8 May 2019

கவச குண்டல குடங்கள்



செய்யு - 78
            கோடைக்காலமோ, மழைக்காலமோ நரிவலம் எப்போதும் தண்ணீர் பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தது. மழைக்காலத்தில் குளங்கள் நிரம்பியிருக்கும். குளிப்பதற்கானப் பிரச்சனை இருக்காது. குடிப்பதற்கான தண்ணீரை அலைந்து திரிந்துதான் பிடித்து வர வேண்டும். ஒரு நல்லவனால் சுற்றியுள்ள எல்லாரின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது என்பது போல நரிவலத்தில் இருந்த நல்ல தண்ணீர்க் கிணறுகளால் நரிவலத்தின் ஒட்டு மொத்த தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் இருந்தது.
            நரிவலத்திலிருந்து காலையிலும் மாலையிலும் சைக்கிளில் தண்ணீர் பிடிக்க களக்காட்டுக்கு போவதுமாக வருவதுமாக ஒரு கூட்டம் இருந்து கொண்டிருக்கும். பொழுது விடிவதற்கு முன்பிலிருந்தே கேரியரில் நான்காக மடித்த சணல் சாக்கைப் போட்டு இருபக்கமும் கயிற்றால் கட்டப்பட்ட ப்ளாஸ்டிக் குடங்களோடு சைக்கிள்கள் வேக வேகமாக விரைந்து கொண்டிருக்கும். கொஞ்சம் வசதியானவர்கள் டிவியெஸ் பிப்டியிலும், பஜாஜ் எம்மெயிட்டியிலும் ரெண்டு பக்கமும் ப்ளாஸ்டிக் குடங்களைக் கட்டிக் கொண்டு விர் விர்ரென்று போய்க் கொண்டிருப்பார்கள். பணமிருப்பவர்கள் பணம் கொடுத்து தண்ணீர் கொண்டு வரும் ஒற்றை மாட்டு வண்டியில் பிடித்துக் கொள்வார்கள்.
            நரிவலத்தில் பொழுது புலர்ந்தவுடன் சத்தமிடும் குருவிகளுக்கு அதிக வேலை இருக்காது. அந்த அதிகாலை இருட்டில் தண்ணீருக்காக ப்ளாஸ்டிக் குடங்களோடு போய்க் கொண்டிருக்கும் சைக்கிள் மணியோசை குருவிகளையும் சேர்த்து எழுப்பி விட்டுக் கொண்டிருக்கும்.
            கலர் கலர் ப்ளாஸ்டிக் குடங்களோடு தண்ணீர் பிடித்து வருவதைப் பார்த்துக் கொண்டுதான் நரிவலத்தில் அதிகாலைச் சூரியன் விடியத் தொடங்கும். அதே போல சாயுங்காலம் சைக்கிளிலும், டூவீலரிலும் போய்க் கொண்டிருக்கும் கலர் கலர் குடங்களைப் பார்த்து விட்டுதான் சூரியன் மறையத் தொடங்கும்.
            விகடுவுக்கு ஒரு பழக்கம் இருந்தது. இரவு எவ்வளவு தாமதமாகப் படுத்தாலும் அதிகாலையில் சீக்கிரம் எழுந்து விடுவான். செய்யுவுக்கும் ஒரு பழக்கம் இருந்தது. இரவு எவ்வளவு சீக்கிரம் படுத்தாலும் அதிகாலை தாமதமாக எழுவாள். வழக்கமாக தாமதமாக எழும் செய்யு நரிவலத்தில் இருந்த மட்டும் சீக்கிரம் எழத் தொடங்கினாள். நரிவலம் சீக்கிரம் எழுந்தால்தான் அன்றைய தண்ணீர்த் தேவையைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற சூழ்நிலை இருந்தது. அதிகாலையில் இரை தேடத் தொடங்கும் பறவைக்கு நிறைய இரை கிடைக்கும் என்பது போல நரிவலத்தில் அதிகாலையில் தண்ணீர்க் குடங்களுடன் செல்பவர்கள் நிறைய குடங்களில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்து விட முடியும். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமாகி காத்திருந்து பிடிக்க வேண்டியிருக்கும். இருபது குடங்கள் பிடித்து வந்தால் அன்றைய தண்ணீர்த் தேவை முடிந்தது.
            தண்ணீர்ப் பிடிப்பதற்காகவே அப்பா திட்டையிலிருந்த சைக்கிளையும் எடுத்துக் கொண்டு வந்து போட்டிருந்தார். விகடு காலையில் தண்ணீர் பிடிக்க கிளம்பினால் செய்யுவும் எழுந்து கிளம்பி விடுவாள். சைக்கிள் கேரியரில் சணல் சாக்கைப் போட்டு கயிறு கட்டப்பட்ட இரட்டைப் பிளாஸ்டிக் குடங்களை எடுத்து வைத்து விகடு சைக்கிளில் காலை ஊன்றி ஏறிக் கொண்டால் செய்யு சைக்கிள் கேரியரில் ஏறி உட்கார்ந்து கொள்வாள். அவள் கையில் கையடக்கமான சுமாராக ரெண்டு லிட்டர் அளவு பிடிக்கும் சிறிய ப்ளாஸ்டிக் குடம் ஒன்றிருக்கும். அப்பாவுக்கு இது சாகசமானப் பயணமாகப் பட்டதால் பல நேரங்களில் தடுத்துப் பார்த்ததும் செய்யு அழுது அடம் பிடித்து எப்படியும் சைக்கிளில் வந்து விடுவாள். சில நேரங்களில் சைக்கிளில் முன்னே இருக்கும் கம்பியிலும் அவள் அமர்ந்து கொள்வாள்.
            நரிவலத்தில் இருந்த ஒவ்வொரு குழந்தைக்கும் அலைந்து திரிந்து தண்ணீர் பிடிக்கும் குணம் இரத்ததிலேயே கலந்திருந்தது. நரிவலத்தில் வந்து குடியேறிய சில நாட்களிலேயே அந்தக் குணம் செய்யுவுக்கும் ஒட்டிக் கொண்டதை நினைத்த போது விகடுவுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஒவ்வொரு ஊருக்குப் போனால் ஒவ்வொரு குணம் ஒட்டிக் கொள்ளும் போலிருக்கிறது.
            அநேகமாக நீங்கள் நரிவலத்தில் இருந்த சைக்கிள்களில் ப்ளாஸ்டிக் குடங்கள் தொங்காத சைக்கிள்களைப் பார்க்க முடியாது. ஒரு விஷேசத்துக்கு வெளியே போனாலும் வரும் போது ரெண்டு குடம் தண்ணீர் பிடித்துக் கொண்டு வரலாம் என்று எல்லாருடைய சைக்கிளலும் எப்போதும் ப்ளாஸ்டிக் குடங்கள் தொங்கிக் கொண்டிருக்கும். ஒரு வகையில் சொன்னால்,             கவச குண்டலங்களோடு ஒட்டிக் கொண்டு பிறந்த கர்ணனைப் போல நரிவலத்தின் சைக்கிள்கள் எல்லாவற்றிலும் இரட்டைப் பிளாஸ்டிக் குடங்கள் ஒட்டியபடி இருந்தன.
            களக்காட்டு கடைத்தெருவுக்கு சற்று முன்னதாக வலப்பக்கம் பிரியும் சம்புடத் தெரு முனையில் இருந்த பைப்பில் தண்ணீர் பிடிக்கும் கூட்டம் அள்ளும். தண்ணீர் பிடிப்பவர்கள் குடங்களில் அடித்துப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அநேகமாக அதுதான் நரிவலத்திருந்து வருபவர்களுக்கு மிக அருகில் இருந்த தண்ணீர் பிடிக்கும் பைப்பாக இருந்தது. கயிறு கட்டப்பட்டிருக்கும் சோடி குடங்கள் இரண்டிலும் தண்ணீரை அடித்து சோடிக் குடங்கள் ரெண்டையும் ரெண்டு கைகளில் அலாக்காக அப்படியே பிடித்துத் தூக்கி கேரியரில் வைத்து அசாத்தியமான வேகத்தில் கிளம்பிக் கொண்டு இருப்பார்கள். தினம் தினம் தண்ணீர் தூக்கித் தூக்கி அந்த அசாத்தியமான வேகம் தண்ணீர் பிடிக்கும் எல்லாருக்கும் வந்திருந்தது. அதில் நொடி நேரம் தாமதம் நேர்ந்தாலும், "என்னடா சொணங்கிட்டு நிக்குறே! தள்ளு அந்தாண்ட!" என்று சொல்லியபடி பக்கத்தில் காத்துக் கொண்டிருப்பவர் அடித்துத் தூக்கி கேரியரில் வைத்து விடுவார். கொஞ்சம் நிதானமாக அடித்துத் தூக்க விரும்பினால் சம்புடத் தெருவில் ஒரு பர்லாங் தூரம் சென்றால் ஒவ்வொரு தெரு திருப்பத்துக்கும் ஒரு பைப்பு இருந்தது.
            விகடு நரிவல மக்களின் வேகத்துக்கு அடித்துத் தூக்கும் ஆற்றல் பெற்றிருந்தாலும் செய்யுவுக்கு அவள் எடுத்து வந்த சிறு ப்ளாஸ்டிக் குடத்தில் அவளே அடித்துத் தூக்க வேண்டும். இல்லையென்றால் முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு வருவாள். அவள் அடித்துத் தூக்கும் வேகத்துக்கு சம்புடத் தெரு முனையில் இருக்கும் பைப்பு வேலைக்காகாது என்பதால் விகடு ஒரு பர்லாங் சென்று அங்கிருக்கும் பைப்பில் அடித்துத் தூக்குவதை வழக்கமாக இருந்தான்.
            விகடு ரெண்டு குடங்களிலும் அடித்துத் தூக்கியதும், செய்யு அவளது சிறு குடத்தில் தூக்கிக் கொள்வாள். விகடு காலை ஊன்றி சைக்கிளில் ஏறிக் கொண்டால் அவள் குடத்தோடு கேரியரில் உட்கார்ந்து கொண்டு மடியில் குடத்தை வைத்துக் கொள்வாள். சைக்களில் வர வர குடத்திலிருந்து தண்ணீர் தளும்பி தளும்பி அவள் மடியில் ஊற்ற ஆரம்பிக்கும். "ஏம்ணே! இப்படி ஆட்டி ஆட்டி சைக்கிள வேகமா ஓட்டுற. மொல்லமா ஆட்டாம ஓட்டுண்ணே!" என்பாள் செய்யு. அவள் சொல்லும் வேகத்தில் சைக்கிளை விட்டால் தண்ணீர் பிடித்து முடிப்பதற்குள் ஏழு மணியைக் கடந்து விடும் என்பது விகடுவுக்குத் தெரியும். அவன் வேக வேகமாக மிதிப்பான்.
            வீட்டுக்கு வரும் போது செய்யு நனைந்த கோலத்தில் கேரியலிருந்து இறங்குவாள். "இவ வேற தண்ணி பிடிக்கப் போறன்னு காக்குடமும் அரக்கொடமும் கொண்டாந்து நனஞ்சு நனஞ்சு வந்து நிக்குறா! ஏன்டா இவள வுட்டுட்டுதான் போயித் தொலயேம்! ஆகாத வேலய்க்கு ஆத்தக் கட்டி எறைக்குறதுக்கு அறுபது பேராடா?" என்று அம்மா சத்தம் போடும்.
            எப்படியும் ஆறரை மணிக்குள் தண்ணீர் பிடிக்கும் வேலை முடிந்தால் குளித்து சமையல் முடித்து பள்ளிக்கூடம் கிளம்ப நேரம் சரியாக இருக்கும்.
            ஒரு நாள் தண்ணீர் பிடிக்கப் போய்க் கொண்டிருந்த போது செய்யு கேட்டாள், "ஏம்ணே! இப்படி இங்ஙயிருந்து தண்ணிப் பிடிக்க அலயுறதுக்கு இங்ஙயே குடி வந்திருக்கலாம்லண்ணே!". செய்யு சரியாகத்தான் கேட்டாள். அது சரியான யோசனைதான். நரிவலத்தில் குடி வந்ததுக்குப் பதில் களக்காட்டில் குடி வந்திருக்கலாம். இப்படித் தண்ணீருக்காக அலைய வேண்டியிருந்திருக்காது. தண்ணீர் பிரச்சனையே இருந்திருக்காது.
            ஒரு கணம் செய்யுவின் புத்திசாலித்தனமாக சிந்தனையில் அசந்து போன விகடு செய்யுவிடம் கேட்டான், "எப்படிப் பாப்பா ஒனக்கு இப்படியெல்லாம் யோசன வருது?"
            "தெனமும் காலயில தண்ணித் தூக்குறதுக்கு இங்ங அலஞ்சிட்டு அப்புறம் சாயுங்காலம் போண்டாவும், சமோசாவும் திங்குறதுக்கு அங்ஙயிருந்து இங்ங நடந்து வர வேண்டியிருக்குல்ல. இங்ஙயே குடியிருந்தோம்னோ எவ்ளோ சுலுவா இருக்கும்!" என்றாள் செய்யு.
*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...