4 May 2019

அமெரிக்கக் காதலன் – சிறுகதை


அமெரிக்கக் காதலன் – சிறுகதை
-         விகடபாரதி
            லலிதா கோல்ட் மெடலிஸ்ட் என்று சொன்னால் தெரியும். கேள்விபட்டு இருப்பீர்கள். லலிதா என்று பெயர் பழைய வீடை வீசுவதாக அவளுக்குள் ஒரு சின்ன வருத்தம் உண்டு. சின்ன வருத்தம்தான். அதுவும் கோல்ட் மெடலிஸ்ட் என்ற அடைமொழி சேர்ந்த பின் அந்த வருத்தமும் இல்லை.
            அது எப்படியோ! காலேஜ், யுனிவர்சிட்டி என்று எல்லாம் படித்தாயிற்று. எல்லாவற்றிலும் கோல்ட் மெடல்தான். வேலையில் சேர்ந்தும் நான்கைந்து படிப்புகள் படித்தாயிற்று. அதிலும் கோல்ட் மெடல்.
            இப்போதும் ஏதோ படித்துக் கொண்டிருக்கிறாள். அதை முடித்தால் அடுத்த உச்சபட்ச பதவி. அதற்கு என்னவோ பெயர் இருக்கிறது. பெயர் வாயிலும் நுழைய மாட்டேன்கிறது. ஞாபத்திலும் நிற்க மாட்டேன்கிறது.
            லலிதாவின் அப்பா போலீஸ்காரர். அவர் போலீஸ்காரர் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஏதோ அலுவலகத்தில் வேலை பார்ப்பதாகத்தான் சொல்வார்கள். அவர் ஒரு நாளும் காக்கி யூனிபார்ம் அணிந்ததில்லை. எல்லா நாளும் மப்டிதான். ஸ்டேஷனில் எப்படி சமாளிக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை ஸ்டேஷனில் போய் யூனிபார்மை மாட்டிக் கொள்கிறாரோ என்னவோ! ஸ்டேஷனில் ஓரிரு முறை பார்த்த போதும் மப்டியில்தான் இருந்தார். எப்படி இது சாத்தியம்?
            லலிதாவின் அப்பாவின் பெயர் மிக நீண்டது. இப்படி ஒரு பெயரை நான் கேள்விபட்டதில்லை. சோமசுந்தரசிங்கமுத்துபரமானந்தம். நல்லவேளை அவரை அனைவரும் மப்டிகாரர் என்று அழைப்பதால் பெயரைச் சொல்லும் சிரமம் ஏற்படாமலே போய் விட்டது.
            மப்டிகாரருக்கு லலிதாவைப் படிக்க வைப்பதைத் தவிர வேறு வேலை இருந்ததாக சொல்ல முடியாது. எந்நேரும் அவருக்கு லலிதாவின் படிப்பு பற்றிதான் நினைப்பு. எப்போது பார்த்தாலும் லலிதாவோடு பெங்களூரு, மும்பை என்று பயணத்திலேயே இருப்பார். எல்லாம் லலிதா தொடர்பான போட்டித் தேர்வுகளுக்காகத்தான்.
            லலிதா சொல்லி அடிக்கும் கில்லி. எந்தப் போட்டித் தேர்வுக்குப் போனாலும் நெம்பர் ஒன்.
            மல்டி நேஷனல் கம்பெனியில் லலிதா வேலை பார்க்கிறாள் என்பதை யாரும் சொல்லாமலே இந்நேரம் நீங்கள் கப்பென்று பிடித்திருப்பீர்கள்.
            எவ்வளவு படித்தவள்! ஊதியம் எவ்வளவு வாங்குகிறாள் தெரியுமா? வேண்டாம் அதைச் சொல்லி உங்கள் வயிற்றில் நெருப்பை அள்ளிப் போட விருப்பமில்லை. வயிறு எரிந்தே செத்து விடுவீர்கள்.
            இந்த நல்ல செய்தியைச் சொன்னால்தான் உங்கள் வயிற்று எரிச்சல் ஆறும் என்பதால் சொல்கிறேன்.
            கிடாரம்கொட்டி என்ற குக்கிராமத்தை நீங்கள் கேள்விபட்டிருக்க மாட்டீர்கள். கப்பி பெயர்ந்த ரோடுகள். எங்கு பார்த்தாலும் கருவக்காடு. தண்ணீர் பார்த்து பல மாமாங்கம் ஆயிருக்கலாம். எங்கும் வறட்சி. காக்கா, குருவிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்க்கலாம். ஊரில் கணிசமாக மனிதர்கள் இருக்கிறார்கள்.
            அந்த ஊரில்தான் லலிதாவின் காரைப் பார்த்தேன். ஒரு ஜோசியக்காரரின் வீட்டின் முன். என்னை வெளியே காத்திருக்கக் சொல்லி விட்டு ஜோசியக்காரர் மிக நீண்ட நேரம் லலிதா குடும்பத்தினர்களோடு ஏதேதோ கணக்குப் போட்டு பேசிக் கொண்டிருந்தார்.
            எவ்வளவு நேரம் காத்திருக்க முடியும் சொல்லுங்கள். சுமாராக இரண்டு மணி நேரம் முப்பத்தேழு நிமிடங்கள் ஆகி விட்டது. அதனால் ஒட்டுக்கேட்க ஆரம்பித்து விட்டேன்.
            ஜோசியக்காரர் ரொம்ப கறாராகச் சொன்னார், "ரொம்ப காலம் நீ பெங்களூருவில இருக்க முடியாது. உனக்கு அமெரிக்காவுலதான் இனி வேல. அங்க ஒருத்தனத்தான் நீ கல்யாணம் பண்ணிக்குவே!"
            லலிதாவின் குடும்பமே அரண்டு போய் உட்கார்ந்திருக்க வேண்டும்.
            "இதுக்காவா எம் பொண்ண அவ்ளோ கஷ்டப்பட்டு படிக்க வெச்சேன்!" பொறுப்பான தகப்பனின் அக்கறை அழுகை ஒலியோடு மிக மெதுவாகக் கேட்டது.
            "அப்பா! நீங்க அழாதீங்கப்பா! நான் அமெரிக்கால்லாம் போக மாட்டேன். பெங்களூருவிலதான் இருப்பேன். அப்படி அமெரிக்கா போகுற மாறின்னா ரிசைன் பண்ணிடுவேன்!" இப்படி யார் பேசியிருப்பார் என்று உங்களுக்குத் தெரியாதா? லலிதாவேதான்.
            "கட்டம் அப்படிச் சொல்லுது. அப்படில்லாம் முடியாது. என்னோட நாப்பது வருஷ ஆராய்ச்சியில சொல்றேன். உன்னோட வாட்ஸ்ப்ல பார்த்தாவே தெரியும். உனக்கு இந்நேரம் நாலைஞ்ச பேரு ரூட் விட்டுகிட்டுதான் இருப்பான்."
            "அப்படில்லாம் இல்ல அங்கிள்! இந்தாங்க என்னோட மொபைல். நீங்களே பாருங்க!"
            "எனக்கு அதெல்லாம் பார்க்கத் தெரியாதும்மா!"
            "அத தடுக்க முடியாதா அங்கிள்?"
            "மாந்திரீகம்தான் பண்ணணும். செலவு ஆகும். அதை ஒட்ட தொடச்சி எடுக்கணும். டெய்லி டென் மினிட்ஸ் நீ தியானம் பண்ணணும்."
            "எவ்ளோ செலவு ஆனாலும் பரவாயில்ல அங்கிள். அதப் பண்ணணும்."
            "செஞ்சிடுவோம்மா!"
            "அங்கிள்! விதியை மதியால மாத்த முடியாதா என்ன?"
            "மாத்தலாம்தான். நீங்க பொய்யாக்கிக் காட்ட ஆசப்படறீங்க. ஆனா எழுதியிருக்கதை மாத்த முடியாதுங்றதுதான் என்னோட அனுபவம். அதாவது இந்திராகாந்தி பெரோஸ்காந்தியைக் கல்யாணம் பண்ணிகிட்ட மாதிரி உங்களோட ஜாதகம். இப்போ உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன்."
            "நான் அமெரிக்கப் பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேனா அங்கிள்?"
            "ஒரு வெள்ளைக்காரப் பையன், ஒரு தமிழ்ப்பொண்ணு. அப்படித்தான் கட்டம் பேசுது!"
            லலிதாவின் அப்பாவின் அழுகை இப்போதுதான் பேரொலியாக வெளிப்பட்டது. ஒரு போலீஸ்காரர் அழலாமா? அழுது கொண்டிருந்தார்.
            "ச்சும்மா இருங்கப்பா! அப்படில்லாம் நடக்காது. நான் வெளிநாடுல்லாம் போக மாட்டேன். அப்புறம் நான் எவன் கூடவும் பேச கூட மாட்டேன்!"
            "பேசறது என்ன? சின்ன ஸ்மைல் கூட ஆகாது. உங்கள கொத்திகிட்டுப் போக ஆள் தயாராக இருக்கான்! கட்டம் அப்படி இருக்கு! உங்க வாட்ஸ்அப்ல உள்ள எல்லாத்தையும் கம்ப்ளீட்டா டெலிட் பண்ணிடுங்க. வாட்ஸ்அப்பே வேணாம். போன்ல உள்ள எல்லா நம்பரையும் அழிச்சிடுங்க. உங்க அப்பா, அம்மா நம்பர் மட்டும் போதும். அதுக்கு மேல வேணாம்."
            "ஓ.கே. அங்கிள்! நீங்க சொன்ன அத செஞ்சிடுவோம் அங்கிள்! நாங்க வர்றோம்!"
            லலிதா அழுது கொண்டிருக்கும் அப்பாவை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு காரில் ஏறினாள். லலிதாவின் அம்மா கழுத்திலும், இடுப்பிலும் பட்டை அணிந்திருந்தார். கழுத்து தேய்மானாம், இடுப்பு தேய்மானமாக இருக்கலாம்.
            கார் மெல்ல புறப்பட்டது.
            ஏன் இந்தப் பெண் காதலித்துத் திருமணம் செய்யக் கூடாது? எவ்வளவு படித்திருக்கிறாள்? எல்லாவற்றிலும் கோல்ட் மெடலிஸ்ட் வேறு. இதெல்லாம் என்னுடைய கேள்விகள்தான். லலிதாவின் மனதில் என்ன இருக்கிறது என்று எனக்கு எப்படித் தெரியும்?
            "அடுத்தது யாரு? வர்றீங்களா?" என்று ஜோசியரின் குரல் கேட்டது.
            "இதே வந்துட்டேன்!" என்று உள்ளே நுழைந்தேன்.
            லலிதாவின் அமெரிக்கக் காதலன் எப்படி இருப்பானோ? ஜோசியரிடம் முதல் கேள்வியாக இதைக் கேட்டால் பதில் சொல்வாரா? மாட்டார். அதனால் நான் எதற்காக அவரைப் பார்க்க வந்தேனோ அந்த விசயத்தைப் பற்றி பேச வேண்டியதாகப் போய் விட்டது.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...