11 May 2019

எங்கள் தலைவன் எம்மை மீட்டெடுப்பான்!



            இந்த வெயிலைப் பிடித்து எம் தலைவனின் நடுமண்டையில் வைத்தால் தேவலாம். அவனோ ஏ.சி. போட்ட வீட்டில் படுத்திருக்கிறான். குடிப்பதற்கு சொட்டு தண்ணீர் இல்லை. என் தலைவன் வீட்டு நீச்சல் குளம் நீரால் நிரம்பிக் கிடக்கிறது.
            ஆற்று மணல் அவ்வளவையும் அவன்தான் அள்ளிக் கொண்டு போனான். ஆற்றில் பொட்டு மணல் இல்லை. அவன் வீட்டு நிலைப்பேழைகள் ஒவ்வொன்றிலும் கட்டுக் கட்டாக கரன்சிகள் நிரம்பி ஓடிக் கொண்டு கிடக்கின்றன.
            சொந்த ஊரில் சொந்த ஊர் மக்களால் குளம், குட்டைகளை ஏலத்தில் எடுக்க முடியாத அளவுக்கு சாகசங்கள் செய்த எங்கள் தலைவன் எத்தனையோ குவாரிகளுக்கு லைசென்ஸ் எடுத்தான், குளம் குட்டைகளை மண்ணள்ளிப் போட்டு மூடினான்.
            எத்தனையோ பேர் பட்டா இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊரில்தான் எங்கள் தலைவன் விவசாயம் நடந்து கொண்டிருந்த அத்தனை வயல்களிலும் கற்களை நட்டு ப்ளாட்டுகளாக மாற்றினான்.
            கடைசியாக ஆழ்துளைக் குழாய் இறக்கி மினரல் வாட்டர் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்த எங்கள் தலைவனின் கம்பெனியைச் சுற்றித்தான் ஊர்மக்கள் காலி பிளாஸ்டிக் குடங்களைக் கட்டிக் கொண்டு தண்ணீருக்காக சைக்கிளில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவனது கம்பெனியிலிருந்து வாட்டர் கேன்களும், வாட்டர் பாட்டில்களும் என்ன ஜோராக வாகனங்களில் போய்க் கொண்டிருக்கின்றன.
            பத்தாவது, பனிரெண்டாவது படிக்க வக்கில்லாத ஊர்தான் எங்கள் தலைவனை வாழ வைக்கும் எங்கள் ஊர். எங்கள் ஊரில் இன்ஜினியரிங் காலேஜ் நடத்தி எங்கள் ஊரை உலகளவில் உயர்த்துபவன் எங்கள் தலைவன்தான்.
            எங்கள் வேலை வாய்ப்புகள், வசதிகள், உரிமைகள் எல்லாவற்றையும் பிடுங்கிய தலைவன் அப்படியே எங்களை விட்டு விட மாட்டான் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நிச்சயம் தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு இரண்டாயிரம் கொடுத்து எங்களை மீட்டெடுப்பான்.
            எங்களை அவன் சுரண்டினான் என்று சொல்ல முடியாது. அவன் அப்படிச் செய்யா விட்டால் யார் திருப்பூர் பக்கம், ஓசூர் பக்கம், சென்னைப் பக்கம் என்று டவுன் பக்கம் போயிருப்பார்கள்? அப்படி யாரும் போகாமல் போனால் அந்தத் தொழில் நகரங்கள் எப்படிச் செழித்திருக்கும்? எங்கள் தலைவன்தான் இந்தியாவின் தொழில் நகரங்களை, பொருளாதார மண்டலங்களைச் செழிக்கச் செய்பவன்.
            யாருமே உழைத்துச் சம்பாதிக்க முடியாத எங்கள் ஊரில் எங்கள் தலைவன் மட்டுமே உழைக்காமல் சம்பாதிக்க முடியும். ஏனென்றால் அது எப்படியென்றால் அவன்தான் எங்கள் தலைவன்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...