2 May 2019

ஓர் இரவு செய்த மாயம்



செய்யு - 72
            ஓர் இரவில் தூக்கத்தில் நடந்து அடுத்து வந்த ஒரே பகலில் விகடு நரிவலத்தில் பிரபலமானவனாக ஆனான். செய்தி ஹெட்மாஸ்டர் வரை எட்டிய போது அவர் விகடுவைத் தனியாக அறையில் வைத்து விசாரித்தார். சுயநினைவில் நடக்காத ஒன்றைப் பற்றி அவனால் எதுவும் கூற முடியவில்லை. சொல்லப் போனால் தூக்கத்தில் நடந்ததை அவனால் நம்ப முடியவில்லை. தன்னைப் பற்றி பேசப்படும் விசயம் தன்னால் அறிய முடியாததாகவும், தனக்குத் தெரியாததாகவும் இருந்தது அவனுக்கு அதிசயமாகப் பட்டது. "நாம்ம அப்படியெல்லாம் நடக்கல சார்!" என்றான் அவன்.
            தன்னைப் பற்றியச் செய்தியை நரிவலம் முழுவதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைத்த போது விகடுவுக்கு வெட்கமாகவும், அவமானமாகவும் தோன்றியது. இப்படி ஒரு பெயர் தனக்கு ஏற்பட்டதைப் பற்றி அதிகமாக வருத்தப்பட்டான். இனி நரிவலத்தில் தன்னைப் பற்றிதான் பேசிக் கொண்டு இருப்பார்கள் என்று நினைக்க நினைக்க அவனுக்கு அழுகை முட்டிக் கொண்டு வரும் போலிருந்தது. தனக்கு மட்டும் ஏதோ விநோதமாக நடக்கிறது என்று நினைத்து அவன் பயப்பட ஆரம்பித்தான். அந்தப் பயத்தின் தொடர்ச்சியாக ஏன் தனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று நினைத்து நினைத்து மனம் புழுங்க ஆரம்பித்தான்.
            வல்லாளத் தேவர், "ஹாஸ்டல் பய ஒருத்தம் ராத்திரியில நடந்துட்டு திரியறான். நாம்ம மட்டும் ல்லேன்னா அவம் மெட்ராஸூ, டெல்லின்னே நடந்து போயிருப்பான் பாத்துக்குங்களேம்!" என்று ஹோட்டலில் சாப்பிட வருவோர், போவோரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவரால் பேசாமல் சமைப்பதும், பரிமாறுவதும் கஷ்டம். எந்நேரமும் பேசிக் கொண்டே இருப்பார். அவரை ஒரு வெகுளியான மனிதர் என்று நரிவலத்தில் பேசிக் கொள்வார்கள். அவருக்கு யாரைப் பற்றியும் தவறான அபிப்ராயம் பரப்பும் நோக்கம் கிடையாது என்றாலும் அவருக்கு எதைப் பற்றியாவது, யாரைப் பற்றியாவது பேசிக் கொண்டிருக்க வேண்டும். அப்படிப் பேசினாலும் அவர் தன்னோடு தொடர்பில்லாத எந்த விசயத்தையும் பேச மாட்டார். அவரோடு தொடர்புடைய அத்தனை விசயத்தையும் பேசிக் கொண்டிருப்பார். அப்படி அவர் திரும்ப திரும்பப் பேசுவது யாரைத் தொடர்புபடுத்திப் பேசுகிறாரோ அவருக்கு அவதூறு பரப்புவது போன்ற தோற்றத்தைத் தந்து விடும்.
            தன்னால் இரவில் தூக்கத்தில் நடக்க முடியும் என்பதை விகடுவால் நம்ப முடியாமல் அவன் மனம் நொந்துப் போயிருந்தான். ராமராஜ்தான் விகடுவைத் தேற்றினான், "வுடுங்கண்ணா! அந்தத் தேவரு அப்படித்தாம். அவருதாம்ணா ஒங்களப் பத்தி நரிவலமே பேசறதுக்குக் காரணம். சாப்புட வாரவங்களுக்கு சோத்தயும் போட்டு ஒங்களப் பத்தினத தொட்டக்குறதுக்கு பரிமாறிட்டு இருக்காரு. ல்லாம் கொஞ்ச நாளிக்கு. பேசிட்டு அப்பறம் வுட்டுடுவாங்கண்ணா!"
            தன்னையறியாமல் தூக்கத்தில் நடப்பதற்குத் தான் என்ன செய்ய முடியும்? இதை ஒரு அதிசயமாகப் பேசிக் கொள்கிறார்களே என்று நரிவலம் மக்கள் மீது விகடுவுக்குக் கோபம் கோபமாக வந்தது. அதை விட வல்லாளத் தேவர் மேல் தாங்க முடியாத கோபம் வந்தது விகடுவுக்கு. கோபப்பட்டு என்ன செய்ய? தன் நிலை பரிதாபகரமாக இருப்பதாக நினைத்தான் விகடு.
            பகலில் சில நேரங்களில் வகுப்பறையில் தூங்குவதை நினைத்து விகடுவுக்குப் பயம் வரத் தொடங்கியது. பகலில் அப்படித் தூங்கும் போது இரவுத் தூக்கத்தில் நடப்பதைப் போல அந்தப் பகல் தூக்கத்திலும் தன்னையறியாமல் எழுந்து நடந்து போக ஆரம்பித்து விட்டால் என்னாவது என்ற சந்தேகம் அவனை வாட்டியது. இதுவரை இரவில் நடந்ததை நேரில் பார்க்காமல் அது குறித்த செய்தியைக் கேள்விபட்டுதான் பள்ளிக்கூடத்தில் இருப்பவர்கள் சாடை மாடையாக, இலைமறைக் காயாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் எல்லாருக்கும் தெரியும் அளவில் பகல் தூக்கத்தில் நடந்தால்... அதை நினைத்துப் பார்க்கும் போதே விகடுவுக்கு உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கியது. அதை விட அதிகமாக அவனது வகுப்பறை மாடியில் இருப்பதால் பகல் தூக்கத்தில் நடந்து போய் மாடியிலிருந்து கீழே விழுந்து விட்டால் என்னாவது என்ற பயம் வாட்டி வதைத்தது. தன் வாழ்நாளில் தான் தூங்கவே கூடாது என்று மனதை அழுத்திப் பிடிக்கும் வண்ணம் அவன் மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டான். அப்படி நினைப்பதே அவனுக்கு தூக்கத்தை அள்ளிக் கொண்டு வருவது போலிருந்தது. திரும்ப திரும்ப அப்படி நினைப்பது அவனைக் கொட்டாவி விட வைத்தது.
            இன்னும் கொஞ்ச நாளைக்கு நரிவலத்தில் இதையேத்தான் பேசிக் கொண்டு இருப்பார்களா? நாளை ஒரு நாள் பேசி அத்தோடு நிறுத்திக் கொள்ள மாட்டார்களா? என்று விகடுவுக்கு படபடப்பாக இருந்தது. அதுவும் சாத்தியந்தான். அந்த நிகழ்வை விட மோசமான இன்னொரு நிகழ்வு நடந்தால் அதைப் பிடித்துக் கொள்வார்கள் மக்கள். அப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டுமோ? ஆனால் அப்படி ஒரு சம்பவம் விகடுவுக்காகவே ஹாஸ்டலில் நடப்பது போல நடந்தது.
            ப்ளஸ் ஒன்னில் பயிர் பாதுகாப்பியல் பிரிவில் படித்துக் கொண்டிருந்த பக்கிரிசாமி அவனது அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தான். அவர் அலறியடித்தபடி அந்தப் பொழுது சாயும் நேரத்தில் ஹாஸ்டலுக்கு வந்தார். வார்டனும் பள்ளிக்கூட வேலைகளை முடித்து விட்டு ஹாஸ்டலுக்கு வந்திருந்தார்.
            பக்கிரிசாமியின் அப்பாவுக்கு கால்கள் இரண்டும் முட்டிக்கு வெளிப்பக்கமாக வளைந்திருந்தது. பாதங்கள் இரண்டையும் அவரால் சேர்த்து நிற்க முடியவில்லை. நிற்கும் போது அவரது பாதங்கள் விரிந்த நிலையில் இருந்தன. ஓரிடத்தில் நீண்ட நேரம் நிற்பது அவருக்குச் சிரமமாகத்தான் இருக்கும். அதை விட நடப்பதற்கும் அவருக்குச் சிரமமாகத்தான் இருந்தது. அவர் சிரமப்பட்டவாறே கிராமத்திலிருந்து ஓர் ஆளையும் துணைக்குக் கூப்பிட்டு வந்திருந்தார். அந்த ஆளின் தோளில் கை வைத்தவாறே அவர் நடந்து வந்தார். அவர் கிராமத்திலிருந்து அழைத்து வந்த ஆள் கைலியும், வெளுத்துப் போன பழைய டீ சர்ட்டும் போட்டிருந்தார். பக்கிரிசாமியின் அப்பாவைக் பாதுகாப்பாக அழைத்து வருவதில் அந்த ஆள் கவனமாக இருந்தார்.
            திடீரென பக்கிரிசாமியின் அப்பா பதற்றத்தோடு வந்து நிற்பதைப் பார்த்து வார்டனுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். அவர் அந்த அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல், "அந்தச் சம்பவத்துக்கு அப்புறம் யாருக்கும் ஹாஸ்டல் ரூல்ஸ மதிக்கணும்னு தோண மாட்டேங்குதுல்ல! நெனச்ச நேரத்துக்கு வாறீங்க. போறீங்க." என்றார் பதிவேடு ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு அதைச் சார்ப்பாத்துக் கொண்டிருப்பது போல. பக்கிரிசாமியின் அப்பா வார்டனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். அவர் அழைத்து வந்த ஆள் நாற்காலியின் பக்கத்தில் பின்னால் நின்று கொண்டார்.
            அங்கங்கு படித்துக் கொண்டும், காய வைத்த பேண்ட், சட்டைகளை மடித்து வைத்துக் கொண்டிருந்த ஹாஸ்டல் பிள்ளைகள் ஒவ்வொருவரும் நடப்பதை அறியும் ஆவலில் வார்டன் ரூமாக அமைக்கப்பட்டிருந்த தடுப்புக்கு அருகில் வந்து நடப்பதைக் கவனிக்கத் தொடங்கினர்.
            "அப்டில்லாம் சொல்லாதீங்க சார். மத்தியானம் இருக்கிறச்சே லட்டர் ஒண்ணு வந்துச்சு. படிச்சுப் பாத்ததுக்கு பின்னால வூட்டுல தங்க முடியல சார். அதாங் ஓடியாந்துட்டேம். சித்த நீங்களே படிச்சுப் பாருங்க சார்!" என்றார் கையில் இருந்த கடிதத்தை நீட்டியபடி பக்கிரிசாமியின் அப்பா.
            வார்டன் வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். அவர் முகம் மாற ஆரம்பித்தது.
            "ச்சே! எவ்ளோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்! இவம் பதினொண்ணாவது படிக்கிறாம்? தேர்றது ரொம்ப கஷ்டம்!" என்றார் வார்டன் எரிச்சலோடு.
            "சார்! நானும் ஒரு வாத்தியார்தான்! லட்டர்ல இருக்குற மிஸ்டேக்ஸப் பாக்க வாணாம். விசயத்தப் பாருங்க!" என்றார் பக்கிரிசாமியின் அப்பா அதிர்ச்சியோடு.
            "அவன கொஞ்சம் கவனமா பாத்துக்கோணோம் சார்! அதச் சொல்லிட்டுப் போறதுக்குதான் வந்தேம்!"
            "ப்ளஸ் ஒன் பிளாண்ட் புரோடக்சன் பக்கிரிய வரச் சொல்லுப்பா!" என்றார் வார்டன் தன் ரூமிலிருந்து வெளிப்பக்கம் தலையை நீட்டி எட்டிப் பார்த்தபடி.
            பக்கிரிசாமி அமைதியாக நடந்து வந்து வார்டன் ரூமுக்கு வெளியே போய் நின்றான்.
            "ன்னப்பா இது?இத்த எப்போ எழுதிப் போட்டே? யார்ட்ட கொடுத்து போஸ்ட் பண்ணே?" என்றார் வார்டன் கையிலிருந்த கடிதத்தை நீட்டியபடி.
            "நாம்ம இனுமே இஞ்ஞ இருக்க மாட்டேம். நம்மள வூட்டுக்கு கூப்புட்டுட்டுப் போயிடுங்கப்பா! நாம்ம இனுமே இஞ்ஞ இருக்கவே மாட்டேம்!" என்று தன் அப்பாவைப் பார்த்து சத்தமாய்ச் சொன்னான் பக்கிரிசாமி வார்டனுக்கு எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க விருப்பம் இல்லாதவனைப் போல.
            "ஏம் இவ்ளோ சத்தம்?" என்றார் வார்டன் மிரட்டல் தொனியோடு.
            "நம்மாள இஞ்ஞ இருக்க முடியாது!" என்ற பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னான் பக்கிரிசாமி.
            வார்டனுக்கு பக்கிரிசாமி அப்படிச் சொன்னது அவனமாகப் பட்டிருக்க வேண்டும். "ட்டேய்! வாய மூடுடா! ஏன் இங்ஙன இருக்க முடியாது? இங்ஙன ன்ன பேயா? பிசாசா? ன்னா இருக்கு? ஒன்னய யாரும் முழுங்கிடவா போறாய்ங்க?" என்றார் பதிலுக்கு வார்டன்.
            "ஆமா! இஞ்ஞ பேயி இருக்கு. பிசாசு ல்லாம் இருக்கு. இஞ்ஞ மனுசம் இருக்க மாட்டாம். முகிலன் நம்மள வுழுங்கப் பாக்குறாம். ராத்திரி கனவுல வந்து கயித்துல தொங்கச் சொல்றாம்! இஞ்ஞ மனுசம் இருக்க மாட்டாம்!" பக்கிரிசாமியின் சத்தம் உச்சஸ்தாயில் இருந்தது. அவன் போட்ட சத்தம் அசாதாரணமாக இருந்தது. அந்தச் சத்தம் ஹாஸ்டலைத் தாண்டி வெளியில் போய்க் கொண்டிருந்தவர்களின் காதுகளுக்கும் கேட்கும் வகையில் கடுமையாக இருந்தது. அசாதாரணமான அவனது சத்தத்தைக் கேட்டு ஹாஸ்டலுக்கு வெளிப்பக்கம் இருந்த மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தவர்கள் ஹாஸ்டல் அருகே ஒதுங்கிக் கேட்க ஆரம்பித்தார்கள்.
            வார்டன் சற்று அமைதியான பணிந்து தொனிக்கு வந்திருந்தார். பக்கிரிசாமியின் அசாதாரண சத்தம் அவருக்குள் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்க வேண்டும்.
            "இங்ஙன ஒனக்கு என்ன கஷ்டம்? அருமையான சாப்பாடு. படிக்குறதுக்கு அருமையான வாய்ப்பு. ந்நல்லா படிச்சு ந்நல்லா மார்க் வாங்குனா ந்நல்லா வேலைக்குப் போகலாம். ஒம்ம அப்பா அம்மாவுக்குச் சந்தோஷம். ஹாஸ்டலுக்கும் பெரும!" என்றார் வார்டன்.
            "எத்தும் வாணாம். ஏய் யப்பா நம்மள இஞ்ஞ வுடாம கூப்புட்டு போறீயளா?" என்றான் பக்கிரிசாமி.
            "டேய்! அதாங் வார்டன் சார் எவ்ளோ பொறுமையா சொல்றாங்க. கேட்டீல்ல. ந்நல்லா படிச்சு பெரிய ஆளா வாரணும்டா!" என்றார் பக்கிரிசாமியின் அப்பா.
            "யோவ்! மரியாத கெட்டுடும். நம்மள இஞ்ஞயிருந்து அழச்சிட்டுப் போயிடு. அதுக்குத்தாங் லட்டர் போட்டேம். ஒம்ம வார்டன வுட்டு உபதேசம் பண்ணச் சொல்ல வாரச் சொல்லல."
            "ச்சீ! ன்னாடா சத்தம் பெருசா போவுது? நாமளும் பாத்துட்டு இருக்கேம்! சொன்னா புரிஞ்சுக்கோ! பாஞ்சாயிரம் கொடுத்துச் சேத்துருக்கேம்டா. எதுக்கு? ந்நல்லா படிக்ணும்ணுதாம்டா!"
            "மனுஷனா நடந்துக்க மாட்டேம் பாத்துக்கோ! சொன்னா புரிஞ்சுக்கோ. நாம்ம என்ன பண்ணுவேம்னு நமக்கே தெரியாது!"
            "ன்னாடா நாமளும் பாத்துக்கிட்டே இருக்கேம். மட்டு மருவாத ல்லாம்மா சத்தம் போட்டுட்டு இருக்கே. வந்தேம்னா பாத்துக்கோ. ன்னா நடக்கும்ணு தெரியாது பாத்துக்கோ!"
            "யோவ்! வாராதே. அப்பம்னு கூட பாக்க மாட்டேம். நடக்குறதே வேற!"
            "பாப்பம்டா! ன்னா நடக்குதுன்னு?" என்று பக்கிரிசாமியின் அப்பா எழுந்து அவன் அருகில் போனார்.
            "வாராதேன்னு சொல்றேன்ல! வந்துட்டே இருக்கே?" என்று பக்கிரிசாமி கண்கள் சிவக்க பற்களை நறநறவென்று கடிக்க ஆரம்பித்தான். சுற்றி இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளைகளுக்கும், வார்டனுக்கும் ஏதோ ஒரு துர்சம்பவம் நடக்கப் போவதான பயம் ஏற்படத் தொடங்கியது. அதுவரை மெயின்ரோட்டில் நின்று கேட்டுக் கொண்டிருந்தவர்கள் சத்தம் அதிகமாகத் தொடங்கியதும் ஹாஸ்டல் வராந்தாவுக்கே வந்திருந்தார்கள்.
            பக்கிரிசாமி அவனது அப்பாவை அடித்து விடுவானோ என்று எல்லாருக்கும் பயமாக இருந்தது. அடிப்பதற்கு முன் தடுத்து விட வேண்டும் என்ற எச்சரிக்கையும் எல்லாரிடமும் இருந்தது. பக்கிரிசாமியின் அப்பா அவனை நெருங்க நெருங்க அவன் அடிப்பதற்கு மாறாக விழுந்தடித்து ஹாஸ்டலின் வெளிப்பக்கம் ஓடினான். அப்படி திடீரென அவன் அப்படி அடிக்காமல் ஓடுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவன் வெளியே ஓடியதும் அவனைத் தொடர்ந்து எல்லாரும் வெளியே ஓடி வந்தார்கள்.
            பக்கிரிசாமியின் அப்பா அழைத்து வந்திருந்த ஆள் கைலியை முட்டிக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டு எல்லாரையும் விலக்கிக் கொண்டு பக்கிரிசாமியைத் பின் தொடர்ந்து ஓடினார்.
            "டேய் தொப்புளான்! பின்னால ஓடியாராத. கொன்னே புடுவேம் ஒம்ம!" என்று சத்தமிட்டபடியே பக்கிரிசாமி தென்னை மரங்கள் நிறைந்த ஹாஸ்டலின் கிழக்குப் பக்கம் நோக்கி ஓடினான். "ஏம்தாம் இந்த ஹாஸ்டல்ல இப்படியெல்லாம் நடக்குதோ?" என்று தனக்குள் முணுமுணுத்தபடி பயத்தோடு விகடுவும் எல்லாரின் பின்னாலும் ஓடினான்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...