21 May 2019

சு.தமிழ்ச்செல்வியின் 'கீதாரி' நாவல் அறிமுகம்



மனித மந்தைக்குத் தேவையான அன்பு
            நமது கீழத் தஞ்சை நாவல் இலக்கியத்தின் முக்கிய சம கால எழுத்தாளராகக் கொள்ளத்தக்கவர் சு. தமிழ்ச்செல்வி. அவரின் மூன்றாவது முக்கிய நாவல் 'கீதாரி' ஆடு மேய்க்கும் தொழிலை வாழ்வியலாகக் கொண்ட கீதாரிகளின் வாழ்வை அவர்களுக்கே உரித்தான மொழியில் பேசுகிறது.
            சு.தமிழ்ச்செல்வியின் முதல் நாவல் 'மாணிக்கம்'. ஆணின் துயரத்தை விட்டேத்தியான தன்மையில் பேசுவது போல பெண்ணின் துயரத்தைப் பேசிய நாவல்.
            அவரது இரண்டாவது நாவல் 'அளம்' பெண்களின் துயரம் கவிழ்ந்த வாழ்வைப் பேசியது. அவ்விரு நாவல்களிலும் ஆண்களால் பெண்கள் பட்ட துயரம் வெகு எதார்த்தமாக பேசப்பட்டிருக்கிறது. அந்நாவல்களில் ஏதோ ஒரு காரணத்தால் ஆண்கள் பெண்களைத் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ பிரிந்து செல்கின்றனர். துயரம் தாங்காத நிலையில் பெண்களும் கணவனிடமிருந்து பிரிந்து வருகின்றனர். கடற்கரையின் அருகில் கதைக்களம் நிகழ்வதால் அத்தகைய இரங்கலும் இரங்கல் நிமித்தமும் என்ற உரிப்பொருள் அந்நாவல்களுக்கு இயல்பாக ஒட்டி வந்திருக்கலாம்.
            சு. தமிழ்ச்செல்வியின் மூன்றாவது நாவலான 'கீதாரி'யிலும் ஆண்களால் பெண்கள் படும் பாடு அதிகரித்திருக்கிறதே அன்றி குறைந்தபாடில்லை. ஓர் ஆறுதல் என்னவென்றால் ஆண்களால் பெண்கள் படும் பாட்டிற்கு இன்னோர் ஆணே ஆறுதலாக இருக்கிறான் என்பதே. அப்படி ஆணுக்கு ஆணாக காவலாக, பெண்ணுக்குப் பெண்ணாக கனிவாக இருப்பவர்தாம் தந்தையும் தாயுமானவரான ராமு கீதாரி.
            ராமு கீதாரியின் மனைவி இருளாயி. அவர்களுக்கு ஒரே மகள் முத்தம்மா.
            அத்திவெட்டிச் சுந்தரமூர்த்தி சேர்வையிடம் அப்பன் பட்ட கடனுக்காக அடிமைபட்டுக் கிடந்த வெள்ளைச்சாமியையும், அவனது அண்ணனையும் அவர்தான் சேர்வைக்குத் தெரியாமல் ராத்திரியோடு ராத்திரியாக தூக்கி வருகிறார். வெள்ளைச்சாமியின் அண்ணனை தன் மைத்துனரோடு அனுப்பி விட்டு வெள்ளைச்சாமியை தன்னோடு வைத்து வளர்க்கிறார். வெள்ளைச்சாமி ராமு கீதாரியை அண்ணன் என்று அழைத்தாலும் அவர்தான் அவனுக்கு தந்தையைப் போன்றவர். இருளாயிதான் தாயைப் போன்றவர்.
            தன் சொந்த மகள் முத்தம்மாளோடு வெள்ளைச்சாமியை வளர்க்கும் ராமு கீதாரிக்கு பைத்தியக்கார பெண் ஒருத்திக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளான சிவப்பியையும், கரிச்சாவையும் வளர்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
            பைத்தியக்காரப் பெண்ணையும் பாலியல் தேவைக்குப் பயன்படுத்தும் காமமும்‍ மோகமும் பெண் பித்தும் கொண்ட பைத்தியக்காரர்கள் நிறைந்த உலகில் சிவப்பியும், கரிச்சாவும் ஆடுகளோடும், ஆட்டுக்குட்டிகளோடும் வளர்கிறார்கள்.
            கரையங்காட்டு சாம்பசிவம் சேர்வை கொடுத்த வாக்கின் படி ஆறு வருடம் கழித்து வளர்ப்பதற்காக இரட்டைக் குழந்தைகளில் ஒன்றான சிவப்பியை அழைத்துச் செல்கிறார். அவர் கருப்புக் குழந்தையான கரிச்சாவை விட்டு விட்டு சிவப்புக் குழந்தையான சிவப்பியைத் தூக்குவதில் சமூகம் உடலின் நிறங்களில் காட்டும் அனிச்சையான மோகம் இருக்கிறது.
            கருப்பான கரிச்சா ராமு கீதாரியுடனும், இருளாயி உடனும் வளர்கிறாள்.
            ராமு கீதாரிக்கும் இருளாயிக்கும் முத்தம்மாளைக் கல்யாணம் செய்து கொடுத்து குடும்பம் ஆன பிறகு மகளோடும், மருமகனோடும் செல்ல வேண்டிய சூழ்நிலையில் கரிச்சாவை வெள்ளைச்சாமியோடு விட்டுச் செல்கின்றனர்.
            காலச் சுழற்சியில் சிவப்பியை வளர்ப்பதற்காக கொண்டு போன சாம்பசிவ சேர்வையால் அவள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி, சிவப்பி தூக்கில் தொங்கி உயிரை விடுகிறாள்.
            வெள்ளைச்சாமியைக் கட்டிக் கொள்ளும் கரிச்சா குழந்தையின்மையின் காரணமாக நிராகரிக்கப்படும் போது, வெள்ளைச்சாமிக்கு நடைபெற இருக்கும் மறுமணத்தைத் தடுக்க முடியாத ஆற்றாமையில் ராமு கீதாரியிடமே வந்து சேர்கிறாள்.
            ராமு கீதாரி தன் வளர்ப்பு மகளைச் சுமக்க தயாராகும் நிலையில், கரிச்சா வெள்ளைச்சாமியின் குழந்தையைச் சுமந்து பெற்றெடுக்கிறாள்.
            ராமு கீதாரியின் பராமரிப்பில் குழந்தையும், தாயுமாக இருக்கும் கரிச்சா ஒரு மழைப்பொழுதில் பாம்பு தீண்டி உயிரை விடுகிறாள்.
            முத்தம்மாள், வெள்ளைச்சாமி, சிவப்பி, கரிச்சா என்று ஒவ்வொருவராகத் தோளில் தூக்கி வளர்த்த ராமு கீதாரியின் தோளில் இப்போது கரிச்சாவின் மகன்.
            ஆட்டுக்குட்டிகளைப் பிள்ளைக்குட்டிகள் போல வளர்க்கும் ராமு கீதாரியிடம் பிள்ளைக் குட்டிகளே கிடைக்கும் போது அப்பிள்ளைக் குட்டிகளை தன்னுடைய பெற்றப் பிள்ளைகளைப் போல வளர்க்கிறார். அவரிடம் வளரும் கரிச்சா தான் பட்டினி கிடந்தாலும் ஆடுகளோ, ஆட்டுக்குட்டிகளோ பட்டினிக் கிடந்து விடக் கூடாது என்ற கரிசனம் உடையவளாக இருக்கிறாள்.
            இன்னும் எத்தனைப் பிள்ளைகள் ஆதரவற்று நின்றாலும் அத்தனைப் பிள்ளைகளையும் தள்ளாத அந்த வயதிலும் தன் தோள்களில் தூக்கிப் போட்டுக் கொண்டு ஆடுகளோடும், ஆட்டுக்குட்டிகளோடு நடைபோட தயாராக இருக்கிறார் ராமு கீதாரி. ஆடுகளின் மத்தியில் நின்ற இயேசு நாதர் கையில் ஆட்டுக்குட்டி இருந்தது என்றால் ராமு கீதாரியின் கையில் ஒரு குழந்தை - கரிச்சாவின் குழந்தை இருக்கிறது. இயேசுநாதர் சொன்ன அதே செய்தியைத்தான் ராமு கீதாரியும் சொல்லாமல் சொல்கிறார். இந்த மனிதச் சமூகத்துக்கு அன்பு அதிகம் தேவையாக இருக்கிறது. அந்த அன்பைத்தான் தான் மேய்க்கும் ஆட்டு மந்தை உட்பட, மனித மந்தைக்கும் சேர்த்து சொல்கிறார் ராமு கீதாரி. அவர் மேய்க்கும் ஆட்டு மந்தை அந்த செய்தியை ஏற்றுக் கொண்டு விட்டது. இந்த மனிதச் சமூகம் எப்போது ஏற்றுக் கொள்ளப் போகிறதோ?! அப்படி ஏற்றுக் கொள்ளும் நாளில் மனித மந்தை என்ற சொல்லாக்கத்தை மனிதச் சமூகம் என்று திருத்தம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...