16 May 2019

வாக்குறுதிகளின் அரசியல்



            1. தொழில் தொடங்க என இருபதாயிரம், ஐம்பதாயிரம் வங்கிக் கடனுக்காக அலையோ அலை என்று அலைந்து கொண்டிருக்கும் இளைஞர்கள்!
            2. மாதத்துக்கு அதே வங்கிக் கணக்கில் ரெண்டாயிரம், ஆறாயிரம்! அல்லது வருடத்துக்கு அறுபதாயிரம், எழுபத்திரண்டாயிரம்! என்று தேர்தல் கால வாக்குறுதிகள்!
            இவை இரண்டையும் எப்படிப் பார்ப்பது?
            தேர்தல் வாக்குறுதிகளாய் இலவசமாகக் கொடுப்பதாகச் சொல்லும் ‍அதே தொகையை அலைய விடாமல், அவநம்பிக்கை‍யையும் விரக்தியையும் ஏற்படுத்தாமல் கடனாகக் கொடுத்தால் இளைஞர்கள் சுய தொழில் தொடங்க தயாராக இருக்கிறார்கள். வட்டியோடு திருப்பிச் செலுத்த மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறார்கள்.
            கொடுக்கலாம்தான்! அதன் பின் நிலைமை?! யோசித்தீர்களா? இளைஞர்களின் சுயதொழில் பெருத்து விடும்! தலைவர்களின் அரசியல் தொழில் படுத்து விடும்!
            ஆகவேதான் கடன் வழங்குவதில் ஆயிரத்தெட்டு சிக்கலான நடைமுறைகள் இருக்கின்றன. வாக்குறுதிகளை அள்ளி வழங்குவதில் மட்டும் எந்த வித நடைமுறை விதிகளும் இல்லாமல் இருக்கின்றன.
            இலவு காத்த கிளி இலவம் பழத்தைத் தின்றாலும் தின்று விடக் கூடும். வங்கிக் கடனுக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் போல என்ற வாக்கியம் அதை இடம்பெயர்த்து தள்ளிவிடக் கூடச் செய்யும்.
            இளைய சமுதாயம் வங்கிக் கடனை பெறுவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்படாமல் இருப்பதில்தான் இருக்கிறது  இலவச வாக்குறுதிகளின் ஆயுட்காலம்.
            அலைகள் ஓய்வதில்லை என்பதைக் கடற்கரைக்குச் செல்லாமலே, வங்கிக் கடனுக்காக அலையோ அலையென்று அலைந்து கொண்டிருக்கும் இளைய சமூகத்தின் கூட்டத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
            இளைஞர்களுக்கான சிறுகடனில் அவ்வளவு இறுக்கிப் பிடிக்கும் வங்கிகள், மல்லையா, நீரவ் மோடி போன்றோர்க்கான பெருங்கடனில் எவ்வித இறுக்கிப் பிடித்தல் இல்லாமல் கடனை வழங்குவதிலும் அதே தேர்தல் வாக்குறுதிகள்தான் சூட்சமமாய் ஒளிந்திருக்கின்றன. ஏழைகளுக்கு இப்படி நிபந்தனையில்லாமல் இலவச வாக்குறுதிகளை அள்ளி வழங்கவும், பெருமுதலாளிகளுக்கு நிபந்தனையில்லாமல் சலுகைகளை அள்ளி வழங்கவும் அதே அரசியல்தான் உறுதி பூண்டிருக்கிறது.
            நீங்கள் வயிற்றுப் பசிக்காக ஒருவேளைச் சாப்பாட்டைத் திருடித் தின்று விட்டு அடுத்தத் தெருவுக்குக் கூட தப்பி ஓடி விட முடியாது. ஆனால் கடன் என்ற பெயரில் கோடிகளை விழுங்கித் தின்று விட்டு வெளிநாடுகளுக்கே தப்பி ஓடி விட முடியும்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...