20 May 2019

கல்யாணமாம் கல்யாணம்!



செய்யு - 90
            லாலு மாமா கட்டை அடிக்கிறவனுக்கு எல்லாம் பெண் கொடுக்க முடியாது என்று சொல்லிய சில மாதங்களில் குமரு மாமாவுக்கு வெளிநாடு போகும் யோகம் அடித்தது. குமரு மாமா கைநிறைய சம்பாதிக்க ஆரம்பித்தது. வைத்தி தாத்தாவின் வீட்டு நிலைமை மாற ஆரம்பித்தது அதன் பின்தான். இதெல்லாம் நாம் முன்பு பார்த்தக் கதைகள்தான். லாலு மாமாவுக்குச் சபலம் தட்டியது. குமருவுக்கே ஈஸ்வரியைக் கட்டி வைத்து விடலாமா என்று லாலு மாமா வைத்தி தாத்தாவிடம் கேட்டுப் பார்த்தது. காலம் அவ்வளவு சுருக்காக அப்போது மாறியிருந்தது.
            "ஏம்டா! என்னவோ கட்ட அடிக்கிறவனுக்கெல்லாம் பொண்ணு கொடுக்க முடியாதுன்னு மாப்ளகிட்ட சொன்னீயாம்ல. இப்ப ஏம்டா கட்ட அடிக்கிறவனுக்கு வந்து பொண்ணு கொடுக்குறேங்றே?" என்று வைத்தி தாத்தா நேரடியாக லாலு மாமாவிடம் போட்டில் அடித்தாற் போலக் கேட்டது.
            "அத்தெல்லாம் ஒண்ணுமில்லீங்க அத்தாம். அத்து ச்சும்மா வெளயாட்டுக்குப் பேசிட்டது. நீங்க வந்து கேட்ருந்தீங்கன்னா மாட்டேம்னு சொல்லிருக்க முடியுமா? ல்லே அக்காதாம் வந்து கொடுடான்னு சொன்னா மாட்டேம்னா சொல்ல முடியும்?" என்றது லாலு மாமா பவ்வியமாக.
            "இந்தாப் பாரு லாலு! ஒம் மவ்வே விசயாளிங்றாங்க. படிச்சவங்றாங்க. இவ்வனுக்கு அத்து ஒத்து வாராது. நீ நெனச்ச மாரி கவர்மென்டு உத்தியோகம் பார்க்குறவங்களுக்கே பாத்து கட்டி வெச்சுக்க! நமக்கு ஆகாது. ஒத்து வாராது. இனிமே இது பத்தி பேச வாணாம். வுட்டுடு" என்று கறாராக அடித்துச் சொல்லி விட்டது வைத்தி தாத்தா.
            அதிலிருந்து லாலு மாமா முன்பை விட மேலும் விடாப்பிடியாக ஈஸ்வரிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தது. லாலு மாமாவுக்கு கவர்ன்மென்ட் வேலை பார்க்கும் மாப்பிள்ளையாகப் பார்த்து கட்டி வைத்து விட வேண்டும் என்ற சங்கல்பமும் முன்பை விட அதி தீவிர லட்சியமாக உண்டாகி விட்டது.
            லாலு மாமாவும், வேணி அத்தையுமாக இருவர் சம்பாத்தியம் இருந்ததால் பவுன் நகைக்கோ, செலவு செய்து கட்டி வைப்பதிலோ லாலு மாமாவுக்குப் பொருளாதார ரீதியாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. அதுவும் இல்லாமல் அப்போது  லாலு மாமாவுக்கு மணமங்கலத்தில் ஓட்டு வீட்டோடு கூடிய ஒரு மனைக்கட்டும், அதன் பின்னே பெரிய கொல்லையும், வடவாதியில் கடைத்தெருவில் ஒரு பெரிய இடமும் இருந்தது. திட்டையிலும், ஓகையூரிலும் ஏகப்பட்ட வயல்களை வாங்கிப் போட்டிருந்தது. ஓகையூரில் நிறைய வயல்களைப் ப்ளாட் பிடித்து வேறு விவசாயம் பண்ணிக் கொண்டிருந்தது. அத்தோடு தஞ்சாவூரிலும், மன்னார்குடியிலும் ப்ளாட்டுகள் வாங்கிப் போட்டிருப்பதாக பேச்சு இருந்தது. பேங்கிலும் டெபாசிட்டுகள் நிறைய இருப்பதாக பேசிக் கொண்டார்கள். அதனால் எவ்வளவு நகை போடவும், செலவு செய்யவும் தயாராக இருந்தது.
            அவ்வளவு சீக்கிரத்தில் ஈஸ்வரிக்கு மாப்பிள்ளை அமையவில்லை. வேணி அத்தை தன்னுடைய வகையறாவில் சொந்த பந்தங்களின் பக்கத்தில் விசாரித்துக் கொண்டிருந்தது. லாலு மாமா எதிர்பார்க்கும் படித்த கவர்மென்ட் உத்தியோக மாப்பிள்ளைகளைத் தேடிப் பிடிப்பது அரிதாக இருந்தது. லாலு மாமா அசரவில்லை. தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டிணம், மாயவரம், கும்பகோணம் என்று லீவ் நாட்களில் எல்லாம் மாப்பிள்ளையைத் தேடி அலைந்து திரிந்தது. அவ்வபோது ஒரு சில சம்பந்தங்கள் வந்தன. வந்துப் பார்த்தவர்கள் ஈஸ்வரியைப் பிடிக்கவில்லை என்றார்கள் அல்லது ஈஸ்வரி வந்துப் பார்த்தவர்களைப் பிடிக்கவில்லை என்றது. இப்படியாக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காலம் ஓடிக் கொண்டிருந்தது.
            ஒரு கட்டத்தில் லாலு மாமா அலைந்து களைத்து, ஈஸ்வரியும் பல மாப்பிள்ளைகளைப் பார்த்துச் சலித்துப் போன பிறகு திருச்சியிலிருந்து ஒரு சம்பந்தம் வந்தது. தடாலடியாக அந்தச் சம்பந்தம் முடிந்தக் கதையைக் கேட்டால் ஆச்சரியப்பட்டு போவீர்கள்.
            ஈஸ்வரியைப் பெண் பார்க்க வந்த வகையில் பெருங்கூட்டமாக வந்தவர்கள் திருச்சியிலிருந்து வந்த இந்த சம்பந்தம்தான். லாலு மாமாவுக்கு அது பெருமையாக இருந்தது. வந்தவர்களும் எப்படியும் கல்யாணத்தைப் பேசி முடித்து விட வேண்டும் என்ற உறுதியோடு வந்திருப்பது போலிருந்தது. மாப்பிள்ளையையும் கூடவே அழைத்து வந்திருந்தார்கள். தடபுடலாக நிச்சயதார்த்துக்கு வருவது போல பழங்கள், இனிப்புகள் என்று ஏகப்பட்டது வாங்கி வந்திருந்தார்கள்.
            மாப்பிள்ளை மாநிறமாக தலை குனிந்த நிலையில் இருந்தார். கண்ணாடி போட்டிருந்தார். எதைப் பார்ப்பதாக இருந்தாலும் சற்று உற்றுப் பார்த்தார். கால்களில் ஷூ அணிந்திருந்தார். வீட்டுக்குள் வரும் போது ஷூவைக் கழட்டாமலே வந்தார். கால் மணி நேரத்துக்கு ஒரு முறை நீண்ட ‍பெருமூச்சு வாங்கிக் கொண்டிருந்தார். அவ்வபோது பையில் போட்டிருந்த சாக்லேட்டுகளைப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டிருந்தார். அப்பாவுக்குச் சந்தேகம் தட்டியது.
            லாலு மாமாவைத் தனியாக அழைத்து அப்பா மாப்பிள்ளையைப் பற்றிக் கேட்டது. "மாப்ளயப் பத்தி ந்நல்லா விசாரிச்சுட்டீங்களா?"
            "ந்நல்லா எல்லாத்தியும் நேர்லயும், ஆளுங்க வெச்சும் விசாரிச்சாச்சு. மாப்ள பேரு சீனிச்சாமி. நெரம்ப படிச்சிருக்காரு. ஈ.பி.யில வேல பாக்குறாரு. கை நெறைய சம்பளம். நம்மள பத்தி நம்ம வகையறாவுல விசாரிச்சுப்புட்டு கட்டுனா நம்ம பொண்ணதாம் கட்டணும்னு வந்திருக்காவ்வோ." என்றது லாலு மாமா.
            "நீங்க எதையும் வெவரமா விசாரிக்காம எதிலும் எறங்க மாட்டீங்க. இருந்தாலும் கண்ணாடி போட்டிருக்காரு. வூட்க்குள்ள வாரப்பயும் ஷூவைக் கழட்ட மாட்டேங்றாரு. ஆளு கொஞ்சம் வெடவெடன்னு இருக்குறாப்ல இருக்காரே. சின்ன புள்ள மாரி சாக்லேட்டு சாப்டுட்டு இருக்காரு. கவனிச்சீங்கல்லா!" என்றது அப்பா.
            "நெரம்ப படிச்சா கண்ணாடி போடாம இருக்க முடியுமா? டவுனுகாரவ்வோ ஷூ போட்டுப் பழக்கமாயிருக்கும். படிப்பு படிப்புன்னு படிச்சிட்டு இருந்ததால ஒடம்பு கொஞ்சம் வெலவெலப்பா இருக்கத்தாம் செய்யும். இப்போ சாக்லேட்ட போட்டு மெள்ளுறதாம்ல நாகரிகமாப் போச்சு. பொண்ணு பாக்க வாரதுக்கு முன்னாடியே ஜாதகம், மாப்பிள்ள போட்டோவ்வ அனுப்பிருந்தாங்க. போட்டாவப் பாத்ததும் ஈஸ்வரிக்கும் பிடிச்சுப் போச்சு. ரொம்ப போட்டு யோசிக்கிறேம்னு ஆவுற கல்யாணத்த ஆகாம பண்ணிப் புடாதீய்யோ!" என்றது லாலு மாமா குரலில் சற்று கோபத்தோடு.
            "அப்டியல்லாம் ஒண்ணுமில்லீங்க. நடயும் கொஞ்சம் தாங்கி தாங்கி நடக்குற மாரி இருந்துச்சா அத்தாம் சொன்னேம். நீங்க ந்நல்லபடியா விசாரிச்சத்துக்கு அப்புறம் மேற்கொண்டு யோசிக்கிறதுக்கு ன்னா இருக்கு?" என்றது அப்பா.
            "ன்னா பாக்குறீங்க நீங்க? எங்க தாங்கித் தாங்கி நடக்குறாரு? ஒங்க முன்னாடி நடக்கச் சொல்லிக் காட்டவா? விஷேசத்துக்கு வந்தோமோ, தின்னோம்மா போனோமான்னு இருக்கணும். இப்பிடி ஓங்கு தாங்கல மனசுக்குள்ள உருவாக்கக் கூடாதுங்றேம். ஒங்களுக்குப் போறாம. ஒங்க மச்சானுக்குக் கட்டி வெக்க முடியலியே, இப்படித் தங்கமா வந்து ஒருத்தம் கொத்திட்டுப் போறாம்னு போறாம ஒங்களுக்கு.  மாப்புள நல்லாத்தாம் இருக்காரு. ஒங்கள மாரி மனுசங்க மனசுதாம் நல்லாயில்ல. மனசு போறாம மனசுல பட்டதயல்லாம் பேசிட்டு அலயாதீங்க." லாலு மாமாவின் குரலில் முன்னை விட உக்கிரம் ஏறியிருந்தது. லாலு மாமாவுக்கு இதைப் பேசும் போது கண்கள் சிவந்து, கைகள் நடுங்க ஆரம்பித்து விட்டது. அப்பா அதற்கு மேல் ஒன்றும் சொல்லாமல் லாலு மாமாவை விட்டு நகர்ந்து விட்டது.
            அப்பாவுக்கு இதையெல்லாம் ஏன் சொன்னோம் என்பது போலாகி விட்டது. வந்திருக்கும் முருகு மாமாவோ, பாக்குக்கோட்டை ஜோசியர் தாத்தாவோ அல்லது வேறு யாரோ இதைப் பற்றி எதுவும் பெரிதாக பேசாத போது தான் மட்டும் இப்படிப் பேசிக் கெட்டப் பெயர் வாங்குவது போல நடந்து கொண்டிருக்க வேண்டியதில்லை என்று அப்பா நினைத்து மனதுக்குள் வருத்தப்பட்டுக் கொண்டது.
            ஈஸ்வரியைப் பெண் பார்த்து முடித்து சீனிச்சாமி வீட்டினர் பரமதிருப்தி என்றனர். லாலு மாமாவும் பரம திருப்தி என்றது. ஈஸ்வரிக்கு முன்பை விட இப்போது மாப்பிள்ளையை ஏகத்துக்கும் பிடித்திருந்தது.
            "எல்லாத்துக்கும் எல்லாம் பிடிச்சிருந்துச்சுன்னா ஏங் காலத்த வளத்திகிட்டு?  ஆக வேண்டியத சட்டுபுட்டுன்னு முடிச்சிடலாம்ல. இந்த மாசத்த வுட்டீங்கன்னா அப்பொறம் ஆடி வந்திடுது சரிபடாது. பொண்ணு வூட்டுக்காரங்கள பொருத்த வரிக்கும் நாளிக்கே கல்யாணத்த வைக்கிறதானாலும் அமர்க்களம் பண்ணிப்புடற அளவுக்கு வலுத்த கையி பாத்துக்கோங்க!" என்றார் பாக்குக்கோட்டை ஜோசியர் தாத்தா.
            "நாங்க மட்டும் ன்னா ஏப்ப சாப்பன்னு நெனச்சிப்புட்டியளோ? இப்பயே சொன்னாலும் அடுத்த ஒரு மணி நேரத்துல நிச்சயத்தை முடிச்சிடுவ்வோம்! ன்னா சொல்றீங்க?" என்றார் மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஒருத்தர்.
            "அடிச் சக்கனானாம்! நம்ம வகையில மட்டும் ன்னா குறைஞ்சிட்டம்? கல்யாணத் தேதிய குறிங்க பாத்துப்பம்!" என்றது முருகு மாமா முறுக்கை விட்டுக் கொடுக்காமல்.
            அப்படித்தான் ஈஸ்வரியின் நிச்சயதார்த்தம் அன்று சாயுங்காலத்துக்கள் அவசர அவசரமாக முடிந்தது. அடுத்த சில மணி நேரங்களுக்குள் வேற்குடியில் கார்கள் அங்கும் இங்குமாக புழுதியைக் கிளப்பிக் கொண்டு பறந்தன. மாப்பிள்ளை வீட்டுச் சனங்கள் காரில் உடனடியாக திருவாரூக்குச் சென்று பெண்ணுக்கு பட்டுப்புடவை, செயின் என்று எடுத்துக் கொண்டு வந்து விட்டார்கள்.
            லாலு மாமாவும் உடனடியாக சமையலுக்கு ஆட்களைப் பார்த்து, மளிகைச் சாமான்கள், காய்கறிகளை வாங்கித் தடபுடலாக விருந்துக்கு ஏற்பாடு செய்து விட்டது. காலையில் பெண் பார்க்க திருச்சியிலிருந்து வந்தவர்கள் அன்று மாலைக்குள் நிச்சயதார்த்தத்தை முடித்து விட்டுக் கிளம்பினார்கள். நிச்சயத்தை முடித்து விட்டுதான் சாப்பாடு என்று மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் உறுதியாக இருந்ததால் அதை முடித்து விட்டு சாப்பாடு ஆரம்பிக்க சாயுங்காலம் நான்கு மணிக்கு மேலாகி விட்டது. எல்லாரும் சாப்பிட்டு முடிப்பதற்குள் ஆறு மணியாகி விட்டது.
            லாலு மாமா அறுபது பவுன் நகை, ரொக்கப்பணம் ரெண்டு லட்சம், மாப்பிள்ளைக்கு டூவீலர், கட்டில், பீரோ, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, பாத்திரப் பண்டங்கள், பல்வகைச் சீர், சனத்தி என்று எல்லாத்துக்கும் ஒத்துக் கொண்டது. நிச்சயம் நடந்ததிலிருந்து பனிரெண்டாவது நாளில் திருவாரூரில் கல்யாணம் நடந்தது சீனிச்சாமிக்கும், ஈஸ்வரிக்கும்.
            கல்யாணம் ஏக தடபுடலாய் நடந்தது. "நம்ம வகையறாவுலயே யாரும் இந்தாளவுக்குக் கல்யாணம் பண்ணதில்ல!" என்று கல்யாணத்துக்கு வந்தவர்கள் ஒவ்வொருவரும் அசந்து போனார்கள். பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பு என்று கல்யாணத்துக்கு முதல் நாள் இரவு முழுவதும் திருவாரூரைச் சுற்றி ஒரே ஊர்வலமாக இருந்தது.
            ஈஸ்வரியைப் பெண் பார்க்க வந்த போது மாப்பிள்ளை சீனிச்சாமியைப் பற்றி அப்பா அப்படிக் கேட்டதன் வருத்தம் லாலு மாமாவுக்கு மனதுக்குள் உறுத்திக் கொண்டே இருந்திருக்க வேண்டும். லாலு மாமா ஈஸ்வரியின் கல்யாணத்துக்கு அப்பாவுக்குப் பத்திரிகை வைக்கவே இல்லை. இருந்தாலும் திருவாரூரில் நடந்த அந்தக் கல்யாணத்துக்கு குடும்பத்தோடு அப்பா அனைவரையும் அழைத்துப் போனது வேறு விசயம்.
            அப்பா அப்படிச் சந்தேகமாகக் கேட்டதற்கான தெளிவுகள் தொடர்ந்து வந்து ஆண்டுகளில் ஒவ்வொன்றாகக் கிடைத்தன.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...