செய்யு - 75
விகடு எவ்வளவுக்கு எவ்வளவு சிறுத்தப் பிள்ளையாய்
இருந்தானோ அவ்வளவுக்கவ்வளவு பெருத்தப் பிள்ளையாய் ஆகி இருந்தான்.
சாயுங்கால நேரத்தில் அவனும் செய்யுவும்
நரிவலம் வல்லாளத் தேவர் வீட்டிலிருந்து களக்காடு வரை நடந்து செல்வார்கள். அப்படி நடந்து
செல்வது செய்யுவுக்குப் பிடித்தமானதாகி விட்டது. இதற்காகவே அவள் திட்டையிலிருந்து அப்பாவோடு
டிவியெஸ் பிப்டியில் மிகுந்த ஆவலோடு வந்தாள். விகடுவுக்கு அப்படி நடந்து செல்வது அவசியமாக
இருந்தது. அப்படி நடந்து செல்லாத நாட்களின் இரவுகளில் அவன் தூக்கம் வராமல் மிகவும்
அவதிப்பட வேண்டியிருந்தது. களக்காடு நடந்து செல்லும் சாலையைப் பொருத்த வரையில் இடையில்
இரண்டு திருப்பங்கள் தவிர நேரான தார்சாலை. வெண்ணாற்றுப் பாலத்தைக் கடந்து நடந்து செல்ல
ஆரம்பித்து விட்டால் காற்றுப் பிய்ந்து கொண்டு வீசும். ஊரு உலகத்துக் காற்றெல்லாம்
அங்கு வந்து திரண்ட மாதிரி இருக்கும்.
சில நாட்களில் அவர்கள் இருவரும் களக்காட்டைக்
கடந்து கஞ்சனவாடி வரை கூட நடந்து செல்வார்கள். அது களக்காட்டிலிருந்து நேராக தெற்காக
செல்லும் தார்சாலையிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. வெறிச்சோடியது
போல கிடக்கும் அந்தச் சாலையில் எப்போதாவது ரொம்ப அரிதாக திருத்துறைப்பூண்டி செல்லும்
ஒரு சில பேருந்துகள் மட்டும் செல்லும். கஞ்சனவாடி போய் நரிவலம் திரும்பினால் எட்டு
கிலோ மீட்டர் தூர நடை. களக்காட்டோடு திரும்பினால் நான்கு கிலோ மீட்டர் நடை. பெரும்பாலும்
பள்ளி நாட்களில் களக்காடு வரை செல்வதும், சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் கஞ்சனவாடி
வரை சென்று திரும்புவதை அவர்கள் வழக்கமாக வைத்திருந்தார்கள். கஞ்சனவாடி கடைத்தெரு களக்காடு
கடைத்தெருவை விட பெரியது. பாதி டவுனுக்கு நிகரான கடைத்தெரு என்று சொல்லலாம்.
விகடுவும், செய்யுவும் களக்காட்டை அடைந்ததும்
அங்கிருக்கும் ரோட்டுக் கடையில் ஆளுக்கொரு போண்டாவும், சமோசாவும் வாங்கிக் கொள்வார்கள்.
களக்காட்டு ரோட்டுக் கடை போண்டாவும், சமோசாவும் அந்நாட்களில் ரொம்ப விஷேசம். களக்காட்டிலிருந்து
நரிவலம் வருபவர்கள் வாங்காமல் வர மாட்டார்கள். அங்கேயே நின்று நான்கை வாங்கிப் பிட்டுப்
போட்டுக் கொண்டு வீட்டுக்கும் வாங்கி வருவார்கள்.
போண்டாவும், சமோசாவும் இரண்டும் சேர்ந்து
கைக்குள் அடங்கி விடும் அளவுக்கு சிறிசாக இருக்கும். அவ்வளவு சிறிதான போண்டா, சமோசாவை
அதன் பின் விகடுவோ, செய்யுவோ அவர்களின் வாழ்நாளில் பார்க்கவில்லை. அந்தப் போண்டாவும்,
சமோசாவும் சிறிதாக அவ்வளவு அழகாக இருந்தன. அந்த அழகுக்கும் சேர்த்துச் சொல்வதானால்
அவ்வளவு அழகான போண்டாவையும், சமோசாவையும் கூட அவர்கள் பின்னாட்களில் வேறெங்கும் பார்க்க
முடியாமல் போனது.
போண்டா, சமோசா என எதை எடுத்துக் கொண்டாலும்
ஒன்று இருபத்தைந்து பைசா. இருபத்தைந்து பைசாவுக்கு
அவ்வளவு சிறிதாகத்தான் போட்டுத் தர முடியும் என்பது மட்டும் அந்த பட்சணங்களின் விஷேசம்
அல்ல. சுட்டுப் போட்ட வேகத்தில் விற்பனை ஆகும் அந்தப் பட்சணங்களின் வேகமும் விஷேசமானதுதான்.
கொஞ்ச நேரம் காத்திருந்துதான் அவைகளை வாங்கிக் கொண்டு புறப்பட முடியும். அந்தப் பட்சணங்களை
வாங்கித் தின்ன அட்வான்ஸ் புக்கிங்கில் அவ்வளவு ஆட்கள் வரிசையாக நின்று கொண்டு இருப்பார்கள்.
நரிவலத்திலிருந்து களக்காடு வரை இரண்டு
கிலோ மீட்டர் நடந்து வந்த வேகத்துக்கு பட்சணங்களை வாங்க நிற்பது சிறிது ஆசுவாசமாக
இருக்கும். செய்யுவுக்கு அப்படி நிற்பது பிடிக்காது. வேகமாக வாங்கிக் கொண்டு தின்று
கொண்டே திரும்ப நடக்க வேண்டும் அவளுக்கு. வாங்க நிற்கும் ஆட்களைப் பொருட்படுத்தாமல்
இடையில் புகுந்து கையை நீட்டி காசைக் கொடுத்து விட்டு வாங்கி வந்து விடுவாள்.
"ன்னா அவசரம் பாரு இந்த விடுத்தானுக்கு.
சித்த நேரம் நின்னு வாங்குதா பாரு!" என்று சிரித்தபடியே சுற்றி நிற்கும் ஆட்கள்
சில நாட்களில் அவளைத் தூக்கி வாங்கிக் கொடுத்தும் அனுப்புவார்கள். ஆளுக்கு ஐம்பது
பைசா வீதம் ஒரு ரூபாய்க்கு அந்தப் பட்சணங்களை வாங்கிக் கொண்டு அதைத் தின்று கொண்டே
நடப்பார்கள். இந்த போண்டாவும், சமோசாவும் செய்யுவுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதற்காகவே எப்படியும் அடம் பிடித்து விகடுவோடு நடந்து வந்து கொண்டிருந்தாள்.
களக்காட்டைக் கடந்து கஞ்சனவாடி செல்லும்
நாட்களில் அங்கிருக்கும் கடைகளில் இதே போன்று வடையோ, சமோசாவோ வாங்கித் தின்று கொண்டே
திரும்புவார்கள். களக்காட்டைப் போல இருபத்தைந்து பைசா பட்சணங்கள் அங்கிருக்காது. எது
எடுத்தாலும் ஒன்று ஐம்பது பைசா. அதுவுமில்லாமல் களக்காட்டைப் போன்ற சுவை கஞ்சனவாடியில்
வாங்கிய பட்சணத்தில் இருக்காது. என்றாலும் கஞ்சனவாடியில் வாங்கித் தராமல் செய்யுவை
அங்கிருந்த அழைத்து வர முடியாது.
"திரும்புறப்ப களக்காட்டுலயே வாங்கிச்
சாப்பிட்டுப் போலாம்!" என்பான் விகடு.
"வாங்கிச் சாப்பிட்டுப் போலாமே!"
என்பாள் செய்யு.
சரிதான் என்று கஞ்சனவாடியிலிருந்து திரும்பினாள்,
"இங்கயும் வாங்கிச் சாப்பிட்டுட்டு அங்கயும் வாங்கிச் சாப்பிட்டுப் போலாமே!"
என்பாள் செய்யு.
இப்படி வாங்கிச் சாப்பிட்டு விட்டு நரிவலம்
வீட்டுக்குப் போனால் வல்லாளத் தேவர் கடையிலிருந்து மிக்சர் பொட்டலமோ, காரச் சேவு
பொட்டலமோ, பக்கோடா போட்டலமோ வந்திருக்கும்.
காலையில் வீட்டில் சமைத்தாலும் ஹோட்டலில்
போடும் பொங்கலையோ, பூரியையோ ஓர் உருளியில் போட்டு கொடுத்து விட்டு விடுவார் வல்லாளத்
தேவர். வாரத்தில் செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் தவிர மற்ற நாட்களில் மீனோ, கறியோ
கொண்ட அசைவச் சாப்பாடாக ஹோட்டலின் மதியச் சாப்பாட்டை வைத்திருந்தார் அவர். அந்த நாட்களில்
குழம்பையும், கறியையும் ஒரு டப்பாவில் போட்டுக் கொடுத்து விடுவார்.
இது தவிர ஞாயிற்றுக் கிழமையில் கறி எடுப்பதை
அப்பா வழக்கமாக வைத்திருந்தார். நீங்கள் ஆட்டுக்கறி வாங்கிச் சாப்பிடுவது என்றால் நரிவலத்துப்
பாய்க்கடையில் வாங்க வேண்டும். ஆட்டுக்கறியை வாழையிலையில் மடித்து தூக்கு வாளியில்
அவ்வளவு நேர்த்தியாக எலும்பு, கறி, கொழுப்பு, ஈரல் என்று சரியான விகிதாச்சாரத்தில்
போட்டுக் கொடுப்பார்.
அம்மாவின் கைப்பக்குவத்தில் சைவச் சமையல்
வீட்டில் யாருக்கும் பிடித்ததில்லை. ஆனால் அசைவச் சமையல் அபாரமான சுவையாக இருக்கும்.
இதற்கென அம்மா மீன் சட்டி, கறிச் சட்டி என்று இரு வகையான மண் சட்டிகளை வைத்து அதற்கென
உள்ள சட்டிகளில்தான் சமைக்கும். அசைவம் சமைக்கும் நாட்களில் மட்டும் இங்கிருந்து அம்மா
குழம்பையும், கறியையும் வல்லாளத் தேவர் வீட்டுக்குக் கொடுத்து விடும். "யப்பாடி
ரொம்ப நாளு ஆயிடுச்சி ஆயி இந்த நாக்குக்கு. எங்க ஆயி உசுரோட இருந்த காலத்துல அவ்வோ
கையால இப்படிச் சாப்பிட்டது. நாஞ் சமச்சு நாம்மளே சாப்புடுறதுல ன்னா ருசி இருக்கு?
அட யம்மாடி இது ன்னா ருசியா இருக்கு!" என்று உச் கொட்டிக் கொண்டே சாப்பிடுவார்
வல்லாளத் தேவர்.
அப்படிக் கறியையும் குழம்பையும் கொண்டு
போய்க் கொடுக்கும் போது விகடுவையும், செய்யுவையும் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு
பேசிக் கொண்டேதான் சாப்பிடுவார் வல்லாளத் தேவர்.
ராத்தூக்கத்தில் தான் பிடித்துக் கொண்டு
போய் ஹாஸ்டலில் விட்ட சிறுத்தப் பயல் விகடுவா இவன் என்று வல்லாளத் தேவரே விக்கித்துப்
போகும் வகையில் விகடு அப்போது பெருத்துப் போயிருந்தான். "யம்பிய வுட்டா நம்மள
தாண்டிப் போயிடும் போலருக்கே! இப்படிதாம்பி ஒடம்பு இருக்கணும். யாரயாவது ரண்டு போட்டா
அவேம் நாலு குட்டிக்கரணம் போட்டு அந்தாண்ட வுழுவணும்!" என்பார் வல்லாளத் தேவர்.
"ம்ஹூம்! இவ்வோள எடத்துல நிப்பாட்டி
யம்பிய மடத்துல நிப்பாட்டோணும். ஒடம்புனா கரவு செரவா இருக்கணுமா ன்னா! இப்டியா பெருத்துக்
கெடக்குறது?" என்பார் இதைக் கேட்டதும் சாந்தாம்மா.
"அடிப் போடி இவளே! பேச வந்துட்டே!
யம்பி! நம்ம ஒடம்பப் பாருங்க. எப்படி இருக்கு? ன்னாம்மோ சுகருங்றாங். பி.பி.ங்றாங்.
கொழுப்புங்றாங். ஒண்ணு கெடயாது யம்பி ஒடம்புல நமக்கு. இத்தோ இருக்குறாளே யம்பி இவுளக்குதாம்
லோ பி.பி.பியாம்." என்பார் வல்லாளத் தேவர் நக்கலாய்ச் சிரித்தபடி.
"இதுக்கொண்ணும் கொறச்சலில்ல."
என்றபடியே அதற்கு மேல் பேச மாட்டாமல் போய் விடுவார் சாந்தாம்மா.
தூரத்தில் நிறுத்திப் பார்த்தால் வல்லாளத்
தேவரின் உருவத்துக்கும், விகடுவின் உருவத்துக்கும் எந்த வேறுபாடும் தெரியாத அளவுக்கு
இருவரும் சம பருமனில் இருந்தனர். மேற்கொண்டு ஒரு சிறுத்தப் பிள்ளையாய் இருந்த விகடு
எப்படி பெருத்தப் பிள்ளையாய் ஆகியிருந்தான் என்பதை விவரித்துச் சொல்ல வேண்டியதில்லைதான்.
ஆனால் சொல்ல வேண்டிய முக்கியமான ஒன்று - சிறுத்தப் பிள்ளையாய் இருந்த அவன் இவ்வாறு
பெருத்தப் பிள்ளையாய் ஆவதற்கு திட்டையை விட்டு நரிவலம் வல்லாளத் தேவரின் மூன்றாவது
காலனி வீட்டுக்கு குடும்பமே வாடகை்குக் குடிபெயர வேண்டியிருந்தது.
*****
No comments:
Post a Comment