6 May 2019

வேலங்குடி பெரிய மாமா



செய்யு - 76
            வேலங்குடி பெரிய மாமா ஆறடிக்கும் குறையாத உயரம். "நம்மள நிக்க வெச்சா ஒரு வூட்டுத் தூணுக்குச் செரிய இருப்பேம்! படுக்க வெச்சா ஒரு உத்தரத்துக்கு செரியா இருப்பேம்!" என்று அவரே சொல்வார். சிரித்த கலையான முகம் அவருக்கு. விகடமாகப் பேசுவதில் அவரை அடித்துக் கொள்ள ஆளில்லை. சிரிக்க சிரிக்க அப்படிப் பேசுவார். வேலங்குடியிலிருந்து திட்டை எப்படியும் ஏழெட்டு கிலோ மீட்டர் இருக்கும். திடீரென்று சாயுங்கால நேரங்களில் வேலங்குடி மாமா வீட்டில் வந்து நிற்பார். அவர் வந்து நிற்கும் நேரத்துக்கும் பஸ் திட்டைக்கு வந்து போகும் நேரத்துக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது.
            "எப்டி மாமா வந்தீங்க?" என்று கேட்டால், "ன்னம்மோ பாக்கணும்னு தோணுச்சி. அப்டியே குறுக்க வயக்காட்டுப் பக்கமா எறங்கி நடந்து வந்துட்டேம்." என்பார். அவர் நடக்கத் தேர்ந்தெடுப்பதெல்லாம் பெரும்பாலும் வயக்காட்டு ஒற்றையடிப் பாதைகள்தான். நல்ல வேளையாக அவர் இந்த வயக்காடுகள் எல்லாம் ப்ளாட்டுகளாக மாறுவதற்கு முன் இறந்தும் போய் விட்டார். இரவில் தங்கி குடும்ப விவகாரங்களையெல்லாம் பேசி விட்டு அவர் படுக்க எப்படியும் பதினோரு பனிரெண்டு மணி ஆகி விடும். ஆனால் அதிகாலையில் எழுந்து விடுவார். டீயைப் போட்டுக் கொடுத்தால் போதும், காலைச் சாப்பாட்டைக் கூட எதிர்பார்க்க மாட்டார். எப்படி வந்தாரோ அப்படியே கால்நடையாக நடந்து வேலங்குடிக்குப் போய் விடுவார். எவ்வளவு தூரமானாலும் நடந்து செல்வதில் அவருக்கு அலாதிப் பிரியம் இருந்தது. அவர் வேலங்குடியிலிருந்து திட்டைக்கு வருவதற்கும், திட்டையிலிருந்து வேலங்குடிச் செல்வதற்கும் சரியான நேரத்தில் பஸ் இருந்த போதும் அவர் நடந்துதான் வந்து கொண்டிருந்தார், நடந்துதான் போய்க் கொண்டிருந்தார். அதை விடவும் சைக்கிளில் சுலபமாக வரலாம் என்றால் அவர் சைக்கிள் விடக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் இல்லாமலே இருந்து விட்டார். "என்னாம்பி இங்க இருக்குற திட்டைக்கு சைக்கிளு மிதிச்சுதாம் வரணுமா? ல்ல பஸ்காருலதாம் வரணுமா? அங்கேந்து இங்க நாலு எட்டு, இங்கேந்து நாலு எட்டு!" என்பார்.
            அவர் வீட்டுக்கு வரும் நாட்களில் பெரும்பாலும் வீட்டில் ஏதோ ஒரு மாடு கன்று ஈன்றிருக்கும். அவருக்கு அந்த இரவு முழுவதும் மாட்டைக் கவனித்துக் கொண்டு அவ்வளவு வேலை இருக்கும். "நாம்ம வாரன்னு தெரிஞ்சிட்டு ஒம்ம வூட்டு மாடு கன்னு போட்டு நமக்கு வேல வைக்குது பாரு. யாங்கச்சி போறப்ப நாம்ம ஒம்ம வூட்டுக் கன்னுக்குட்டிய தூக்கிட்டுப் போறம் பாரு!" என்பார் வேலங்குடி மாமா. இதைக் கேட்டதும் செய்யு அழ ஆரம்பித்து விடுவாள். அவள் அழுவதைக் கொஞ்ச நேரம் பார்த்திருந்து விட்டு, "செரி செரி அழுவாதங்கச்சி! கன்னுகுட்டி இங்ஙயே இருக்கட்டும். நாம்ம ஒன்ன தூக்கிட்டுப் போயிடுறேம்!" என்பார். அதைக் கேட்டதும் இன்னும் வீறிட்டு அழுவாள் செய்யு. "ன்னாடா இது! மாட்டப் பாக்க கன்னுகுட்டிய கவனிக்க மாமங்காரம் வேணும். மாமங்காரனுக்கு ஒரு கன்னுகுட்டி தாரதுன்னா இப்படி அழுவதுங்கச்சி? செரி ஒன்னய தூக்கிட்டுப் போறன்னக்கா அதுக்கும் இப்படி அழுவதுங்கச்சி! ன்னா பண்ணலாம் சொல்லு?" என்பார்.
            "ச்சும்மாதானே வந்தீங்க! ச்சும்மாவே போங்க!" என்பாள் செய்யு.
            "வெறுங்கைய வீசிட்டு வந்தேன். அப்படியே வெறுங்கைய வீசிட்டுப் போங்குறா ஒங்க வீட்டு பாப்பா! ரொம்ப சமத்துதான்!" என்பார் அதைக் கேட்டு விட்டு வேலங்குடி பெரிய மாமா.
            அவர் வேலங்குடி வீட்டில் இருக்கும் நாட்களில் அதிகாலை நான்கரை மணிக்கு எழுந்தார் என்றால் கொட்டிலைக் கூட்டி சுத்தம் செய்து பாலைக் கறந்து கொண்டு வந்தார் என்றால் மணி சரியாக ஐந்து இருக்கும். அடுத்த ஐந்து நிமிடத்துக்குள் அத்தை அந்த பாலை வாங்கிக் கொண்டு போய் லோட்டா நிறைய டீ போட்டுக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். அந்த டீயை அவர் ரசித்துக் குடிக்க பத்து நிமிஷ நேரத்துக்கு மேலாகும். ஐந்தரை மணி வாக்கில் கிளம்பி வயக்காட்டுப் பக்கம் போனார் என்றால் திரும்ப வர பத்து மணி ஆகி விடும். வரும் போது வயக்காட்டையும் பார்த்து ஆக வேண்டிய வேலைகளைச் செய்து விட்டு தலையில் ஒரு புல் கட்டுடன் வருவார். புல்லுக்கட்டை இறக்கிப் போட்டு விட்டு வீட்டுக்கு வந்தார் என்றால் காலைச் சாப்பாடு தயாராக இருக்க வேண்டும். நிமிஷ நேரம் தாமதம் உதவாது. ஒருவேளை தாமதம் ஆகி விட்டால்... "ஒரு மனுஷம் கருக்கல்ல கெளம்பி வயக்காட்ட பாத்து ஒழச்சி களச்சித் திரும்புனா இந்தா தின்னுன்னு ஒரு புடி மண்ண அள்ளிக் கொடுத்தா கூடத்தாம் திம்பேம்! அத்தே அள்ளிக் கொடுக்க இந்த வூட்டுல ஆளிருக்கூ?" என்ற பேச ஆரம்பித்தால் அன்று அவருடைய பேச்சை நிறுத்த முடியாது.
            வேலங்குடியிலிருந்து திருவாரூர் எப்படியும் ஆறெழு கிலோ மீட்டர் இருக்கும். ஏராளமான பஸ்கள் ஓடிக் கொண்டிருந்த நாளிலும் அவர் நடந்து போய் திருவாரூரில் சாமான்களை வாங்கிக் கொண்டு திரும்பி வந்து விடுவார். "ஏம் மாமா இப்டி?" என்றால், "அட என்னாம்பி இப்படி குறுக்க ஒரு எட்டு வெச்சா மாங்குடி. அங்ஙனயிருந்து அப்படி நாலு எட்டு வெச்சா திருவாரூ. இதுக்கு காலு இருக்குற எந்த மனுஷனாவது பஸ் காருல போவானா?" என்பார்
            மாமாவுக்கு நடக்கும் போது ஒரு விஷேசமான பழக்கமும் இருந்தது. எதிரில் ஒரு பார்வை பார்த்து விட்டு பாதை நெடுக நேராக இருந்து யாரும் வர மாதிரி தெரியவில்லை என்றால் கண்களை மூடிக் கொண்டு தூங்கியபடி நடக்க ஆரம்பித்து விடுவார். அவர் அப்படி நடப்பதைப் பார்த்து நடையை ரசித்து நடக்கிறார் என்று சொல்லி விட முடியாது. அவர் தூங்கியபடி அப்படித்தான் நடப்பார். ஒருமுறை அவர் அப்படி தூங்கிக் கொணடே நடந்து ரோட்டோரத்தில் படுத்திருந்த காளை மாட்டின் மேல் நிலைதடுமாறி விழுந்து காளை மாடு இவரை எதுவும் செய்யாமல் விட்டது தனிக்கதை. அதை அத்தை செய்த புண்ணியம் என்று பேசிக் கொள்வார்கள். அவர் பெரும்பாலும் நடப்பதற்கு குறுக்கே விழுந்து செல்லும் வயக்காட்டு ஒற்றையடிப் பாதைகளை அதிகம் தேர்ந்தெடுப்பதற்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
            மாமாவைக் கேட்டால், "வயக்காட்டுல வுழுந்து நடந்து வந்தாதான் அது நட. அந்த ஒத்தயடிப் பாதயில காலு பட்டு நடந்தா மனுஷனுக்கு எந்த வியாதியும் வாராது!" என்பார். ஆனால் மாமா காளை மாட்டின் மேல் விழுந்து தப்பித்த அதற்கு அப்புறமும் அவர் தூங்கிக் கொண்டே நடந்து செல்லும் அப்பழக்கத்தை விட்டாரில்லை. அவரது நல்ல நேரம் அதற்குப் பிறகு மாடுகளுக்குக் காளை போடுவதற்குப் பதிலாக சினைபடுவதற்கு ஊசிபோடும் முறை வழக்கத்தில் வந்து, வண்டி மாடுகள் வைத்துக் கொள்வதும் குறைந்து போய் மொத்தத்தில் காளை மாடுகளே எண்ணிக்கையில் குறைந்து போய் இல்லாமலே போய் விட்டது.
            வேலங்குடி மாமாவைப் பற்றிப் பேச இப்படி நிறைய இருக்கிறது. அவருக்கு சுருட்டுப் பிடிக்கும் வழக்கம் இருந்தது. கிராமங்களில் சுருட்டுப் பிடிக்கும் அவரை நீங்கள் திருவாரூர் டவுனில் பார்த்திருந்தால் சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பார். "ன்னா மாமா சுருட்டுதானே பிடிப்பீங்க?" என்றால், "அது ஊரு பக்கம்பி. டவுன்ல வந்து நாகரிகமா இருக்கணுமா இல்லியா! இங்ங இதாம்பி ஊதணும். அங்ங அதாம்பி ஊதணும்! எடம் பாத்துல்ல எதயும் செய்யணும்!" என்பார்.
            வெள்ளை வெளீரென ஒரு வெள்ளை வேட்டி. இடுப்பில் பச்சை பெல்ட். மேலுக்கு வெளிர்நீல நிறத்தில் சட்டை. சட்டைப் பையில் ஒரு சிறிய டைரி மற்றும் நீலக் கொப்பிப் போட்டு வெள்ளை நிறத்தலான ரெனால்ட்ஸ் பேனா. தோளுக்கு அழகாக மடித்துப் போடப் பட்ட துண்டு. கையில் அந்தக் காலத்துப் பெரிதான செயின் உள்ள கடிகாரம். அந்தக் கைக்குள் ஒரு நியூஸ் பேப்பர். இப்படித்தான் திருவாரூர் டவுனில் நீங்கள் வேலங்குடி பெரிய மாமாவைப் பார்க்க முடியும்.
            இந்த வேலங்குடி பெரிய மாமா யார் என்றால்...
            அப்பாவோடு கூடப் பிறந்தவர்களில் அண்ணன் ஒருவர், அக்காக்கள் இருவர், தங்கை ஒருவர். அப்பாவின் மூத்த அக்காவின் வீட்டுக்காரர்தான் இந்த வேலங்குடி பெரிய மாமா. இவர் வேலங்குடி பெரிய மாமா என்பதால் வேலங்குடி சின்ன மாமா என்று ஒருவர் இருப்பார் என்று நீங்கள் நினைத்தால் அதுவும் சரிதான். அவர் அப்பாவின் ரெண்டாவது அக்காவின் வீட்டுக்காரர். இருவர் வீடுகளும் வேலங்குடியில் பக்கத்துப் பக்கத்தில்தான் இருந்தன. ஒரு வேலிதான் இரண்டு வீட்டையும் பிரித்தது, இரண்டு வீட்டையும் அடித்துக் கொள்ளச் செய்தது. குடும்ப விவகாரங்கள் அத்தனையையும் சிரிக்கச் சிரிக்கப் பேசி சமாதானமாக வைத்துக் கொள்ளும் வேலங்குடி பெரிய மாமாவால் தன்னுடைய தம்பியான வேலங்குடி சின்ன மாமாவோடு அப்படிச் சமாதானமாக சாகும் காலம் வரை இருக்க முடியாமல் போய் விட்டது. வேலங்குடி பெரிய மாமாவின் சாவுக்குக் கூட தம்பியான வேலங்குடி சின்ன மாமா வரவில்லை என்றால் நிலைமையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நேரம் வரும் போது அந்தச் சகோதர யுத்தத்தைப் பற்றியும் உங்களுக்குச் சொல்லி விடுகிறேன்.
            ஒரு சிரமமான காலக் கட்டத்தை நோக்கி விகடு தனது குடும்பத்தைத் தள்ளியிருந்தான். நரிவலம் ஹாஸ்டலிலிருந்து வந்த நாளிலிருந்து தினமும் அப்பா விகடுவை டிவியெஸ் பிப்டியில் காலையில் நரிவலம் பள்ளிக்கூடம் கொண்டு வந்து விடுவதும், மீண்டும் மாலையில் திரும்ப வந்து அழைப்பதுமாக அலைய வேண்டியதாகி விட்டது. ப்ளஸ் ஒன் பரீட்சை முடியும் வரை அப்படித்தான் விகடு தினந்தோறும் வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் போய் வந்து கொண்டிருந்தான்.
            இதோ ப்ளஸ் ஒன் முடிந்து விட்டது.
            இதே போல ப்ளஸ் டூவுக்கும் கொண்டு போய் விட்டு விட முடியுமா என்ன? அதுவும் காலை, மாலை என இரண்டு வேளையும் கொண்டு போய் விட்டு திரும்பி பின் மீண்டும் திரும்பப் போய் அழைத்து வருவது என்றால்... அதுவும் பள்ளி நாட்கள் அத்தனையும் என்றால்...
            அப்பாவுக்கு இரண்டு விதமான யோசனைகள் இருந்தன. ஒன்று, விகடுவிடம் டிவியெஸ் பிப்டியைக் கொடுத்து நரிவலம் போகச் சொல்வது. மற்றொன்று, குடும்பத்தை நரிவலத்தில் குடிபெயர்த்துவது. விகடு இருந்த உடல்நிலைக்கு அவருக்கு முதல் யோசனையை விட இரண்டாவது யோசனையே சரியாகப் பட்டிருக்க வேண்டும். தொடர்ந்து ஹாஸ்டலில் படிக்க வைப்பதில் அவருக்கு இனம் புரியாத ஒரு வெறுப்பு ஏற்பட்டிருந்தது.
            நரிவலத்தில் குடியேறுவது என்று முடிவெடுத்த பின் வாடகைக்கு வீடு பிடிக்க வேண்டுமே! நரிவலத்து வல்லாளத் தேவரைப் பிடித்தால் காரியம் ஆகி விடும் என்று அவரைப் பிடித்தால், அவர் தான் காலனி போல் கட்டியிருக்கும் மூன்றாவது வீடு காலியாக இருப்பதாகச் சொல்லி அங்கேயே இருந்து கொள்ளுங்கள் என்று சொல்லி வீடு தேடும் படலத்தை நாலைந்து அத்தியாயம் எழுதலாம் என்று நினைத்த என்னை அவ்வாறு எழுது விடாமல் ஆக்கி விட்டார்.
            திட்டை வீட்டிலிருந்து நரிவலத்துக்குக் குடிபெயர்ந்தால் இங்கே திட்டை வீட்டில் இருக்கும் மாடுகளை என்ன செய்வது?
            வேலங்குடி மாமாதான் கருப்பு மாடு மற்றும் அதன் ரெண்டு கன்றுகளையும் ஓட்டிக் கொண்டு போனார். உங்களுக்கே தெரியும் வைத்தி தாத்தாவின் வீட்டிலிருந்து வந்த அந்த கருப்பு மாடு நாட்டு மாடு. அதற்குப் பிறந்த கன்றுகள் ரெண்டும் கலப்பின மாட்டு வகையறா. ரெண்டு கன்றுகளில் மூத்தது செவலை. சினை பிடிக்காமல் நின்று கொண்டிருந்தது. சிறியது வெள்ளை. சினை பிடித்து கன்று போடும் நிலையில் நின்று கொண்டிருந்தது. தாய் மாடான கருப்பும் சினையாகத்தான் நின்று கொண்டிருந்தது.
            இப்போது யோசித்துப் பார்த்தால் எப்படி ஒரு அசெளகரியமான நிலையை இந்த இடம்பெயர்வு அப்போது ஏற்படுத்தி இருக்கிறது என்பது புரிகிறது. வேலங்குடி மாமா அப்பாவிடம் அடித்துச் சொன்னார், "மாடு கன்னுகள இங்ங வெச்சு நாம்ம பாத்துக்குறோம். நீங்க அங்ங புள்ள குட்டிகள நல்ல விதமா பாத்துட்டு வாங்க!" 
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...