14 May 2019

காசிருந்தா கல்யாணம்!



செய்யு - 84
            வீயெம் மாமா, சாமியாத்தா இருவரும் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் வந்து கொண்டிருந்தார்கள். இருவருக்கும் அப்பா வந்து பேசினால் கல்யாண ஏற்பாட்டுக்கு வைத்தி தாத்தா சம்மதிப்பார் என்ற நம்பிக்கை இருந்து கொண்டிருந்தது.
            ஒருவாறாக உடம்புக்குச் சரியில்லாமல் இருக்கும் வைத்தி தாத்தாவைப் பார்க்கும் சாக்கில் வீயெம் மாமாவின் கல்யாணம் குறித்துப் பேசுவது என முடிவானது. விகடுவும், செய்யுவும் ஏற்கனவே சென்று வந்த வகையில் கவனிப்புச் சரியில்லை என்பது இலைமறைக்காயாகத் தெரிந்து போய், அது வேறு அப்பாவின் மனதிற்குக் குறையாக இருந்தது. அப்போது வீயெம் மாமாதான் வைத்தி தாத்தாவைத் தூக்கிப் போட்டு சுத்தம் செய்து கொண்டிருந்தது. வைத்தி தாத்தா கவனிப்பாரற்றுக் கிடந்தது.
            வைத்தி தாத்தா வலியால் முனகிய போது, "எதுக்கு இப்போ சத்தம் போடுறே! பேசாம இருக்கணும் பாரு! ச்சும்மா சின்ன பிள்ளயாட்டம்! வாயில ரண்டு வெச்சன்னா பாத்துக்கோ!" என்றது வீயெம் மாமா. இப்படிப் பேசிய வீயெம் மாமாதான் கல்யாணத்துக்கு வைத்தி தாத்தாவின் சம்மதம் தேவையென்று வீடு தேடி வந்து நின்றது. வைத்தி தாத்தா நன்றாக இருந்த காலத்திலேயே கல்யாண ஏற்பாடுகள் செய்வதற்கு எதற்கும் மெனக்கெட்டதில்லை. இப்போது இருக்கும் நிலையில் அதனால் என்ன செய்ய முடியும்? ஆனால் வைத்தி தாத்தா வாயைத் திறந்தால்தான் குமரு மாமா அதற்கான ஏற்பாடுகளில் இறங்கும். அதற்கு அப்பா போய் பேசினால்தான் வைத்தி தாத்தா கல்யாண ஏற்பாடுகள் பற்றி வைத்தி தாத்தா வாயைத் திறக்கும் என்று வீயெம் மாமாவும், சாமியாத்தாவும் ஏதோ ஒரு நம்பிக்கையிலிருந்தன.
            அப்பாவும், அம்மாவும் வைத்தித் தாத்தாவைப் பார்க்கப் போன போது, "வாங்க! வாங்க! எப்போ வருவீங்களோன்னு தெனம் வாசலப் பாத்தபடி கெடந்தேன்!" என்றது வைத்தி தாத்தா.
            வைத்தி தாத்தா இளைத்துப் போய் துரும்பாய், சருகாய் கட்டிலில் கிடந்தது. குமரு மாமாவோ, மாமியோ வெளியே வரவில்லை. சாமியாத்தாதான் அங்கும் இங்கும் ஓடி டீ போட்டுக் கொண்டு போய்க் கொடுத்தது.
            வீயெம் மாமா கண்களால் சைகைக் காட்டிப் பேசுங்கள் என்றது. அப்பாவும், அம்மாவும் வைத்தி தாத்தாவின் உடல்நிலையை விசாரித்து விட்டு மெதுவாகப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
            "பெரியவனுக்கு கல்யாணம் ஆயி குழந்தைக் குட்டி ஆயிடுச்சு. சின்னவனுக்கு வயசாகிட்டேப் போகுது. ஒங்க காலத்துலயே ஒங்க கண் குளிர ஒரு கல்யாணத்தப் பண்ணிப் பாத்துட்டா ரொம்ப ந்நல்லா இருக்கும்..." என்று அப்பா இழுத்தது.
            வைத்தி தாத்தாவின் முகம் மாறியது.
            "கல்யாணம் பண்றதுக்கு அவேம் காசி வெச்சிருக்கானா? வெச்சிருந்தா தாரச் சொல்லுங்க! பண்ணி வெக்கிறேம்." என்றது வைத்தி தாத்தா.
            "அத்த அத்த அந்தந்த காலத்துல முடிச்சிட்டா ந்நல்லா இருக்கும். வயசு போயிடப்புடாதுல்ல மாமா!" என்றது அப்பா.
            "பெரியவன் வெளிநாடு போயி சம்பாதிச்சு அனுப்புனாம். அந்தக் காசிய வெச்சு காலாகாலத்துல அவனுக்குக் கல்யாணத்தப் பண்ணி வெச்சேம். இவேம் எத்த சம்பாதிச்சு நம்மகிட்ட கொடுத்தாம்னு கல்யாணத்தப் பண்ணி வைக்கச் சொல்றீங்க மாப்ளே?"
            அப்பாவுக்குச் சங்கோஜமாகப் போயிருக்க வேண்டும். "பெத்த தகப்பம் மாதிரிப் பேசுங்க மாமா!" என்றது அப்பா.
            "ஓ! வெசயம் அப்படிப் போகுதா? அப்ப ஒங்க ரூட்லயே வார்ரேம். ஓகையூர்ல இருக்குற நெலத்துல அவம் பங்குக்கு உள்ளத்த வித்துட்டு நீங்களே பாத்து ஒரு நல்ல பொண்ணா கல்யாணம் பண்ணி வெச்சிடுங்களேம்!" என்றது வைத்தி தாத்தா வேண்டா வெறுப்பாக.
            கேட்ட எல்லாருக்கும் ஒரு மாதிரியாகப் போய் விட்டது.
            "இந்தக் கெழவி திட்டைக்கும் இஞ்ஞயும் அலஞ்சிட்டு இருந்தப்பயே நெனச்சேம்! இவுய்ங்க ஒண்ணும் ஒடம்புக்கு முடியாதவர பாக்க வாரல. சின்னவருக்குக் கல்யாணத்தப் பண்ணி வெச்சி சொத்துல பாகம் பிரிச்சு கொடுத்தடணும்னு வந்திருக்காக!" என்றது உள்ளேயிருந்து மேகலா மாமியின் குரல்.
            "ஏட்டி வார்த்தய அளந்து பேசு!" என்றது அம்மா வெளியில் இருந்தபடியே.
            சாமியாத்தா எதையும் பேச வேண்டாம் என்பது போல அம்மாவைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டது.
            "யாரு வூட்டுக்கு வந்துட்டு யாரு வார்த்தய அளந்து பேசுறது?" என்றது மேகலா மாமி.
            "ஏட்டி பெத்த புள்ளய வளர்க்க யோக்கியதில்ல. கொண்டு போயி அப்பங்காரம் வூட்டுல வுட்டுப்புட்டு இஞ்ஞ வந்து குடும்பம் நடத்துறவலாம் வூட்டப் பத்திப் பேசுறாளாக்கும்!" என்றது பதிலுக்கு அம்மா.
            "இதுக்கொண்ணும் கொறச்சல் யில்ல. எல்லாரும் ஒங்கள மாரி பெத்த புள்ளிக்காக ஊரு ஊரா வூட்டத் தூக்கிட்டு அலய முடியுமா? ஒங்க பெரிய தம்பி, அதாங் எம்மட புருஷம் வந்து பாத்துட்டுச் சொன்னாரு ஒங்க வூடு கெடக்குற கெடய!" என்றது மாமியும் பதிலுக்கு.
            "வெங்கு! வாய மூடு! கெளம்புவோம்!" என்றது அப்பா.
            "ஏம்டா எச்சிப்பாலு குடிச்சப் பயலே! அன்னிக்கு எம்மட வூட்டுக்கு வந்து எம்மட பொண்ண விட்டு பேசச் சொன்னதா பேசுனீல்ல. இன்னிக்கு நீயி என்ன பொண்டாட்டிய வுட்டுப் பேசச் சொல்லிட்டுப் பொட்டச்சி மாரி உள்ள உக்காந்து இருக்கீயா? எம்மட பொண்ணு ஒன்னய சரியாத்தான்டா கேட்டுருக்கா!" என்று அம்மா பேசியதும், சாமியாத்தா அம்மாவின் வாயைப் பொத்தியபடி அழ ஆரம்பித்தது.
            "நீயி இப்படியே அழுவு. அப்பதாம் அவ்வே ஒம்ம தலயில வெச்சு ந்நல்லா மொளகா அரப்பா. அரச்சதும் சாந்த வழிச்சிட்டு வந்து எம்மட வூட்டுக்கு வந்து மூஞ்சில பூசிட்டுப் போ!"
            "வெளியில வந்தேன்னா நடக்குறதே வேற! ந்த்தா பாருடி! வெளியில வந்தேன்னா வெச்சுக்கோ அருவமாமனயால ஒரு மசுரு வுடாம அறுத்துப்புடுவேம் பாத்துக்கோ!" என்றது மேகலா மாமி.
            "ன்னா இது! இவ்ளோ ஆம்புளைக இருக்கீங்க! அவ்வே ன்னா பேச்சுப் பேசுறா? டேய் சின்னவனே! ன்னடா இது! இந்த வூட்டுல பொறந்து இந்த வூட்டுல வளந்த நம்மள நேத்திக்கு வந்தவ்வே ன்னா போடு போடுறா? ன்னடா நடக்குது இங்க? இவ்வே கையாலத்தாம் நெதம் நீயி சோறு வாங்கிச் சாப்புடுறீயா?" என்றது அம்மா.
            எல்லாரும் ஏன் மெளனமாக இருக்கிறார்கள் என்று புரியாமல் அம்மா மேலும் உக்கிரமாகப் பேச ஆரம்பித்தது.
            அப்பா வெளியில் வந்து டிவியெஸ் பிப்டியை ஸ்டார்ட் செய்து, "இப்ப நீ வாரப் போறியா ல்லியா?" என்றது.
            "அத்தாம் ஒம்மட புருஷம் கூப்புடுறாம்ல. போயித் தொலையேண்டி!" என்றது மேகலா மாமி.
            "டேய் பெரியவனே! ந்தா பாரு சின்னவனே! நீங்கலாம் ந்நல்லா வந்துருவீங்கடா! ச்சும்மா வூட்டுல செவனேன்னு கெடந்த எங்கள கூப்டாந்து ந்நல்லா சம்மானம் பண்ணிப் அனுப்புறீங்கடா! ந்த வயித்தெரிச்சலாம் ஒங்களச் சும்மா வுடாதுங்கடா!" என்றபடி அம்மா விடுவிடுவென்று வந்து டிவியெஸ் பிப்டியில் ஏறிக் கொள்ள வண்டி விர்ரென்று புறப்பட்டது.
            "நாமளே இப்படி சின்னா பின்னா பட்டு திரும்புறோம். நம்மப் புள்ளிக ன்னா பாடு பட்டு வந்துச்சோ! ஒம்மய யாரு புள்ளிகள அங்கப் போயி பாத்துட்டு வாரச் சொன்னது? பய ஏதாச்சும் சொன்னான்னா?" என்றது அப்பா வண்டியை ஓட்டியபடி.
            "அந்தக் குட்டியாவது ரண்டு வார்த்த சொல்லுவா. புள்ளயா அவ்வேம்? கல்லுளிமங்கன் கணக்கா. எதாச்சும் சொன்னத்தானத் தெரியும். இத்த மாதிரின்னு ஒரு வார்த்த சொல்லிருந்தான்னா இந்தப் பக்கம் வந்துருப்பனா?" என்றது அம்மா.
            "இத்தே இத்தோட வுட்டுடு. வூட்டுல போயி இத்தையல்லாம் பேசிட்டு இருக்க வாணாம்!"
            "இனும்மே அந்தக் கெழவியோ அந்தச் சின்னப்பயலோ வாரட்டும் வூட்டுக்கு வெச்சிக்கிறேம். நேத்தி வந்தவள பேச வுட்டுட்டு வேடிக்கப் பாத்துட்டு இருக்குதுவோங்க. எங்கப்பம்காரு இருக்காரே! ஒரு வார்த்த கேட்டாரா? நம்மள ன்னா பேச்சு பேசிருக்காரு. பூவரச மரத்துல கட்டி வெச்சு ன்னா அடி அடிச்சிருக்காரு. இப்போ ன்னான்னா அப்படியே மன்னாரு மாரில்ல உக்காந்து இருக்காரு. மகேம் பொண்டாட்டி வந்தா கண்ணா அவிஞ்சுப் போயிடும். நாக்கா செத்துப் போயிடும். நீங்க கேட்டதுக்கு மட்டும் ன்னம்மா வாயத் தொறந்து பேசுறாரு!" அம்மா இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த போதே வீடு வந்தது. இருவரும் எதுவுமே நடக்காதது போல வண்டியை விட்டு இறங்கி வீட்டுக்குள் வந்தனர்.
            "சின்ன மாமாவுக்கு எப்பப்பா கல்யாணம்?" என்றாள் செய்யு.
            "நாளிக்கே பண்ணிடுவோமா?" என்றது அப்பா.
            "ஐய்யோ நாளிக்கேவா!" என்று வாயைப் பிளந்தாள் செய்யு.
            "ஏலே இவனே இவள அழச்சிட்டு அந்தாண்டப் போடா! ஒங்கப்பாரே கோவத்துல இருக்காரு!" என்றது அம்மா.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...