15 May 2019

நான் வளர்கிறேனே என்ற வீடு!



செய்யு - 85
            திட்டையில் தெருவுக்கு வெளியே வித்தியாசமாக நீட்டிக் கொண்டிருந்த விகடுவின் வீடு ஆரம்பிக் காலங்களில் வெளிர் பச்சை நிற வண்ணம் பூசிக் கொண்டிருந்தது. சில ஆண்டுகளாக அதன் நிறம் வெளிர் நீலமாக மாறியிருந்தது. வீட்டின் முன்னே மூங்கில் தட்டி வைத்து அடைக்கப்பட்டிருந்தது. தட்டிக்கு அடர் நீல வண்ணம் அடிக்கப்பட்டிருந்தது. அந்த அடர் நீல நிறத்துக்கு ஒத்த வகையில் சுவரின் வெளிர் நீல நிற வண்ணம் இருந்தது.
            வெளிர் பச்சை அடிக்கப்பட்டிருந்த ஆரம்பக் காலத்தில் திறப்பாக இருந்த திண்ணையும், அதைத் தொடர்ந்த நீண்ட இழுப்பாகக் கொண்ட உள்பக்கமுமாக அவ்வளவுதான் வீடாக இருந்தது. தெரு நிலையும், கதவும் நடுத்தரமான நீல நிறத்தில் வண்ணம் அடிக்கப்பட்டு ஒற்றைக் கதவாக அதாவது ஒரு பக்கக் கதவாக இருந்தது. கொல்லை நிலையும், கதவும் தெரு நிலை மற்றும் கதவை விட சிறிதாக இரட்டைக் கதவாக பழுப்பு வண்ணம் அடிக்கப்பட்டு இருந்தது.
            இந்த ரெண்டு நிலை கதவுகளையும் புதிய வீடு கட்டும் போது பழைய வீட்டின் ஞாபகமாக எடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை வீட்டில் இருந்த எல்லாருக்கும் இருந்தது. இது பின்னால் நடந்த கதை. காலத்தை முன்னோக்கித் தள்ளிக் கொண்டு போய் அந்த நிலை கதவுகளைப் பற்றிச் சொல்வதற்காக நீங்கள் என்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு ஆசையாக எடுத்து வைத்த நிலை, கதவுகளை செகண்ட் ஹேண்டாக தான் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வடவாதி தேங்காய்க் கடை பாய் வந்து கேட்டுப் பார்த்தார். நல்ல விலை போட்டுத் தருவதாகவும் சொல்லிப் பார்த்தார். வீட்டில் இருந்த எந்த ஜென்மமும் அப்போது அதற்கு இசையாத காரணத்தால் அவை பல ஆண்டுகளுக்கு வீட்டின் கொல்லைப் புறத்தில் மழையிலும், வெயிலிலும் காலத்தின் சாட்சியமாய்க் கிடந்தன. கறையான் ஏறிப் போய்க் கிடக்கும் அதை எப்போதாவது அப்பா துடைத்துப் போடுவதும், அப்பா துடைத்துப் போட்டு நகர்ந்த பின் அதில் கறையான் ஏறிக் கொள்வதும் கடைசியாக கறையான் குடியிருக்கும் வீட்டுக்கு நிலை, கதவுகளாய் அது தன் எஞ்சிய காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தது.
            இப்போது பின்னோக்கி அந்தக் காலத்துக்கே வந்து விடலாம்.
            உள்பக்கத்தின் தென்கிழக்கு மூலையில் அடுப்பு இருந்தது. உள்பக்கப் புழக்கம், சமையல் எல்லாம் ஒன்றாக இருந்ததால் அதைத் தொடர்ந்து சமையல்கட்டுக்காக வீடு கொஞ்சம் நீண்டது.
            நெல் கொட்டி வைப்பதற்காக பத்தாயம் செய்யப்பட்ட போது அந்தப் பத்தாயத்தை வைப்பதற்காக சமையல்கட்டைத் தயார் செய்ய வேண்டியதாகி விட்டது. அதனால் சமையல்கட்டு பத்தாயம் வைக்கும் இடமாக மாறி, புதிய சமையல்கட்டுக்காக வீடு மறுபடியும் கொஞ்சம் நீண்டது. அந்தக் கூரை வீடு பிற்காலத்தில் மாடி வீடாக உருக்கொண்ட பின்னும் அது தன் பழைய மரபையோ, ஜீனையோ விட்டு விடாதபடி நீண்டு கொண்டே போனதுதைக் கேட்டால் மறுபடியும் ஆச்சரியப்படுவீர்கள்.
            வீட்டில் இருக்கும் மனிதர்கள் வளர்வது போல அந்த கூரை வீடும் வளர்ந்து கொண்டிருந்தது. அப்படி வளர்ந்ததால் என்னவோ வளரும் மனிதர்களுக்கு வயதாகி விடுவதைப் போல அந்த வீடும் வயதான நிலையை அடைந்திருந்தது. வயதான மனிதருக்கு தலையெல்லாம் நரைத்து விடுவதைப் போல வெண்ணிறமாக அந்தக் கூரை வீடும் கூரைகளில் ஆங்காங்கே வெள்ளை நிறத்து உரச்சாக்குகள் செருகப்பட்டதாக இருந்தது. விகடுவுக்காக வீட்டை விட்டு நரிவலத்துக்குப் போனதால் வயதாகி கை, கால் முடங்கிப் போன வயோதிகரைப் போல வீட்டின் சுவர்கள் ஆகி விட்டன. கறையான்களின் கைவரிசையில் அவைகள் நிற்கக் கூடத் திராணியில்லாமல், யாராவது வந்து இடித்துத் தள்ளி விடா விட்டாலும் கூட பரவாயில்லை, மேலே சாய்ந்தாவது தள்ளி விட மாட்டார்களா என்று, பரிதாபமாகவும், ஏக்கமாகவும் வீட்டுக்கு வருவோர் போவோரையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தன. வயோதிகத்தால் பொத்து வடியும் தோல் போல தரைகள் எல்லாம் இருந்தன. பெருச்சாளிகள் அந்த அளவுக்கு தரையை மூப்பு அடையச் செய்திருந்தன. மழைக்காலம் வந்த போது தரை ஓதங்காக்க ஆரம்பித்து விட்டது. சுவரையாவது தள்ளி விட முடியும். தரையை என்ன செய்ய முடியும்? அதன் தலைவிதி அப்படி. அதனால் அது சுவர்களைப் பொறாமையாகக் கூடப் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம்.
            மழைக்காலம் ஆரம்பித்து விட்டால் அப்பாவுக்கு அது ஒரு வேலையாகி விடும். வெள்ளை உரச் சாக்குகளை எடுத்துக் கொண்டு கீற்று ஒழுகும் இடமாகப் பார்த்து செருகி விட்டுக் கொண்டிருப்பார். சாதாரணமாக மூன்று ஆண்டுகள் வரை தாக்குப் பிடிக்கும் கீற்றுகளை அதற்கு பின்பு மாற்றினால்தான் வீடு ஒழுகாமல் இருக்கும். அப்பாவின் சாக்கு செருகும் வித்தையால் வீடு குறைந்தது ஐந்தாண்டுகள், எட்டாண்டுகள் வரை கூரை மாறாமல் அப்படியே இருக்கும். அதற்கு மேல் சாக்குகளைச் செருக முடியாத அளவுக்கு கூரையே சாக்குகளாக மாறி, சாக்குகளைச் செருகினால் கீற்றுகள் பொலபொலத்து விழ ஆரம்பித்த நிலை வந்த பிறகுதான் வேறு வழியில்லாமல் அப்பா கீற்று மாற்றுவதை வழமையாக வைத்திருந்தார்.
            ஆனாலும் பாருங்கள் கோடைக்காலங்களில் கீற்று ஓட்டைகள் வழியே வந்த விழும் ஒளிவட்டங்கள் இருக்கிறதே வீடு முழுவதும் சிதறிக் கிடக்கும் காசுகளைப் போல அவ்வளவு அழகாக இருக்கும். கூரை மாற்ற காசு இல்லாத குறையே தெரியாத அளவுக்கு அந்த ஒளிவட்டக் காசுகள் காசு இல்லாத குறையை அவ்வளவு அழகாக நிவர்த்திச் செய்து கொண்டிருக்கும். தவிரவும் அந்த மாதிரி டிசைனை நீங்கள் உங்கள் வாழ்நாளில் பார்த்திருக்க முடியாது. அது கூரை மாற்ற முடியாத இயலாத ஏழ்மைக்கான டிசைன்.
            அப்பாவுக்கு அந்த நேரத்தில் இரண்டு விதமான கவலைகள் இருந்திருக்க வேண்டும். ஒன்று, வீட்டைச் சரி செய்தாக வேண்டும் அல்லது புதிய வீடு கட்டியாக வேண்டும். இரண்டு, வீயெம் மாமாவின் கல்யாணத்தை எப்படியாவது நடத்தியாக வேண்டும். அப்பா கவலைப்பட்டுக் கொண்டிருந்தது என்பதை அப்படி எப்படித் துல்லியமாக அடித்தக் கூறுகிறேன் என்று கேட்கலாம். அப்பாவுக்கு அப்போது ஒருபக்கத் தலைவலி எனும் மைக்ரேன் தலைவலி ஆரம்பித்திருந்தது. இரு பக்க கவலைகள், ஒரு பக்கத் தலைவலி என்றால் ஏதோ ஒரு கவலை ரொம்ப தூக்கலாக இருந்திருக்க வேண்டும். அது வீடா? வீயெம் மாமாவின் கல்யாணமா? என்பதை அப்பா காட்டிக் கொள்ளவில்லை.
            அப்பாவுக்கு லாலு மாமாவின் ரெண்டாவது பெண் குயிலியை வீயெம் மாமாவுக்காகக் கேட்டுப் பார்க்கலாமா என்று கூட தோன்றியிருக்க வேண்டும். அது ஓர் அசட்டுத் துணிச்சலான யோசனைதான். அப்படிக் கேட்பதற்கு முட்டாள்தனமான தைரியம் தேவை. அப்பா அது குறித்தும் யோசித்துப் பார்த்தது. அதற்கு முன் ஒரு பேச்சுவாக்கில் குமரு மாமாவுக்காக லாலு மாமாவின் மூத்தப் பெண் ஈஸ்வரியைக் கேட்டுப் பார்த்தது அப்பாவின் நினைவுக்கு வந்து போனது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...