18 May 2019

உருமினி நேரம்



செய்யு - 88
            வேற்குடி மாயன் மகன் சங்கரசாமி, கிருட்டிணசாமி மகன் பாபு, சாம்பமூர்த்தி மகன் புத்திசேகரன், சின்னகுட்டன் மகன் தேசிங்கு, சிவகடாட்சம் மகன் தீபபிரகாஷ் - இவர்கள் எல்லாம் வேற்குடி ஈஸ்வரியின் எழுத்தின் பரம விசிறிகளாக இருந்தார்கள். விகடன், குமுதம், குங்குமம், ராணி புத்தகங்களிலிருந்த படங்களில் குறியீட்டுப் படங்கள் போட்டு அப்புத்தகங்களுக்கு ஒரு குறியீட்டுத் தன்மையை உருவாக்கியவர்களும் இவர்களே.
            ஈஸ்வரியின் ஒரு வாசகக் கடிதம் வந்தால் போதும் இவர்கள் அதை ஓர் அசகாய சாதனை அளவுக்குப் புகழ்ந்து பேசுவார்களாம். அதற்காகப் பார்ட்டி வைத்தும் கொண்டாடுவார்களாம். இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் கிழக்குப் பக்கத்தில் இருந்த தோப்பில் ரொம்ப காலத்துக்கு ரகசியமாக நடைபெற்று இருந்திருக்கிறது.
            ஒரு பெண் தனியாகத் தோப்புக்குப் போவதைக் கிராமத்தில் இருப்பவர்கள் யாரும் கவனிக்க மாட்டார்களா என்ன? கிராமத்தில் நிச்சயம் அதைக் கவனிக்க மாட்டார்கள். ஒரு பெண் இயற்கை உபாதையைக் கழிக்கப் போகிறாள் என்பதைப் புரிந்து கொண்டு வெறு பக்கம் நகர்ந்து விடுவார்கள். இதனால் ரொம்ப காலத்துக்கு அவர்கள் சந்தித்து நடந்து வந்ததும், அவர்கள் பார்ட்டி வைத்து கொண்டாடி வந்ததும் யாருக்கும் தெரியாமல் இருந்தது. இது தவிரவும் லாலு மாமாவின் வீட்டின் முன் இருந்த கொட்டகையிலும் ஊருக்கேத் தெரியும் வகையில் அவர்கள் அரட்டை அடித்தும், பாராட்டியும் சீராட்டியும் சென்றிருக்கிறார்கள்.
            இதையெல்லாம் ஈஸ்வரி தனக்கு கிடைத்த பொக்கிஷங்களாக நினைத்து நினைத்து தினம் தினம் புளங்காகிதம் அடைந்து கொண்டிருந்தது. அந்த ஐவர் குழு மேல் ஈஸ்வரிக்கு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது. அந்த ஐவருக்கும் அதே போல் ஈஸ்வரி மேல் இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது. ஒரு கட்டத்தில் அந்த ஐந்து பேரும் ஈஸ்வரியைக் காதலிப்பதாக ஒருத்தருக்கொருத்தர் அவர்களுக்குள் தங்கள் மனதில் பகிர்ந்து கொள்ள அன்று ஆரம்பித்தது பிரச்சனை.
            மாயன் மகன் சங்கரசாமி தன்னைத்தான் ஈஸ்வரி காதலிப்பதாக கற்பூரம் அணைக்காத குறையாகச் சத்தியம் செய்திருக்கிறான். கிருட்டிணசாமி மகன் பாபு ஈஸ்வரி இல்லாமல் ஒரு நொடி கூட உயிர் வாழ முடியாது என்று அடித்துச் சொல்லியிருக்கிறான். சாம்பமூர்த்தி மகன் புத்திசேகரன் தான் ஈஸ்வரியை இழுத்துக் கொண்டு ஓடப் போவதாக கூறியிருக்கிறான். சின்னகுட்டன் மகன் தேசிங்கு தானும் ஈஸ்வரியும் சேர்ந்து வாழ்வதற்காக மன்னார்குடியில் வீடே பார்த்திருப்பதாக கதை அளந்திருக்கிறான். சிவகடாட்சம் மகன் தீபபிரகாஷ் தாங்கள் இருவரும் கேரளாவுக்கு போகப் போவதாகத் திட்டமிட்டிருப்பதாகக் கூறியிருக்கிறான். ஐந்து பேருக்குள்ளும் விழுந்து புரண்டு அடிதடி சண்டையாகி அதற்குப் பின் பேசாமல் இருந்திருக்கிறார்கள்.
            எவ்வளவு நாள் பேசாமல் இருப்பது? ஒருநாள் ஒன்றாகச் சந்தித்த ஐந்து பேர்களும் இது குறித்து ஈஸ்வரியிடமே கேட்பது என்றும், ஈஸ்வரி யாரை விரும்புவதாகச் சொன்னாலும் மற்றவர்கள் விலகிக் கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுத்திருக்கிறார்கள்.
            இதில் மாயன் மகன் சங்கரசாமி ஈஸ்வரி தன்னை விரும்புவதாகத்தான் சொல்லும் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருந்திருக்கிறான். அதே நேரத்தில் அவனுக்கு ஈஸ்வரியோடு ஓடிப் போகப் போவதாகவும், அவளுக்காக வீடே பார்த்திருப்பதாகவும் மற்ற நண்பர்கள் சொன்னதில் கொஞ்சம் தடுமாற்றத்தோடேயே இருந்திருக்கிறான்.
            லாலு மாமா வீட்டின் கிழக்குப் பக்கத்திலிருந்த தோப்பில் ரகசியமாகச் சந்திக்க சரியான நேரம் மதியம் ஒரு மணியிலிருந்து மூன்று மணி வரை. அந்த நேரத்தை வேற்குடியில் உருமினி நேரம் என்பார்கள். அந்த நேரத்தில்தான் தூக்கு மாட்டிக் கொண்டவர்கள், விஷம் குடித்துச் செத்தவர்கள், மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தவர்கள் எல்லாம் மினிகளாக மாறி தென்னை மரங்களில் உட்கார்ந்திருப்பார்களாம். அதனால் அந்த நேரத்தில் தோப்புப் பக்கத்திற்கு யாரேனும் போனால் அவர்களை ஒரே அடியாக இந்த மினிகள் அடித்து விடுவார்களாம். அப்படி மினி அடித்தால் அவர்கள் காய்ச்சல் கண்டோ, ரத்த வாந்தியும், ரத்தமாக வயிற்றுப் போக்குமாகியோ செத்து விடுவார்களாம்.
            ஈஸ்வரியின் வாசக நண்பர்கள் தங்களோடு சண்டை போட்டுக் கொண்டு இரண்டு நாட்களாக தோப்புக்கு வராமல் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு நாட்களும் ஈஸ்வரி தவித்துப் போய் விட்டது. மூன்றாவது நாள் அவர்கள் ஐந்து பேரும் அந்த உருமினி நேரத்தில் தோப்புக்கு வந்த போதுதான் ஈஸ்வரிக்குச் சந்தோசம்.
            அவர்கள் வந்தவுடன் அவர்கள் முகத்தில் இருந்த சஞ்சலத்தை ஈஸ்வரியால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர்கள் இரண்டு நாட்களாய் வராததற்கு ஈஸ்வரி கடிந்து கொண்டாலும், அதற்காக அவர்களை லேசாகத் திட்டு திட்டி விட்டு, "என்னங்கடா ஆச்சு லூசுகளா?" என்று கேட்டிருக்கிறது.
            இந்த விவகாரத்தை எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் ஐந்து பேரும் ஐந்து நிமிடத்துக்கு மேல் மெளனமாக நின்றிருக்கிறார்கள். கடகடவென்று எதையாது பேசி அதைக் கேட்டுப் பழக்கப்பட்ட ஈஸ்வரியால் அந்த அமைதியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மேற்கொண்டு அவர்களிடம் என்னக் கேட்பது என்றும் புரியவில்லை. அவர்களை ஏதேனும் மனம் நோகுமாறு ஏதேனும் வார்த்தையை விட்டு விட்டுமோ என்று ஈஸ்வரிக்கு மனதுக்குள் பயமாக இருந்தது.
            "செரிங்கடா! நாம்ம கெளம்புறேம்! வூட்டுல ரொம்ப நேரமாச்சுன்னு தேடுனாலும் தேடுவாங்க!" என்று ஈஸ்வரி சொல்லி விட்டு நகர ஆரம்பித்திருக்கிறது.
            "அதல்லாம் தேட மாட்டாங்க. சித்தே நில்லு!" என்றிருக்கிறான் பாபு.
            "ன்னடா ஆச்சு உங்களுக்கு?" என்றபடியே ஈஸ்வரியும் நின்றிருக்கிறது.   
            மறுபடியும் கனத்த மெளனம்.
            "போர் அடிக்குதுடா! எத்தாச்சும் பேசுங்க. ல்லாட்டா கெளம்ப வுடுங்கடா!" என்று கிளம்ப எத்தனித்திருக்கிறது ஈஸ்வரி.
            அதற்கு மேல் ஈஸ்வரியை நிற்க முடியாது என்பது ஐவருக்கும் புரிந்து போயிருக்க வேண்டும். "ஈஸ்ஸூ! எங்க அஞ்சு பேருல யார்ர ஒனக்குப் பிடிச்சிருக்கு?" என்று ஐந்து பேரும் ஒரே குரலில் கேட்டிருக்கிறார்கள்.
            ஈஸ்வரிக்கு அவர்கள் அப்படிக் கேட்டதும் சிரிப்பாகப் போய் விட்டது. அந்த உருமினி நேரத்தில் அந்தத் தோப்பில் பேய்ச் சிரிப்பு சிரித்திருக்கிறது.
            "இத்துன்னடா கலாட்டா. அஞ்சு பேரயும்தாம் பிடிச்சிருக்கு!" என்றிருக்கிறது ஈஸ்வரி.
            "அத்துல்ல ஈஸ்வரி. நாங்க கேக்கறது வேற!" என்றிருக்கிறான் தீபபிரகாஷ்.
            "வேறன்ன? ன்னா வேறன்னு சொன்னாத்தான்னே தெரியும்!" என்றிருக்கிறது ஈஸ்வரி.
            "அத்தாங் ஈஸ்ஸூ! அதேதாங்!" என்றிருக்கிறான் தேசிங்கு.
            "ஆம்புள பசங்கத்தான நீங்க! அத்தே அத்தேதாங்ன்னா! ன்னான்னு சொல்லித் தொலீங்க. ல்லே எடத்தக் காலி பண்ணுங்க. ன்னடா வேணும் ஒங்களுக்கு?" என்று லேசாக சவுண்ட் விட்டிருக்கிறது ஈஸ்வரி. அந்த சத்தத்தில் ஐவருக்கும் எங்கே ஈஸ்வரி தங்களைப் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுமோ என்ற பயம் தட்டியிருக்கிறது.
            சங்கரசாமிதான் மனதைத் திடப்படுத்திக் கொண்டு, எச்சிலைத் தொண்டையில் கஷ்டப்பட்டு முழுங்கிக் கொண்டு, "அத்து ஒனக்குத் தெரியும் ஈஸ்ஸூ! தெர்யாத மாரி நடிக்க வாணாம் ஈஸ்ஸூ!" என்றிருக்கிறான்.
            "நமக்கு ன்னாடா தெரியும்? மொதல்ல பொட்டப் பயங்க மாரி பேசுறது நிறுத்திட்டு ஆம்பளிங்க மாரிப் பேசுங்க!" என்றிருக்கிறது ஈஸ்வரி.
            ஆண்மைக்குச் சவால் விடப்பட்ட பின், புத்திசேகரன் பொறுமையாக கேட்டிருக்கிறான். "அத்து வந்து ஈஸ்ஸூ! நாங்க அஞ்சு பேரும்மே ஒம் மேல ஒரு இத்தா இருக்கோம். அத்தாங் எங்களுக்குள்ள சண்டய்யா போயிட்டு. ஒனக்கு எங்கள்ல யாரப் பிடிச்சிருக்குன்னு சொன்னின்னா மித்தவங்க ஒதுங்கிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம்!"
            "அத்த கூட ஒங்களால செரியா சொல்ல முடியல. நீங்க எப்புடிடா நம்மள வெச்சுக் காப்பாத்துவீங்க?" என்று ஈஸ்வரி அந்தத் தோப்பில் மறுபடியும் பேய்ச் சிரிப்பு சிரித்திருக்கிறது.
            "வெளயாடத ஈஸ்ஸூ! ஒனக்கு யார் மேல லவ்வு சொல்லு?" என்றிருக்கிறான் சங்கரசாமி.
            "ஒங்க அஞ்சு பேரயும்தாம்டா!" என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் அங்கு நிற்க வெட்கம் தாங்க முடியாமல் ஓடி வந்து விட்டது ஈஸ்வரி.
            அதில் மனம் உடைந்து போனவன்தான் சங்கரசாமி. இருக்காதே பின்னே? அவன்தான் ஈஸ்வரி மன்னார்குடி ஹாஸ்டலுக்குப் போகப் போகிறது என்று தெரிந்து அதிகம் துடித்து ஈஸ்வரி மன்னார்குடி போவதற்கு முன்னே மன்னார்குடி போனவன். அங்கே ஈஸ்வரிக்காகவே மன்னார்குடியில் ரூம் எடுத்துத் தங்கி, ஈஸ்வரி ஹாஸ்டலிலிருந்து தப்பித்து வந்த போது பத்திரமாக அழைத்து வந்தவன்.
            இப்போது சங்கரசாமி உட்பட ஐந்து பேருக்குமே ஈஸ்வரியின் பதில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதில் அதிக அதிர்ச்சி சங்கரசாமிக்கு ஏற்பட்டிருந்தது. அந்தப் பதிலை எப்படிப் புரிந்து கொள்வது என்று அவர்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள். சங்கரசாமி மற்றவர்களை விட மிக அதிகமாகவே யோசித்தான். மற்றவர்கள் கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்து விட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லாமல் கொள்ளாமல் தோப்பை விட்டு கிளம்பிப் போனார்கள். சங்கரசாமி அங்கேயே நின்றிருந்தான். அங்கேயே நின்று கொண்டிருந்த சங்கரசாமி தோப்பில் இருந்த உயரமான தென்னை மரத்தில் ஏறினான். ஏறியவன் தன் கழுத்தில் போட்டிருந்த  சிவப்பு நிற காசித் துண்டில் சுருக்கிட்டு தொங்கி விட்டான்.
            மாயன் குடும்பமே சங்கரசாமியின் அகால மரணத்தைத் தாங்கிக் கொள்ளாமல் தோப்பில் விழுந்து புரண்டு அழுதது. வேற்குடியில் இருந்த ஒவ்வொருவருக்கும் அப்படித்தான் விழுந்து புரண்டு அழ வேண்டும் என்று தோன்றியது. சங்கரசாமி மாயன் குடும்பத்தின் ஒரே பிள்ளை. குடும்பத்தின் வாரிசு அற்றுப் போய் விட்டதாக வேற்குடியே சோகத்தில் தள்ளாடியது.
            சங்கரசாமியின் அகால மரணத்துக்குப் பின் அந்தத் தோப்பின் அமானுஷ்யத் தன்மை அதிகமானது. அந்தத் தோப்பின் சக்தி வாய்ந்த மினியாகி அவன் தோப்பின் பக்கமே யாரையுமே அண்டவிடாமல் செய்தான்.
            ஈஸ்வரிக்கும் தோப்புப் பக்கம் போகவே பயமாக இருந்தது. நடுராத்திரிகளில் வியர்க்க விறுவிறுக்க எழுந்து உட்கார்ந்து கொண்டு சங்கரசாமி தன் மார்பைப் பிடித்து அழுத்துவதாகவும், தனக்கு மூச்சு முட்டுகிறது எனவும் சத்தமிட ஆரம்பித்தது ஈஸ்வரி.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...