செய்யு - 79
நரிவலத்தில் விகடு குடியிருந்த வல்லாளத்
தேவர் வீட்டிலிருந்து தெற்கே ஒரு மொனங்கு நடந்து இடக்கே திரும்பினால் காளியம்மன் கோயில்.
அதாவது அந்தத் திருப்பமே காளியம்மன் கோயிலாக இருந்தது. கோயிலின் வாசலிலிருந்து தெரு
தொடங்கி இரண்டு பக்கமும் ஏராளமான வீடுகள் இருந்தன. சரியாகச் சொல்வதானால் தெரு நடுவில்
அந்தக் கோயில் இருந்தது. அந்தக் காளியம்மன் கோயில் தெருவுக்குச் செல்ல வேண்டுமானால்
கோயிலின் இடது புறமோ அல்லது வலது புறமோ இருந்த சந்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும்.
தெருவை அடைத்து அருள் பாலித்துக் கொண்டிருந்த
காளியம்மன் மீது நரிவலம் மக்களுக்கு அபார நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை ஆண்டியப்பநாதர்
கோயிலை விட அதிகக் கூட்டத்தைக் காளியம்மனுக்குக் கூட்டியது.
பஸ், லாரி வைத்து டிரான்ஸ்போர்ட் நடத்திக்
கொண்டிருந்த பலரின் குலதெய்வமாக நரிவலம் காளியம்மன் இருந்ததால் மாசத்தின் பெரும்பாலான
நாட்கள் கோயிலில் ஏதேனும் விஷேசங்கள் இருந்து கொண்டே இருந்தது. வாரத்தின் இரண்டு
மூன்று நாட்களுக்கு புது பஸ், புது லாரி என்று பூசை நடந்து கொண்டிருந்தது. அது மட்டுமில்லாத
அம்மனுக்கு என்று இருந்த விஷேச நாட்களில் பூசைகள் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தன.
எல்லா விஷேசங்களும் சாயுங்காலம் ஆறு மணி
வாக்கில் தொடங்கி இரவில்தான் நடக்கும். அந்த நேரத்தில்தான் அந்தக் காளியம்மனுக்கு
ஏதேனும் செய்வதாக இருந்தால் செய்ய வேண்டும் என்றும் அதுதான் விஷேசமான நேரம் என்றும்
நரிவலத்தில் பேசிக் கொண்டார்கள். காளியம்மனுக்கு அதிகக் கூட்டம் கூடுவதற்கு அவரவர்களும்
தங்கள் வேலைகளை முடித்து விட்டு வருவதற்கு அந்த செளகரியமான நேரமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
கோயில் என்று பார்த்தால் அது சிறிய கோயில்.
அப்போது அந்தக் காளியம்மன் கோயில் தெருவுக்கு போய் வருவதில் எந்தச் சிரமும் இருந்திருக்காது.
தெரு திருப்பத்தின் மையமாக கோயிலும், கோயிலின் இரு புறமும் நிறைய இடைவெளியும் இருந்திருக்கக்
கூடும். காலப்போக்கில் நூறு பேருக்கு மேல் நிற்கும் வகையில் கோயிலைச் சுற்றி வளாகமானது
பெரிதாகக் கட்டப்பட்ட பிறகுதான் அந்தத் தெருவுக்குச் செல்லும் இரு பக்க பாதைகளும் குறுகியிருக்க
வேண்டும்.
பலருக்கும் இஷ்டத் தெய்வமாய்ப் போன அந்தக்
கோயில் அம்மாவுக்கும், செய்யுவுக்கும் இஷ்டமாகிப் போய் விட்டது. விஷேச நாட்களில்
கோயிலுக்குப் போனால் போதும் இரவு சாப்பாட்டை அங்கேயே முடித்துக் கொள்ளலாம். கை
கொள்ளாத அளவுக்கு சர்க்கரைப் பொங்கலும், புளியோதரையும், தயிர் சாதமும், தேங்காய்
சாதமும், கொண்டைக் கடலையுமாக கொடுத்தார்கள். குடும்பத்திலிருந்த இருவர் கோயிலுக்குச்
சென்றால் கூட போதும். அதை வாங்கிக் கொண்டு வந்து குடும்பமே சாப்பிடலாம். அப்படித்தான்
அம்மாவும், செய்யுவும் கோயிலுக்குச் சென்று வரும் நாட்களில் அன்றைய இரவுச் சாப்பாடு
பிரசாத சாதமாக இருக்கும்.
காளியம்மன் கோயிலிலிருந்து வேண்டிக் கொண்டு
அந்தக் கோயிலிலிருந்தும் ஒரு முடி கயிற்றை அம்மா விகடுவின் கையில் கட்டியது. அவன்
கையில் இருந்த கயிறுகள் இப்படி அதிகமாகிக் கொண்டே போயின. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக
அவன் மனதில் இருந்த கடவுள் நம்பிக்கை குறைந்து கொண்டே போனது. இது குறித்து அவன் வெளிப்படையாகப்
பேசவும் ஆரம்பித்தான். இது அம்மாவுக்குப் பயத்தை உண்டு பண்ணியது. ஒரு கட்டத்தில் அவன்
கையிலிருந்த கயிறுகளையும் அவிழ்த்து அம்மாவின் கைகளில் கொடுத்த போது அம்மாவுக்கு
அது பேரச்சத்தை உண்டு பண்ணியது.
"ஏம்டா இப்படிப் பண்ணுறே? நீ நல்லா
படிச்சு மார்க் வாங்குனா சாயுங்கால பூசையெல்லாம் பண்றதா வேண்டிருக்கேம்டா." என்றது
அம்மா.
"நீ வேண்டிக்கோ. செஞ்சுக்கோ. தயவு
பண்ணி இதுல நம்மள உள்ள இழுக்காத." என்றபடி மேற்கொண்டு பேசுவதற்கு வாய்ப்பு தர
விரும்பாதவனாய் இதைச் சொல்லி விட்டு நகர்ந்து போனான் விகடு.
"இவனயெல்லாம் வெச்சிட்டு ன்னா பண்றது?"
என்ற அம்மாவின் அலுத்துப் போன வாசகம் நகர்ந்து போன விகடுவின் காதில் விழுந்தது.
அம்மா இதை ஒரு குறையாக வல்லாளத் தேவரிடமும்
சொல்லிப் புலம்ப ஆரம்பித்தது. அதற்கு வல்லாளத் தேவர் ஒரு விஷேசமான விளக்கத்தையும்
வழங்கினார். "நீ ஒண்ணும் கவலப்படாத ஆயி! காளியம்மாவுக்குப் பிடிச்சவங்கள விட அவள
பிடிக்காதவங்களத்தான் ரொம்ப பிடிக்குமாம் ஆயி! நீ வேணுன்னா பாரேம்! அதனாலயே அவம் நீயெல்லாம்
நெனைக்கிறத தாண்டி பெரிசா வருவாம்!"
விகடுவைக் கேட்டால் இந்த நம்பிக்கைகள்
குறித்து அவன் பெரிய விளக்க உரைகளையே அந்த நாட்களில் வழங்கிக் கொண்டிருந்தான். இப்படி
விளக்கம் வழங்குவதும் கூட காளியம்மனின் அருள்தான் என்று வல்லாளத் தேவர் கூறிக் கொண்டிருந்தார்.
அப்படி அவன் அந்த நாட்களில் வழங்கிக் கொண்டிருந்த சுய விளக்கங்களின் சுருக்கமான விவரம்
யாதெனில்...
மனம் சிருஷ்டித்த கோடான கோடி எண்ணங்களில்
கடவுள் நம்பிக்கையும் ஒரு வகை எண்ணம்தான் என்ற முடிவுக்கு வந்திருந்தான் விகடு. மனம்
ஒன்றைத் தாண்டி ஒன்றைச் சிந்தித்துக் கொண்டே போகிறது. அப்படி கடவுள் நம்பிக்கையையும்
தாண்டிச் சிந்தித்துக் கொண்டே போனால் அங்கே என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை என்பது
அவனுக்குப் புலனானது.
மனம்தான் எல்லா எண்ணங்களையும் சிருஷ்டிக்கிறது.
எண்ண வடிவங்கள் மனிதனுக்குப் பயமாகிறது, தைரியமாகிறது, அவநம்பிக்கையாகிறது, ஆசையாகிறது,
நிராசையாகிறது.
பயத்தைச் சிருஷ்டிப்பது மனம் என்றால் அந்தப்
பயத்துக்குப் பாதுகாப்பாக கடவுளைச் சிருஷ்டிப்பதும் அதே மனம்தான். அவநம்பிக்கையைச்
சிருஷ்டிக்கும் அதே மனம் அந்த அவநம்பிக்கைக்குக் காப்பாக கடவுள் நம்பிக்கையையும் சிருஷ்டித்துக்
கொள்கிறது.
அச்சமில்லாத, அவநம்பிக்கையில்லாத, ஆசையில்லாத
மனம் சிருஷ்டிக்கும் தன்மையை இழந்து விடுகிறது. அது வெறுமையடைந்து விடுகிறது. மனமும்
இறந்து விடுகிறது.
கடவுள் முதலா? சாத்தான் முதலா? என்றால்
சாத்தானே முதல். சாத்தானே கடவுளைச் சிருஷ்டிக்கிறது. சாத்தான்கள் இல்லாத உலகத்தில்
கடவுளுக்கு என்ன பெரிய வேலை இருக்கிறது?
ஒரே நேரத்தில் மனம் இரண்டு விதமாகச் சிந்திக்கிறது
என்பதைப் புரிந்து கொள்ள விகடுவுக்கு அதிக நாட்கள் தேவைப்படவில்லை. அச்சப்படும் மனமே
தைரியத்தைத் தேடுகிறது, தன் மேல் அவநம்பிக்கை கொள்ளும் மனமே தன்னம்பிக்கையைத் தேடுகிறது
என்பதைப் புரிந்து கொண்ட பின் அவன் மனம் நின்று போயிருந்தது.
மனம் தன்னை இயக்கக் கொள்வதற்காக சில எண்ணங்களை,
கருத்துருக்களை உருவாக்கிக் கொள்கிறது என்றால் தன்னை முடக்கிக் கொள்வதற்காகவும் அதே
போல சில எண்ணங்களையும், கருத்துருக்களையும் அதுவேதான் சிந்தித்துக் கொள்கிறது. இப்படிச்
சிந்திப்பதும் மனமே, அப்படிச் சிந்திப்பதும் மனமே. மனதால் அப்படிச் சிந்திக்காமல் இருக்க
முடிவதில்லை. அதற்கு அப்படி ஒரு தன்மை இருக்கிறது.
ஆனால் ஆசை இருக்கிறதே அதற்கு தவறாக எதுவும்
நடந்து விடக் கூடாது, பிழை ஏதும் இருந்த விடக் கூடாது, தன் ஆசைக்குக் குறுக்காக எதுவும்
வந்து விடக் கூடாது. அதவாது அப்படி எதுவும் நேர்ந்து விடக் கூடாது என்ற அச்சம் அதற்கு
இருந்து கொண்டே இருக்கிறது. அந்த அச்சத்திலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள மனதுக்கு
ஒரு பிடிமானம் தேவையாய் இருக்கிறது. அநேகமாக அந்தப் பிடிமானம் ஒருவருக்குக் கடவுள்
நம்பிக்கையாக இருக்கலாம் அல்லது எது நேர்ந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளலாம் என்ற
தன்னம்பிக்கையாக இருக்கலாம். இது சம்பந்தப்பட்ட ஆட்களின் மனோ தைரிய கருத்துருவைப்
பொருத்து மாறுபட்டது.
ஒவ்வொரு எண்ணத்துக்கும் ஒரு உரு கொடுக்க
அது மேலும் மேலும் உருக்களை உருவாக்கிக் கொண்டே போகிறது என்பது தெளிந்தவுடன் அவனுள்
நிலைகொண்டிருந்த அத்தனை உருக்களும் உரு தெரியாமல் அழிந்து போயின.
அதற்குப் பின் அவன் மனதுக்குப் பெரிய வேலைகள்
எதுவும் இல்லாததால் அது செத்தப் பாம்பைப் போல கிடந்தது. எந்த வேலையும் இல்லாத நிலையை
அடைந்த போது அவனையும் அறியாமல் விகடு படிக்க ஆரம்பித்தான்.
அவனுக்கு படிப்பது குறித்த நிறைய ஆலோசனைகள்
அவனது நண்பர்கள் மூலமாகக் கிடைத்தன. வாத்தியார்மார்களும் சில வழிமுறைகள் சொன்னார்கள்.
அவனுக்கு எந்த வழிமுறைகளையும் கையாளாமல் படிப்பதே சரியாகப் பட்டது. இப்படி எந்த வழிமுறைகளும்
சாதாரணமாகப் படித்த போதுதான் அவனால் அதிகப் பக்கங்கள் அலுப்பு சலிப்பில்லாமல் படிக்க
முடிந்தது.
அவன் இப்படி ப்ளஸ்டூ புத்தகங்களைப் படிக்க
ஆரம்பித்த போது அநேகமாக அரையாண்டு கடந்திருந்தது. அதுவரை வகுப்பறையில் கவனித்ததை வைத்து
அரையும் குறையுமாக எழுதிக் கொண்டிருந்தவன் அதன் பின்னே முழுமையாகப் படிக்க ஆரம்பித்தான்.
அவன் மிகக் குறுகிய காலமே அந்தப் புத்தகங்களைப்
படித்தான். அவனால் தாவரவியல், விலங்கியல் பெயர்களை அபாரமாக நினைவில் வைத்து சொல்ல
முடிந்தது. கணக்குகளையும் அவன் அநாயமாசப் போட ஆரம்பித்தான். வேதியியல் சமன்பாடுகளும்
அவன் புரிதலுக்கு வந்தன. இயற்பியலில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும் அதை அவனால் புரிந்து
கொள்ள முடிந்தது. அந்தத் தடுமாற்றத்தைப் புரிந்து கொண்டதை வைத்தே அவனால் இயற்பியலைப்
பரடை்சைகளில் எழுதிச் சமாளிக்கவும் முடிந்தது.
*****
No comments:
Post a Comment