செய்யு - 81
முன்னோக்கி நடக்க நடக்க நினைவுகள் பின்னோக்கிச்
சுழல ஆரம்பித்தன விகடுவுக்கு. நரிவலம் வல்லாளத் தேவர் வீட்டுக்குக் குடி போய் பத்து
மாதங்களுக்கு மேலிருக்கும். இடையில் காலாண்டு, அரையாண்டு விடுமுறைகள், தீபாவளி, பொங்கலுக்கு
வீட்டுக்கு வந்ததுதான். இப்போது ப்ளஸ் டூ படிப்பு முடிந்து விகடுவும், அம்மாவும் மாவூரிலிருந்து
நடந்து வந்து கொண்டிருந்தனர்.
காலையில் அப்பா நரிவலம் வல்லாளத் தேவர்
வீட்டிலிருந்த சாமான்களையெல்லாம் மாட்டு வண்டி பிடித்து ஏற்றி விட்டார். திட்டையிலிருந்து
போகும் போது வேனில் போன சாமான்கள் திரும்பி வரும் போது நரிவலத்திலிருந்து ஒரு மாட்டு
வண்டியில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தது. வண்டி கிளம்பியதும் அப்பாவும், செய்யுவும்
டிவியெஸ் பிப்டியில் பள்ளிக்கூடம் கிளம்பினார்கள். அவர்கள் அப்படியே பள்ளிக்கூடத்திலிருந்து
வீடு வந்து விடுவதாக ஏற்பாடு. விகடுவும், அம்மாவும் களக்காடு வந்து பஸ் பிடித்து மாவூரில்
இறங்கி அங்கிருந்து எட்டாம் நம்பர் பஸ்ஸைப் பிடித்து வந்து சேர்வதாக ஏற்பாடு.
காலாண்டுத் தேர்வு விடுமுறையின் போது
வீட்டைச் சுரண்டி எடுத்து கால் பங்காக இருந்த பெருச்சாளிகள், அரையாண்டுத் தேர்வு விடுமுறையின்
போது அரை பங்காக பெருத்து, அநேகமாக இப்போது போய் பார்க்கும் போது முழு பங்காக பெருத்திருக்கும்.
பொங்கலுக்கு வீட்டுக்குப் போன போது
வீட்டில் அடியெடுத்து வைக்க முடியாத அளவுக்கு பெருச்சாளிகள் அங்கும் இங்கும் ஓடிக்
கொண்டிருந்தன. வீட்டுச் சுவர்களில் கறையான் ஏறி கூரைகளில் மண்ணை அப்பி வைத்திருந்தன.
மனுஷர்களுக்குதான் குடியில்லாமல் போகும்
வீடு பாழாய்ப் போன வீடு. பெருச்சாளிகளுக்கும், கரையானுக்கும் அது கொண்டாட்டமான வீடு.
வீடு முழுவதும் உப்பு அலர் அடித்து வீட்டுச் சுவர்கள் உதிர்ந்து கிடந்தன.
சின்ன மாவூர் ரயில்வே கேட்டை அடைந்த போது
அம்மா சொன்னது, "பேசாம நின்னு எட்டாம் நம்பரு வாரப்பயே ஏறி வந்திருக்கலாம் போலருக்குடா.
மொழங்காலு வலி தாங்கலடா!"
"இங்கேயேன்னா நின்னுப்போமா? எட்டாம்
நம்பரு வந்தா ஏறிப்போம்!" என்றான் விகடு.
ரயிலோடி பல மாதங்கள் ஆகியிருந்த ரயில்
தண்டாவளத்தைப் பார்த்து அம்மா பெருமூச்செறிந்தது. "இது என்னடா இந்த ஊருக்கு ரயிலு
வந்தாலும் ஓட மாட்டேங்குது. பஸ் வந்தாலும் நாம்ம வர நேரம் வார மாட்டேங்குது. இந்தப்
பொட்டக் காட்டுல எங்க நிக்குறது? காலு வலிச்சா வலிச்சிட்டு கெடக்கட்டும். நாம்ம நடையைக்
கட்டுவோம்! முன்ன வெச்ச கால்ல பின்ன வெச்ச மாரி ஆயிடப்படாதுடா!" என்றது அம்மா.
ரயில்வே கேட்டைக் கடந்து வளைவு திரும்பியதும்
வேட்டையம்மன் கோயில் வந்தது.
"ஏலேம்பி! சட்டப் பையில காரூவா, அம்பது
காசி இருந்தா கொடுடா. வேட்டயம்மம் கோயிலு உண்டியல்ல போடணும்டா!" என்றது அம்மா.
"பைசா காசில்லம்மா!" என்றான்
விகடு.
"ஏண்டாம்பி இப்படிப் பண்றே? இப்போ
பஸ்ஸூ வந்தா எப்படி சீட்டுப் போடுவே! எட்றாம்பி ஒத்த காசிய!"
"ம்ஹூம்! பேசாம வர்றியா இல்லியா?"
"சொல்றது கேக்குறானா பாரு! இவம்கிட்ட
போயிக் கேட்டேம் பாரு!" என்று அம்மா தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த காசை
எடுத்து உண்டியலில் போடப் போனது.
"காசியப் போடாதம்மா! சொன்னா கேளு!"
"நீயும் கொடுக்க மாட்டேங்றேம்பி!
நம்ம கையில இருக்கிற காசியயும் போட வுட மாட்டேங்றேம்பி! பேசாம நீயி நடயக் கட்டு.
நாம்ம ரண்டு நிமிஷம் நின்னு வேண்டிட்டு வாரேன்!"
"காசியப் போட்டேன்னா நாம்ம உண்டியல
ஒடச்சி காசிய எடுப்பேம் பாத்துக்க!"
"இதென்னடா வம்பா இருக்கு?ரோட்டுல
வர்றவோ, போறவ்வோ பாத்தாக்கா என்னாவுறது? ஏந்தாம் இவேம் இப்படி பண்ணுறானோ?"
என்று அம்மா அதிர்ந்து போயி நின்றது.
"எனக்குப் பிடிக்கலம்மா! நிக்காம
வாரீயா இல்லியா?" என்றான் விகடு கோபமாக.
"ஏண்டி வேட்டயம்மா ஒனக்கு காசியப்
போடக் கூட வுட மாட்டேங்றாம். இவனுக்கு எப்பதாம் நல்ல புத்திய கொடுக்கப் போறீயோ?"
என்று அம்மா புலம்பியது.
கிழக்குப் பார்க்க இருந்த வேட்டையம்மன்
கோயிலுக்கு வெளியே தெற்குப் பார்க்க இருந்த ஐயனார் கையில் பெரும் அரிவாளோடு இதையெல்லாம்
பார்த்துக் கொண்டிருந்தார்.
"ஏம் யய்யா ஐயனாரப்பா நீயாவது இவனுக்கு
நல்ல புத்திக் கொடுத்தா ன்னா? என்ன போட்டு இப்படிப் பாடாய்ப் படுத்துறானேய்யா! நீயில்லாம்
இருக்கியா? இல்லியா?" என்றது அம்மா.
"நீயி சந்தேகமா கேக்குறில்லே இல்லியா
இருக்கியான்னு. அதத்தாம் நாம்ம இல்லேன்னு அடிச்சுச் சொல்றேம்! பேசாம வந்துத் தொல!"
"அய்யோ எந்தாயி வேட்டயம்மா! எம்ம
யய்யா ஐயனராப்பா! சித்த நேரம் நிக்கக் கூட வுட மாட்டேங்றானே! ஒன்ன நம்பி வந்ததுக்கு
நீங்கயெல்லாம் நம்மள இவம் கையில வுட்டுட்டு வேடிக்கப் பாக்குறீயளே! இது ஞாயமா?"
என்று அழாத குறையாகச் சொல்லிக் கொண்டு விகடுவின் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தது
அம்மா, "டேய்ம்பி! சித்திரையூரு வாரப்ப சீதளாதேவி கோயிலு இருந்துச்சுல்ல!"
என்றது.
"எனக்குத் தெரியாம காசி போட்டியா?"
என்றான் விகடு.
"அட என்னடா இவேம்! சொல்ல வாரத முழுசா
கேட்காம காசி போட்டியா? பணத்த போட்டியான்னு நின்னுட்டுருக்காம்!"
"காசி போடலல்லே!"
"கதய கேளுடா! நாங்க சின்ன புள்ளயா
இருந்தப்போ நெடுங்கர பக்கமா மாடு ஓட்டியாந்தப்போ வெளயாட்டு ஞாவத்துல மாடு மேயறத கவனிக்காம
விட்டுட்டோம்டா! வெளயாண்டு முடிச்சு மாட்டப் பாத்த ஒன்னயும் காணோம். வடக்கால சோத்திரியம்
பக்கம் தேடுவியா? தெக்கால மணமங்கலம் பக்கம் தேடுவியா? இல்ல கெழக்கால இந்தப் பக்கம்
வந்து தேடுவியா சொல்லு! வடக்காலயும், தெக்காலயும் தேடிப் பாத்துட்டு கெழக்கால வாரேம்.
வாரேம்னா சித்திரையூரு சீதளாதேவி கோயிலு வாரைக்கும் வந்தாச்சு. மாட்ட கண்ட பாடில்ல.
கூட வந்தவோ எல்லாத்துக்கும் திக் திக்குன்னு ஆயிடுச்சி. சீதளா தேவிட்ட வேண்டிட்டோம்
எப்படியாவது மாட்ட கண்ணுல காட்டி வுடு, திருவிசாவுக்கு வாரப்ப ஆளுக்கு காலணா போடுறம்னு.
வேண்டிட்டு நடந்தா கோயிலுக்கு கொஞ்சம் தெற்கால மாடுக நிக்குது. மாட்ட அங்கயிருந்து
அடிச்சுத் தொரத்தனோம்னா பாத்துக்க. மாடு ஒவ்வொண்ணும் வால தூக்கிட்டு ஓடுதுன்னா ஓட்டம்
அந்த ஓட்டம். பத்து நிமிஷத்துல வூடு போயி சேந்துருப்பம். அதுக்கப்புறமா இந்தப் பக்கமே
வாரதில்ல. எட்டாம் நம்பர்ல போறப்ப சீதளா தேவி கோயில பாக்குறப்பலாம் அந்த ஞாபவம் வந்திடும்டா.
அப்போ இந்த வேட்டயம்மம் கோயிலு பக்கமெல்லாம் வார முடியாது. அம்புட்டுக் காடா இருக்கும்.
தனியா வந்தா வேட்டயம்மம் அடிச்சுப் போட்டுடும். அதுல தப்பிச்சா ஐயனாரு ரத்தம் கக்க
வெச்சி சாகடிச்சிடும். மாடு கண்ண திருடிட்டு இத்த கோயில தாண்டி ஒருத்தம் போயிட முடியுமா
சொல்லு!" என்று கால்வலி தெரியாமல் இருக்க பழைய ஞாபகங்களைக் கிளறி அம்மா கதைச்
சொல்லிக் கொண்டு வந்தது.
"அதாங் சீதாளதேவி கோயிலுக்கு முன்னாடி
வேட்டையம்மம் கோயில்லு இருக்குல்ல. அப்புறம் ஏம் இத்த வுட்டுட்டு அங்கப் போயி வேண்டிகிட்டீங்க?"
என்றான் விகடு.
"யாருடா இவேம் புரியாத கிறுக்கனா
இருப்பாம் போலருக்கு. அப்பலாம் பொம்பள புள்ளியோ தனியா இந்தக் கோயிலு பக்கம் வார
முடியாதுடா. வேட்டயம்மனுக்குக் கோவம் வந்துடும். இந்தக் கோயிலு வாரதுக்கு முன்னாடி
வயக்காட்டுல வுழுந்து கண்ணுல கோயிலு தெரியாத தூரத்துக்கு சுத்திப் போவோம்டா!"
என்றது அம்மா.
"இப்போலாம் ஒம்ம வேட்டயம்மம் அடிக்குறத
வுட்டுட்டா?"
"எல்லே வாயில வெச்சேம்னா பாரு! பேசாம
போடா! இந்த வெள்ளயாத்துக் கரயில எவ்ளோ விளா மரம் இருக்கும். எவ்ளோ ஆல மரம், அரச
மரம் இருக்கும். ஏல்லே எவ்ளோ நாவ மரமும், வாதாம் மரமும் இருக்கும் தெரியுமாடா? ஒன்னய
பெத்து இந்த வழியில அழச்சிட்டு வாரதுக்குள்ள ஒண்ணும் ல்லாம போச்சுடா! ஒன்ன மாரி ஆளுல்லாம்
நடந்து வந்தா இப்படிதாம்டா ஆகும்டா!"
"நாங்கலாம் எவ்ளோ மரக்கண்ணு நட்டு
வெச்சு பள்ளியோடத்துல வளக்குறம் தெரியுமா?"
"ஒண்ணு கெளம்பியிருக்கணுமே! ம்ஹூம்!
அப்ப இருந்ததல்லாம் யாரு நட்டு வச்சு கெளம்புணுது சொல்லு. நீங்கலாம் ச்சும்மா இருந்தாவே
நாலு மரம் கெளம்பும்டா! இந்த கோயிலு பக்கம் வந்து அப்போ ஒருத்தம் ஒரு மரத்துல ஒரு
சுள்ளிய கைய வெச்சி ஒடச்சிட முடியுமா? ஐயனரப்பா அப்படியே கைய முறிச்சிடும் தெரியுமா?"
என்றது அம்மா.
அம்மா இப்படிச் சொன்னதும் விகடு ஒரு கணம்
நின்றான். அவன் மனதுக்குள் ஐயனாரப்பர் மேல் ஒரு மரியாதைப் பிறப்பது பொலிருந்தது. அவன்
திரும்பிப் பார்த்தான். அரிவாளோடு அவர் அமர்ந்திருப்பது மங்கலாய்த் தெரிந்தது. அரிவாளை
வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் ஐயனாருக்குப் பயந்து அரிவாளை எடுத்து மரத்தை
வெட்ட பயந்த அந்தக் காலத்து மக்கள் ஓர் அபரிமிதமான பாசம் தோன்றியது விகடுவுக்கு.
"ஏம்டா மவனே! அதுக்குள்ள ஐயனரப்பரு
ஒமக்கு நல்ல புத்தியா கொடுத்துட்டாரா?" என்றது அம்மா.
"நீயி கொஞ்சம் வாங்கிக்கோ! ரொம்ப
அதிகமாவே கொடுத்திருக்காரு!" என்றபடியே திரும்பிப் பார்ப்பதை விட்டு விட்டு வேக
வேகமாக நடக்க ஆரம்பித்தான் விகடு.
"கொஞ்சம் பதுவிசா நடந்து தொலடாம்பி!"
என்ற அம்மாவின் குரல் தூரத்திலிருந்து கேட்பது போல இருந்தது விகடுவுக்கு.
*****
No comments:
Post a Comment