செய்யு - 73
பக்கிரிசாமி நடந்து கொள்வதைப் பார்க்க
பார்க்க ஒரு பைத்தியம் பிடித்தவன் நடந்து கொள்வதைப் போலிருந்தது. "பக்கிரியண்ணனுக்குப்
பைத்தியம் பிடிச்சிடுச்சி!" என்று ஹாஸ்டல் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் சொன்னபடியே
பின்தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தனர்.
"சின்னய்யா ஓட வாணாம்! நில்லுங்க!
நாம்ம ஒண்ணும் பண்ண மாட்டேம்!" என்றார் பின்தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த தொப்புளான்
என்கிற அந்த ஆள்.
"த்தே... மவனே! போடா! பின்னாடிப்
போய்த் தொலைடா! ஒன்ன யாருடா வரச் சொன்னது த்தோ நாயே!" என்றான் பக்கிரிசாமி.
பக்கிரிசாமி ஓடுவதும், அவனைப் பின்தொடர்ந்து
அந்த ஆள் உட்பட எல்லாரும் ஓடிக் கொண்டிருப்பதும் நிற்கிற பாடாய்த் தெரியவில்லை. பக்கிரிசாமி
தென்னை மரங்களைச் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தான். சுற்றிச் சுற்றி ஓடியதில்
பக்கிரிசாமி ஒரு வளையத்துக்குள் சிக்கியது போல ஆனான். பக்கிரிசாமியிடமிருந்து சில
அடி தூரத்தில் அவன் தொப்புளான் என்று அழைத்த ஆள் நின்று கொண்டிருந்தார். சுற்றிலும்
ஹாஸ்டல் பிள்ளைகள் நின்றிருந்தனர். ஹாஸ்டலின் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும்
நின்றிருந்தனர்.
பக்கிரிசாமி கைகள் இரண்டையும் விரித்துக்
கொண்டு முன்னும் பின்னும் அசைத்தபடி பிடி கொடுக்காமல் ஓடித் தப்பிக்கும் நிலையில்
நிற்பவனைப் போல காலை முன்னும் பின்னும் மாற்றிக் கொண்டிருந்தான். அவனை நெருங்கி சாமர்த்தியமாய்ப்
பிடித்து விடுபவனைப் போல தொப்புளான் நின்றிருந்தார். அவர்கள் இருவரையும் பார்க்கையில்
கபடி விளையாடுபவர்களைப் போல இருந்தனர். பிள்ளைகளும் பாய்ந்து சென்று பிடித்து விடுபவர்களைப்
போன்ற நிலையில் நின்றிருந்தனர்.
"ட்டேய் தொப்புளாம்! சொன்னா கேட்க
மாட்டே! பார்ரு நீயி பண்றது நல்லாயில்ல. மரியாதி கெட்டுப் போகப் போவுது!" என்றபடியே
அங்கே தென்னை மரங்களுக்கு இடையே துணிகள் காயப்படுவதற்காகக் கட்டப்பட்டிருந்த நைலான்
கயிற்றை அவிழ்க்க ஆரம்பித்தான் பக்கிரிசாமி.
"வேண்டாஞ் சின்னய்யா! சின்னாய்யான்னு
கூட பாக்க மாட்டேன்! ஒரு அடி போட்டன்னா ஒம்பது குட்டிக்கரணம் போடுற மாரி ஆயிடும்.
ஒடம்பு வெலவெலத்துப் போயிடும் ஆம்மா! மருவாதய வந்துடுங்க ஆம்மா!" என்றார் தொப்புளான்.
சுற்றி நின்றவர்களில் வார்டனும் நின்றிருந்தார்.
பக்கிரிசாமியின் அப்பா முடியாத குறையாக மெல்ல நடந்து வருவதும், ஓடி வருவதுமாக வந்து
கொண்டிருந்தார்.
"யோசிக்க வாணாம்! அவனப் பிடிங்க
மொதல்ல!" என்றார் வார்டன் தொப்புளானிடம்.
தொப்புளான் பக்கிரிசாமியை நெருங்கினார்.
"த்துப்பூ!" என்று அவர் மேல் காறித் துப்பினான் பக்கிரிசாமி.
"வ்வாடா வ்வாடா வந்துட்டான்டா! முகிலேன்
வந்துட்டான்டா! ஒன்னத்தாம்டா பாத்துட்டு இருந்தேம். இங்க ஒரு பய இருக்கக் கூடாது அல்லாரையும்
காலி பண்ணிடுறீயா?" என்றான் அண்ணாந்து பார்த்தபடி பக்கிரிசாமி.
அண்ணாந்து பார்த்த யாருக்கும் முகிலன்
தெரியவில்லை. பக்கிரிசாமி மட்டும் அவன் மேலே இருப்பதான பாவனையில் பேசத் தொடங்கினான்.
"சொல்லுடா முகிலா! கயித்த அவுத்துட்டேம்.
இந்த தென்ன மரத்துல தொங்கவா! அந்த தென்ன மரத்துல தொங்கவா. இங்ங்ன இருக்குற எல்லா
தென்ன மரத்துலயும் தொங்கவா! சொல்லுடா முகிலேன்! எந்த மரத்துல தொங்கவா! ச்செரி ச்செரி
அமெய்தியா இருடா! இந்த மரத்துலயே தொங்குறேம்!" என்றபடி அருகில் இருந்த தென்னை
மரத்தில் நைலான் கயிற்றை வாயில் வைத்துப் பல்லால் கடித்தபடி பக்கிரிசாமி மரம் ஏறத்
தொடங்கினான்.
பக்கிரிசாமியின் அப்பாவும் நெருங்கி வந்திருந்தார்.
"டேய் தொப்புளாம்! அவனை இறக்கிப் போட்டு நாலு சாத்து சாத்துடா!" என்றார்.
அவ்வளவுதான். தொப்புளான் மரம் ஏறிக் கொண்டிருந்த
பக்கிரிசாமியைப் பாயந்து பிடித்து காலை இழுத்து விட்டு கீழே தள்ளினார். கீழே விழுந்த
பக்கிரிசாமியைக் குப்புறப் புரட்டி அவன் கைகளைப் பின்பக்கமாக முறுக்கிப் பிடித்தார்.பக்கிரிசாமி
திமிறினான். கால்களைப் போட்டு உதைத்துக் கொண்டான்.
தொப்புளான் சட்டென அவன் மேல் படுத்து
அவன் கால்கள் இரண்டையும் பின்னலிட்டு பின் கால்கள் இரண்டையும் மடக்கி கிடுக்கிப்பிடி
போட்டார். பக்கிரிசாமி அசைய முடியாத நிலைக்கு ஆளானான்.
பக்கிரிசாமியால் இதைப் பொறுத்துக் கொள்ள
முடியவில்லை. முகத்தை மண்ணில் போட்டு தேய்த்து வாயைத் திறந்து மண்ணை நறநறவென்று போட்டு
மெல்ல ஆரம்பித்தான்.
"அய்யோ கருமமே! ஏய் தொப்புளாம்!
அவன் மண்ண நறநறன்னு தின்னுட்டு இருக்காம்! அவன பெரட்டிப் போடு!" என்றார் பக்கிரிசாமியின்
அப்பா.
தொப்புளான் பிடியைச் சற்றுத் தளர்த்தியதும்,
அவரைக் கீழே தள்ளி பக்கிரிசாமி திடீரென்று எழுந்து நின்றான். அவன் முகமெங்கும் சிராய்ப்புகளாய்
இருந்தன. இரத்தம் கோடிட ஆரம்பித்தது.
தொப்புளான் நிலைகுழைந்து கீழே விழுந்தாலும்
விழுந்த அதே வேகத்தில் சுதாரித்துக் கொண்டு பக்கிரிசாமியின் முன் நின்றார். பக்கிரிசாமி
சர்வ நாடியும் ஒடுங்கியது போல நின்றான்.
சடாரென மண்டியிட்டு உட்கார்ந்த பக்கிரிசாமி
தொப்புளானின் கால்களைப் பிடித்துக் கொண்டான். "நம்மள கூட்டிட்டுப் போயிடு தொப்புளான்!
நம்மால இஞ்ஞ யிருக்க முடியல! ஊர்ல வந்து ஒழைச்சு வேல பாத்து பொழச்சிக்கிறேம். நமக்கு
இந்த ஆஸ்டலும் வாணாம். இந்தப் படிப்பும் வாணாம். முகிலேன் நம்மள பயமுறுத்துறாம்! நம்மால
முடியல தொப்புளான்!" ஒரு குழந்தையைப் போல அழ ஆரம்பித்தான் பக்கிரிசாமி.
அதுவரை பக்கிரிசாமியின் மேல் இருந்த வெறுப்பு
மாறி எல்லாருக்கும் அவன் மேல் ஓர் அனுதாபம் ஏற்பட்டது.
"எம் பாஞ்சாயிரம் போச்சா! படிப்பும்
பாழாப் போச்சா! வார்டன் சார்! நீங்கலாம் நல்லாருங்க சார்! நாம்ம எம் புள்ளிய அழச்சிட்டுப்
போறம்! கெளம்புவம்டா தொப்புளான்!" என்றார் பக்கிரிசாமியின் அப்பா நடுங்கும்
குரலில். அவர் கண்களிலிருந்து கண்ணீர் முகத்தில் கோடிட்டு வழிந்து கொண்டிருந்தது.
"ஹெட்மாஸ்டருக்கிட்ட ஒரு வார்த்தைக்
கேட்டுட்டு..." என்று இழுத்தார் வார்டன்.
"அத்தாம் பார்த்தீங்களே வார்டன் சார்!
இதுக்கு மேல ஒங்களால அவன இஞ்ஞ வெச்சுக்க முடியுமா? லட்டர்ர ந்நல்லா படிச்சுப் பாத்தீங்கல்ல!
நாமளும் நேர்ல பாத்துட்டேம். இதுக்கு மேல சரிபட்டு வாராது சார்! அழச்சிட்டுப் போயிறதுதாம்
நல்லது. படிப்புப் போன பின்னால பாத்துக்கலாம். புள்ளயே போயிட்டான்னா பின்னால என்ன
பண்றது?"
"நீங்க அழச்சிட்டுப் போங்க! நாம்ம
ஹெட்மாஸ்டருகிட்டே பேசிக்கிறேம்! ஒடனே ஒரு முடிவுக்கு வந்திட வாணாம். வூட்டுல வெச்சுப்
பேசிப் பாருங்க. கொஞ்ச நாளு வூட்டுல இருந்தான்னா அவனே மறுபடியும் ஆஸ்டலுக்கு வந்து
படிப்பேம்பான்." என்றார் வார்டன்.
எதுவும் சொல்ல விரும்பாதவரைப் போல முகத்தைத்
திருப்பிக் கொண்டார் பக்கிரிசாமியின் அப்பா.
தொப்புளான் பக்கிரிசாமியைக் கைத்தாங்கலாய்ப்
பிடித்தபடி அழைத்துப் போனார். பின்னால் நடக்க முடியாமல் நடந்து போனார் பக்கிரிசாமியின்
அப்பா.
"அவேம் மூஞ்சு கை கால்ல கழுவி விடேம்!"
என்றார் பக்கிரிசாமியின் அப்பா தொப்புளானிடம்.
"ஒண்ணும் வாணாம். வூட்டுல போயி கழுவிப்பேம்!"
என்றான் பக்கிரிசாமி. அதற்கு மேல் யாருக்கும் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.
நிலைமையைப் புரிந்து கொண்டவர் போல ஹாஸ்டல்
கேட்டைத் திறந்து கொண்டு பக்கிரிசாமியை வழிநடத்தியபடி தொப்புளான் சென்று கொண்டிருந்தார்.
அவர்களின் பின்னால் கையறு நிலையில் செல்வதைப் போல சென்று கொண்டிருந்தார் பக்கிரிசாமியின்
அப்பா.
கொஞ்ச தூரம் சென்றதும் பக்கிரிசாமியின்
அப்பாவிடம் அவனை விட்டு விட்டு தொப்புளான் ஹாஸ்டல் உள்ளே ஓடி வந்தார்.
"பொட்டி சாமானையெல்லாம் எடுத்துட்டு
வரணுமாம்! சின்னய்யா சொல்றாரு!" என்றார் தொப்புளான்.
வார்டன் இதற்கு என்ன சொல்வது அறியாமல்
நின்றார். வார்டனைக் கேட்க வேண்டும் என்று கூட தோன்றாமல் பிள்ளைகள் உள்ளே ஓடிப் போய்
பக்கிரிசாமியின் பெட்டிக்குள் அவனது சட்டைத் துணிமணிகள், தட்டு, டம்பளர், புத்தகங்களைப்
போட்டு, பெட்டியின் மேல் அவனது பாய் தலையணை வைத்து வெளியே கொண்டு வந்து கொடுத்தனர்.
தொப்புளான் எல்லாவற்றையும் தன் தலைமேல்
தூக்கி வைத்துக் கொண்டு வெளியே நடக்க ஆரம்பித்தார்.
நடப்பதையெல்லாம் வெறித்தபடியே பார்த்துக்
கொண்டிருந்தனர் வார்டனும், பிள்ளைகளும், ஹாஸ்டலுக்கு உள்ளே வந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களும்.
எல்லாம் நிமிடத்தில் தொடங்கி நிமிடத்தில் தானே ஒரு முடிவுக்கு வந்ததைப் போல இருந்தது.
வார்டன் தன் அறைக்குள் நுழைந்து மேசையில்
இருந்த பக்கிரிசாமி எழுதியதாக அவனது அப்பா கொடுத்த கடிதத்தை ஒரு முறை கவனமாகப் பார்ப்பதைப்
போல பார்த்து விட்டு தன் சட்டைப் பைக்குள் இரண்டாக மடித்து வைத்துக் கொண்டார். உதட்டை
உள்ளே மடித்துக் கொண்டு நெற்றியைச் சுருக்கியவர், டெலிபோனை எடுத்து எண்களை அழுத்தி
ரிசீவரை காதருகே கொண்டு சென்றவர், திடீரென தன் முடிவை மாற்றிக் கொண்டவரைப் போல அதை
அப்படியே வைத்தார். வேக வேகமாக ஹாஸ்டலின் வெளியே வந்தவர் தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு
அதே வேகத்தில் கிளம்பினார். அவர் ஹெட்மாஸ்டரையோ அல்லது மணிவாசகநாதரையோ பார்க்கப்
போயிருக்க வேண்டும் என்று பிள்ளைகள் பேசிக் கொண்டார்கள்.
*****
No comments:
Post a Comment