப் புத்தகங்களும் ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டிய போதுதான் அவன் ப்ளஸ்டூ புத்தங்களைப் புரட்டிக் கொண்டிருந்தான்.
            எப்படியும் விகடு படித்து விடுவான் என்ற நம்பிக்கையில் அப்பாவும் அவன் சிந்தனையைப் பற்றியோ, படிப்பைப் பற்றியோ எதுவும் கேட்காமல் இருந்தார். அவர் நம்பிக்கையைப் பொய்ப்பிக்கும் வகையில் அவன் அரையாண்டுத் தேர்வு வரையில் இயற்பியலில் தொடர்ந்து கோட்டு அடித்துக் கொண்டிருந்தான்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...