24 May 2019

கோட்டம் விழுந்த சைக்கிள்



செய்யு - 94
            ஏதோ ஒரு நம்பிக்கைதான் வாழ்வை இழுத்துக் கொண்டு செல்கிறது. ஒவ்வொரு முறை அந்த நம்பிக்கை தகரும் போது இன்னொரு நம்பிக்கையைப் பிடித்துக் கொண்டு வாழ்க்கை இழுத்துச் செல்லப்படுகிறது. நம்பிக்கைக் கொள்ளாமல் வாழ்க்கையில் இருக்க முடிவதில்லை. அவநம்பிக்கை கொண்டுதான் வாழ்வில் என்னவாகப் போகிறது?
            ஒரு நம்பிக்கையைப் பிடித்துக் கொண்டு மேலேறும் போது எவ்வளவு அவ நம்பிக்கைகள் பிடித்துக் கீழே இறக்குகின்றன. நடக்கும் சம்பவங்கள் அப்படித்தான். நம்பிக்கையோடு இருப்பதா, நம்பிக்கையை உதிர்த்து விட்டு நிற்பதா என்ற ரெட்டை மனசை உருவாக்கி விடுகிறது. இரண்டு பக்கமும் செல்ல முடியாத அல்லாடும் மனநிலையில் உழல்வது இருக்கிறதே, அது கைவிடப்பட்ட ஒரு நிலையைப் போன்றது. அது கையறு நிலையில் அழுது தீர்ப்பதை விட மோசமானது.
            அப்பா பொருளாதார ரீதியாக குடும்பத்தை நிலைநிறுத்த தடுமாறிக் கொண்டிருந்தது. அப்பா மாத ஊதியம் பெறும் ஓர் அரசு ஊழியராக இருந்தாலும், விகடுவுக்காக குடும்பத்தை இட மாற்றியதிலும், அப்படி இடமாற்றி திரும்பியதில் பழுதடைந்த வீட்டை ஓரளவுக்கு இருக்கத் தகுந்தாற் போல மாற்றியதிலும் செலவு பிடித்து விட்டது. இதில் காலேஜ் செல்லும் விகடுவுக்கு தினம் இருபதோ, முப்பதோ கொடுக்க வேண்டியிருந்தது. இதற்கிடையில் தேவைகளோ, விஷேசங்களோ வந்தால் மூன்று பைசா, ஐந்து பைசா என்ற கிடைக்கிற தோதில் கடன் வாங்கிச் சமாளித்துக் கொண்டிருந்தது.
            வீட்டின் நிலைமை நாளுக்கு நாள் மோசமான நிலையை அடைந்து கொண்டிருந்தது. காலையில் எழுந்தால் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து சுவருக்குப் பக்கத்தில் மூங்கில் ஊன்றுவதும் அதை கூரையோடு சேர்த்து தாங்கலாக இருக்குமாறு கட்டிக் கொண்டிருந்தது அப்பா. இதே வேலை சாயுங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் ஆரம்பமாகும். இப்படி வீட்டைச் சுற்றிச் சுவரைப் போல மூங்கில்களாக நின்று கொண்டிருந்தன. அப்படித் தாங்கலுக்காக நட்டு வைத்திருந்த மூங்கில்களிலும் கறையான்கள் வஞ்சனையின்றி ஏறி புல் மீல்ஸ் சாப்பிட்ட ஹோதாவில் திரிந்து கொண்டிருந்தன. உடனே பூச்சி மருந்து வாங்கி வந்து அதைத் தூவி விடும் வேலையில் இறங்கி விடும் அப்பா. இதனால் வீட்டில் பூச்சிமருந்தின் வாடை அவ்வபோது அடித்துக் கொண்டிருந்தது.
            செய்யு மணமங்கலம் பள்ளியில் சேர்ந்த நாளிலிருந்து நடந்துதான் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்தாள். எவ்வளவு நாள்தான் அவள் நடந்து போவாள்? தன்னோடு படிக்கும் பிள்ளைகள் சைக்கிளில் வருவதைப் பார்த்து அவளுக்கும் அப்படிப் போக வேண்டும் என்ற ஆர்வம் தொற்றி விட்டது. மணமங்கலம் பள்ளியைப் பொருத்த மட்டில் நடந்து வந்து படித்த பிள்ளைகளின் கடைசி தலைமுறையை எட்டிக் கொண்டிருந்தது. வசதி இருக்கிறதோ இல்லையோ பிள்ளைகளுக்குச் சைக்கிள் வாங்கிக் கொடுத்து அதில் அனுப்புவதில் பெற்றோர்கள் ஆர்வமாக இருக்க ஆரம்பித்தனர். அப்படி சைக்கிள் வாங்கிக் கொடுக்க முடியாத பிள்ளைகளின் பெற்றோர்கள் பஸ்ஸில் இலவச பாஸில்தான் பிள்ளைகள் சென்று வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க ஆரம்பித்தனர். விளைவாக, முன்பு போல மணமங்கலம் செல்லும் ரோட்டில் நடந்து பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் குறைந்து போகத் தொடங்கினர்.
            மணமங்கலம் பள்ளியில் அதுவரை படித்த தலைமுறையைச் சார்ந்த பிள்ளைகள் கிடைத்தப் பைகளில் புத்தக நோட்டுகளை எடுத்துச்‍ செல்லும். மஞ்சள் பை, நரம்புப் பை, ஒயர்கூடை, கித்தான் பை என்று கிடைக்கிற பை எதுவோ அதுவே பள்ளிக்கூடத்துக்குப் புத்தகங்களைப் போட்டு எடுத்துச் செல்லும் பை. அந்த வழக்கமும் மாறத் தொடங்கியிருந்தது. கடைகளில் வாங்கி வரும் ஸ்கூல் பேக்கில்தான் நோட்டு, புத்தகங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதான மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.
            இந்தப் புதிய மாற்றங்களுக்கு பிள்ளகைள் வெகு விரைவாகத் தயாராகி விட்டனர். புதிய சைக்கிள் வாங்கிக் கொடுக்க முடியாத பெற்றோர்கள் செகண்ட் ஹேண்டில் சைக்கிளைத் தங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கத் தொடங்கினர். அங்கே, இங்கே நூறு, இருநூறு என்று கடன் வாங்கியாவது ஸ்கூல் பேக் வாங்கிக் கொடுத்து அதைத் தங்கள் பிள்ளைகள் தூக்கிக் கொண்டு போகும் அழகைப் பார்த்து பரவசம் அடைந்தனர்.
            பள்ளிச் செல்லும் பிள்ளைகளிடம் அழகியல் சார்ந்த நாகரிக உணர்வு சற்று அதிகமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தது. அவர்களின் அலங்கார முறைகளிலும், வாங்கி வைத்திருந்த நோட்டுகளிலும் கூட மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. கெட்டி அட்டைகள் போடப்பட்டிருந்த நோட்டுகள் வழக்கொழிந்திருந்தன. அழகிய படங்கள் போட்ட கிங் சைஸ் நோட்டுகள் பிள்ளைகளின் விருப்பதற்குரியதாக மாறி இருந்தன. ஆண் பிள்ளைகள் என்றால் ஸ்கூல் பேக்கை மாட்டிக் கொண்டு, கேரியரில் நான்கு நோட்டுகளை வைத்துக் கொண்டு செல்வதையும், பெண் பிள்ளைகள் என்றால் அதே போல ஸ்கூல் பேக்கை பின்னால் மாட்டிக் கொண்டு, சைக்கிளின் முன்பக்கம் இருந்த கூடையில் நான்கைந்து நோட்டுகளைப் போட்டுக் கொண்டு செல்வதையும் ஒரு பேஷன் போல ஆக்கியிருந்தனர்.
            செய்யுவும் தன் பங்குக்கு சைக்கிளில்தான் மணமங்கலம் பள்ளிக்குச் செல்வேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தாள். சைக்கிளை உடனடியாக வாங்கித் தர முடியாத நெருக்கடியான நிலையில் அப்பா இருந்தது. அதனால் அவள் இலவச பஸ் பாஸில் தினமும் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்தாள். இதற்காக காலை எட்டே காலுக்கேக் கிளம்பினாள். சாதாரணமாக ஒன்பது மணிக்குக் கிளம்பினாலும் திட்டையிலிருந்து நடந்தே மணமங்கலம் பள்ளிக்கு ஒன்பதரை மணி வாக்கில் சென்று விடலாம். நடந்து பள்ளிக்கூடத்துக்குச் செல்வதைச் சங்கோஜமாகக் கருதும் தலைமுறைக்கு அவள் மாறியிருந்தாள். சாயுங்காலம் பள்ளி விட்டதும் காத்திருந்து ஐந்தே முக்கால் மணிக்கு வரும் பஸ்ஸில் ஏறி ஆறு மணி வாக்கில் வீட்டுக்கு வந்தாள். பள்ளி விடும் நேரத்தில் அவள் நடந்து வந்தால் கூட அவள் ஐந்து அல்லது ஐந்தேகால் வாக்கில் வீடு வந்து விடலாம்.
            பஸ் வராத நாட்களில் அவள் வீட்டுக்கு வந்து அப்பாவை டிவியெஸ் பிப்டியில் கொண்டு வந்து விடுமாறு தொல்லைபடுத்திக் கொண்டு இருந்தாள். காலையில் டிவியெஸ் பிப்டியில்ல் கொண்டு போய் விட்டால் சாயுங்காலம் பஸ்ஸில் வந்து விட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றாது. காலையில் எப்படி வண்டியில் கொண்டு வந்து விட்டார்களோ, அப்படியே சாயுங்காலமும் வண்டியில் அழைத்துக் கொண்டு வர வேண்டும். இதனால் காலையில் அப்பா வண்டியில் கொண்டு போய் விட்டால், சாயுங்காலமும் போய் அழைத்துக் கொண்டு வந்து விடும். இல்லையென்றால் சாயுங்காலம் வீட்டுக்கு வந்ததும் வராததுமாக வீட்டில் அவள் ரகளை செய்தாள். ‍வேலைப்பளு மிகுந்த நாட்களில் அப்படி காலையில் விட்ட மாதிரி, சாயுங்காலம் அழைத்து வர முடியாத சூழ்நிலை அப்பாவுக்கு இருந்தது. அதை அவள் புரிந்து கொள்ளாமல் அந்த நாட்களில் அழுது அழிச்சாட்டியம் செய்த வண்ணம் இருந்தாள்.
            அப்பாவுக்கு தன் பணக்கஷ்டத்தை விட அவளது அடத்தைச் சமாளிப்பது கடினமாகத் தோன்றியிருக்க வேண்டும். அப்பா செய்யுவுக்கு பழைய சைக்கிள் ஒன்றை செகண்ட் ஹேண்டில் வாங்கித் தருவதாகச் சொன்னார். செய்யு மறுத்து விட்டாள். வாங்கித் தந்தால் புதிய சைக்கிள்தான் என்பதில் அவள் மிகுந்த பிடிவாதமாக இருந்தாள். அதுவும் சைக்கிள் பச்சை நிறத்தில், முன்புறத்தில் கூடை வைத்த மாதிரி இருக்க வேண்டும் என்று சைக்கிள் பற்றிய ஒரு வர்ணனையையும் வழங்கியிருந்தாள். செய்யு கேட்ட மாதிரியே சைக்கிள் வாங்கிக் கொடுத்து விடுவது நல்லது என்று அப்பாவுக்குத் தோன்றியிருக்க வேண்டும். ஓகையூர் மாணிக்கம் சாரிடம் ஐந்து காசு வட்டிக்கு மூவாயிரம் பணத்தை வாங்கி ஒரு வழியாக செய்யுவுக்கு அவள் கேட்டபடியே சைக்கிளை வாங்கிக் கொடுத்தது அப்பா.
            விகடு மணமங்கலம் பள்ளியில் படித்த வரை பத்தாம் வகுப்பு தவிர ஒன்பதாம் வகுப்பு வரை நடந்து போய்தான் படித்தான். பத்தாம் வகுப்பு படித்த போது அப்பா டிவியெஸ் பிப்டி வாங்கியதால் அவரது சைக்கிளை எடுத்துப் பள்ளிக்கூடம் சென்றான். அதுவும் வீட்டில் மிகுந்த வற்புறுத்தலுக்குப் பின் நடந்தது. அவனுக்கு சைக்கிளில் செல்வதை விட நடந்து செல்வதே மிகுந்த பிரியத்துக்கு உரியதாக இருந்தது.
            புது சைக்கிளில் சென்ற மூன்றே மாதத்தில் அந்த சைக்கிளை எங்கோயோ கொண்டு போய் விட்டு, கீழே போட்டு உடைத்து முன்பக்க ஹேண்டில்பார் அச்சை முறித்துக் கொண்டு வந்தாள் செய்யு. அநேகமாக அவளது தோழிகளில் யாரோ அவளது சைக்கிளை ஓட்டக் கேட்டு, அவள் கொடுத்து அதனால்தான் அப்படி நடந்திருக்க வேண்டும் என்று அம்மா ஊகித்தது. அதைச் செய்யுவிடம் பலமுறைக் கேட்டும் அவள் மழுப்பலான பதிலைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள். ஆக அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று ஒருவாறாக உறுதியானது. "யாரு எதக் கேட்டாலும் கொஞ்சம் கூட யோசிக்காக அத்தே தூக்கிக்கொடுத்துடுவா போலருக்கே! கேட்குறத புத்தியில கொண்டு போயி வைச்சுப் பாக்கமாக செஞ்சிக் கொடுத்துடுவா போலருக்கே! நம்ம பொருள நாமதான் பய பத்திரம வெச்சுக்கணும். இப்படி இருக்காளே!" என்று அம்மா புலம்பியது.
            "அடச் சீ! ச்சும்மா இருக்க மாட்டே நீ? இப்ப என்னாயிட்டு இப்போ? நீந்தாம் ஒங்க அக்கா, தங்கச்சிக்கு ஒண்ணும் செய்ய மாட்டேங்றீன்னா நம்மளயும் அப்படியே இருக்கச் சொல்றீயா?" என்றாள் செய்யு பதிலுக்கு.
            "நாம்ம செய்யாட்டியும் ன்னாடி. அத்தாம் ஒங்க அப்பாரு கடன உடன வாங்கியாது செஞ்சிட்டு இருக்காரேடி. இத்துல ரண்டு பேரும் அப்படின்னா அவ்ளோதான்டி!" என்றது அம்மாவும் பதிலுக்கு.
            "இப்டிலாம் இருந்தீன்னா ஒன்னய யாருக்கும் பிடிக்காது போ!" என்றாள் செய்யு.
            "பிடிக்காட்டியும் போவட்டும் போடி! நீ கொஞ்சம் சமத்தா இருந்துக்கோடி!" என்றது அம்மா.
            சைக்கிள் கோட்டம் விழுந்து ஒரு பக்கமாக இழுக்க ஆரம்பித்தது. அதற்காக அந்த சைக்கிள் எவ்வளவோ முறை பழுது பார்க்கப்பட்டது. அதை முழுமையாகச் சரி செய்வது பெரும் சவாலாகப் போய் விட்டது. அப்படி ஒரு சைக்கிளைச் செய்யு எப்படி ஓட்ட முடியும்? தனக்கு மீண்டும் ஒரு புதிய சைக்கிள் வாங்கித் தர வேண்டும் என்று அவள் ஆரம்பித்தாள். மூன்று மாதத்துக்கு ஒரு தபாவா புது சைக்கிளை வாங்கித் தந்து கொண்டிருக்க முடியும் என்று அப்பா நினைத்திருக்க வேண்டும். ஆகவே, அப்பா வாங்கித் தருவதாகச் சொல்லிக் காலத்தைக் கடத்த ஆரம்பித்தது. அந்தச் சைக்கிளை நாமொரு பக்கம் மிதித்துச் செலுத்தினால், அதுவொரு பக்கம் இழுத்துக் கொண்டு போனது. அப்படி ஒரு சைக்கிளில் போய்ப் போய் கடைசியில் அந்தச் சைக்கிளில் போகும் லாவகம் செய்யுவுக்கு வந்த போது அவள் புது சைக்கிள் கேட்பதை மறந்து விட்டிருந்தாள்.     
            அதிலிருந்து அவளுக்கு பள்ளிக்கூடத்தில் விலையில்லா மிதிவண்டிக் கொடுக்கும் வரை அவள் விரும்பிக் கேட்ட அந்த சைக்கிளில்தான் அவள் சென்று கொண்டிருந்தாள். ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு போகும் அந்தச் சைக்கிள் அவள் ஒருத்தியால் மட்டுமே ஓட்டக் கூடியதாக மாறியிருந்தது.
            விலையில்லா மிதிவண்டிக் கொடுக்கப்பட்ட பின் அந்த வண்டி நன்றாகச் செல்வதாகச் சொல்லிவிட்டு இந்த சைக்கிளை அப்படியே போட்டு விட்டாள். சில நாட்கள் அப்படியே கிடந்து புழுதி படிந்திருந்த அந்த வண்டியை அப்பா முந்நூறு ரூபாய்க்கு விற்றதாக ஞாபகம். மாணிக்க சாரிடம் வாங்கிய மூவாயிரத்துக்கு அப்பா முந்நூறுக்கு மேல் வட்டி கட்டியிருக்கும். அப்படி முந்நூறுக்கு மேல் வட்டி கட்டி மூவாயிரம் ரூபாய்க்கு வாங்கிய அந்த சைக்கிளை முந்நூறு ரூபாய்க்கு மேல் ஒரு பைசா கூட கூடுதலாக விற்க முடியாமல் போய் விட்டது.
            சைக்கிள் வந்தான பின் செய்யுவின் கவனம் அடுத்தப் பக்கம் திரும்பியது. மணமங்கலம் பள்ளியில் படித்தப் பிள்ளைகளில் அப்போது டியூசன் படிக்காதப் பிள்ளைகள் குறைவு. டியூசன் படிப்பது தேவை என்ற நிலைமை மாறி அதுவும் ஒரு பேஷன் என்ற நிலையை எட்டியிருந்தது. டியூசன் படிக்காமல் நிறைய மதிப்பெண்கள் வாங்க முடியாது என்ற புதிய ஒரு கல்வித் தோற்றநிலையும் அப்போது உருவாகி விட்டிருந்தது.
            செய்யு அந்த இன்னொரு வேலையையும் செய்தாள். டியூசன் படிப்பதாகப் போனவள் ஒவ்வொரு டியூசனாய் மாற்றிக் கொண்டே இருந்தாள். அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்கு ஒரு டியூசன் சென்டரை மாற்றிக் கொண்டிருந்தாள். சில நாட்கள் தனக்கு எந்த டியூஷன் சென்டரும் சரிப்படவில்லை என எந்த டியூசன் சென்டருக்கும் செல்லாமல் இருப்பாள். எல்லாம் ஒரு சில நாட்கள்தான். பிறகு தனது தோழிகளிடம் விசாரித்து ஏதாவது ஒரு டியூசன் சென்டருக்குப் போய்க் கொண்டு இருப்பாள். இது அப்பாவுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அப்பாவுடன் நெருக்கமானப் பழக்கத்தில் இருந்த வாத்தியார்மார்கள் மணமங்கலம் பள்ளிக்கூடத்தில் இருந்தனர். அவர்களிடம் டியூசன் போய், அந்த டியூசனை ஒரு சில மாதங்களில் மாற்றும் போது அது ஒரு வகையான தர்ம சங்கடத்தை அப்பாவுக்கு ஏற்படுத்தியிருந்தது. செய்யு டியூசனுக்குப் போன அந்த சென்டரின் வாத்தியார்மார்களை எங்கேயாவது பார்க்க நேர்ந்தால் அவர்கள் செய்யு தங்களிடம் டியூசன் படித்ததையும், தற்போது வெறு ஒரு டியூசன் சென்டரில் மாறிப் படிப்பதைப் பற்றியும் பேசும் போது அதை எதிர்கொள்வது அப்பாவுக்கு தலைகீழாக நின்று தண்ணீர் குடிப்பது போலிருந்தது.
            செய்யு இப்படிச் செய்வதை அம்மா பலமுறைக் கேட்டுப் பார்த்தது. "ஏம்டி! நீ டியூசன் படிக்கிறதப் பார்த்தா ஊரு உலகத்துல ஒருத்தரும் பாக்கி இருக்க மாட்டேங்க போலருக்கடி. எல்லா டியூசனலயும் நாயி வாய வைக்குற மாரி மாத்தி மாத்திப் போயிட்டே இருக்கேயேடி? என்னதாம் நெனச்சிட்டு இருக்குறே மனசில?"
            "ஒருத்தரும் நமக்குப் பிடிக்கிற மாரி டியூசுன் நடத்த மாட்டேங்றாங்க!" என்றாள் செய்யு.
            "என்னடி பேசுறே நீ? அவங்க நடத்தறததைத்தாம் நமக்குப் பிடிச்ச மாரி பண்ணிக்கணும். நீ பண்ற பாத்தா டியூசன் படிக்கிறதுக்கு திருவாரூரு ஜில்லாவத் தாண்டி தஞ்சாரூ, திருச்சி, மெட்ராஸ்னு அமெரிக்க வரிக்கும் போயிடுவே பொலருக்கே!" என்றது அம்மா.
            "எங்கப் போயி படிச்சா உமக்கென்ன? போயிப் படிக்கப் போறது நானு! நீ ஏம் தேவயில்லாம லொட லொடான்னுகிட்டு கிடக்குறே?" என்றாள் செய்யு.
            "யம்மாடி ஒங்கிட்ட பேசி ஆவாதுடி. எக்கேடு கெட்டோ போங்கோ! எல்லாம் சேந்து இந்த வூட்டுக்கார மனுஷத்தப் போட்டுதாம் சிரமப்படுத்துறீங்க! ஒருத்தராவது அத எண்ணிப் பார்த்தீங்களா ன்னா? அதயெல்லாம் யோசிச்சுப் பாத்தா இப்படி ஏம் பண்ணுதுங்க?" என்று அம்மா பெருமூச்செறிந்தது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...