22 May 2019

ஏ செல்பி தியானிஸ்ட்!



            தியானம் செய்ததாகச் சொன்னான் மனோரஞ்சிதக் கண்ணன். "எங்கே செல்பி எடுத்திருந்தா காட்டு!" என்று நம்ப முடியாமல் கேட்டான் சிவசங்கரபாண்டின்.
*****
            அண்மையில் உச்சநீதி மன்ற நீதிபதிக்கு எதிராக எழுப்பப்பட்ட பாலியல் புகாரும், அது விசாரிக்கப்பட்ட விதமும் பலவிதமான விவாதங்களை எழுப்பியிருக்கிறது. இது போன்ற நிலைமைகளில் பொதுவாக இது பற்றிக் கருத்துக் கேட்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
            இது பற்றிக் கருத்துச் சொல்வது என்றால்...
            தமிழின் முதல் காப்பியமே அப்படி எழுந்ததுதான். நீதி சொல்லப்பட்ட விதத்துக்காக எழுந்த அந்தச் சிலப்பதிகாரக் காப்பியத்தில் வேந்தனே நீதிபதி. அவனே விசாரிக்கிறான். கண்ணகியைத் தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. அவள் வாதாடியதை மறுக்கவும் முடியவில்லை. வாதத்தின் முடிவில் நீதிபதியாக இருந்த மன்னன் உயிரை விடுகிறான்.
            பொதுவாக விசாரணை என்பது இரு தரப்பு வாதங்களையும் கொண்டது! விவாதத்திற்கான இடமும், வாதங்களை முன் வைப்பதற்கான சுதந்திரமும் எல்லா இடங்களிலும் நிலைநாட்டப்பட வேண்டும்!
*****
            தேர்தல் கருத்துக் கணிப்புகள் குறித்தும் கருத்துக் கேட்பவர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். நாட்டில் எல்லாவற்றிற்கும் கருத்து தேவைப்படுகிறது.
            யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பது மக்களின் தீர்ப்புக்கு உட்பட்டது. கருத்துக் கணிப்புகள் அதை உறுதிப்படுத்தலாம் அல்லது உறுதிப்படுத்தாமல் போகலாம். அதுவல்ல விசயம்! யார் ஆட்சிக்கு வந்தாலும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை பண மதிப்பிழப்புச் செய்ய வைத்து, ஓட்டுக்கு ரெண்டாயிரம் கொடுப்பதை அப்கிரேட் செய்வது போல நான்காயிரம் ரூபாய் நோட்டைக் கொண்டு வந்து விடக் கூடாது. இதுவே நல்லவர்களின் கெஞ்சல் மற்றும் அஞ்சல்.
*****
            இப்போது வேலைவாய்ப்பு பெரிய பிரச்சனையாக பேசப்படுகிறது. நாட்டில் இருக்கும் நிறைய பேர் வேலை கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். வெகு விரைவில் இந்த நிலைமை மாறப் போகிறது என்று நினைக்கிறேன். நாட்டில் நிலவும் தண்ணீர் தட்டுபாட்டைப் பார்த்தால், வேலை வேண்டாம், தண்ணீர் கொடுங்கள் என்று கேட்கப் போகிறார்கள் பாருங்களேன்.
*****
            வெகு சமீபத்தில் ஒரு புத்தகத்தைப் படித்து விவாதித்துக் கொண்டிருந்த போது நண்பர்களில் இரண்டு பேர் காரசாரமாக எதிரெதிர் நிலையில் நின்று சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.
            எந்தப் புத்தகத்தையும் தம் வாழ்நாளில் கையால் தொட்டுப் பார்க்காத தொந்திக்கார தாத்தா இதைப் பார்த்து விட்டு, "இப்படி அடிச்சிகிட்டு சண்டைப் போடுறதுக்குதாம் பொத்தகத்தைப் படிச்சிட்டு அலயுறீங்களா?" என்று கேட்டார் பாருங்கள்.
            கொஞ்சம் வெட்கமாகப் போய் விட்டது. இனிமேல் படித்து விவாதிக்கும் போது சண்டையை ஏற்படுத்தாத புத்தகமாகப் பார்த்து படிக்க வேண்டும்.
பின்குறிப்பு - இதைப் படித்து விட்டு அந்தப் புத்தகத்தின் பெயர், சண்டையிட்ட நண்பர்களின் பெயர்களைக் கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். பொது அமைதி கருதி அதை வெளியிட இயலாமைக்கு வருந்துகிறேன்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...