4 May 2019

வீடு திரும்பல்



செய்யு - 74
            திட்டையில் கறுப்பத் தேவர் வகைதொகையான ஆள். பஞ்சாயத்துப் பண்ணி வைப்பதில் பேர் போனவர். பஞ்சாயத்து அடிதடிகள் என்றாலும் அசராதவர். ஆள் நல்ல கறுப்பு. அத்துடன் நெடுநெடுவென்ற உயரம். உயரத்துக்கு ஏற்ற உடம்பு இல்லாமல் ஒடிசலாக இருப்பார். மீசை ரெண்டு கன்னத்திலும் ஒரு சுற்று சுற்றி புஸ்ஸென்று உப்பியிருக்கும்.
            கைலி கட்டி, இடுப்பில் பச்சை பெல்டும் தோளில் கறுப்பு சால்வை சகிதம் இருப்பார். விகடு பள்ளிக்கூடம் செல்லும் நாட்களில் அவரைப் பார்த்திருக்கிறான். அவர் ஆள் நல்ல கறுப்பாக இருப்பதால் கறுப்பு என்று சொல்கிறார்களா? அல்லது எந்நேரமும் தோளில் கறுப்பு சால்வையோடு இருப்பதால் கறுப்பு என்று சொல்கிறார்களா? என்று அவரைப் பார்க்கும் போதெல்லாம் யோசித்திருக்கிறான்.  வெளியில் செல்வதாக இருந்தால் மட்டும் மேலுக்கு உடம்பு தெரியும் படி ஒரு ஜிப்பா சட்டை போட்டிருப்பார். எங்கு சென்றாலும் கைலிதான் கட்டிச் செல்வார். அவர் ஏன் வேட்டிக் கட்டுவதில்லை என்று கூட விகடு யோசித்திருக்கிறான்.  எல்லாம் யோசனைகள்தான்.
            உள்ளூர் பஞ்சாயத்துகள் மட்டும் அல்லாமல் வெளியூர் பஞ்சாயத்துகளுக்கும் அவரை கார் வைத்து அழைத்துச் செல்வார்கள். இதனால் கறுப்பத் தேவர் என்றால் திட்டையைச் சுற்றியுள்ள ஊர்களில் எல்லாருக்கும் ஒரு பயம் இருந்தது. அடித்து விட்டுதான் பேச்சில் இறங்குவார் என்று அவரைப் பற்றி ஒரு பேச்சு உண்டு. அதனால் கறுப்பத் தேவரிடம் ரொம்ப கவனமாகப் பேச வேண்டும் என்று பேசிக் கொள்வார்கள்.
            அத்தோடு கறுப்பத் தேவரிடம் முதலில் யார் போகிறார்களோ அவர்கள் பக்கம்தான் பஞ்சாயத்து பேசுவார் என்பதை ஊரில் ஒரு குறையாக அப்போது பேசிக் கொண்டிருந்தார்கள். பஞ்சாயத்துப் பேசும் ரெண்டு பக்கமும் கொஞ்சம் அனுசரித்து நியாயம் பார்த்துப் பேசியிருந்தால் அவரின் மதிப்பு ஊரில் அதிகமாகிக் கூட இருக்கலாம். ஆனாலும் முதலில் யார் அவரைப் பார்க்கப் போகிறார்களோ அவர்களின் பக்கம் லாபம் நஷ்டம் பார்க்காமல் நிற்பார் என்ற மதிப்பு அவருக்கு இருக்கத்தான் செய்தது.
            மூலங்கட்டளைப் பக்கத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து ஒன்றுக்கு கறுப்பத் தேவரைக் கார் வைத்து அழைத்துப் போனார்கள். பஞ்சாயத்து ஒத்து வரவில்லை என்றதும் அடிதடியில் இறங்கி விட்டார் கறுப்பத் தேவர். "நம்ம ஊர்ல வந்து இன்னொருத்தன் அடிதடியில இறங்குனா நம்ம ஊரு மானம் என்னாவுறது?" என்றபடி அந்த ஊர்க்காரர்களும் அடிதடியில் இறங்கியிருக்கிறார்கள். கறுப்புத் தேவரோடு பஞ்சாயத்துப் பேச வந்தவர்கள் நைசாக கழன்று கொள்ள, அவர் மட்டும் ஒத்தை ஆளாக சண்டைப் போட்டுக் கொண்டிருக்க, மொத்த ஊரும் கறுப்பத் தேவருக்கு எதிராக சண்டை போட்டால் என்னாகும்? கறுப்பத் தேவர் நெஞ்சில் பலமாக அடிபட்டு திட்டைக்குத் தூக்கி வரப்பட்டார். அத்தோடு படுத்தப் படுக்கையாக  ஆனார் கறுப்பத் தேவர். எப்போதாவது அரிதாக வீட்டுக்கு முன் உட்கார்வதற்காக கட்டப்பட்டிருந்த சிமெண்ட் கட்டையில் கறுப்பு சால்வையைப் போர்த்தியபடி இருமிக் கொண்டு உட்கார்ந்திருப்பார். பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளைப் பார்த்து விட்டால் எல்லாரையும் நிறுத்தி, பிள்ளைகளில் ஒருவரிடம் காசு கொடுத்து கடையில் மிட்டாய் வாங்கி வரச் சொல்லி எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு கறுப்பத் தேவர் ரொம்ப நாள் ஜீவித்திருக்கவில்லை. ரொம்ப சின்ன வயதிலேயே கறுப்பத் தேவர் போய் சேர்ந்து விட்டதாக ஊரில் சோகமாகப் பேசிக் கொண்டார்கள். இதெல்லாம் விகடு திட்டைப் பள்ளிக்கூடம் போன நாட்களில் நடந்தவை.
            இப்போது ஏன் திட்டையில் இருந்த கறுப்பத் தேவரைப் பற்றிப் பேச வேண்டும்? என்று நீங்கள் கேட்கலாம். திட்டையில் இருந்த கறுப்பத் தேவருக்குதான் நரிவலத்து வல்லாளத் தேவர் தன் தங்கச்சியான தாயம்மாளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தார்.
            என்றைக்கு வல்லாளத் தேவர் தூக்கத்தில் நடந்த விகடுவைப் பிடித்தாரோ அன்றிலிருந்து மூச்சு விடுவதைப் போல தன்னுடைய ஹோட்டலுக்குச் சாப்பிட ஒவ்வொருவரிடமும் தூக்கத்தில் நடந்த விகடு பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். சில நாட்களாய் விகடு அவரின் வாயில் போடப்பட்ட அவல் போல் அரைபட்டுக் கொண்டிருந்தான். மேலதிகமாக நரிவலத்தில் பற்றிய காட்டுத்தீ போல பரவிக் கொண்டிருந்த விகடு பற்றிய பேச்சால் அவனது ஜாதகத்தையே அக்குவேறு ஆணி வேராக அலசி முடித்திருந்தார்கள் நரிவலத்துக்காரர்கள். இப்படியே வல்லாளத் தேவர் தூக்கத்தில் நடந்த விகடு பற்றிப் பேசுவது பழக்கமாகிப் போய் அது பற்றி வழக்கம் போல் பேசிக் கொண்டிருக்கும் போது ஹோட்டலில் சாப்பிட வந்த ஒருவர், "நாமளும் கேள்விப் பட்டேம் தேவரே! பையன் என்னமோ ஒங்க தங்காச்சிய்ய கட்டிக் கொடுத்த திட்டையாம்ல. வெசயம் தெரியுங்களா?" என்றிருக்கிறார்.
            "அட! நம்ம தங்காச்சி ஊருகார பயலா? இது தெரியாமா போச்சே!" என்று விசனப்பட்டுப் போனவர் உறவுமுறை கல்யாணம் ஒன்றில் தாயம்மாளைப் பார்த்த போது விசயத்தைப் புட்டு புட்டு வைத்திருக்கிறார். "நம்ம சுப்பு வாத்தியார் மவன்ல்லா! ஏண்ணே பயல புடிச்சாந்து நம்ம வூட்டுல போட்டுகலாம்ல!" என்று சொல்லியிருக்கிறது அவர் தங்கச்சி தாயம்மாள். "தங்காச்சி நீ அவுங்க வூட்டுல பேசிட்டு நமக்குச் சொல்லு!" என்றார் வல்லாளத் தேவர்.
            தாயம்மாள் மூலமாக அப்பாவுக்கு செய்தி கிடைத்து அவர் உடனடியாக நரிவலம் வந்து விகடுவைப் பார்த்தார். விகடு இளைத்துப் போய் பாதி உடம்பாய் ஆகியிருந்தான். எங்கே மறுபடியும் தூக்கத்தில் நடந்து விடுவோமோ என்ற பயம் அவன் மனம் முழுவதும் அப்பி அவன் இரவு முழுவதும் தூங்காமல் கிடந்தான். சரியான தூக்கமின்மையால் ஏற்பட்டிருந்த சோர்வு அவனை வெகுவாகப் பாதித்திருந்தது. பக்கிரிசாமி வேறு திடீரென சம்பந்தமில்லாமல் அலம்பல் சலம்பல் பண்ணி ஹாஸ்டலை விட்டுப் போயிருந்ததும் அவன் மனதைப் பாதித்திருந்தது. முகிலன் பக்கிரிசாமியைக் கூப்பிட்டது போல தன்னையும் கூப்பிடுவானோ என்ற பயம் விகடு மட்டுமின்றி ஹாஸ்டலின் ஒவ்வொரு பிள்ளைக்கும் இருந்தது.
            முகிலனின் மரணத்துக்குப் பின் ஹாஸ்டல் பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்கு வந்த பிறகு உடம்பு சரியில்லை என்றாலும் கூட ஹாஸ்டலில் போய் படுத்துக் கொள்ள அனுமதிக்கப்படாமல் பள்ளிக்கூடத்திலேயே ஓர் ஓரமாகப் படுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். விகடுவுக்கு உடம்புவலி, தலைவலி என அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போய் அவன் பள்ளிக்கூடத்தில் பெரும்பாலான நாட்கள் படுத்துக் கிடந்தான். பள்ளிக்கூடத்தில் படுத்துக் கிடப்பது அவனுக்கு ஏனோ அசெளகரியமாகப் பட்டதால் தன்னை மறந்து தூங்குவதும் அவனுக்கு இயலாமல் போனது. ஏதோ பெயருக்குக் கண்களை மூடிக் கொண்டு படுத்துக் கிடப்பது போல படுத்துக் கிடந்தான். எல்லாம் ஒன்று சேர்ந்ததில் விகடுவுக்கு மண்டை மட்டுமே பெரிதாக இருந்தது. உடம்பு ஊசி போல இளைத்திருந்தது. எப்படியோ நாட்கள் ஓடி ஆண்டுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது.
            விகடுவை அப்படிப் பார்த்ததும் அப்பாவுக்குத் தாங்க முடியவில்லை. அவர் கண்கள் தளும்ப ஆரம்பித்து விட்டன. அதற்கு மேல் விகடுவை அங்கே விட்டு வர அவருக்கு மனமில்லை. அவர் விகடுவை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் முடிவோடு வார்டனைப் பார்த்து விட்டு அவர் சம்மதிக்காததால் ஹெட்மாஸ்டரைப் பார்த்தார். ஹெட்மாஸ்டரும் அப்பாவின் முடிவுக்குச் சம்மதிக்கவில்லை. "பரீட்சை முடியற வரைக்கும் எந்தக் கொழப்படியும் பண்ணாதீங்க! ஆளாளுக்கு ஒங்க இஷ்டபடி நடந்துகிட்டா நாங்க ஹாஸ்டல வெச்சு நடத்துறதா ன்னா? பேசாம போங்க! ஒங்க புள்ளைங்கள பத்திரமா பாத்துக்கிறது நம்ம பொறுப்பு." என்றார் ஹெட்மாஸ்டர்.
            "ஒரு மரியாதிக்காக ஒங்ககிட்ட கேட்டேம். ஒங்ககிட்ட கேட்டிருக்க வேண்டியதில்ல. நம்ம முடிவுல ஒரு மாத்தமும் இல்ல. எம் புள்ளய நாம்ம அழச்சிட்டுப் போறம். தப்பா நினைச்சுக்க வாணாம் சார்!" என்று ஹெட்மாஸ்டரிடம் சொல்லி விட்டு ஹாஸ்டலுக்கு வந்த அப்பா, "நாம்ம நம்ம பையன அழச்சிட்டுப் போறேம்!" என்றார் வார்டனிடம்.
            "ஹெட்மாஸ்டர்கிட்ட கேட்டீங்களா?" என்றார் வார்டன்.
            "கேட்டாச்சு. அவர் முடியாதுன்னுட்டார். நாமளும் அவர் சொல்றத கேட்க முடியாதுன்னு முடிவு பண்ணிட்டேம்!" என்றார் அப்பா.
            "இன்னும் கொஞ்ச நாள்ல பரீட்சை முடிஞ்சிடும். நீங்க தாராளமாக அழச்சிட்டுப் போலாம். இப்போ நீங்க அழச்சிட்டுப் போனீங்கன்னா பள்ளியோடத்துக்கு எப்படி அனுப்புவீங்க? ஒங்களுத்தான் கஷ்டம். எங்களுக்கு ஒண்ணுமில்ல. பாத்துக்குங்க."
            "எங்க கஷ்டம் எங்களோட போவட்டும்! ஒங்களுக்கு வாணாம் சார்!"
            "நீங்க பண்றது எனக்கு நிர்வாக ரீதியா சிக்கல உண்டு பண்ணிடும். பாத்துக்குங்க!"
            "நரிவலத்து வல்லாளத் தேவரு நம்ம ஊர்ல பொண்ணு கொடுத்தவரு. அவர அழச்சிட்டு வாரேன். அவரு சொல்லட்டும் மத்தத!"
            அதற்கு மேல் வார்டன் எதுவும் பேச விரும்பாதவர் போல் கையெடுத்துக் கும்பிட்டார்.
            அப்பா விகடுவை டிவியெஸ் பிப்டியில் அழைத்துக் கொண்டு திட்டைத் திரும்பினார்.
*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...