17 May 2019

எல்லாம் ஒரு குறியீடு!



செய்யு - 87
            ஈஸ்வரிக்கு ஹாஸ்டலுக்குப் போன முதல் நாளே ஹாஸ்டலைப் பிடிக்காமல் போய் விட்டது. அன்றிலிருந்து ஹாஸ்டலை விட்டு எப்படித் தப்பி ஓடுவது என்று திட்டமிட ஆரம்பித்து விட்டது. ஹாஸ்டலைச் சுற்றி ஆள் ஏறி குதிக்க முடியாத அளவுக்கு பனிரெண்டு அடி உயர காம்பெளண்ட் சுவர் இருந்தது. அதனால் ஈஸ்வரி காம்பெளண்ட் சுவர் ஏறிக் குதிக்கும் திட்டத்தைக் கைவிட்டது.
            ஹாஸ்டலின் முன்பக்கம் பள்ளிக்கூடம். பள்ளிக்கூடத்தின் வெளியேதான் கேட் இருந்தது. கேட்டில் எந்நேரமும் ஒரு வாட்ச்மேன் இருந்தார். ஹாஸ்டலின் தெற்குப் பக்கத்தின் கடைக்கோடி ஓரத்தில் மட்டும் காம்பெளண்ட் சிறிது தூரத்துக்குக் கட்டப்படாமல் முள்வேலி வைக்கப்பட்டிருந்தது. அந்த முள்வேலியின் அந்தப் பக்கம் ஒரு பெரும் வாய்க்காலில் சாக்கடை ஓடிக் கொண்டிருந்தது. அந்த சாக்கடை வாய்க்காலில் இறங்கி ஏறினால் வாகனங்கள் அடிக்கடிச் செல்லும் சாலை வந்தது.
            ஈஸ்வரிக்கு முள்வேலியைப் பிரித்துக் கொண்டு சாக்கடை வாய்க்காலில் இறங்கி சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கு ஓடி வந்து விட வேண்டும் என்ற சங்கல்பம் ஏற்பட்டு விட்டது. ஹாஸ்டலில் இருக்கப் பிடிக்கவில்லை என்று சொல்வது ஈஸ்வரிக்கு அகெளரவமாகப் பட்டிருக்க வேண்டும். யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறும் முதல் முயற்சியாக ஹாஸ்டலில் சேர்ந்த இரண்டாவது நாள், ஈஸ்வரி எப்படியோ முள்வேலியைப் பிரித்துக் கொண்டு சாக்கடை வாய்க்காலில் இறங்கி விட்டது. பாதி வாய்க்கால் வரை எப்படியோ வந்து விட்டது. அதற்கு மேல் வயிற்றைப் புரட்டிக் கொண்டு வந்து விட்டது. மயக்கமே வந்து விடும் போலிருந்தது. யாராவது தன்னை இந்தச் சாக்கடை வாய்க்காலிலிருந்து தூக்கிக் கொண்டு போனால் பரவாயில்லை என்று ஈஸ்வரிக்குத் தோன்றி விட்டது.
            ஈஸ்வரிக்கு மனதில் தோன்றியபடிதான் நடந்தது. ஹாஸ்டலில் இருந்த ஒரு பெண் சாக்கடையில் இறங்கிப் பித்து பிடித்தது போல நிற்கும் ஈஸ்வரியைப் பார்த்ததும் சத்தம் போட, ஈஸ்வரியை அப்படியே அலேக்காகத் தூக்கிக் கொண்டு போய் ஹாஸ்டலில் வைத்து விட்டார்கள். ஈஸ்வரிக்கு அந்த இரவு முழுவதும் ஏகப்பட்ட உபதேசங்கள் ஹாஸ்டலில் வழங்கப்பட்டது. எந்த உபதேசமும் ஈஸ்வரியின் காதுகளில் ஏறியதாக இல்லை.
            ஈஸ்வரி மூன்றாவது நாளில் தன் இரண்டாவது தப்பிக்கும் வேதாள முயற்சியைத் தொடங்கியது. இந்த முறை முறையாக பள்ளிக்கூட கேட்டின் வழியாகவே யாரும் பார்க்காத நேரத்தில் வெளியேறுவது என்று முடிவெடுத்து ஒளிந்து ஒளிந்து வெளியேறிய போது ஹாஸ்டலிலிருந்து தேடிக் கொண்டு வந்து பிடித்து விட்டார்கள். இதில் ஈஸ்வரி பண்ண தவறு என்னவென்றால் அது சாயுங்கால ஹாஸ்டல் பிரேயர் நடக்கும் நேரத்தில் ஒளிந்து வெளியே நினைத்ததுதான். பிரேயர் ஆரம்பிக்கும் முன் ஹாஸ்டல் பிள்ளைகள் வரிசையாக ஒன், டூ, த்ரி,... என்று எண்ணிக்கை சொல்ல வேண்டும். அப்படி எண்ணிக்கைச் சொன்ன போது ஒன்று குறையவே வளாகத்தைச் சுற்றிப் பார்த்து கோழி அமுக்குவது போல ஒரே அமுக்காக ஈஸ்வரியைக் கொண்டு போய் விட்டார்கள். இந்த முறை ஈஸ்வரிக்கு திட்டுகளோடு, கொஞ்சம் அடிகளும் வழங்கப்பட்டன.
            இப்படியான தப்பிக்கும் முயற்சியில் நான்காவது நாள் மூன்றாவது அட்டெம்ப்டில்தான் ஈஸ்வரியால் தப்பித்து வெளியே வர முடிந்தது. தப்பித்து வெளியே வந்த பின் இவ்வளவு ஈஸியான வழியை தான் ஏன் சிந்திக்கவில்லை என்று ஈஸ்வரிக்கே தன் மேல் எரிச்சலாக வந்தது. ஈஸ்வரி வெகு சுலபமாக பள்ளிக்கூடம் விடும் நேரத்தில் பையைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடப் பிள்ளைகளோடு சேர்ந்து பள்ளிக்கூட பிள்ளைகளைப் போல வெளியே வந்து விட்டது. அப்படியே பஸ் ஸ்டாண்டை விசாரித்துக் கொண்டு பஸ் ஏறி ஊரில் வந்து இறங்கி விட்டது.
            தானாகவே பஸ் ஏறி ஹாஸ்டலை விட்டு ஈஸ்வரி வீட்டுக்கு வந்ததில் லாலு மாமாவுக்கு மனதின் ஒருபுறம் தாங்க முடியாத புளங்காகிதம் ஏற்பட்டாலும், லாலு மாமாவுக்கு என்ன தோன்றியதோ? அது அடுத்தக்கட்ட முதல் வேலையாக பஸ் பிடித்து ஹாஸ்டலில் போய் சத்தம் போட்டது. பதிலுக்கு ஹாஸ்டலில் இருந்தவர்களும் ஈஸ்வரி சாக்கடையில் இறங்கியது, ஒளிந்து ஒளிந்து தப்பிக்க முயற்சி செய்தது என எல்லாவற்றையும் சொல்லிக் காட்டமாகப் பேசியிருக்கிறார்கள்.
            லாலு மாமாவுக்கு இந்த இடத்தில் பெற்றப் பெண்ணை விட்டுக் கொடுப்பதாக? ஹாஸ்டலில் கட்டிய பணத்தை விட்டுக் கொடுப்பதா? என்ற குழப்பம். தன் குழப்பத்தை வெளிக்காட்டிப் பலவீனமாகி விடக் கூடாது என்று, "நீங்க ஆஸ்டல்ல எம் மொவள என்னென்ன கொடும பண்ணீங்களோ தெரியல. புள்ள அலங்க மலங்க அடிசசிட்டு ஓடி வந்துட்டு. நாம்ம கம்ப்ளெய்ண்ட் பண்ணாம விட மாட்டோம்! போலீஸ், கோர்ட்னு ஒண்ணு வுட மாட்டேம். எம்.எல்.ஏ., எம்.பி.ன்னு ஒருத்தர வுடாமப் பாத்து என்ன செய்யணுமோ அத்தே செய்யாம வுட மாட்டோம் பாருங்க!" என்று சத்தம் போட்டு, அதைத் தொடர்ந்து ஆக்ரோஷமாக உணர்ச்சிகரமாக சண்டை போட்டு ஹாஸ்டலுக்காகக் கட்டிய பணத்தை வாங்கிக் கொண்டு வந்து விட்டது.
            ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு, லாலு மாமா ஈஸ்வரியிடம், "ஆஸ்டல்ல போயி படிக்காட்டியும் பரவாயில்ல. தெனமும் போயிட்டு போயிட்டு வந்து படிக்கிறீயா?" என்று கேட்டுப் பார்த்தது.
            ஆஹாம் ஊகூம் என்று வித விதமாக தலையை ஆட்டி மறுத்தது ஈஸ்வரி.
            "வேற ஒமக்குப் பிடிச்ச மாரியா பள்ளிக்கூடத்துல சேத்து வுடவா?" என்றும் லாலு மாமா கேட்டுப் பார்த்தது. அதற்கும் ஆஹாம் ஊகூம் என்ற தலையாட்டல்தான் ஈஸ்வரியிடமிருந்த வந்தது.
            இப்படியாக ஹாஸ்டலில் போய் படிப்பதோ, மீண்டும் பள்ளிக்கூடம் போய் படிப்பதோ விடுபட்டாலும், தான் தொடர்ந்து படிப்பதை விட்டு விடக் கூடாது என்பதில் ஈஸ்வரி உறுதியாக இருந்தது. வீட்டுக்கு வரும் தினகரன் பேப்பரோடு அது கூடுதலாக ராணி, குங்குமம், ஆனந்தவிகடன், குமுதம் என்று டஜன் கணக்கில் பத்திரிகைகளை வாங்கிப் போட்டுக் கொண்டு படித்தது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதாக அந்தப் படிப்பு பயனற்றுப் போய் விடக் கூடாது என்பதற்காக படித்தப் பத்திரிகைகளுக்கு எல்லாம் தான் படித்ததைச் சிலாகித்துச் சிலாகித்து வாசகர் கடிதங்களைத் தப்பும் தவறுமாக ஈஸ்வரி எழுதிப் போட ஆரம்பித்தது.
            எவ்வளவு தப்பும் தவறுமாக எழுதிப் போட்டாலும் அதைத் திருத்தி 'வேற்குடி ஈஸ்வரி' என்ற பெயரில் சில முறை சில பத்திரிகைகள் அதைப் பிரசுரம் செய்தன. அப்படிப் பிரசுரம் ஆனவைகளைக் கத்தரித்து ஒரு நோட்டில் ஒட்டி வைத்துக் கொண்டு ஈஸ்வரி பெருமையாக் காட்டிக் கொண்டிருந்தது. அத்துடன் சமையல் குறிப்புகள், வீட்டு உபயோகக் குறிப்புகள், பொது அறிவுத் துணுக்குகள் என்று எழுதி விரிவான தளத்திலும் ஈஸ்வரி பயணிக்க ஆரம்பித்தது. எழுதிப் போட்டதில் ஒரு சில பிரசுரம் ஆயின. பல என்னவாயின என்று தெரியாத நிலைக்கு ஆளாயின. பிரசுரம் ஆன ஒவ்வொன்றும் ஈஸ்வரியின் ஆல்பம் நோட்டில் தவறாமல் போய் ஒட்டிக் கொண்டன. ஒரு சில பிரசுரங்களுக்கு சன்மானமும் ஈஸ்வரிக்கு வந்தது. அந்தப் பணத்தோடு ஒரு தாளில் எந்தப் பிரசுரத்துக்கான சன்பமானம் என்பதை ஒரு தாளில் எழுதி ஸ்டேப்ளர் போட்டு ரொம்ப பெரிதான ஜமென்ட்ரி பாக்ஸ் போன்ற ஒரு தகர டப்பாவில் போட்டு வைத்திருந்தது.
            லாலு மாமாவின் வீட்டுக்கு யாராவது போனால் கட்டாயம் ஈஸ்வரியின்  அந்த ஆல்பம் நோட்டையோ, தகர டப்பாவில் விவரத் தாளோடு இருந்த பண முடிப்பையோ பார்க்காமல் வர முடியாது என்ற நிலை உண்டானது. தெருவில் வருவோர் போவோரையும் அழைத்துக் காட்டும் அளவுக்கு ஈஸ்வரியின் ஆர்வம் இந்த பீல்டில் பொங்கிப் பிரவாகமாகி வழிந்தது.
            எப்போதோ சில முறை அப்போது விகடு லாலு மாமாவின் வீட்டுக்குப் போயிருக்கிறான். அப்போது ஈஸ்வரி பிரசுரமான ஆல்பம் நோட்டையும், பணம் வைத்திருக்கும் தகர டப்பாவையும் காட்டும். "இப்டி எளுதி எளுதியே நாம்ம லட்சக் கணக்குல சம்பாதிக்கப் போறோம் பாருடா விகடு!" என்று ஈஸ்வரி அழுத்தம் திருத்தமாகச் சொல்லும். அதைப் பார்க்கும் போது, தானும் ஈஸ்வரி போல பத்திரிகளைகளில் பிரசுரம் ஆகும் வகையில் எழுத வேண்டும் என்று விகடுவுக்கு ஆசை உண்டாகியிருக்கிறது. எல்லாம் லாலு மாமாவின் வீட்டில் இருக்கும் வரையில்தான். வீட்டை வந்து வெளியே வந்தால் அத்தனை ஆசைகளும் அடுத்த நொடியே மறந்து மறைந்து போனதால் அவனால் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியாமலே போய் விட்டது.
            அத்துடன் அப்போது லாலு மாமாவின் வீட்டுக்குப் போனால், தினகரனோடு நிறைய பத்திரிகைப் புத்தங்களும் பார்க்க, படிக்கக் கிடைத்தது.
            லாலு மாமாவின் வீட்டில் இருந்த ராணி, குமுதம், குங்குமம், ஆனந்தவிகடன் மற்றும் இன்னபிற குவிந்து கிடந்த புத்தகங்களில் எதை எடுத்தாலும் அதில் போடப்பட்டிருந்த படங்களில் ஏதேனும் குறியீட்டைப் பார்க்க முடிந்தது. அந்தப் படங்களை விட அந்தக் குறியீடுகள் விகடுவை மிகவும் கவர்ந்தது. அது குறித்து அவன் ஈஸ்வரியிடமே கேட்டான். "அதுடா விகடு! புக்க வாங்கிடடுப் போறாங்கள அவிய்ங்கப் பண்ணி வெச்சதுடா! ஒனக்கு ஏதும் புரியுதா?" என்றது ஈஸ்வரி.
            "ம்ஹூம்!" என்று தலையை ஆட்டினான் விகடு.
            ஈஸ்வரி ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டது.
            அந்தக் குறியீடுகளைப் பற்றிச் சொல்வதானால்... கோயில் படம் இருந்தால் அதில் ஒரு பால்பாய்ண்ட் பேனாவால் ஒரு டிக் இருக்கும். பஸ் ஸ்டாப் படம் இருந்தால் அதில் டிக் மார்க்கோ, இன்ட் மார்க்கோ இருக்கும். சேலை கட்டியிருக்கும் பெண்ணின் படம் என்றால் அந்த சேலையில் கலர் கலர் ஸ்கெட்சுகளில் ஏதோ ஒரு வண்ணத்தில் ஒரு இன்ட் மார்க் போடப்பட்டு அதைச் சுற்றி வட்டமிடப்பட்டிருக்கும். பெண்ணின் கன்னங்களில் ஹார்டினோடு அம்புக்குறி போடப்பட்டிருக்கும். இப்படி ஏதாவது படத்துக்கு ஏற்ப குறியீடுகள் இருக்கும்.
            "வெடலப் பசங்க வெளயாட்டுத் தனமா பண்ணி வெச்சிருக்கானுவ்வோ!" என்று லாலு மாமாவும் அந்தக் குறீயீடுகளைப் பார்க்கும் போது சொல்லும். அந்தக் குறியீடுகளின் அர்த்தமும், பின்னணியும் தெரிய ஓராண்டுக்கு மேலானது. வேற்குடி மாயன் மகன் சங்கரசாமி லாலு மாமாவின் வீட்டுக்கு கிழக்குப் புறத்தில் இருந்த தோப்பில் தூக்கு மாட்டிக் கொண்ட பிறகுதான் அந்தக் குறியீடுகளின் அர்த்தம் தெரிய வந்தது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...