5 May 2019

தையல் சோல் கேளேல் / கேளீர்!



            தையல் சொல் கேளேல்.
                        - ஒளவைப் பிராட்டியார் எழுதிய ஆத்திசூடி (62)
            ஒளவையார் எழுதிய ஆத்திசூடியில் அதிகம் விவாதிக்கப்பட்ட வரிகளுள் 'தையல் சொல் கேளேல்' என்பது முக்கியமான கவனத்தைப் பெறுகிறது. இவ்வரி குறித்த விவாதங்கள் இன்றும் நடந்த வண்ணம் உள்ளன.
            அவ்விவாதத்தின் முக்கியச் சரடு அவ்வரிகளின் பொருள் குறித்தத் தன்மையைச் சார்ந்தது. 'தையல்' என்ற சொல் பெண் என்ற பொருளைக் குறிப்பதால் ஒளவையார் பெண்ணின் சொல்லைக் கேளாதே என்ற பொருளில் கூறியிருக்கிறாரா என்பதே அவ்விவாதங்களின் முக்கியப் பொருளாக உள்ளது. இது குறித்த நாம் பின்வரும் பார்வைகளைப் பெற முடிகிறது.
            1. மரபார்ந்த உரைகளில் 'தையல்' என்ற சொல் பெண் என்ற பொருளில் கொள்ளப்பட்டு, பெண்ணின் சொல்லைக் கேளாதே என்றும் பெண்ணின் சொல்லைக் கேட்டு ஆராயமால் நடவாதே என்றும்,
            'தையல்' என்ற சொல் மனைவி என்ற பொருளில் கொள்ளப்பட்டு மனைவியின் சொல்லைக் கேளாதே என்றும், மனைவியின் சொல்லைக் கேட்டு ஆராயாமல் நடவாதே என்றும் உள்ளன.
            பெரும்பாலான மரபார்ந்த உரையாசிரியர்கள் மேற்கண்ட உரையின் பக்கமே உள்ளனர்.
            2. பெண்ணின் சொல்லைக் கேளாதே என்ற உரை பொதுஅறிவுக்கோ, தர்க்கத்துக்கோ உகந்த வகையில் இல்லை என்பதால் மு.இராகவ ஐயங்கார், அயோத்திதாசப் பண்டிதர் போன்றோர் 'தையல்' என்ற சொல்லைப் நுணுகிப் பிரித்து வேறு விதமாகப் பொருள் காண முற்படுகின்றனர்.
            இராகவ ஐயங்கார் 'தையல் சொல்' என்பதைச் சேர்த்தல் இல்லாத சொல் அதாவது பேசுகையில் ஒற்றுமைப்படுத்தாத / ஒத்து வாழ உதவாத / இணக்கமாக வாழ உதவாதச் சொல் என்பதாகக் கொண்டு மனிதருக்குள் மன இணக்கத்தை ஏற்படுத்தாத சொல்லைக் கேட்க வேண்டாம் என்பதாகப் பொருள் கூறுகிறார்.
            அயோத்திதாசப் பண்டிதர் 'தையல் சொல்' என்பதை மனதைத் தைத்த கொடூரச் சொல் / இதயத்தைக் கிழிக்கும் கொடுமையான சொல் என்பதாகப் பார்த்து அப்படிப்பட்ட கொடூரச் சொற்களைக் கேட்க வேண்டாம் என்பதாகப் பொருள் கூறுகிறார்.
            3. தையல் சொல் கேளேல் என்பதற்குச் சற்று சுற்றி வளைத்துப் பொருள் கொள்வதைப் போல 'தையல்' என்ற சொல் மோகவலையில் வீழ்த்தும் பொருட்பெண்டிரையே குறிக்கும் என்று பொருள் கொண்டு அவ்வகைப் பொருட்பெண்டிரின் சொற்களைக் கேட்க வேண்டாம் என்ற உரைகளும் இருக்கின்றன.
            4. தையல் சொல் கேளேல் என்பதற்கு கைகேயியினால் தசரன் பட்ட பாடே நல்ல சான்று எனவும், சூர்ப்பனகையின் சொல் கேட்டு ராவணன் வீழ்ந்த பாடே மற்றொரு நல்ல சான்று எனவும் கூறும் வகையில் விளக்க உரைகளும் இருக்கின்றன.
            5. பேதை, பெதும்பை என்ற பனிரெண்டு வயதுக்குட்பட்ட பெண்ணின் பருவங்களைச் சார்ந்த பெண்டிரே தையல் என்பதாகப் பொருள் கொண்டு அப்படிப்பட்ட சிறுமியரின் சொல்லைக் கேட்க வேண்டாம் என்பதே சரியானப் பொருள் என்பதான பொருள் கொள்ளுதல்களையும் சில சாமர்த்தியமான உரை பேசுபவர்கள் வாயிலாக நீங்கள் கேட்க முடியும்.
            6. இதையெல்லாம் கடந்து 'தையல் சொல் கேளேல்' என்றால் பெண்ணின் சொல்லைக் கேட்காதே என்பது பொருளானால், இஃதை எழுதிய ஒளவையாரும் ஒரு பெண்தானே என்பதைக் குறிப்பிட்டு அப்படியானால் 'தையல் சொல் கேளேல்' என்று எழுதிய ஒளவையாரின் சொல்லையும் கேட்க வேண்டியதில்லை என்று இதற்குப் பொருள் காண்போரும் இருக்கிறார்கள்.
            7. 'தையல்' என்ற சொல்லை பெண்ணின் பருவங்களுள் ஒன்றாக வரும் பேதை என்பதாகக் கொண்டு,
            அவ்வயதில் உள்ள பேதைத் தன்மை எப்படிப்பட்டதெனின்,
            "பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
            ஊதியம் போக விடல்" என்ற வள்ளுவத்தைப் பொருளாகக் கொண்டு அப்படிப்பட்ட பேதைத் தன்மைக் கொண்டவர்களையே தையல் என்போராகப் பொருள் கொண்டு,
            அப்படிப்பட்ட பேதைமைத் தன்மை கொண்டோரின் சொல்லைக் கேட்க வேண்டாம் என்பதாகவும் பொருள் கொள்ளலாம்.
            8. நுட்பமாகச் சிந்திக்கும் இடத்து ஆத்திசூடியின் அமைப்பு முறை அகர வரிசைப்படி அகராதி முறைமையில் வருகிறது. தகர வரிசையின் 'தை'யில் தொடங்குவதற்காக கூட ஒளவையால் 'தையல் சொல் கேளேல்' என்று எழுதியிருக்கக் கூடும். ஒளவையார் கல்வியில் பெரியவர் என்ற போதிலும் அவர் காலத்தில் பெண்கல்வி மிகவும் பின்தங்கியிருந்ததைக் கருத்தில் கொண்டு கல்வி பெறாத அத்தகைய தையலின் சொல்லைக் கேட்க வேண்டாம் என்பதாக ஒளவையார் எழுதி இருக்கலாம் என்பதாகவும் கருத இடம் இருக்கிறது.
            9. ஆத்திசூடியை எழுதிய ஒளவையார் காலத்தில் தாரத்தின் பேச்சைக் கேட்டு தாயைப் புறக்கணிக்கும் சூழ்நிலையோ அல்லது தாயாரின் பேச்சைக் கேட்டு தாரத்தைப் புறக்கணிக்கும் சூழ்நிலையோ நிலவியிருந்ததன் அடிப்படையில் அச்சமூகச்சூழலின் தாக்கத்தின் காரணமாகவும் இவ்வாறு ஒளவையார் 'தையல் சொல் கேளேல்' என்று எழுதியிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று சிந்திக்கவும் இடம் இருக்கிறது.
            10. நமது பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் ஏட்டோலைகளில் பல தலைமுறைகளாக எழுதப்பட்டு இன்று அச்சு வடிவம் கண்டவை என்ற வகையில் 'தையல் சொல் கேள்' என்பது 'தையல் சொல் கேளாதே' என்பதாக பனையோலையில் படி எடுக்கப்பட்டு அஃதே தற்போது வரை தொடர்கிறது என்ற ஐயம் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.
            11. ஆக 'தையல் சொல் கேள்' என்பதையோ 'தையல் சொல் கேளேல்' என்பதையோ முடிவாக எவ்வண்ணம் எடுத்துக் கொள்வது என்பதற்கு,
            "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
            மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்ற வள்ளுவத்தையே துணை நாட வேண்டியிருக்கிறது. கேட்கும் சொல்லில் மெய்ப்பொருள் காண வேண்டிய நிலையில் அஃதைச் சொன்னது தையலாக இருந்தாலென்ன? ஆடவராக இருந்தாலென்ன? மெய்ப்பொருள் உள்ள சொல்லை தையல் சொன்னால் அஃதைக் கேட்கத்தான் வேண்டும். மெய்ப்பொருள் இல்லாத சொல்லை ஆடவர் சொல்லினும் அஃதை கேட்காமல் விடத்தான் வேண்டும். ஆக சொல்லும் சொல்லின் மெய்ப்பொருளை அறிவதன் மூலமே சொல்லப்பட்ட சொல்லைக் கேட்டு நடப்பதா? வேண்டாவா? என்பதை முடிவு செய்ய வேண்டுமே அன்றி மெய்ப்பொருள் இல்லாத சொல்லை எவர் சொல்லினும் அஃதைக் கேட்டு நடக்க வேண்டிய அவசியமில்லை என்பதாக நாம் ஒரு முடிவுக்கு வருவது பொருத்தப்பாடாக இருக்கும் என்று கருதுகிறேன்.
*****

1 comment:

  1. மிக அற்புதமான விளக்கங்கள். இந்த விளக்கங்களைத் தொகுத்து வழங்கியமைக்கு உங்களை வணங்குகின்றேன்.

    ReplyDelete

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...