செய்யு - 83
"ஏலேம்பி! சாயுங்காலமா சித்த இந்தக்
குட்டிய அழச்சிட்டுப் போயி கெழவனப் பாத்துட்டு வாயேன்! படுத்தப் படுக்கையா கெடக்குறாராம்ல!"
என்று அம்மா விகடுவிடம் சொன்னது. விகடுவுக்குத் தயக்கமாக இருந்தது. குடும்பத்தையே
நரிவலத்துக்குக் கொண்டு போய் விகடு வீட்டைக் குட்டிச் சுவராக்கி விட்டதாக அக்கம்
பக்கத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். ஊரிலும் இதைப் பற்றிய பெரிய விவாதம் நடந்து
கொண்டிருந்தது. அதனால் அவன் திட்டைக்கு வீட்டுக்கு வந்த நாள் தொட்டு வீட்டை விட்டு
வெளியே போகாமல் அடைந்தே கிடந்தான். யாராவது தன்னை அது குறித்து கேட்டு விட்டால் என்ன
செய்வது என்ற இனம் புரியாத அச்சம் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. ஆகவே வைத்தித்
தாத்தாவைப் பார்க்க போகும் இடத்தில் அப்படி யாரும் கேட்டு விடுவார்களோ என விகடு யோசித்தான்.
ஏன் வைத்தித் தாத்தாவே கூட அப்படிக் கேட்கலாம்.
"நீயும் பாப்பாவும் போயிட்டு வாங்களேன்!"
என்றான் விகடு.
"ஏலே! நாம்ம அப்பாவ அழச்சிட்டு பெறவு
போயிட்டு வாரம்டாம்பி! சொல்லுறத கேளு! பணந் தாரேன். நல்ல பழமா பாத்து வாங்கிட்டு
போயி பாத்துட்டு வாங்க! என்னடாம்பிச் சொல்றே?"
விகடு மெளனமாக நின்றான்.
"அண்ணே வாராட்டிப் பரவாயில்ல. நாம்ம
அப்படியே குறுக்கப் போயி பாத்துட்டு வாரவா?" என்றாள் செய்யு.
"ஏதாச்சும் சொல்றானா பாரு! இதுங்களப்
பெத்து வளத்ததுக்கு நாலு தென்ன மரத்த ரண்டு முருங்கப் போத்த நட்டு வளத்துருக்கலாம்.
தவிச்ச வாய்க்கு எளநியாவது கொடுக்கும். கொழம்புல போடுறதுக்கு அரைப்பிடி கீரையாவது
கொடுக்கும்! வேல கெடக்குடாம்பி. சொல்லித் தொலடாம்பி!" என்றது அம்மா சொல்லிக்
கொண்டிருந்த போதே குமரு மாமா வந்தது.
"வாடாம்பி!" என்றது அம்மா.
"அத்தான் இல்லியா?" என்றது குமரு
மாமா.
"வெளியில போயிருக்கார்டாம்பி!"
"எப்போ வந்தீங்க?"
"நாங்க வந்து நாலு நாளாவது. எங்கள
வந்து பாக்க யாருக்கு நாதியிருக்கு?"
"அத்தே வுடுக்கா!"
"என்னத்தடா வுடச் சொல்றே? குடும்பத்த
தூக்கிட்டுப் போயி ஊரு தெரியாத ஊருல கொண்டு போயி போட்டுட்டு அங்கேந்து திரும்ப
கொண்டாந்து போட்டுட்டுக் கெடக்குறேம். ஒரு நாளு வந்து பாத்திருப்பியா நீயி?"
"அம்மா இங்க வந்திச்சா?"
"அதுவும்தான் அஞ்ஞ வந்து பாக்கல.
இஞ்ஞ வந்தும் பாக்கக் கூடாதுங்றீயா?"
"எம் வூட்டுக்காரிய பத்தி ஏதும் சொன்னிச்சா?"
"அதாம்ல பாத்தேன்? ஆதாயம் இல்லாம
ஆத்தக் கட்டி எரைப்பாவுகளா? ச்சும்மா இருக்குற கொரங்குதாம் கோவணம் கட்டிட்டு நடக்குமா?"
"சொல்லுக்கா! ஏதும் சொன்னிச்சா?"
"ஏலே அது இந்தப் பயலுக்குத் துன்னுரு
போட்டுட்டுப் போவலாம்னு வந்துச்சுடா. இவம் என்னமோ சாமியில்ல, பூசாரியில்லன்னு ஒளறிட்டுக்
எல்லாரு வயித்துலயும் புளிய கரச்சிட்டுக் கெடக்குறாம்டா. அப்பா ஒடம்புக்கு முடியாம
கெடக்குறார்னு சொல்லிட்டுப் போச்சுடா."
"எத்தையும் மறைக்காதக்கா! எத்தா இருந்தாலும்
பரவாயில்ல. அம்மா என்ன சொன்னிச்சுன்னு சொல்லு?"
"என்னடா நெனச்சுட்டு இருக்கே நீ?
நீயும் ஒம் பொண்டாட்டியும் சேந்துட்டு அந்தக் கெழவனையும், கெழவியையும் கொடுமபடுத்திட்டு
இருக்கீங்களா என்னடா?"
"இந்தோ வந்துட்டுல்ல வெசயம். இப்படிதாம்க்கா
அது வூடு வூடா போயி எம்ம பத்தியும், எம்ம வூட்டுக்காரி பத்தியும் வத்தி வெச்சிட்டு
இருக்குது. அம்மா சரியில்லக்கா! அத ஒழுங்கா இருக்கச் சொல்லுக்கா! அதச் சொல்லணும்னுதாம்
வந்தேம்."
" அம்மா இஞ்ஞதான் வந்துச்சுன்னு ஒனக்கு
எப்புடித் தெரியும்?"
"நமக்குத் தெரியும்க்கா!"
"அதாங் எப்புடித் தெரியும்? ஒம்ம
பொண்டாட்டிக்காரிச் சொல்லி அனுப்புனாளா?"
"இந்தப் பாருக்கா! நம்மளப் பத்தி
ன்னா வேணாலும் பேசு. ஒனக்கு உரிம இருக்கு. அத்து இன்னொரு வூட்டுப் பொண்ணு. அத்தப்
பத்தியல்லாம் பேசாத. அம்மாவ அடங்கி ஒடுங்கி ஒழுங்கா இருக்கச் சொல்லு. அதச் சொல்லிட்டுப்
போவணும்னுதான் வந்தேம்!"
"ந்தா மாமா! நீயி ஒம்ம பொண்டாட்டிய
அடங்கி ஒடுங்கி ஒழுங்கா இருக்கச் சொல்லு! ஒம்ம பொண்டாட்டிய அடக்கத் துப்புல்ல. இஞ்ஞ
வந்து பேசிட்டு இருக்கே?" திடீரென்று செய்யு இப்படிக் கேட்பாள் என்று அம்மா கூட
எதிர்பார்க்கவில்லை. குமரு மாமாவுக்குக் கண்கள் சிவக்க ஆரம்பித்தது. கன்னங்களும், தாடையும்
நடுங்க ஆரம்பித்தன.
"ன்னாக்கா பொண்ண பேச வுட்டுட்டு
வேடிக்கப் பாக்குறீயா?" கண்கள் கலங்க குமரு மாமா வேக வேகமாக வீட்டை விட்டு வெளியே
போய் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பியது. அம்மா தன்னைத் தடுத்து நிறுத்தும் என்று
குமரு மாமா எதிர்பார்த்திருக்கலாம். அம்மா அப்படி எதுவும் செய்யவில்லை. குறைந்தபட்சம்
போகாதே நில்லுடா என்று கூட சொல்லவில்லை.
"ஏட்டி பெரியவங்கதான பேசிட்டு இருக்கோம்!
ஒனக்கென்னடி எடயில பேச்சு? ஆம்பள புள்ள பேசாம அப்படியே நிக்குறாம். பொம்பள புள்ள நீ!
ஒனக்கு என்னாடி பேச்சு வேண்டிக் கெடக்கு?" என்றது அம்மா கோபமாக.
"சாமியில்லண்ணு பேசச் சொல்லு. அத
மட்டும்தான் ஒம் புள்ள பேசும். அத்து ஆத்தாவப் பத்தி அப்படிப் பேசுது. இத்து ஒரு வார்த்த
கேட்டா ன்னா?" என்று சொல்லி விட்டு அழ ஆரம்பித்தாள் செய்யு.
"நாமதாம் பேசிட்டு இருக்கேம்லடி.
ஏற்கனவே இஞ்ஞயும் அஞ்ஞயும் பேச்சு வார்த்த இல்லாம இருக்கு. வராதவம் வந்திருக்காம்.
ஒண்ணாச்சும் புத்தியோட பேசுதுங்களா? இதுகள பெத்து வளக்குறதுக்குள்ள நம்ம நஞ்சவிஞ்சுதாம்
போகப் போகுது." என்று அம்மாவும் அழ ஆரம்பித்தது.
"நாம்ம சாயுங்காலம் தாத்தவப் பாக்க
போக மாட்டேம்!" என்றாள் செய்யு.
"இதுங்க சொன்னதக் கேக்குதா? இது
இதுங்களா புத்திக்கு நடந்துக்குதுங்களே! அவேம் இப்பதான் குடும்பத்த அஞ்ஞ இழுத்து போட்டு
இஞ்ஞ கொண்டாந்து போட்டுகிட்டு நிக்குறாம். இவ்வே ன்னான்ன இருக்குற ஒறவயும் ல்லாம
பண்ணிடுவா போலருக்கே ஐயனாரப்பா! இதுகளுக்கு எப்போதாம் நல்ல புத்திய கொடுக்கப் போறீயோ?
எல்லேம்பி! இவள அழச்சிட்டுச் சாயுங்காலமா போயிட்டு கெழவனப் பாத்துட்டு வந்துர்டா.
அவேம் பெரிய மாமம் ஒண்ணுஞ் சொல்ல மாட்டாம். அவளும் ஒண்ணுஞ் சொல்ல மாட்டா. அத்தாங்
கெழவிதாங் அஞ்ஞ இருக்குல்ல. பாத்துகிடும்டா." என்றது பாவமாக அம்மா.
விகடுவுக்கு அம்மாவைப் பார்க்க பரிதாபமாக
இருந்தது. "நாம்ம பாப்பவ அழச்சிட்டுப் போயிட்டு வாரம்மா!" என்றான் விகடு.
செய்யுவுக்கும் அம்மாவைப் பார்க்க பாவமாக
இருந்திருக்க வேண்டும். விகடு செய்யுவைப் பார்த்ததும், "நடந்துலாம் வார மாட்டேம்.
சைக்கிள்னாதாம் வார்ரேம்!" என்றாள்.
அம்மா கண்களைத் துடைத்துக் கொண்டது. அதன்
முகத்தில் ஒரு சிரிப்புத் தோன்றி மறைந்தது.
*****
No comments:
Post a Comment