"துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று."
என்கிறார்
வள்ளுவர். துறவியரது பெருமையைக் குறிப்பிட வள்ளுவர் மேற்கண்ட குறளைக் குறிப்பிடுகிறார்.
குடும்பத்தில் இருந்து இல்லறக் கடமைகள் ஆற்றினாலும் பெண்களின் தியாகத்தோடு ஒப்புநோக்கும்
போது அவர்களும் அத்தகைய துறவியருக்கு நிகரானவர்கள்.
அவர்கள்,
"செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்."
என்கிறபடி
கடமையாற்றி குடும்பத்தைத் தூக்கி நிறுத்துகிறார்கள். குடும்பத்தைத் தூக்கி நிறுத்தும்
பெண்களே குடும்பத்தின் பெரியர்.
பாரதிதாசன் குடும்பத்தைத் தூக்கி நிறுத்தும்
பெண்டிரை குடும்ப விளக்கு என்கிறார். விளக்கு தான் தரும் வெளிச்சத்தை தான் ஒருபோதும்
பயன்படுத்திக் கொள்வதில்லை. இப்படித்தான் பெண்களும், விளக்குகளும் ஒன்றாகிப் போகிறார்கள்.
விளக்கு எரிகிறது. தனக்கான எரிபொருள் இருக்கும் வரை எரிகிறது. பெண்களும் அப்படித்தானே!
உழைக்கிறார்கள். உயிர் இருக்கும் வரை குடும்பத்துக்காக உழைக்கிறார்கள்.
எரிகின்ற ஒரு விளக்கு ஓராயிரம் விளக்குகளை
ஏற்றுவதைப் போல, குடும்பத்திற்காக ஒளி வீசும் பெண்கள் தங்களைப் போன்ற மக்கட்செல்வத்தைத்
தமக்குப் பின்னும் ஒளி வீசுமாறு பெற்றுத் தருகிறார்கள்.
நடைமுறையில் நாம் ஆண்களின் உழைப்பைப் பேசும்
அளவுக்கு பெண்களின் உழைப்பு குறித்துப் பேசுவதில்லை. இலக்கியத்திலும் அகப்பொருள் அன்றி
புறப்பொருளில் ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே என்ற அளவோடு பெண் நின்று போகிறாள். ஒளி கொடுக்கும் சூரியன் தன்னைப்
பற்றி பேசிக் கொள்ளாததைப் போல, பெண்களும் தங்களைக் குறித்து, தங்களின் உழைப்பைக்
குறித்துப் பேசிக் கொள்வதில்லை.
இலக்கியத்தின் புறப்பொருள் ஆணின் போர்க்கள
வீரத்தைப் பற்றிப் பேசுகிறது. போரில் ஆண் புறமிடக் கூடாது என்கிறது. அத்தகைய போர்க்கள
வீரத்துக்குச் சற்றும் குறைவில்லாதது அகத்தில் அத்தனை சுமைகளையும் தாங்கும் பெண்ணின்
வீரம்.
புறத்தில் அதாவது போர்க்களத்தில் ஆண்
விழுப்புண்ணை போர்வரும் போதுதான் நெஞ்சில் தாங்குகிறான். அகத்தில் அதாவது வீட்டில்
பெண் விழுப்புண்ணை ஒவ்வொரு நாளும் தாங்குகிறாள். வாழ்க்கை என்பது எப்பேர்பட்ட போர்க்களம்
என்பதை அவளைக் கேட்டால்தான் தெரியும். அதனால்தான் வள்ளுவர் 'பெண்ணின் பெருந்தக்க யாவுள'
என்கிறார். பெண்ணை விட பெருந்தக்க யார் இருக்கிறார்கள் சொல்லுங்கள்!
ஆணுக்கு ஒரு வசதி இருக்கிறது. போர்க்களத்தில்
முடியாவிட்டால் புறமுதுகிட்டு ஓடி வந்து விடலாம். பெண்ணுக்கு அது சாத்தியமில்லை. அவளுக்கு
எதிர்கொள்வதுதான் ஒரே வழி. அவள் எதிர்கொள்கிறாள். குடும்பம் நிலைகொள்கிறது. அதானல்தான்
அவள் பெண்ணின் பெருந்தக்க யாவுள ஆகிறாள்.
ஆணின் போர்க்களம் போல இருப்பதில்லைப்
பெண்ணின் போர்க்களம். இது வாழ்க்கை எனும் போர்க்களம். வாழ்க்கை முழுவதுக்குமான போர்க்களம்.
இந்தப் போர்க்களத்தில் இடைவெளிகள் இருப்பதில்லை. இந்தப் போர்க்களத்துக்கு முடிவும்
இருப்பதில்லை. குறிப்பிட்டக் கால போர்க்களம் போலா வாழ்க்கையெனும் போர்க்களம்?
பெண்களின் மனஉறுதியும், குடும்பத்தைத்
தாங்கும் திறனும் யாருக்கு இருக்கிறது சொல்லுங்கள். அவர்களின் மனஉறுதி மண்ணில் புதையுண்ட
வைரத்தை மிஞ்சியது. அவர்களின் குடும்பத்தைத் தாங்கும் திறன் ஆயிரம் யானைகளின் தும்பிக்கைகளின் பலத்தைத் தாண்டியது.
அநேகமாக குழந்தையைப் பெறும் வலி அவர்களை
வாழ்வில் அத்தனை வலிகளையும் தாங்கும் திறனைப் பெறச் செய்கிறது.
பெண்களின் கவனிப்பு இருக்கிறதே! அந்தக்
கவனிப்பில்தான் இந்த உலகம் சுழல்கிறது. மணமாகும் முன் ஒரு பெண் தம்பி, தங்கை என்று
அவர்களுக்காகச் சுழல்கிறாள். மணமான பின் கணவனுக்காகச் சுழல்கிறாள். மகப்பேற்றிற்குப்
பின் குழந்தைகளுக்காகச் சுழல்கிறாள். பெயரன், பெயர்த்திகளின் வரவுக்குப் பின் அவர்களுக்காகச்
சுழல்கிறாள். பெண்ணைப் பூமிக்கு சமமாகச் சொல்வதை நீங்கள் கவனிக்க வேண்டும். பூமியும்
சுழல்கிறது. பெண்ணும் சுழல்கிறாள். அந்தப் பூமியாவது இருபத்து மூன்றரை டிகிரி அச்சில்
கொஞ்சம் வசதியாக சாய்ந்தபடி சுழல்கிறது. பெண்ணுக்கு அது முடியுமா? அவளுக்கு எந்தச்
சாய்மானமும் இல்லாத அச்சில் அல்லவா குடும்பத்துக்காகச் சுழல வேண்டியிருக்கிறது. ஆக,
பூமியை விட பெண் ஒரு படி மேலாகிறாள்.
குடும்பமே பெண்களது உலகமாக இருக்கிறது.
உலகமே அவர்களது குடும்பமாக இருக்கிறது. ஒரு குழந்தையைப் பார்த்த மாத்திரத்தில் வாஞ்சையோடு
ஒரு பெண் தூக்கும் போது ஆண் அந்த இடத்தில் தோற்று விடுகிறான். அந்த வாஞ்சையை ஓர்
ஆணால் கொடுத்து விட முடியாது.
அழும் எந்தக் குழந்தையையும் ஒரு பெண் அசை
மடக்கி விடுவதைப் போல ஓர் ஆண் அசைமடக்கி விட முடியுமா என்ன? நாவின் ஆட்டு தாலாட்டு
என்றாலும் அது தாயிடமிருந்து வருவதால் கூட தாலாட்டாக இருக்கலாம் அல்லவா!
ஆண் எவ்வளவுதான் அறிவுப்பூர்வமாக வழிநடத்தினாலும்,
இன்றைய உலகம் எமோஷனல் இன்டெலிஜன்ஸ் எனும் உணர்வுப்பூர்வ வழிநடத்தலையே முதன்மையாகக்
குறிப்பிடுகிறது. உணர்வுப்பூர்வமாக வழிநடத்த ஒரு பெண்ணால்தானே முடிகிறது.
ஆவணிராஜாவும் நானும் பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது அவர் தன் பாட்டியைக் குறித்துச் சொன்னார். எந்த மண்ணில் வைரத்தம்மாள் பிறந்தாரோ,
அதே பிறந்த மண்ணுக்கு அவர் கைம்பெண்ணாய், தன் தந்தையை வயிற்றில் சுமந்தபடி அறுபத்தேழு
அல்லது அறுபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்தார் என்று.
ஒரு துயரம் கலந்த, புகுந்த வாழ்வின் சாட்சியமாய்
அவர் வந்த போது அவரின் மனதில் வைராக்கியமும், அவர் வயிற்றில் ஒரு குழந்தையும் இருந்தது.
இழந்த கணவருக்கு ஈடாக அவர் தம் மகவைப்
பெற்றெடுத்தார். அவரின் நம்பிக்கை, உழைப்பு, சோர்ந்து விடாத மனவுறுதி இன்று அவருடைய
பேரப் பிள்ளைகளாய், கொள்ளுப் பேரப் பிள்ளைகளாய் இன்று நம் முன் காட்சி தருகிறது.
அவருடைய வைராக்கியமும், நம்பிக்கையும்
கவனிக்கப்பட வேண்டியது. அது ஒரு வெறி கொண்ட வைராக்கியமோ, மனிதசக்திக்கு அப்பாற்பட்ட
நம்பிக்கையோ இல்லை. மனித வாழ்க்கைக்குத் தேவையான மிதமான வைராக்கியம், மிதமான நம்பிக்கை.
அதாவது சரியான வைராக்கியம், சரியான நம்பிக்கை, புத்தர் குறிப்பிடும் மத்திம வழியைப்
போல.
அவர் தம் மகனுக்கு படிப்பை விடவும் உழைப்பையும்,
ஒழுங்கையுமே அதிகம் சொல்லித் தந்திருக்கிறார். படித்து வேலைக்குச் சென்று பெரும் பொருள்
ஈட்டுவதை விடவும், வெளியூருக்குச் சென்று தொழில் செய்து பெரும் பணக்காரர் ஆவதை விடவும்
உள்ளூரில் தம்மோடு பாசமாக இருப்பதையே வலியுறுத்தியிருக்கிறார் ஓர் ஆலமரத்தின் வேரும்,
விழும் ஒரே மண்ணில் இருப்பதைப் போல.
படித்து அறிவு பெற்றாலும் தன் சொந்தக்காலில்
நிற்பதையே சிறந்த அறிவாக அவர் போதித்திருக்கிறார். சோர்ந்து போகாத உள்ளத்தையும்,
களைத்துப் போகாத உழைப்பையும் போற்றி ஒழுகச் சொல்லி அவர் முன்மாதிரியாக வாழ்ந்து
காட்டியிருக்கிறார்.
பெற்ற தாய், தகப்பன்களை முதியோர் இல்லத்துக்கு
அனுப்பி விடும் பிள்ளைகளின் காலக் கட்டத்தில் பாட்டியை கூடவே வைத்துக் கொள்ள வேண்டும்
என்ற நெறிப்பாட்டை பெயரன் தலைமுறைத் தாண்டி, தனது கொள்ளுப் பெயரன், பெயர்த்திக் காலம்
வரை அவர் ஒரு தலைமுறை மரபின் தொடர்ச்சியைக் கடத்தியிருக்கிறார்.
கடைகளில் அரிசி வாங்கும் காலக்கட்டத்தில்
அவர் தன் மறைவுக்கு முதல் நாள் வரை நெல் அவித்து, காய வைத்து பதப்படுத்தியிருக்கிறார்.
அவரது மறைவு ஒரு நாள் தள்ளிப் போயிருந்தால் காய வைத்த நெல் அரிசியாகி வீடு வந்திருக்கும்.
ஒரு வகையில் இச்சம்பவத்தைப் பார்த்தால் தனக்கான வாய்க்கரிசிக்காக கூட யாரும் மெனக்கெட்டு
விடக் கூடாது என்பதில் அவர் மிகுந்த அக்கறையாக இருந்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
யாரோ ஒருவர் கைம்பெண்ணுக்கென்ன எண்ணெய்
குளியல் என்று கேட்டதற்காக அவர், அதைத் தொடர்ந்த தன் வாழ்நாள் முழுவதும் எண்ணெய்க்
குளியலைத் தவிர்த்திருக்கிறார். அவர் தான்
செத்தாலும் தன் தலையில் எண்ணெய் வைத்து விடக் கூடாது என்பதைத்தான் அவர் தன்
கடைசி ஆசையாக முன் வைத்திருக்கிறார்.
ஆவணிராஜா சொன்னார், பாட்டிக்கு கடைசி
குளியலுக்கு எண்ணெய் வைக்கவில்லை, கசகசா போன்ற பொருட்களை அரைத்துதான் தலைக்கு வைத்தோம்
என்று. தன் தலைக்கு எண்ணெய் வைக்கக் கூடாது என்று சொன்னவர் யார் என்று கூட இறுதி வரை
அவர் தெரிவிக்க மறுத்து விட்டார் என்று சொன்ன போது ஆவணிராஜா தழுதழுத்தார்.
ஆவணிராஜா உட்பட அவரது குடும்பத்தாருக்கு
அவர் இன்னும் நீடுழி வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் வைரத்தம்மாளுக்கு தான்
நிறைவாழ்வு வாழ்ந்திருந்த திருப்தி இருந்தது. அவர் மரணத்தை வரவேற்கும் குதூகலத்துடன்
இருந்ததாகவே ஆவணிராஜா குறிப்பிட்டார். அவர் ஒரு கொண்டாட்ட மனநிலையோடு தன் மறைவை எதிர்கொண்டார்.
நம்மால்தான் அவர் மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மரணத்தைக் குதூகலத்தோடு எதிர்நோக்குவது
என்பது வாழ்வைப் புரிந்து கொண்டதற்கான ஞானம். அந்த ஞானத்தோடு அவர் ஒளி வீசியபடியே
அவர் விடைபெற்றிருக்கிறார்.
வாழும் வரை எப்படி அவர் ஒரு வைரமாக ஒளி
வீசினாரோ, அப்படியே மண்ணில் புதைந்த போதும் வைரமாகவே புதையுண்டு இருக்கிறார். வைரங்கள்
புதைந்தாலும் மக்குவதில்லை, சிதைவதில்லை. அவன் மண்ணிலிருந்து நம் மனதுக்கு வந்து ஒளிவீசிக்
கொண்டே இருப்பார். அவர்தான் வைரத்தம்மாள்.
(வைரத்தம்மாள் ஆவணிராஜாவின் தந்தை வழிப்
பாட்டி - 17.05.2019 அன்று நடைபெற்ற வைரத்தம்மாள் படத்திறப்பு நிகழ்வில் கட்டுரையாற்றியதன்
வடிவம்)
*****
Sema. Vera level.
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteஅருமையான கட்டுரை
ReplyDelete