10 May 2019

எட்டாம் நம்பர் பஸ்



செய்யு - 80
            விகடுவும், அம்மாவும் மாவூர் பஸ் ஸ்டாப்பில் எட்டாம் நம்பர் பஸ்ஸூக்காகக் காத்துக் கொண்டு நின்றனர். அவர்களைப் போலவே ஒரு பெருங்கூட்டம் அந்த பஸ்ஸூக்காகக் காத்து நின்றது. அவ்வளவு பேர் ஏறினால் எட்டாம் நம்பர் பஸ் நிச்சயம் ஊதிப் பெருத்து வெடித்து விடும். உலகில் எவ்வளவோ ஆச்சர்ய அதிசயங்கள் நடப்பதில் ஒன்றாக அந்தப் பஸ் என்னவோ எவ்வளவு பேரை ஏற்றினால் ஊதிப் பெருத்து வெடிக்காமலே ஓடிக் கொண்டிருந்தது. திருவாரூரிலிருந்து மாவூர் வழியாக வடவாதி வருவதற்கு அன்றும், இன்றும் மற்றும் என்றும் ஓடிக் கொண்டிருந்தது அந்த பஸ்தான்.
            ஒரு பாதை, ஒரு பயணம், ஒரு பஸ் என்று ஒற்றை பஸ்ஸாக பன்னெடுங்காலமாக எட்டாம் நம்பர் பஸ்தான் அந்த ரூட்டில் ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஒரு பஸ்‍ஸை ஒன்பது பஸ்ஸாக நினைத்து ஒன்பது பஸ்களில் ஏறிக் கொள்ளும் கூட்டம் ஏறிக் கொண்டுதான் இருந்தது. வெறென்ன செய்வது? ஆலையில்லாத ஊருக்கு இலுப்பப்பூ சர்க்கரை போல வேறு பஸ்ஸில்லாத அந்த ஊருக்கு அந்த ஒரு பஸ்ஸே ஒன்பது பஸ்ஸாக ஓடிக் கொண்டிருந்ததது. தெய்வானை பஸ் சர்வீஸ் என்ற பெயர் இருந்தாலும் அந்தப் பஸ்ஸூக்கு எட்டாம் நம்பர் பஸ் என்ற பெயர்தான் பிரசித்தம்.
            ஒரு நாளைக்கு அந்த பஸ் எட்டு டிரிப்புகள் திருவாரூக்கும், வடவாதிக்கும் ஓடிக் கொண்டிருந்தது. அதனால் கூட அந்த பஸ்ஸூக்கு எட்டாம் நம்பர் பஸ் என்று பெயர் வந்திருக்கலாம். அந்த ஒரு பஸ்ஸே ஒன்பது பஸ்களை நேர் செய்யும் விதத்தில் கூட்டத்தை அதக்கிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்ததால் ஒன்பதாம் நம்பர் பஸ் என்று பெயர் வைத்தாலும் பொருத்தமாகத்தான் இருந்திருக்கும்.
            விசாரித்த வகையில் அறிந்த உண்மை என்னவென்றால் அந்தப் பஸ்ஸின் சொந்தக்காரருக்கு எட்டுக்குடி முருகன் இஷ்ட தெய்வமாக இருந்ததால் எட்டுக்குடி என்பதில் இருந்த எட்டை எடுத்து தன் பஸ்ஸூக்கு நம்பர் கொடுத்து வைத்திருந்தார். தொடங்கிய இடத்தில் முடிவடையும் எண்களில் எட்டும் ஒன்று. காலையில் வடவாதியில் எட்டாம் நம்பர் பஸ் கிளம்பினால் கடைசி டிரிப்பை முடித்து விட்டு வடவாதியில் ஹால்ட் ஆகும் வகையில் அந்த நம்பர் கூட அந்தப் பஸ்ஸூக்கு ஏகப் பொருந்தம்தான்.
            ஒரே பாதையில் வந்து ஒரே பாதையில் திரும்பி மாவூரிலிருந்து வடவாதி வரை துணைக்கு ஒரு பஸ் கூட துணையில்லாமல் தனிமையில் ஒத்தை பஸ்ஸாய் அலுக்காமல் சலிக்காமல் ஓடிக் கொண்டிருந்த அந்த பஸ்ஸில் எவ்வளவு கூட்டம் என்றாலும் வடவாதியிலிருந்து மாவூர் வரையிருந்த அத்தனை ஊரு சனங்களும் கும்மிக் கொண்டு ஏறிக் கொண்டு பயணித்துக் கொண்டிருந்தது. மாவூரைக் கடந்தால் திருத்துறைப்பூண்டி வழித்தடம் வந்து விடும். அந்த வழித்தடத்தில் எத்தனையோ திருத்துறைப்பூண்டி பஸ்கள் திருவாரூக்குச் சென்று கொண்டிருந்தன. ஆனால் பாருங்கள்! மாவூரிலிருந்து திருவாரூர் வரை இடைப்பட்ட ஊர்களிலிருந்த சனங்களுக்கும் எவ்வளவு கூட்டம் என்றாலும் எட்டாம் நம்பர் பஸ்ஸில்தான் எப்படியோ அடித்துப் பிடித்து இடம் பிடித்து ஏறிக் கொண்டு போய்க் கொண்டிருந்தது. ஒரு பஸ்ஸூக்குள் நூறு ஊரை அடக்கச் சாத்தியமென்றால் அது எட்டாம் நம்பர் பஸ்தான்.
            யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல எட்டாம் நம்பர் பஸ் வருவதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன்னே அதன் ஹாரன், 'பப்பாம்... பிப்பீம்' என்று வந்து விடும். அதைக் கேட்டுக் கொண்டே வீட்டிலிருந்து ஒரு காக்காய் குளியல் போட்டு விட்டு, சட்டையைப் போட்டுக் கொண்டு, தலையை வாரி விட்டுக் கொண்டு, முகத்தில் புட்டா மாவை அள்ளிப் பூசிக் கொண்டு, ‍கையில் பையை எடுத்துக் கொண்டு கிளம்பிப் போய் நின்றால் பஸ்ஸைப் பிடிப்பதற்குச் சரியாக இருக்கும். இந்த அரிய வசதியைச் செய்து தரும் இது போன்ற வேறு ஒரு பஸ் தமிழ்நாட்டு அளவிலோ, உலக அளவிலோ இருந்ததா? இருக்கிறதா? என்று தெரியவில்லை.
            எட்டாம் பஸ்ஸின் ஒரு சிறப்பு என்னவென்றால் அந்தப் பஸ்‍ஸை எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி ஏறிக் கொள்ளலாம், எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி இறங்கிக் கொள்ளலாம். இதனால் வடவாதியிலிருந்து திருவாரூர் செல்வதற்குள் அந்தப் பஸ்ஸூக்கான பஸ் ஸ்டாப்புகளின் எண்ணிக்கை முடிவிலிகளைத் தாண்டி நீண்டு கொண்டிருந்தது.
            வேறு எந்த பஸ்‍ஸையும் தன் பயணத்தடத்தில் ஓட விடாத கற்பு மிக்கப் பஸ்ஸாக ஓடிக் கொண்டிருந்த எட்டாம் நம்பர் பஸ் பற்றி ஆயிரம் அபிப்ராய பேதங்கள் இருந்தாலும் எட்டாம் நம்பர் பஸ்ஸைப் பொருத்த வரை அது சென்று கொண்டிருந்த வழித்தடத்தில் குடியிருந்த அத்தனை மக்களின் வாழ்வியலோடும், கலாச்சாரத்தோடும் ரத்தமும் சதையுமாக கலந்திருந்தது. மணமங்கலத்தில் ஒருத்தர், ஊட்டியாணியில் ஒருத்தர், சின்ன மாவூரில் ஒருத்தர் என்று அந்தப் பஸ் ரத்தமும் சதையுமாக காவும் வாங்கியிருந்தது. விகடு அறிந்த வரையில் மிகவும் அரிதாக இரண்டு முறை விபத்துக்குள்ளாகி கவிழ்ந்திருக்கிறது என்றாலும் வெகு சீக்கிரத்தில் அதிலிருந்து மீண்டு வந்து தன் பயணத்தையும் அது ஆரம்பித்திருந்தது.
            எட்டாம் நம்பர் பஸ்ஸில் திருவாரூரில் இருக்கும் சொந்தப் பந்தங்களுக்கு பலகாரம் செய்து கொடுக்கலாம். வீட்டில் விளைந்த காய்கறிகள், தேங்காய்களைக் கொடுத்து விடலாம். அதே போல திருவாரூர் டவுனில் இருப்பவர்கள் கிராமத்தில் இருப்பவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்து விடலாம். கிராமத்திலிருந்து டவுனில் போய் வேலை பார்ப்பவர்களுக்கு மதிய சாப்பாடு வரை கொடுத்து விடலாம். டவுனிலிருந்து மூட்டை மூட்டையாக வாங்கும் சாமான்களையும் தூக்கிப் போட்டுக் கொண்டு வந்து விடலாம். அதற்காக தனியாக வண்டி பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லாமல் இருந்தது. இன்னொரு பஸ்ஸே அந்த வழித்தடத்தில் விட்டாலும் இப்படி ஒரு கொடுக்கல் வாங்கல் கூரியர் சேவையையும் சேர்த்து செய்து கொண்டிருக்கும் எட்டாம் நம்பர் பஸ்ஸை விட்டு அந்தப் பஸ்ஸில் ஏற எப்படித்தான் மனம் வரும் சொல்லுங்கள்!
            தனிக்காட்டு ராஜாவாய் தன் வழித்தடத்தில் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்த எட்டாம் நம்பர் பஸ்ஸின் 'பப்பாம் பிப்பீம்' சத்தத்துக்காக விகடவும், அம்மாவும், ஒரு பெருங்கூட்டமும் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாகக் காத்துக் கிடந்தனர்.
            "எட்டாம் நம்பரு தென்னராயநல்லூரு பக்கத்துல பஞ்சராயிக் கெடக்கு! சக்கரத்த கழட்டி திருவாரூ கொண்டு போயி பஞ்சரு ஒட்டியாந்து மாட்டித்தான் வண்டி கெளம்போணும். சனமெல்லாம் வண்டிய வுட்டு எறங்கி நின்னுகிட்டு இருக்குது. எப்படியும் இன்னும் நேரமாவும்!" என்றார் திருத்துறைப்பூண்டி வண்டியிலிருந்து மாவூரில் இறங்கிய ஒருவர்.
            கூட்டமாய் நின்ற சனங்கள் யோசித்தார்கள். மாவூரிலிருந்து வடவாதிக்கு ஒன்பது கிலோ மீட்டர் தூரம். இப்படியே நடையைக் கட்டினால் கூட முக்கால் மணி நேரத்தில் போய்ச் சேர்ந்து விடலாம். சனங்களில் ஒரு சிலர் நடையைக் கட்ட ஆரம்பித்தார்கள்.
            "ஏம்டா! நாமளும் அப்படியே நடையைக் கட்டிடலாம்டா! எவ்ளோ நேரம் நிக்குறது? எட்டாம் நம்பரு வந்தாலும் அதுல இருக்குற கூட்டத்துக்கு லோலுபட்டு நசுங்கி நெளிஞ்சி ஏறி இறங்குனா நாலு நாளைக்கு படுத்துக் கெடக்கணும். நாமளும் நடையைக் கட்டுவமாடா?" என்றது அம்மா.
            நரிவலத்தில் நடந்து நடந்துப் பழக்கப்பட்டுப் போன விகடுவுக்கு நடப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லாமல் இருந்தது. அம்மாவால் நடக்க முடியுமா என்று யோசனையாக இருந்தது.
            "ஒம்மால நடக்க முடியுமா? வூட்டுக்குப் போனதும் நடத்திகிட்டே அழச்சிட்டு வந்துட்டதா ஊரெல்லாம் புலம்பித் தள்ளக் கூடாது!" என்றான் விகடு.
            "அடப் போடா இவனே! நாங்க நடக்காத நடையா? திருவாரூ தேரோட்டத்துக்கே எம்மாம் தூரம் நடந்தே போயி நடந்தே வருவோம் பாத்துக்க!"
            விகடுவும் அம்மாவும் நடையைக் கட்டினார்கள். கிட்டதட்ட மாவூரில் எட்டாம் நம்பர் பஸ்ஸூக்காகக் காத்திருந்த பாதிக் கூட்டம் கிளம்பியிருந்தது. மீதிக் கூட்டம் நம்பிக்கையோடு எட்டாம் நம்பர் பஸ்ஸூக்காகக் காத்திருந்தது.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...