22 May 2019

வயித்துல ஏதும் சம்பவிக்காம போச்சு!



செய்யு - 92
            "இந்த மனுஷங்கிட்ட உக்காந்து எத்தையும் பேச முடியா. அப்படி வாங்க பள்ளியோடம் பக்கமா போலாம்!" என்றது வேணி அத்தை.
            "வேணாமத்தே! ஒங்களுக்கு நடந்து வாரது செரமமாயிருக்கும்!" என்றது அம்மா.
            "ஒண்ணுஞ் செரமமில்ல. அப்பிடி இப்பிடி நடந்தாத்தாம் ஒடம்பு நல்லாயிருக்கும்னு டாக்டருமாருக சொல்றாக. நாம்ம அப்படி இப்படி நடந்துட்டுதாம் இருக்கேம். வாங்க கெளம்புவேம்!" என்றது வேணி அத்தை.
            "தனியா அழச்சிட்டுப் போயி வேற சொல்லப் போறீயா? எத்தைச் சொல்றதாயிருந்தாலும் இங்கேயிருந்தே சொல்லு! நாமளும் கேட்டுக்கிறேம்!" என்றது லாலு மாமா.
            "இதுக்குதேம் அப்படிச் சொன்னேம்! இனிமே இங்க உக்காந்தே பேசலாம்!" என்று ஆரம்பித்தது வேணி அத்தை.
            "இந்த மனுஷம் எத்தைச் செஞ்சாலும் எங்க கலந்துட்டு செய்யுது? வடவாதில இருக்காரே, அண்ணங்காரு சொன்னா போதும். பாக்குக்கோட்டைல இருக்காரே, மச்சாங்காரு சொன்னா போதும். வறட்டுக் கெளரவத்துக்கு வாழ்ற மனுஷங்கிட்ட என்னத்தச் சொல்லுவேம்? அவதிப்படுறது இப்போ யாரு? இப்போ நம்ம வூட்டுப் பொண்ணு படுற பாடு இருக்கே! யார்ட்ட சொல்றது? அதுவும்தான் பொண்ணா? பெசாசு. சொல்றத்த கேட்டு இருந்தாத்தானே! இருந்த வரிக்கும் அவ்வளவு அலங்க மலங்க அடிச்சிச்சு. வூடு ரண்டடிச்சிச்சு. இந்த வூட்டுல இருந்த ஒவ்வொருத்தரும் அதய ரசிச்ச ரசிப்புதாம் ன்னா! எல்லாத்துக்கும் சேத்து இப்போ அனுபவிக்குது பெசாசு! பெசாசு!" என்றது வேணி அத்தை.
            "கல்யாணம் ஆயி ஒரு வருஷம் கூட ஆகல. மாமியாரு, மாமனாரு, புருஷம் எல்லாம் ஒத்து வாரதுக்கு கொஞ்ச காலம் ஆகத்தாம் செய்யும்!" என்றது அப்பா.
            "இனும எத்தனி வருஷம் ஆனா ன்னா? ஆவாட்டி ன்னா? அதது தலயெழுத்து .அனுபவிச்சுதாம் ஆவணும்!" என்றது வேணி அத்தை சுரத்தையற்று.
            "ஏதும் மாமனாரு, மாமியாரு கொடுமயா ன்னா?" என்றது அம்மா.
            "ஒரு கொடுமயும் செய்யத்தாம் அங்க நாதியத்துக் கெடக்கே! அத்தாம் பெரச்சன!" என்றது வேணி அத்தை.
            இதற்கு மேல் பேசுவதில் அர்த்தமில்லை என்பது போல அப்பாவும், அம்மாவும் பேசாமல் இருக்க கனத்த மெளனம் அந்த இடத்தை ஆட்கொண்டது.
            "சேதி ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நெனச்சேம்! ம்ஹூம்! எங்க தெரிஞ்சிருக்கப் போவுது? இந்த மனுஷம்தாம் பீய்ய திங்குறதா இருந்தாலும் பெரிசா கெளரவம் பாக்குற ஆளாச்சே! தெரிஞ்சிருந்தா ஒரு வார்த்த வந்து கேட்டுருக்காமலயா இருப்பீயே!" என்ற வேணி அத்தை அம்மாவோ, அப்பாவோ ஏதாவது கேட்பார்கள் என்று எதிர்பார்த்தது. லாலு மாமா ஏதாவது சொல்லி விடுமோ என்ற யோசனையில் ரெண்டு பேரும் பேசாமல் உட்கார்ந்திருந்தது வேணி அத்தையை ஒரு மாதிரி ஆக்கியது.
            வேணி அத்தையே ஆரம்பித்துச் சொன்னது.
            "அத்தாம் மாப்ள! நல்லா இந்த மனுஷம் பாத்துக் கொண்டாந்தாரே! சீனிச்சாமின்னு. நிசமாவே சீனிச்சாமிதான். ஒடம்பெல்லாம் சுகராம். இந்த வயசுலுயுமா சுகரு வர்ருங்றேம்? என்னத்தச் சொல்ல? நல்லது கெட்டது ஒண்ணு ஆக்கிப் போட முடியலியாம்! எந்நேரமும் அந்தப் பெசாசு சப்பாத்திச் சுட்டுகிட்டு கெடக்குதாம். அட குடும்பத்துல ஒருத்தருக்கு இருந்தா பத்தாதா? குடும்பத்துக்கே சுகராம். இந்தப் பெசாசுக்கும் கூடிய சீக்கிரம் வந்திடும்னு நெனக்கிறேய்ம். போன மாசம்தான் அந்த ஆளுக்கு காலு கட்ட வெரல ஆபரேஷம் பண்ணி எடுத்தாங்களாம். காலுல துணியச் சுத்திட்டு அலயறானாம் அந்த மனுஷம். எங்க வூட்டு மனுஷம் போயி பாத்துட்டு வந்தது. கண்ணுல கோளாறு பெருசாயிட்டுப் போவுதாம். சப்பாத்தியச் சாப்புட்டாலும் ஊசிய போட்டு மாத்திர போட்டுக்க வேண்டியதாயிருக்காம். எனக்கும்தான் சுகரு இருக்கு. கொலஸ்ட்ரால் இருக்கு. நாம்ம கண்டது கலியதையும் திங்கல. என்னத்த பண்ணுது? இன்னுஞ் சாவு ஒண்ணுதாம் வந்துச் சேரல! கல்யாணம் ஆயி இந்த ஆனி வந்தா ஒரு வருஷம் ஆயிடும். வயித்துல ஒரு புழு பூச்சி சம்பவிக்கல அந்த பெசாசு வயித்துல. கொழந்த கிழந்த பொறக்குமா ன்னான்னு தெர்யல. அந்தப் பெசாசு போன்ல சொல்லிட்டு அழுவுறா. இப்படியா புத்திப் பெசகிப் போயி மனுஷம் பொண்ணக் கட்டிக் கொடுப்பாம்?" வேணி அத்தையின் கன்னங்கள் இரண்டிலும் கண்ணீர் கோடாக கீழே இறங்கிக் கொண்டிருந்தது.
            "அழாதேத்தே! எல்லாஞ் சரியாயிடும்." என்றது அம்மா ஆறுதலாக. வேணி அத்தைப் பேசி முடிக்கும் வரையில் லாலு மாமா எதுவும் சொல்லவில்லை. அதன் கன்னங்களிலும் கண்ணீர் கோடிட்டு இருந்தது.
            "ஒரு வெசயமும் காத்து வாக்குல கூட தெரியாம போயிட்டே!" என்றது அப்பா.
            "நீங்கதாம் நாங்க ன்னம்மோ பாவஞ் செஞ்ச மாரி, இந்தப் பக்கம் வாரதையே நிறுத்திட்டீங்களே!" என்றது வேணி அத்தை.
            "ஈஸ்வரி விஷேசத்துக்கு நமக்குப் பத்திரிக கூட வெக்கல. விஷேசத்துக்கு வாரலியா?" என்றது அப்பா.
            "அத்து வேறயா? இந்த மனுஷம் செஞ்சாலும் செஞ்சிருப்பாரு. காரணம் இல்லாம வாராம இருக்க மாட்டீயேன்னு தெரியும். அப்படியே நீங்க பொண்ணு பாக்க வந்த அன்னிக்கே சீனிச்சாமிப் பத்தி சந்தேகமா சொன்னத்தயும் இந்த மனுஷம் ஒரு நா சொல்லிட்டு நெஞ்சவிஞ்சிப் போனாரு. யாரு பேச்சக் கேக்கணும்? யாரு பேச்கக் கேட்கக் கூடாதுன்னு கூட தெரியாது இந்த மனுசத்துக்கு. ச்சும்மா அப்படியே கெடந்து டாம் டூம்னு ஆடுறது? இப்ப யாரு தூக்கிச் சொமக்குறதுன்னு தெர்யல. ஆனது ஆயிப் போயிச்சி. அடுத்தப் பொண்ணு ஒண்ணு நிக்குது. அத்து வெசயத்துல ன்னா ஆட்டம் ஆடப் போறாருன்னு தெர்யலயே! இருந்த ஒரு புள்ளியையும் ஆம்பள புள்ளின்னு ஹாஸ்டல்ல கொண்டு போயி சேத்து வெச்சிருக்கு. இந்த வூட்டுல ஆம்பள புள்ளியா பொறந்துட்டு அவ்வேம் படுற பாடு இருக்கே. அங்க அத்து ன்னா கதியில இருக்கோ தெர்யல. அந்தப் பாக்குக்கோட்டையாம் அவ்வேம் புள்ளிய டாக்டருக்குப் படிக்க வெக்குறேய்ம்னு இந்த மனுஷம் அப்படியே வெறி பிடிச்சி அலயுறாரு. அத்து எதுல்ல போயி நிக்கப் போவுதோ?" என்றது வேணி அத்தை.
            அப்பாவும், அம்மாவும் வாங்கிக் கொண்டு போயிருந்த பழங்களையும், ஹார்லிக்ஸையும் கொடுத்து விட்டுக் கிளம்பத் தயாரானார்கள்.
            "அவ்வே அத்தாம் குயிலி இருந்தாலாவது டீத்தண்ணியோ, காபித் தண்ணியோ போட்டு தர்லாம்னா பாத்தா எங்க அவ்வே வூடு தங்குறா? கரஸ்பாண்டன்ஸ்ல படிக்கிறதுக்கு டியூசனுக்கு திருவாரூக்குப் போயிட்டுக் கெடக்கா. ஏங்க இதுக்கு ஒழுங்கா காலேஜில போயிப் படிச்சாத்தாம் ன்னா? இந்த வூட்டுல ஒவ்வொண்ணும் பண்ணுறது இருக்கே! தெய்வத்துக்கும் அடுக்காது. சித்த இருங்க. பசங்க யாராச்சும் ரோட்டுவாக்குல போவுதான்னு பாக்குறேம். போனாக்க கடயில் டீயோ, காபியோ வாங்கியாந்திரும். ஒரு வா ஊத்திகிட்டு கெளம்பலாம்." என்றது வேணி அத்தை.
            "அத்தெல்லாம் ஒண்ணும் வாணாம். நீங்க ஒடம்பா பாத்துக்குங்க. அவங்களயும் பாத்துக்குங்க. நாங்க கெளம்புறேம்!" என்றது அப்பா. அப்பாவும், அம்மாவும் கிளம்பி வந்து வெளியில் போட்டிருந்த டிவியெஸ் பிப்டியை எடுக்க, வேணி அத்தை வேக வேகமாக உடம்பு குலுங்க நடந்து வெளியே வந்தது. அம்மாவும், அப்பாவும் வேணி அத்தை வெளியே வந்ததைப் பார்த்ததும் அப்படியே நின்றார்கள்.
            "குயிலிக்கு நந்நல்ல மாப்புள்ளயா இருந்தா பாருங்களேம்!" என்றது வேணி அத்தை.
            "மாப்பிள்ளயா ல்லே! நாம்ம சொன்னா எடுபடாது. அதாங் பாக்குறேம்!" என்றது அப்பா.
            "நீங்க சொல்றதும் சரிதாம். இந்த மனுஷம் பணம், காசி உள்ள ஆளுங்க சொன்னாத்தாம் கேப்பாரு. ஒங்கள மதிக்க மாட்டாருங்றது தெரியும். ன்னா பண்றது? நீங்களும்தான் ஈஸ்வரி கல்யாணத்துக்கு முன்னாடியே சொன்னீயே! குமருக்குக் கட்டி வெக்கலாம்னு. நாமளும் ஆசயத்தாம் இருந்தேம். அப்படி ஆயிருந்தா இந்நேரமும் புள்ள குட்டிங்க வயித்துல சம்பவிச்சிருக்கும். ஓடிப் போயி பாக்கணும்னா ரெண்டு எட்டு வெச்சா போதும். அந்தப் பெசாசையும் கண்ணுக்குள்ள வெச்சி பாத்துட்டு இருந்திருப்பேம். இந்த மனுஷத்த கட்டிட்ட நாளு மொதல்லா நல்லது ஏத்தும் நடக்க மாட்டேங்குதுடி வெங்கு!" என்றது வேணி அத்தை.
            "மெதுவா பேசுத்தே! மாமா காதுல வுழுந்துடப் போவுது. டாம் டூம்னு குதிக்கும்." என்றது அம்மா.
            "கேட்டா கேட்டுட்டு போவுது போ. இன்னிக்கு நேத்தியா டாம் டூம்னு குதிக்கிறதுல்லாம்? அப்போ கல்யாணம் ஆனப்போ மூணாவது அழப்புக்கு வந்தவரு, மாப்பிள்ளைக்கு புதுச்சட்டை எடுத்துக் கொடுக்கணும்னு ரகளப் பண்ணி, ஒடனே எடுத்துக் கொடுக்கலன்னு பஸ்ஸூல மேலுக்குக் சட்ட போடாம வந்த ஜென்மம் ஆச்சே. நீங்க ந்நல்ல எடமா இருந்தா சொல்லுங்க. இந்த வாட்டி சண்ட போட்டாவது முடிச்சு வெக்கிறேம்! இவுரு போக்குல வுட்டு பொண்ண கொடுத்துபுட்டு சின்னாபின்ன பட நம்மால ஆகாதுடியம்மா!" என்றது வேணி அத்தை.
            "ஏத்தே! பெரிய தம்பி குமருதாம் ஆகாமப் போச்சு. சின்னதம்பி மணி இருக்காம்ல. பிடிச்சிருந்தா பார்ரேம். மாமாட்ட பேசிப் பார்ரேம்!" என்றது அம்மா.
            வேணி அத்தை அம்மாவின் தலையைத் தடவி நெற்றிப் போட்டில் கைகளை மடக்கி நெட்டி முறித்தது. "பாத்தியாடி! வெசயத்த எம்புட்டு சுருக்கா முடிச்சுப்புட்டே. இதுக்குதாம்படி மாசத்துக்கு ரண்டு தடவ வந்துட்டுப் போன்னு சொல்றேம்! நீங்கதாம் ன்னா பண்ணுவீங்க? இந்த மனுஷம் ஒரு நெலயா இருந்தா எல்லாம் வந்துட்டுதாம் போவீங்க! ரொம்ப சந்தோஷம்ங்க நீங்க வந்துட்டுப் போறதுல. வயித்துல பால வாத்துட்டுப் போறீங்க. ரண்டு நாளு கழிச்சி மறுவாட்டி ஒரு எட்டு வந்துட்டுப் போங்க! நாம்ம காத்துக் கெடக்கிறேம்!" என்றது வேணி அத்தை.
            "ரொம்ப நேரம் பேசியாச்சி. நேரம் வேற ஆயிடுச்சி. வூட்டுல அங்க புள்ளீங்க வேற தனியா இருக்கு. மாடு கண்ணுக கத்த ஆரம்பிச்சிருக்கும். நாங்க கெளம்புறேம்!" என்று அம்மா சொன்னதும், அப்பா வண்டியை ஸ்டார்ட் பண்ணிக் கொண்டு கிளம்பியது. வண்டி கண்ணை விட்டு மறையும் வரைக்கும் பார்த்துக் கொண்டே நின்றது வேணி அத்தை.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...