12 May 2019

ரெட்டிச்ச வேல



செய்யு - 82
            வீட்டுச் சுவர்களை எப்படித் தூக்கி நிறுத்துவது என்பது புரியாமல் தவித்தார் அப்பா. கறையான் ஏறி எல்லா பக்கச் சுவர்களும் பலமிழந்து போயிருந்தன. சுவருக்கு வெளியே மூங்கில் கால் போட்டு கூரைக்கு தாங்கல் கொடுக்கப்பட்டது.
            வீட்டில் கால் வைத்த இடமெல்லாம் தரை முழங்கால் அளவுக்கு உள்ளே வாங்கியது. பெருச்சாளிகள் வஞ்சனையில்லாம் தரை முழுவதும் வளைத் தோண்டி வைத்திருந்தன. ஏழெட்டு மாட்டு வண்டிகளில் மணலை அடித்து அதுவும் ஓரளவு சரி செய்யப்பட்டது. வீட்டின் தரை அதனால் உயர கூரையையும் அதனால் தூக்க வேண்டியதாகிப் போனது. வீட்டைச் சீர் செய்ய எந்த வேலையில் கை வைத்தாலும் அது இரட்டித்த வேலையில் போய் முடிந்தது.
            எல்லாவற்றயைும் பார்த்துக் கொண்டிருந்த அம்மாவுக்குக் கோபம் கோபமாக வந்தது.
            "ஒரு வீட்ட தூக்கி நிறுத்துற வயசுல இந்தப் பய பண்ண வேலயால இந்த மனுஷன இப்படி வீட்டத் தூக்கி நிறுத்துற மாதிரி பண்ணிப்புட்டானே! ஊரு ஒலகத்துல ஒண்ணொண்ணும் என்னம்மா கண்ணும் கருத்துமா இருக்குது. இவம் என்னான்னா மனுஷன் குடியிருந்த வீட்ட இப்படி கறையானுக்கும், பெருச்சாளிக்கும் குடியிருக்குற மாரி பண்ணிப்புட்டானே! ஒண்ணுஞ் சொல்லக்கூடாது. கோவம் மட்டும் வந்துடும். ஏலே நீயும் ஒங்கப்பனும் சேந்து வேலங்குடி போயி மாடுகளயாவது ஓட்டிட்டு வாங்கடா! நல்ல பாலு குடிச்சு நாளாகுது. நம்ம வீட்டுப் பாலு வீணாகுது. காலயில சாணி கரச்சுப் போட வக்கில்லாம நாலு வூட்டுக்கு அலய வேண்டியதாருக்கு!" என்று அம்மா சத்தம் போட்டது.
            நரிவலத்திலிருந்து திட்டைக்கு வந்த செய்தி வடவாதி வைத்தி தாத்தா வீட்டுக்கு தெரிந்ததும் சாமியாத்தா அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்தது. அந்த நேரத்தில்தான் அம்மா சத்தம் போட்டுக் கொண்டிருந்தது.
            "ஆனது ஆயிப் போச்சு. இனுமே அவனப் பேசி என்னாவப் போவுது? அவன வாரச் சொல்லு. துன்னுரு போட்டு வுடறேம்!" என்றது சாமியாத்தா.
            "அவம் இப்போ இருக்குற ஷோக்குல வுட்டா நாலு பேருக்குத் துன்னுரு அடிப்பாம்! உண்டியல்ல ஒத்த காசி போட வுடுறானா? அது செரி! நீ யாம் இப்ப வந்தே? நாங்க இருக்கோமா இல்லியான்னு பாக்க வந்தியா?" என்றது அம்மா.
            "நாம்ம கெடக்குற பாடு நாதியத்த பாடா இருக்குது. ஏத்தோ ஊரு விட்டு ஊரு போயி ஊரு திரும்ப வந்திருக்கியோளேன்னு வந்து பாக்க வந்தா இன்னா சலம்பு சலம்புறீயே!"
            "ஒனக்கென்ன கொற? அதாம் ஒன்னயும் ஒம்ம வூட்டயும் பாக்க மருமவ வந்திட்டா? பெத்த பொண்ணுங்கள ஒம்ம கண்ணுக்குத் தெரியுமா?"
            "அத யாண்டி நாம்ம படுற பாட்ட கேட்குறே? நாம்ம படுற பாட்டச் சொன்னா நம்ம ஊரு வாரிக்காரத்தாம் தாங்குமா? சிந்துற கண்ணீர தேக்கி வெய்க்க பெருமா குளம்தாம் பத்துமா? ஒத்த சோறு போடுறாளா ஒசத்தின்னு நாம்ம கட்டிக்கிட்டு வந்த மருமொவ்வோ! வயசான காலமுன்னு பாக்குறளா வெவரம் பாத்து நாம்ம கட்டிட்டு வந்த மருமொவ்வோ! தாயி போல பாத்துக்குறாளா தங்கம்னு நாம்ம கட்டிட்டு வந்த மருமொவ்வோ! கடசி காலத்துல கஞ்சிதாம் ஊத்துறாளா குத்துவெளக்கு போல நாம்ம கட்டிட்டு வந்த மருமொவ்வோ!" என்று புலம்ப ஆரம்பித்து விட்டது.
            "ஏம் இப்படி ஒப்பாரி வெய்க்குறே? பொண்ணுங்கள இன்னா பாடு படுத்துனே நீ? இப்போ மருமவளே வெச்சி வேலய்ய வாங்க வேண்டித்தானே!" என்றது அம்மா.
            "ஏம் முதுக அரிக்குதுன்னு இவ வூட்டுல வந்து கொள்ளிக்கட்டய எடுத்து சொரிஞ்சுக்குவனா?" என்று அழ ஆரம்பித்தது சாமியாத்தா.
            "அடச் சீ! இப்போ நீ நிறுத்துறியா இல்லியா? நாம்மளே வெந்து நொந்து நொம்பலப்பட்டு வந்து கெடந்தா நீ வேற வந்து ஒப்பாரி வைக்குறீயா?" என்றது அம்மா.
            "அவ்வே எங்கேடி? பாக்கணும்னுதாம் ஓடியாந்தேம்!"
            "யாரு ஒம்ம பேத்தியா? இத்தோ இருக்குறானே ஆம்பள பய. நாலு தெரு சுத்தி வந்து ஓடுற பாம்ப மிதிச்சிட்டு வாரணும். வூட்ட வுட்டு அந்தாண்ட இந்தாண்ட நகர மாட்டேங்றாம். அந்தக் குட்டி இருக்காளே! அடக்க ஒடுக்கம் ஐயனாரு கோயிலு கண்ணடக்கமா வீடு தங்குறாளா? எங்கதாம் போறாளோ? என்னதாம் பண்ணுறாளோ? விளையாடறேம் விளையாடறேம்னு நிமிஷ நேரம் தங்க மாட்டேங்றா?"
            "ஏட்டி ஒங்கப்பம்காரு மூலம் வந்து கெடக்குறாரே! ஒரு எட்டு வந்து பாக்கணும்னு கூடவா தோணல ஒனக்கு?"
            "இத்து ன்னா புதுக்கதய இருக்கு? அத்து எப்பயிலேந்து?"
            "தேன்காடு, சிப்பூரு, பாகூரு, வாழ்க்கப்பட்டுன்னு எல்லா சிறுக்கியும் வந்து பாத்துட்டாளுவோ! நீ ஒருத்திதாம் பாக்கி. ஏம் அவருதாம் வந்துப் பாத்தா ன்னா?"
            "அவரு வந்து பாக்குற மாதிரியா பேசி வெச்சிருக்கீங்க? பேசுறதெல்லாம் பேசுறது! பண்றதயெல்லாம் பண்ணிப்புடறது! அப்புறம் பேசல, புழங்கல கொள்ளலன்னு துக்கம் கொண்டாடுறது! இத்தே வேலய போச்சுல்ல ஒங்களுக்கு?"  என்றது அம்மா.
            "சித்த அவர்ர ஒம்ம வூட்டுக்காரர்ர வரச் சொல்லி அவருகிட்ட சின்னப்பய கலியாணத்தப் பத்திப் பேசச் சொல்லு. வயசாயிட்டே போகுதுடி. அவம்தேம் இப்போ அவர தூக்கிப் போட்டு சுத்தம் பண்ணி சாப்பாடு போட்டு பாத்துகிட்டு இருக்காம்! மூத்தப்பய பொண்டாட்டிதாம் அப்படி ஆயிடுச்சு. இவனுக்காவது சீக்கிரம் பாத்து கலியாணம் பண்ணி வெச்சா அவனுக்கு வாரவளாவது நம்மள கண்ணும் கருத்துமா பாத்துப்பா!" என்றது சாமியாத்தா.
            "அப்போ நீ எங்கள யாரயும் பாக்க வரல்ல. ஒம் பையனுக்கு பொண்ணு பாத்து கலியாணம் பண்ணி வையின்னு சொல்லத்தான் வந்தேயில்ல. மொதல்ல எழுந்திரி. கெளம்பு நீ!" என்று அம்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே வெளியே போன செய்யு ஓடி வந்தாள்.
            "ஏய் யாத்தா! எப்போ வந்தே நீ?" என்றாள் செய்யு.
            "வாடி ஏம் ராசாத்தி! எங்கேடிப் போயித் தொலஞ்சே? ஒம்ம ஆயிகிட்ட திட்டு வாங்கி நமக்கு மாளல." என்றது சாமியாத்தா.
            "இன்னிக்கு வந்து ன்னா பாட்டு பாடுனே!"
            "அடிப் போடிப் போக்கத்தவளே! ஒம்ம தாத்தங்காரர்ரு ஒடம்புக்கு முடியாம கெடக்குறாரு. அப்பாவ அழச்சிட்டு வாயேம்!"
            "என்னத்த சமச்சிப் போட்டு எங்க தாத்தன படுத்த படுக்கையா போட்டு வெச்சிருக்குறே?"
            "நம்மள எங்கேடி சமச்சிப் போட வுடுறாவ்வோ! வேண்டாத மாமியா கை பட்டா குத்தம், காலு பட்டா குத்தம்னு ஒதுங்கிப் போயி கெடக்கிறேம் நானு. எல்லாம் ஒம்ம மாமிகாரிதாம் சமச்சிப் போடுறா. ஒம்ம சின்ன மாமங்காரதாம் தட்டுல எடுத்துப் போட்டுக் கொடுக்கறாம்."
            "ஆத்தாவுக்கு லோட்டாவுல டீ போட்டுக் கொடுத்தியா?" என்ற அம்மாவைப் பார்த்துக் கேட்டாள் செய்யு.
            "ம்ஹூம்! நம்ம வூட்டுல மாடு இருக்குது பாரு. அண்டா அண்டாவா கறக்குது பாரு. வூட்டுக்கு வந்த நேரந்தொட்டுச் சொல்றேம். மாட்டப் போயி ஓட்டிட்டு வாங்கடான்னு. ஒண்ணுக்கு ரண்டு மாடு ரண்டு கண்ணு போட்டு அங்க வேலங்குடியில நிக்குது. பத்தாதுக்கு ஒண்ணு செனயா நிக்குது. ஓட்டிட்டு வார நாதியில்ல. நம்ம வூட்டுச் சோலிய பாக்க யாரு இருக்கா சொல்லு. இப்பதாம் வூட்டக் கெளப்பிட்டுப் போயி கொண்டாந்து சேத்துருக்கேம். இதுல இந்தக் கெழவி வேற வந்து மறுபடியும் வூட்டக் கெளப்பிட்டு வந்து பாத்துட்டுப் போன்னு சொல்லுது பாரு. எல்லாம் வந்ததும் வாராதுமா தம்மோட வேலயிலதாம் நிக்குது. ஒப்பன அழச்சிட்டுப் போயி தாத்தனப் பாத்துட்டு வாங்க!" என்றது அம்மா சலிப்பாக.
            "ஏம்மா நீ வாரலியா?" என்றாள் செய்யு.
            "நாம்ம வந்தா இந்த வூட்டுச் சோலிய யாரு பாக்குவா? ஒம்ம அண்ணேன் புடிச்சு வச்ச புள்ளயாரு மாரி உக்காந்திருப்பாம். நீ வூடு வூடா போயி வெளயாடுவே. வூடு கெடக்கற கதியப் பாரு!" என்றது அம்மா.
            "புள்ளயாரு மாரின்னு சாமிப் பேர சொல்லாத. அண்ணனுக்குக் கோவம் வந்திடும்!" என்றாள் செய்யு.
            "நாம்ம வந்த நேரம் சரியில்லடி. கெளம்பறேம்!" என்றது சாமியாத்தா.
            "இத்தா நீ வேற! ஒண்ணுஞ் சாப்புடாம கெளம்புறே! உக்காரு! ஏட்டி செய்யு! ந்தா லோட்டாவ எடுத்துட்டுப் போயி யாரு வூட்டுலயாவது பாலு இருக்கான்னு பாத்து வாங்கிட்டு வா!" என்று செய்யுவின் கையில் லோட்டாவைத் திணித்து அனுப்பியது அம்மா.
            சாமியாத்தா மருண்ட மாதிரி சுவரின் மூலையில் போய் உட்கார்ந்தது. இனி அது எழுந்து கிளம்பிப் போய் விட முடியாது. அப்படிக் கிளம்பினால் அம்மாவின் திட்டு பலமாக விழும் என்பது அதுக்குப் புரிந்திருந்தது.
            "நீ ஏண்டா சாமியில்ல அதுயில்லன்னு அழிச்சாட்டீயம் பண்ணிட்டு இருக்கியாம்லே?" என்றது சாமியாத்தா விகடுவைப் பார்த்து.
            "அதாவது யாத்தா! சாமிங்றது..." என்று விகடு பேசத் தொடங்கியதும், "ரெண்டியரும் வூட்ட வுட்டு மொதல்ல வெளியே போங்க!" என்றுச் சத்தம் போட்டது அம்மா.
            "பாத்தியாத்தா ஒஞ் சாமிய பத்திப் பேச ஆரம்பிச்சதும்..." என்றான் விகடு.
            "இவன்ன எங்கடி கொண்டு போயி இப்படியாக்கிக் கொண்டாந்துருக்கே?" என்றது சாமியாத்தா.
            "ஆம்மா நாங்க கொண்டு போயி ஆக்கிட்டு வாரேம். இதுல்ல கொண்டு போயி எங்கள இப்படியாக்கிக் கொண்டு வந்திருக்கு!" என்றது அம்மா வீட்டைக் காட்டி.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...