கதை 1
கிழிந்து போன டீசர்ட்டு. கறைபட்ட கைலி.
பிய்ந்து போன செருப்பு. அடுத்த வேளை சாப்பாட்டுக்கோ, ஒரு கோப்பைத் தேநீருக்கோ நிச்சயம்
பையில் பைசா காசிருக்காது. குடும்பத்தில் பெண்டாட்டிப் பிள்ளைகள் வயிராறச் சாப்பிட்டிருக்காது.
நீங்கள் அந்தக் கையைப் பார்க்க வேண்டும்! கைலி மடிப்பைப் பார்க்க வேண்டும்! கையில்
சரக்கு பாட்டில்! கைலி மடிப்பில் சரக்கு பாட்டில்!
ஒரு நாளுக்கு எப்படியும் இப்படித் திரிபவர்கள்
குறைந்தபட்சம்(!) நூறு ரூபாய்க்கு மேல் குடிப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். அதற்கு
மட்டும் காசு எங்கிருந்து வருகிறதோ? எப்படி வருகிறதோ? எப்படிச் சம்பாதிக்கிறாரோ?
என்னவெல்லாம் கஷ்டப்படுகிறாரோ? முன்பெல்லாம் அவர்கள் குடும்பத்துக்காக எப்படியோ சம்பாதித்திருப்பார்கள்.
இப்போது குடிப்பதற்காக எப்படியோ சம்பாதிக்கிறார்கள். சம்பாத்தியம் புருஷ லட்சணம்.
புருஷனுக்குக் குடிப்பது லட்சணம்.
*****
கதை 2
இதற்குக் கீழே நாம் பார்க்கப் போவதும்
அப்படிப்பட்டதான உல்டா பில்டா கதைதான்.
மாடர்னான டீசர்ட். முக்கால் கால்சட்டையோ,
ஒண்ணே அரைக்கால் கால்சட்டையோ அதில் ஒன்று. காஸ்ட்லி ஷூ. அடுத்த வேளைச் சாப்பாடு பீட்சாவோ,
பர்க்கரோ! பை முழுவதும் தேய்த்தால் பணத்தைக் கொட்டும் கார்டுகள். குடும்பத்தில் பெண்டாட்டிப்
பிள்ளைகள் ஆர்டர் பண்ணிச் சாப்பிட்டிருக்கும். நீங்கள் அந்தக் கையைப் பார்க்க வேண்டும்!
பையைப் பார்க்க வேண்டும்! கையில் சியர்ஸூக்காகக் காத்துக் கொண்டிருக்கும் கோப்பைகள்.
பையில் ஏதேனும் வஸ்துகள்!
ஒரு நாளுக்கு எப்படியும் இப்படித் திரிபவர்கள்
கார்டு தேய்ந்து கட்டெறும்பு ஆகும் வரை குடிப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். முதலில்
வீக் என்ட் பார்ட்டி என்று என்ட்ரி கொடுத்து, நெக்ஸ்ட் சாட்டர்டே, சண்டே பார்டிகளாக
டபுள் டமாக்காவாகி, தென் நெக்ஸ்ட் ஆல் த வீக் நைட் பார்ட்டியாகி, ஆப்டர்வேர்ட்ஸ் டே
அன்ட் நைட் பார்ட்டியாகி, கொண்டாட்டத்துக்காக குடிக்க ஆரம்பித்து குடிப்பதே கொண்டாட்டமாகி ரத்தமே ஆல்கஹாலாக ஆகும் அளவுக்குக் குடித்துக் குடித்தே
குடிநோயாளியாகிறார்கள்.
*****
பின்குறிப்பு
இரண்டு கதைகளிலும் பெயர்கள் தவிர்க்கப்பட்டிருப்பதற்கு
எந்தப் பெயரைப் போட்டாலும் அந்தப் பெயரில் ஒருவர் கிராமத்திலோ, நகரத்திலோ கட்டாயம்
இருப்பார். எந்தப் பெயரும் விடுபட முடியாத அளவுக்கு அந்தப் பெயரில் ஒருவர் குடித்துக்
கொண்டிருக்கிறார்.
*****
கதை சொல்லும் அநீதி
தமிழ்நாட்டின் தனிச் சிறப்பு இதுதான்!
சம்பாதிப்பவர்கள், சம்பாதிக்காதவர்கள் என பேதமில்லாமல் குடிக்கும் நாடு இது! பணம் தீர்ந்த
பின்னும் குடிக்க முடிவது தமிழ்நாட்டில் இருப்பவர்களால் முடியும்! இங்கிவரை யாம் பெறவே
என்ன தவம் செய்து விட்டோம்! டாஸ்மாக் பார், எலைட் பார் என திறந்து வைத்து அவருக்கு
என்ன வரம் தந்து விட்டோம்!
*****
No comments:
Post a Comment